உள்ளடக்கத்துக்குச் செல்

முடிகொண்டான் வெங்கடராமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடிகொண்டான் வெங்கடராமர்
பிறப்பு(1897-10-15)15 அக்டோபர் 1897
முடிகொண்டான் தமிழ் நாடு
இறப்புசெப்டம்பர் 13, 1975(1975-09-13) (அகவை 77)
அறியப்படுவதுகருநாடக இசைக் கலைஞர்
பெற்றோர்சக்கரபாணி, காமாட்சி

முடிகொண்டான் வெங்கடராமர் (Mudicondan C. Venkataramar, அக்டோபர் 15, 1897 - செப்டம்பர் 13, 1975) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவரை முடிகொண்டான் என்றே எல்லோரும் அழைத்தார்கள்[1].

குடும்பப் பின்னணி[தொகு]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலூக்காவில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள முடிகொண்டான்[2] கிராமத்தில் சக்கரபாணி காமாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
இவரது குடும்பத்தில் எல்லோருக்குமே இசையில் ஈடுபாடு இருந்தது. சக்கரபாணி இராக ஆலாபனை செய்வதிலும், தேவாரங்கள் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். தாய் வழி பாட்டனாரான ஸ்ரீவாஞ்சியம் சுவாமிநாதர் பதங்களையும் ஜாவளிகளையும் தாள லயத்துடன் பாடுவார். அதனால் அவர் தளுக்கு சுவாமிநாதர் என குறிப்பிடப்பட்டார்[1]. இவரது மாமா பொம்மலாட்டம் மணி எனப் பிரபலமானவர்.[உ 1]

கல்வியும் இசைப்பயிற்சியும்[தொகு]

இவரது தந்தை இவர் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டுமென விரும்பினார். அதனால் சென்னையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டாராயினும் இடையில் தந்தை காலமாகவே படிப்பை இடையில் கைவிட்டு ஊருக்கு திரும்பினார். பின்னர் முறையாக இசை கற்றுக் கொள்வதென அவர் தீர்மானித்தார். வேதாரணியம் சுவாமிநாதரிடம் மாணவனாக சேர்ந்தார். ஸ்வர ஞானத்தைக் "காது கேட்காதவர் கூட கற்றுக் கொள்ளக்கூடியவாறு பக்குவமாக சொல்லிக் கொடுக்கக் கூடியவர்" எனப் பெயர் பெற்ற ஒரு ஆசான். பின்னர் கோனேரிராஜபுரம் வைத்தியநாதரிடம் இசை கற்றார். ஒரு தவில் வித்துவானாகிய அம்மாசத்திரம் கந்தசுவாமியிடம் தாளம், லயம் என்பவற்றையும் சிமிழி சுந்தரத்திடம் பாவமும் கற்றுக்கொண்டார்[1]. இவர்களிலே சுவாமிநாதர் தியாகையர் வழியில் வந்தவர். சுந்தரம் முத்துசாமி வழியில் வந்தவர். அதனால் முடிகொண்டானுக்கு அள்ள அள்ளக் குறையாத அளவு இசைச் செல்வம் கிடைத்தது. அவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் எனப் பல மொழிகள் தெரியும். அத்துடன் ஜோசியம், ஆயுர்வேதம் தெரிந்தவர். வீட்டில் பல மூலிகை மருந்துகள் தயாரித்து வைத்திருந்தார்[உ 1]

குணாதிசயங்கள்[தொகு]

முடிகொண்டான் எந்த ஒரு விடயத்திலும் அதன் ஆழம் வரை சென்று ஆராய்ச்சி செய்வார். எதைக் கற்றாலும் அதனை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சொல்வார். அவர் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதர். காலிலே செருப்பு போடமாட்டார். பாதுகை எனப்படும் கட்டைகளைத்தான் பயன்படுத்துவார். மற்றவர்கள் தவறு செய்தால் சுட்டிக் காட்டுவார். தான் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வார்[உ 1].

இசைக் கச்சேரிகள்[தொகு]

முடிகொண்டான் தனது 17ஆவது வயதில் முதலாவது இசைக் கச்சேரி செய்தார். இது கடலூரில் நடைபெற்றது. பின்னர் 1919ஆம் ஆண்டில் மயிலாப்பூர் சங்கீத சபாவின் ஆதரவில் அவரது இசைக் கச்சேரி சென்னையில் நடந்தது[1]. 1950களின் பின்னர் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் அவரது கச்சேரி அகில இந்திய வானொலியில் இடம் பெற்றது. தமிழ் நாட்டின் பல இடங்களிலும், ஆந்திராவில் திருப்பதி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் எனப் பல நகரங்களிலும், மும்பாய், தில்லி ஆகிய இடங்களிலும் கச்சேரிகள் செய்துள்ளார்[உ 1].

