ஆரோன்
ஆரோன் | |
---|---|
ஆரோனின் உருவம், 17ஆம் நூற்றாண்டு | |
இறைவாக்கினர், தலைமைக் குரு | |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
ஆரோன் (எபிரேயம்: אַהֲרֹן ′ahărōn, அரபு மொழி: هارون, romanized: Hārūn, கிரேக்கம் (செப்துவசிந்தா): Ἀαρών; [1]) என்பவர் ஆபிரகாமிய சமயங்களில் கூறப்படும் ஒரு இறைவாக்கினரும், தலைமைக்குருவும் மோசேயின் சகோதரரும் ஆவார். [2][3][4][5][6][7][8] இவரைப் பற்றிய குறிப்புகள் விவிலியம் மற்றும் குரான் போன்ற சமய நூல்களில் காணப்படுகின்றன.
எபிரேய விவிலியம்
[தொகு]விடுதலைப் பயணம் நூலின் படி, மோசேயின் உதவியாளராக ஆரோன் முதன்முதலாக செயல்பட்டார். ஏனென்றால், தன்னால் நன்றாக பேசமுடியாது என்று மோசே புகார் செய்ததால், கடவுள் ஆரோனை மோசேவின் இறைவாக்கினராக நியமித்தார். மோசேயின் கட்டளைப்படி ஆரோன் தன் கோலை விட்டெறிய அது பாம்பாக மாறியது. பிறகு தன் கோல் மூலம் எகிப்தில் முதல் மூன்று வாதைகளை ஏற்படுத்தினார். அதன்பிறகு மோசே ஆரோனின் துணையின்றி தானாக பேசவும் செயல்படவும் செய்தார். அமலேக்கியருக்கு எதிரான போரின் போது கடவுளின் கோலை மோசே பிடித்திருந்த போது ஆரோனும் மிரியமின் மகன் ஊரும் அவருக்கு உதவி செய்தனர். கடவுள் ஆரோனை தலைமைக் குருவாக நியமித்தார்.
மோசே மலையின் மேல் ஏறிச் சென்று கடவுளோடு நாற்பது நாளும் நாற்பது பகலும் மலையிலேயே தங்கியிருந்தார். மலையடிவாரத்தில் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்தார்கள். அவர்கள் ஆரோனிடம் வந்து, “மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியாது. நீர் எம் மக்களுக்காக ஒரு தெய்வத்தைச் செய்து கொடும்” என்றார்கள். ஆரோன் அவர்கள் சொன்னதற்கு உடன்பட்டார். அவர்களுடைய பொற்காதணிகளைச் சேகரித்து ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து கொடுத்தார். மக்கள் அதையே தங்கள் தெய்வமென கொண்டாடி, ஆடிப் பாடி விருந்துண்டு கேளிக்கைகளில் மூழ்கினார்கள்.
மோசே கடவுளின் கட்டளைகள் அடங்கிய கற்பலகையோடு கீழே வருகையில் நிகழ்ந்தவற்றைக் கண்டு கடும் கோபமடைந்தார். அந்த பொன் கன்றுக்குட்டியைச் சாம்பலாய் எரித்துத் தண்ணீரில் கரைத்து மக்களைக் குடிக்க வைத்தார். கடவுளின் பக்கம் இல்லாத பலர் அழிக்கப்பட்டனர். ஆனால் மோசேயின் வேண்டுதல் காரணமாக கடவுள் ஆரோனை தண்டிக்கவில்லை.
மோசே மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு அவரது சகோதரர்களான மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். அவர்கள் மூவரையும் ஆசாரிப்பு கூடாரத்திற்கு அழைத்தார். அவர் மிரியமை தொழுநோய் மூலம் தண்டித்தார். ஆனால் கடவுள் ஆரோனை தண்டிக்கவில்லை. இவ்வாறு மீண்டும் ஒருமுறை கடவுளின் தண்டனையில் இருந்து ஆரோன் தப்பினார்.
இறப்பு
[தொகு]மோசேவைப் போன்று ஆரோனும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் மெரிபா நிகழ்வின் போது பொறுமையிழந்து ஆண்டவரின் கட்டளையை மீறிவிட்டனர். பின்னர் ஆரோன் தன் மகன் எலியாசர் மற்றும் மோசேவுடன் ஓர் என்ற மலையில் ஏறினார். அங்கு மோசே, ஆரோனின் குருத்துவ உடைகளை உரிந்து அவற்றை எலியாசருக்கு அணிவித்தார். ஆரோன் மலையுச்சியில் இறந்தார். அவருக்காக இஸ்ரயேல் மக்கள் 30 நாட்கள் துக்கம் அனுசரித்தனர். ஆரோன் இறந்த போது அவருக்கு வயது 123.
வழிமரபுகள்
[தொகு]இயேசுவிற்கு திருமுழுக்கு அளித்த திருமுழுக்கு யோவான், ஆரோன் வழிமரபைச் சேர்ந்தவர் ஆவார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
- ↑ Exodus 6:16-20
- ↑ Exodus 7:7
- ↑ திருக்குர்ஆன் 7:103–156
- ↑ திருக்குர்ஆன் 19:41–53
- ↑ திருக்குர்ஆன் 20:9–98
- ↑ திருக்குர்ஆன் 28:34
- ↑ Ibn Hisham 1967, ப. 604; §=897
- ↑ Luke 1:5