வள்ளுவர் தந்த பொருளியல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளுவர் தந்த பொருளியல் என்னும் நூலை ஆக்கியவர் டாக்டர் பா. நடராஜன். இந்நூலின் முதல் பதிப்பு 1965இல் வெளியானது. பின்னர், 1967, 1988 ஆண்டுகளில் முறையே இரண்டாம், மூன்றாம் பதிப்புகள் வெளியாயின. நூலை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டனர்.[1]

நூல் தோன்றிய வரலாறு[தொகு]

பொருளாதார அறிஞரான பா. நடராஜன் வள்ளுவர் தந்த பொருளியல் என்னும் நூல் எழுந்த வரலாற்றைத் தம் நூலின் முன்னுரையில் எடுத்துக் கூறுகிறார். டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையின் அன்னையார் நினைவாக நிறுவப்பட்ட "சொர்ணாம்பாள் நினைவுத் திருக்குறள் சொற்பொழிவு" என்னும் திட்டத்தின் கீழ் பா. நடராஜன் 1960இல் "திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள்" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மூன்று உரைகள் ஆற்றினார். பின்னர் அச்சொற்பொழிவுகளை அவரே தமிழிலும் எழுதினார்.

தென்காசித் திருவள்ளுவர் கழகத்து வெள்ளிவிழா மலருக்கு எழுதிய ஒரு கட்டுரையையும் நூலாசிரியர் தமது நூலில் இணைத்துள்ளார்.

நூல் அமைப்பு[தொகு]

இந்நூலில் நான்கு அதிகாரங்களும் அவற்றோடு ஓர் இணைப்பும் அடங்கியுள்ளன. அவை:

I. வள்ளுவர் தந்த பொருளியல்
II. பாயிரம்
III. அழியா நிலையின் பொருளியல்
IV. பொருள் ஈட்டல்
இணைப்பு: திருக்குறளும் பொருளாதாரமும்

நூலிலிருந்து சில பகுதிகள்[தொகு]

பா. நடராஜனின் நூலின் ஒரு நீண்ட பகுதி வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகளை பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைய கிரேக்க சிந்தனையாளர்களின் கருத்துகளோடும், ஆதம் ஸ்மித் போன்ற நவீன காலப் பொருளாதார அறிஞர்களின் கருத்துகளோடும் ஒப்பிடுவதில் அடங்கியுள்ளது. பா. நடராஜன் கூற்றுப்படி,

வள்ளுவரின் பொருளியல் கொள்கைகளோடு ஓரளவு ஒட்டி நிற்பவர் ஆதம் ஸ்மித்தே ஆகும். அடிப்படைக் கருத்துகளில் இருவருக்கும் பற்பல ஒற்றுமை காணப்படுகின்றது. முன்னாளில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் பொருளியல் அடிப்படையில் வகுப்பு வேற்றுமை ஓங்கியிருந்தது, பூசல்களும் நிறைந்திருந்தன. ஆதம் ஸ்மித்து பொருளியல் அடிமைத் தளையினின்றும் மக்களை விடுவிக்கப் பாடுபட்டார்; பெருவாரியான, மக்களின் உழைப்பையும் தொழிலார்வத்தையும் தூண்டித் தழைக்கச் செய்தார்; அதன் மூலம் தொழிற் புரட்சிக்கு அடிகோலினார். வள்ளுவரும் மக்களிடையே வேற்றுமை எழுதலை நீக்க முனைந்தார்; பொருளியல் விடுதலையைப் போதனைசெய்தார். தொழிலுலகில் சாதியும், வகுப்பும் ஒருவனைக் கட்டுப்படுத்தா என்றார். விரும்பிய தொழிலை மேற்கொள்ள வழிவகுத்தார். பிறப்பால் மக்கள் அனைவரும் ஒரு நிகரே என்ற கொள்கையை வள்ளுவரைப் போன்றே ஆதம் ஸ்மித்தும் வற்புறுத்தினார். கல்வியாலும் சூழ்நிலையாலுமே வேற்றுமை மக்களிடையே விளையுமென இருவரும் கூறினர். அரசியலும் பொருளியலும் இசைந்து செல்லவேண்டும்; அது மக்களுக்கும் அரசுக்கும் நல்லுறவை நிலைநாட்டும்; அறம் பேணி, நலம் வளர்க்கும் - என்பன இருவரின் கருத்தும். இருவருமே, அறம் வழுவாப் பொருளியலை விரும்பினர்...ஆதம் ஸ்மித்து "அறச் சிந்தனைக் கோட்பாடுகள்" என்ற நூலில் அறத்தை அடித்தளமாக அமைத்தார். அதன் மீதே, "தேசங்களின் செல்வம்" என்ற பொருளியல் மாளிகையை எழுப்பினார். வள்ளுவரும் முதலில் அறத்துப்பாலை விளக்கினார். அடுத்தே பொருட்பாலை விரிக்கலானார். (பக்கங்கள்: 87-88)

