வி. பி. மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பி. மேனன்
பிறப்புவப்பாலா பங்குண்ணி மேனன்
(1893-09-30)30 செப்டம்பர் 1893
ஒற்றப்பாலம், சென்னை மாகாணம், பிரிட்டிசு ராச்சியம் (தற்போதைய கேரளம்)
இறப்பு31 திசம்பர் 1965(1965-12-31) (அகவை 72), கூக் நகரம், பெங்களூர்
தேசியம்இந்தியன்
பணிஅரசு ஊழியர்
முன்னிருந்தவர்ஆசப் அலி
பின்வந்தவர்ஆசப் அலி

ராவ் பகதூர் வப்பாலா பங்குண்ணி மேனன் (Vappala Pangunni Menon) (1893 செப்டம்பர் 30 – 1965 திசம்பர் 31) இவர் ஓர் இந்திய அரசு ஊழியராவார். இவர் இவர் சர்தார் வல்லபாய் பட்டேலின் கீழ் மாநில அமைச்சகத்தில் இந்திய அரசின் செயலாளராக பணியாற்றினார்.

இந்திய ஆளுநர் வேவல் ஆகியோரின் நியமனம் மூலம், செயலாளராகவும் பின்னர் அமைச்சரவை செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது கடைசியாக வந்த மூன்று ஆளுநர்களுக்கு ( லின்லித்கோ பிரபு , வேவெல் பிரபு மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு ) ஆகியோருக்கு அரசியலமைப்பு ஆலோசகராகவும், [1] [2] மேலும் அரசியல் சீர்திருத்த ஆணையராகவும் இருந்தார். 1948 மே மாதத்தில், வி. பி. மேனனின் முன்முயற்சியின் பேரில், தில்லியில் சுதேச தொழிற்சங்கங்களின் அரச பிரதிநிதி மற்றும் மாநிலத் துறைகளுக்கிடையே ஒரு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அரச பிரதிநிதி புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது இந்திய அரசு சட்டம் 1935 இன் ஏழாவது அட்டவணையில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை இந்திய அரசுக்கு வழங்கியது

இந்தியாவின் பிரிவினை மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தார். [3] இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் தடையற்ற சந்தை சார்ந்த சுததந்திராக் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

கேரளாவில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியரின் மகனான, மேனன் ஒரு இரயில்வேயில் நிலக்கரி அள்ளும் பணியில் இருந்தார். பின்னர், நிலக்கரி சுரங்கம் மற்றும் பெங்களூரு புகையிலை நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றினார். மேனன் 1914 இல் மாகாண ஆட்சிப்பணியில் [4] சேர்ந்தார். இவர் 1933 முதல் 1934 வரை சீர்திருத்த அலுவலகத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இவர் 1934 முதல் 1935 வரை செயலாளராகவும், 1935 முதல் 1940 வரை துணைச் செயலாளராகவும், 1941 முதல் 1942 வரை இந்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். உறுதியுடன் பணியாற்றியதன் மூலம், மேனன் தனது தரத்தில் உயர்ந்து பிரிட்டிசு இந்தியாவில் உயர்ந்த இடத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரியாக ஆனார்.

மவுண்ட்பேட்டன், என்.கோபாலசாமி ஐயங்கார் மற்றும் வி.பி. மேனன் ஆகியோர் ஐதராபாத் பிரச்சினையை 1948 மே 30 அன்று ஒரு விருந்தில் விவாதித்தனர்.

1945 சூன் மாதம் நடைபெற்ற சிம்லா மாநாட்டின் இணை செயலாளராக மேனன் பணியாற்றினார். 1946 ஆம் ஆண்டில், இவர் பிரிட்டிசு ஆளுநரின் அரசியல் சீர்திருத்த ஆணையராக நியமிக்கப்பட்டார்.

மேனனுக்கு ராவ் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது, 1941 பிறந்தநாள் கௌரவத்தில் இந்தியப் பேரரசின் தோழர் கௌரவம் வழங்கப்பட்டது. [5] மேலும் 1946 பிறந்தநாள் கௌரவத்தில் இந்திய நட்சத்தின் ஆணை என்ற கௌரவம் வழங்கப்பட்டது. [6]

இந்தியப் பிரிவினை[தொகு]

மேனன் இந்தியாவின் கடைசி ஆளுநர்லூயிஸ் மவுண்ட்பேட்டனின் அரசியல் ஆலோசகராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையிலான போட்டி காரணமாக இடைக்கால அரசாங்கம் வீழ்ச்சியடைந்தபோது, இந்தியா மற்றும் பாக்கித்தான் என்ற இரு சுதந்திர நாடுகளாக இந்தியாவை பிரிக்க முஸ்லிம் லீக்கின் திட்டத்தை மேனன் மவுண்ட்பேட்டன், ஜவகர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரிடம் முன்மொழிந்தார்.

இந்த காலகட்டத்தில் மேனனின் ஆளுமை 1947 இல் இந்தியாவின் துணைப் பிரதமராக பதவியேற்கவுள்ள சர்தார் பட்டேலின் கவனத்தை ஈர்த்தது.

