உள்ளடக்கத்துக்குச் செல்

மூவேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொ.ஊ.மு. 300இல் சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள்

மூவேந்தர் (Three Crowned Kings) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.

மூவேந்தர் பெயர்க் குறிப்பு

மூவேந்தரை "முடியுடை மூவேந்தர்" எனச் சிறப்பித்துக் கூறுதல் மரபு. முதற்காலத்தில் முடி அணியும் உரிமை இவர்களுக்கு மட்டுமே இருந்ததாலேயே இவர்கள் வேந்தர் எனப்பட்டனர். வேந்தன் என்பது வேய்ந்தோன் என்பதன் மரூஉ ஆகும்.[1][2]

சேரர்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி பொ.ஊ.மு. 300-200 முதல் பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். கரூர் நாகம்பள்ளி சிரீ மகாபலேச்சுவர் ஆலயத்தில் காணப்பெறும் கல்வெட்டுகள் யாவும் வஞ்சிவேள், இஞ்சிவேள் போன்ற பட்டங்களுடைய வெள்ளாள அந்துவன் என குறிக்கப்பெறுகின்றன. அந்துவன் எனும் குலப்பெயர் சேரர்களிடத்தும் காணப்பட்டது. மேலும் இந்த ஆலயம் சேரர் காலத்தில் தோன்றியமையும் இக்கோவில் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் இக்குலத்தாரே மிகுந்து காணப்படுவதாலும் இந்த வெள்ளாளர்கள் அந்துவனே சேரர்கள் வம்சத்தினரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.கொள்ளம், கொடுங்கள்ளூர் மற்றும் திரிசூர் போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரோமானிய, கிரேக்க, அரேபிய நாணயங்கள் மூலம் சேரர்கள் மற்ற நாடுகளுடன் வைத்திருந்த வணிகம் பற்றி அறிகிறோம்.

சோழர்

சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. சோழர்கள், சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும், ஆத்தி பூ மாலை அணிந்தவர்கள் எனவும், புலி கொடியினை உடையவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், கரிகால் சோழன், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். சோழ மன்னர்களில் தலைசிறந்தவராக போற்றப்படும் கரிகால சோழன், காவிரி ஆற்று நீர்ப் பெருக்கு திறம்பட பயன்படுத்தி பாசன வசதிகளை பெருக்கி பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகை செய்த பெருமைக்குரியவர் ஆவார். காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் உச்சத்தை எட்டிய பாசன நீர் மேலாண்மைக்கு கரிகாலச்சோழன் ஆட்சியில்தான் வித்திடப்பட்டது. பாண்டியரையும் சேரரையும் ஏனைய குறுநில மன்னர்களையும் எதிர்த்து கரிகாலன் போரிட்டார். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனித சின்னங்களும் காணப்படுகின்றன. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.

பாண்டியர்

பாண்டியர்கள் குறித்து அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன. பாண்டியர்கள்திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களை போற்றுகின்றன. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடுகின்றது. நெடியோன், முடத்திருமாறன், பழைய யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள். பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும், வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

ஆட்சி நிலப் பரப்பு

தமிழ் அரசர்கள் வேற்றுமொழி பேசும் நிலப் பகுதியையும் ஆண்டுவந்தனர். நாட்டிலிருந்து பொருள் ஈட்டச் சென்றவர்கள் அவர்களின் மலைநாட்டையும் கடந்து சென்றனர். அங்கு வழிப்போக்கர்களைக் கொன்று கொள்ளை அடிக்கும் மக்களும் வாழ்ந்துவந்தனர்.[3]

சங்க காலக் குறுநில மன்னர்கள்

நன்னன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு அரசாண்ட செய்திகளைச் சங்கப் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. அவர்களின் காவல்மரம் வெவ்வேறாக இருப்பதால் அவர்களை ஒருவராகக் கொள்ள முடியவில்லை. இப்படிப் பிற குறுநில மன்னர்களின் வரலாற்றிலும் சிற்சில குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணவேண்டுமானால் சங்கப் பாடல்கள் முழுவதையும் திரட்டிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்துக் கண்டதுதான் இங்குத் தரப்பட்டுள்ள பட்டியல்.

அரசர் பட்டியல்

அரசன் குடி குறிப்பு காவல்மரம் நாடு\நகர் செய்தி தரும் பாடல்
நன்னன் வேளிர் மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் - செங்கண்மா தலைநகரம், சேயாறு (பெரியாறு) பாயும் நாடு, காரி உண்டிக் கடவுளின் கோயில் இருக்கும் நாடு மலைபடுகடாம்
நன்னன் வேளிர் வள்ளல் ஆரம் (சந்தனம்) நகர்; பாரம். நாடு; பொன்படு நெடுவரை, பாழிச் சிலம்பு, கொண்கானம் அகம் 152,173,349, நற்றிணை 391,
நன்னன் வேளிர் பெண்கொலை புரிந்தவன், தன் குடியைச் சேர்ந்த எயினன் கோசர்குடி மிஞிலியோடு போரிட்டு வீழ்ந்தபோது ஒதுங்கியன், சோழர்படையின் தலைவன் பழையனைக் கொல்ல உதவியவன், சோழன் நேரில் வந்து தாக்கியபோது தன் காட்டுக்குள் ஒளிந்துகொண்டவன், கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதிகனை மிஞிலி கொன்றபோது மிஞிலிக்கு உதவியவன். இறுதியில் கோசர்குடி வள்ளல்-அரசன் அகுதை கோசர்குடிக் குறும்பன்-மிஞிலியையும் இந்த நன்னனையும் கொன்றான். மாமரம் கொண்கானம் அகம் 44, 142, 208, 392, குறுந்தொகை 73,292,
நன்னன் - நார்முடிச் சேரல் இவனை வீழ்த்தினான் வாகைமரம் கடம்பின் பெருவாயில் அகம் 199, பதிற்றுப்பத்து 40, பதிகம் 4

ஆதாரங்கள்

  1. (வேய்தல் = அணிதல் ==> அதாவது முடியணிதல்.)ஞா. தேவநேயப் பாவாணர், "பழந்தமிழாட்சி"(1952) , பக் 15.
  2. கொன்றை வேந்தன் என்னும் நூலின் பெயர் இதற்கு எடுத்துக்காட்டு. கொன்றைப் பூவை வேய்துகொண்டிருக்கும் சிவபெருமானே கொன்றை வேந்தன்.
  3. கானம் நீந்தி,
    சென்றார் அன்பு இலர் தோழி! வென்றியொடு
    வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
    தமிழ் கெழு மூவர் காக்கும்
    மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. (அகநானூறு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவேந்தர்&oldid=3533765" இலிருந்து மீள்விக்கப்பட்டது