  • வள்ளுவர் பொருட்பாலில் கூறும் கருத்துகள் சாணக்கியரின் அர்த்த சாத்திரத்திலிருந்து பெறப்பட்டன என்று சிலர் கூறும் கருத்தை டாக்டர் பா. நடராஜன் மறுத்துரைத்து, சான்றுகளோடு விளக்குகின்றார்:

சிலர் வள்ளுவரின் பொருளியல் கருத்துக்களை, சாணக்கியரின் வடமொழி அர்த்த சாத்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்கின்றனர். வேறு சிலர் அர்த்த சாத்திரத்தின் கருத்துகளே திருக்குறளில் கூறப்பட்டுள்ளன என நிறுவ முயலுகின்றனர். மற்றும் சிலர் (பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் போன்றோர்) சாணக்கியர் மோரிய அரச அவையை அணிசெய்த தென்னிந்திய அமைச்சரென்றும், வள்ளுவரின் பொருளியல் கருத்தைத் தாம் கற்று, தமது அர்த்த சாத்திரத்தில் புகுத்தினார் என்றும் கூறுகின்றனர்...

திருக்குறளும், அர்த்த சாத்திரமும் ஒன்றையொன்று தழுவி எழுதப்பட்டதென்பதற்கு அகச் சான்றோ, புறச் சான்றோ இல்லையென்பது என் துணிபு...

அகச் சான்றுகள் புறச் சான்றுகளினும் வலிவாயிருக்கின்றன. வள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளுக்கும், சாணக்கியரின் பொருளியல் கோட்பாடுகளுக்கும் அடிப்படை ஒற்றுமை யாதுமில்லை. திருக்குறளில் உழவுக்கும் உழவருக்கும் முதன்மை தரப்பட்டுள்ளது. அர்த்த சாத்திரத்தில் அம்முதன்மை தரப்படவில்லை. நிலத்திலிருந்து இயன்றவரை பெரும் வருவாய் பெறவேண்டுமென்றும், மக்களை அச்சுறுத்தியோ, ஒறுத்தோ அதனைப் பெறவேண்டுமென்றும் சாணக்கியர் போதித்துள்ளார். மக்களிடையே நிலவும் சாதி வேற்றுமையை நிலையாகக் கொண்டு அர்த்த சாத்திரம் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை நிலைநாட்டுகின்றது. திருக்குறளில் அறத்தினின்றும் வழுவாத பொருளியல் கூறப்படுகின்றது. அர்த்த சாத்திரத்தில் அவ்வாறில்லை. இரு நூல்களிலும் சுட்டப்பெறும் வரிவிதிப்புக் கொள்கைகள் முற்றிலும் வெவ்வேறானவை. மக்கள் மனமுவந்து வரிசெலுத்தல் வேண்டுமென்பது வள்ளுவர் கருத்து. மக்களை வருத்தி, அச்சுறுத்தி வரி வாங்க வேண்டுமென்பது சாணக்கியர் கருத்து. மக்களின் மூடநம்பிக்கையையும், மதப்பற்றையும், அறியாமையையும் பயன்படுத்தி, அரசன் தனது களஞ்சியத்தை நிரப்புதற்கு முயலவேண்டுமென்று அர்த்த சாத்திரம் கூறுகின்றது. அரசன் வருவாயைப் பெருக்க மதுவையும் வரைவின் மகளிரையும் பயன்படுத்தலாம் என்றும் அதன்கண் கூறப்பட்டுள்ளது. மதுவையும் விலைமாதரையும் சமூகத்துக்கு ஒவ்வாதனவாகக் கருதுகின்றது திருக்குறள். (பக்கங்கள்: 87-88)

குறிப்பு[தொகு]

  1. டாக்டர் பா. நடராஜன், வள்ளுவர் தந்த பொருளியல், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1988 (மூன்றாம் பதிப்பு), பக்கங்கள்: 113.