மகாத்மா காந்தி எழுத்துகளின் தொகுப்பு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாத்மா காந்தி எழுத்துகளின் தொகுப்பு (The Collected Works of Mahatma Gandhi) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் எழுத்துகளின் தொகுப்பு ஆகும். இந்த ஆங்கில நூல் நூறு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் அவர் கைப்பட எழுதியவை, அவர் சொல்லச் சொல்ல எழுதியவை, அவர் ஆற்றிய உரைகள், தந்திகள், முறையீடுகள், விண்ணப்பங்கள், மனுக்கள், குறிப்புகள், தலையங்கங்கள், மௌனவிரத நாட்களின் குறிப்புகள், கட்டுரைகள், கூற்றுகள், நேர்காணல்கள், உரையாடல்கள், கடிதங்கள் என அவரின் வாழ்நாளின் எழுத்து வகைமைகளும், வெளிப்பாடுகளும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.[1]

வரலாறு[தொகு]

மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை செய்யப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே காந்தியத்தை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க அவரது எழுத்துகளைத் தொகுக்க வேண்டும் என்று அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் கூறினார். அதைத் தொடர்ந்து அப்போதைய இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு இந்த விசயத்தில் தீவிரம் காட்டினார். தொடர்ந்து 1956இல் நவஜீவன் அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கும் இந்திய குடியரசுத் தலைவரின் செயலாளருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்படது. இந்த நூல்களின் முதல் தொகுப்பாசிரியராக தமிழரான பரதன் குமரப்பா (ஜே. சி. குமரப்பாவின் சகோதரர்) நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பின்னர் இதற்கு ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒன்றரை ஆண்டுகள் இதில் இருந்தார். 1960இல் கே. சுவாமிநாதன் தொகுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் 30 ஆண்டுகளைக் கடந்து இப்பணியில் ஈடுபட்டார்.[1]

இவர்கள் உலகெங்கும் உள்ள காந்தியின் எழுத்துகளைத் திரட்டி, அவறின் நம்கத்தன்மையை உறுதிபடுத்தி, பிற மொழிகளில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் துல்லியமாக மொழிபெயர்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். இந்த தொகுப்புப் பணிகள் 1956இல் தொடங்கி 1994இல் நிறைவடைந்தது. முதல் தொகுதி 1956இலும், 100வது தொகுதி 1994இலும் வெளியானது. இதன் வெளியீட்டுப் பொறுப்பை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலி/ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளீயீட்டுப் பிரிவு பொறுப்பேற்றுக் கொண்டது.[1]

தொகுதிகளின் அமைப்பு[தொகு]

இந்த தொகுதி நூல்களில் முதல் தொகுதியில் இருந்து 90வது தொகுதி வரை உள்ளவை முதன்மைத் தொகுதிகளாகும். 91இல் இருந்து 97வரையிலானவை தொகுதி நூல்களின் பின்னிணைப்புகள் அடங்கிவை. 98ஆம் தொகுதியில் முதல் தொகுதியில் இருந்து 90வது தொகுதி வரையிலான முதன்மைத் தொகுதியின் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. 99ஆம் தொகுதியில் முதன்மைத் தொகுதியில் அடங்கியுள்ள பெயர்களின் பொருளடைவு உள்ளது. 100வது தொகுதியில் அதுவரையிலான தொகுதிகளின் முன்னுரைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களின் மறுபதிப்பு 2017இல் வெளியிடப்பட்டது.[1]

எண்ணியல் பதிப்பு[தொகு]

இந்த நூல் தொகுதியை எண்ணியல் மயமாக்க இந்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி எண்ணியில் பணிகள் 2009-2010 இல் தொடங்கப்பட்டன. 2015 மார்ச்சில் அந்தப் பணிகள் முடிவடைந்தன. தேடல் வசதியுடன் கூடிய இந்த தொகுதியின் எண்ணியில் பிரதி 2015 செப்டம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "காந்தி தொகுப்பு நூல்கள்: ஓர் இமாலய முயற்சியின் கதை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.

வெளி இணைப்புகள்[தொகு]