சோத்பூர் மகாராஜா ஹன்வந்த் சிங் மற்றும் மவுண்ட்பேட்டன் இடையேயான சந்திப்பில் வி.பி. மேனன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில்தான் ஹன்வந்த் சிங் இந்தியாவில் இணைவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்டதும், ஆளுநர் மவுண்ட்பேட்டன் வெளியேறினார். அப்போது மேனன் மட்டுமே அவருடன் அறையில் இருந்தார். மகாராஜா ஒரு 22 காலிபர் துப்பாக்கியை எடுத்து மேனனிடம் சுட்டிக்காட்டி, 'உங்கள் ஆணையை நான் ஏற்க மறுக்கிறேன்' என்றார். மேனன் தன்னை அச்சுறுத்துவதன் மூலம் மிகக் கடுமையான தவறைச் செய்வதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் கூறினார். [7]

இந்தியாவின் ஒருங்கிணைப்பு[தொகு]

ஒரிசாவில் உள்ள மாநிலங்களின் ஆட்சியாளர்களுடன் வி.பி. மேனன் கலந்துரையாடுகிறார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, மேனன் சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான மாநில அமைச்சின் செயலாளரானார். இவருடன் பட்டேல் நம்பிக்கையின் பிணைப்பை வளர்த்துக் கொண்டார். பட்டேல் மேனனின் அரசியல் மேதைமை மற்றும் பணி நெறிமுறையை மதித்தார். அதே நேரத்தில் ஒரு அரசு ஊழியர் தனது அரசியல் மேலதிகாரியிடமிருந்து தேவைப்படும் பணிக்கான மரியாதையை மேனன் பெற்றார்.

இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு தொடர்பாக மேனன் பட்டேலுடன் நெருக்கமாக பணியாற்றினார்: 565 க்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் இந்தியாவின் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன. மாநில அமைச்சகத்திற்கும் பல்வேறு இந்திய இளவரசர்களுக்கும் இடையிலான இராஜதந்திரத்தை நிர்வகிக்க பட்டேலின் தூதராக செயல்பட்டார். மேலும் இந்தியாவுடன் இணையத் தயங்கிய இளவரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களை பணிய வைத்தார்.

பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநில இணைப்பு உடன்படிக்கையில் வி.பி. மேனன் கையெழுத்திடுகிறார்.

இந்தியாவுடன் இணையாமல் தனித்தே இருக்க விரும்பிய ஜுனாகத் மற்றும் ஐதராபாத் மாநிலங்களுக்கெதிராக இராணுவ நடவடிக்கை தொடர்பாக மேனன் பட்டேலுடன் இணைந்து பணியாற்றினார். அத்துடன் பாக்கித்தானுடனான உறவுகள் மற்றும் காஷ்மீர் மோதல்கள் குறித்து நேரு மற்றும் பட்டேலுக்கு ஆலோசனை வழங்கினார். 1947 இல் காஷ்மீர் இந்தியாவுக்குள் இணிவதற்கு அமைச்சரவை மேனனை அனுப்பியது.

சர்தார் பட்டேலின் உத்தரவின் பேரில், மேனன் பின்னர் "இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பின் கதை" என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தாங்கள் கடைப்பிடித்த செயல்முறையை விவரிக்கிறார். [8]

பிந்தைய வருடங்கள்[தொகு]

பட்டேலுக்கும் மேனனுக்கும் இடையிலான கூட்டு ஒரு அரிய வகையாகத் திகழ்ந்தது. சர்தார் பட்டேலின் வலது கையாக இருந்து சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் 1951 இல் சிறுது காலத்திற்கு ஒடிசாவின் ஆளுநராக இருந்தார். பின்னர், 1950 ல் பட்டேல் இறந்த பிறகு, மேனன் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு, இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பின் கதை மற்றும் இந்தியாவின் பகிர்வு , அதிகாரப் பரிமாற்றம் குறித்த புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். பின்னர் இவர் சுதந்திராக் கட்சியில் சேர்ந்தார். ஆனால் ஒருபோதும் தேர்தலில் போட்டியிடவில்லை. மேனன் 1965 திசம்பர் 31 அன்று தனது 72 வயதில் இறந்தார்.

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 1993 ஆம் ஆண்டு சர்தார் என்றத் திரைப்படத்தில் மேனனை சித்தரித்தார். இது இந்திய அரசியல்வாதி வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 2013 ஆம் ஆண்டில், ஆதி இரானி ஏபிபி செய்திகளில் பிரதான்மந்திரிஎன்றத் தொலைக்காட்சித் தொடரில் வி.பி. மேனனாக நடித்தார்.

2020 ஆம் ஆண்டில், இவரது பேத்தி நாராயணி பாசு இவரது வாழ்க்கை வரலாற்றை வி.பி. மேனன்: த அன்சங் ஆர்கிடெக்ட் ஆப் மாடர்ன் இண்டியா என்ற நூலை எழுதினார்.

நூலியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "V P Menon – The Forgotten Architect of Modern India". Forgotten Raj. 13 April 2011 இம் மூலத்தில் இருந்து 26 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110726061929/http://www.forgotten-raj.org/doc/vp6.pdf. பார்த்த நாள்: 13 April 2011. 
  2. "V P Menon – The Forgotten Architect of Modern India". http://www.britishempire.co.uk/maproom/india/vpmenon.htm. பார்த்த நாள்: 18 September 2014. 
  3. "How Vallabhbhai Patel, V P Menon and Mountbatten unified India". 31 October 2017.
  4. Copland, Ian (2002). The Princes of India in the Endgame of Empire, 1917-1947. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521894364. 
  5. London Gazette, 6 June 1941
  6. London Gazette, 13 June 1946
  7. India - a portrait by Patrick French (page 10)
  8. Menon, V.P. "Pdf copy of the book "The Story of the Integration of the Indian States"" (PDF). BJP E-Library. Bharatiya Janata Party. Archived from the original (PDF) on 24 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
V. P. Menon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • W. H. J. Christie, Menon, Vapal Pangunni (1894–1966), rev. S. R. Ashton Oxford Dictionary of National Biography
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._மேனன்&oldid=3571457" இலிருந்து மீள்விக்கப்பட்டது