இசை அறிஞர்[தொகு]

இராகம் தானம் பல்லவி பாடுவதில் அவர் வல்லவர். "வித்துவான்களுக்கு வித்துவான் அவர்" என செம்மங்குடி சீனிவாசர் சொல்லுவார்.
இசை தொடர்பான எல்லா தகவல்களும் அவர் விரல் நுனியில் இருக்கும். யார் என்ன கேட்டாலும் எந்தப் புத்தகத்தையும் பாராமலே பதில் சொல்லுவார். சொல்லுவதை தீர்மானமாகச் சொல்லுவார்[உ 1].
அரியக்குடி இராமானுஜர் தம்மிடம் யாராவது ஏதாவது சந்தேகம் கேட்டால், "எனக்குப் பாடத் தான் தெரியும், நீ முடிகொண்டானிடம் போய்க் கேள்" என்று சொல்லுவார். அந்த அளவு விஷயஞானம் உள்ளவர்[உ 1].
கருநாடக சங்கீதத்தில் லக்ஷணம், லக்ஷியம் என இரண்டு அம்சங்கள் உண்டு. வித்துவான்களிடத்தில் இவற்றில் ஏதோ ஒன்று இருக்கும். ஆனால் முடிகொண்டான் இரண்டு அம்சங்களிலும் சிறந்து விளங்கினார்[உ 1].
1935ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது சென்னைக்கு வந்து மியூசிக் அகாதமி நடத்தும் இசை மாநாடுகளில் கலந்து கொள்வார். லக்ஷணம், லக்ஷியம் இரண்டிலும் தேர்ந்தவராதலால் இசை தொடர்பான விளக்கங்களை அளித்து வந்தார். நிரவல், இராகம், தானம், பல்லவி என்பனவற்றை சரியான முறையில் பாடுவது எப்படி என செய்து காண்பிப்பார். இசை தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார். சென்னை மியூசிக் அகாதமி தனது நினைவு மலரில் அவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது[3].
இவர் சென்னையிலேயே குடியிருந்தால் இசை உலகுக்கு அதிக பயன் விளையுமெனக் கருதிய மியூசிக் அகாதமியின் தலைவர் டாக்டர் வீ. இராகவன், 1949ஆம் ஆண்டு முடிகொண்டானை அவரது கிராமத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து மியூசிக் அகாதமி நடத்திய ஆசிரியர்க்கான இசைக்கல்லூரியின் (Teachers' College of Music) துணைத் தலைவராக நியமித்து கல்லூரி வளாகத்திலேயே ஒரு வீட்டில் குடியமர்த்தி விட்டார். பின்னர் 1956ஆம் ஆண்டு இவர் அக்கல்லூரியின் தலைவரானார்[1].

ஆசிரிய பணி[தொகு]

ஆசிரியர்க்கான இசைக் கல்லூரியில் இவர் நியமிக்கப்பட்ட பின்னர் அங்கு பயிற்சிக்காகச் சேரும் இசை ஆசிரியர்களினதும் முதல்வர்களினதும் எண்ணிக்கை வளரத் தொடங்கியது. இவர் சேர்ந்து ஒரு வருடத்துக்குள் பள்ளிப் பரிசோதகர் பள்ளியின் முன்னேற்றத்தைக் கண்டு ஒரு அறிக்கை எழுதினார். அந்த அறிக்கையில் "சொல்லிக் கொடுக்கப்படும் வழிமுறைகள் மிகவும் செயல்திறன் உள்ளன. பயிற்சி பெறும் எல்லா மாணாக்கர்களும் இசையை கொடையாகப் பெற்றவர்கள் போல காட்சியளிக்கிறார்கள்." என எழுதினார்.
முடிகொண்டான் இக்கல்லூரியிலும், தனிப்பட்ட முறையிலும் பல மாணாக்கர்களை உருவாக்கி இருக்கிறார். அவர்களிலே அவரது மாப்பிள்ளை முடிகொண்டான் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவாஞ்சியம் இராமச்சந்திரர், ரங்கநாயகி, பி. கிருஷ்ணமூர்த்தி, ஆர். வேதவல்லி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். எம். எல். வசந்தகுமாரிக்கு பல்லவி பாடும் திறமையை கூர்மைப் படுத்துவதில் உதவினார். எம். எல். வசந்தகுமாரியின் தந்தை ஐயாசுவாமி சிமிழி சுந்தரம் இவருடன் கூடப் படித்தவர். மியூசிக் அகாதமியின் வருடாந்த மாநாடுகளின் போது முடிகொண்டான் ஆற்றும் உரைகளும் செய்து காட்டும் செயல்முறைகளும் கற்றறிந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமன்றி தொழில்முறை இசை வித்துவான்களுக்கும் பெரும் பயனுள்ளதாய் அமைந்தன. 1950களில் இவர் செய்து காட்டிய 128 அக்ஷரங்களைக் கொண்ட சிம்ஹனந்தன தாள பல்லவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை மீண்டும் 1971/72 இசைவிழாக் காலத்தில் செய்து காட்டினார். அதன் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.
இசைக் கல்லூரி பணியிலிருந்து 1972ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும் பின்னர் அவர் ஒரு கௌரவ பேராசிரியராக அங்கு இராக அலாபனைகள், ஸ்வரங்கள் என்பவற்றை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்[1].

விருதுகள்[தொகு]

இறப்பு[தொகு]

முடிகொண்டான் வெங்கடராமர், சிறு உடல் நலக்குறைவின் பின், தமது 78ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 The Master from Mudicondan by Sriram Venkatakrishnan
  2. முடிகொண்டான் அமைவிடம்
  3. "Index of Articles in Souvenir" (PDF). Archived from the original (PDF) on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.
  4. "Recipients of Sangita Kalanidhi". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.
  5. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 
  6. "Awadees of Sangeetha Kalasikhamani". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Nuances of Mudikondan neraval பரணிடப்பட்டது 2005-01-26 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
  2. Simizhi Sundaram Iyer (ஆங்கிலம்)
  3. முடிகொண்டான் இசை
  4. இராகம் தானம் பாடும் முறை பற்றி ஆர். வேதவல்லி விளக்குகிறார்