பெரிய அக்காக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய அக்காக் குயில்
ஓசை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கை. சபார்வெரியோடிசு
இருசொற் பெயரீடு
கையிரோகாக்சிக்சு சபார்வெரியோடிசு
(விகோர்சு, 1832)
வேறு பெயர்கள்

குக்குலசு சபார்வெரியோடிசு

பெரிய அக்காக் குயில் (Large hawk-cuckoo) என்பது குயில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குயில் இனம் ஆகும். இது மிதவெப்ப மண்டல ஆசியாவிலிருந்து இமயமலையில் கிழக்கு ஆசியா வரை பரவலாக இனப்பெருக்கம் செய்கிறது. குறிப்பிடதக்க எண்ணிக்கையிலான பறவைகள் குளிர்காலத்தில் தெற்கே வலசை வருகின்றன. இவை உரத்து திரும்பத் திரும்ப ஒலி எழுப்புவதற்குப் பெயர் பெற்றவை. இவற்றின் குரல் அக்காக்குயிலைப் போலவே இருக்கும், ஆனால் உச்சஸ்தாயிக்கு போவதில்லை. இவை சற்றே பெரியவை மேலும் முதிர்ந்த பறவைகளின் கன்னத்தில் காணப்படும் கறுப்புத் திட்டினைக் கொண்டு அக்காக்குயிலில் இருந்து இதை எளிதாக வேறுபடுத்தி அறியலாம். இவை சிரிப்பான்கள் போன்ற பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடக்கூடியவை.

விளக்கம்[தொகு]

பெரிய அக்காக் குயிலானது காக்கையை விட சற்று சிறியதாக சுமார் 38 செ. மீ. நீளம் இருக்கும். இதன் மேல் அலகு கரும்புழுப்பாகவும், கீழ் அலகு பச்சையாகவும் இருக்கும். விழிப்படலம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும், கால்கள் ஆழ்ந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் உச்சி, பிடரி, கழுத்தின் மேற்பகுதி போன்றவை ஆழ்ந்த சாம்பல் பழுப்பாக இருக்கும். வாலின் மேற்பரப்பு பழுப்பு நிறமாகக் கறுப்பு பட்டைகளுடனும் வெள்ளை விளிம்போடும் காட்சி அளிக்கும். தொண்டை வெண்மையாகக் கருஞ்சிவப்பும் சாம்பலுமான கோடுகளுடன் காட்சியளிக்கும். மேல் மார்பு ஆழ்ந்த கருஞ்சிவப்பாக இருக்கும். கீழ் மார்பும், வயிறும் வெண்மையாகக் கருஞ்சிவப்புத் தோய்ந்து பழுப்பு நிறக் குறுக்குக் கோடுகளுடன் காணப்படும். இது ஓரளவு வல்லூறு போலவே தோற்றம் தருவதாலும், வல்லூறுவைப் போலவே பறப்பதாலும் சற்று குழப்பத்தை உண்டாக்கும். ஆண், பெண் பறவைகள் ஒன்றுபோல தோற்றம் தரும், என்றாலும் பெண்பறவை உருவில் சற்று சிறியது.

பரவல்[தொகு]

இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. கிறித்துமசு தீவில் தற்செயலாக சென்று அலைந்து திரிபவையாக காணப்படுகின்றன. [2] இதன் துணை இனமான H. s. bocki மலாய் தீபகற்பம், சுமாத்திரா மற்றும் போர்னியோ போன்ற இடங்களில் காணப்படுகிறது. அது கருத்த அக்காக் குயில் என்ற பெயரில் ஒரு தனி இனமாகவும் கருதப்படுகிறது. [3] குளிர்காலத்தில் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இப்பறவை வலசை வருகின்றனது.

வாழ்விடங்கள்[தொகு]

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்ப மண்டலக் காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

நடத்தை[தொகு]

இது மரத்தில் உயரமாக இலைகள் அடர்ந்த பகுதியில் தனித்து அமர்ந்திருக்கும். இதனை மரக்கிளைகளில் இருந்து பாய்ந்து பறந்து செல்லும்போது தான் கண்டுண முடியும். இது பறக்கும்போது வல்லூறு போன்ற தோற்றம் கொண்டதால் பிற சிறு பறவைகள் இதனைக் கண்டு அச்சம் கொள்ளும். கம்பளிப் பூச்சி, வண்டு, வெட்டுக்கிளி, தத்துப்பூச்சி, சிலந்தி முதலியவற்றை இது உணவாக கொள்ளும்.

இவை கோடையில் கூவுகின்றன. பொதுவாக அந்திக்கு பிறகு கூவல் நன்றாக இருக்கும். குளிர்காலத்தில், இவை அமைதியாக இருக்கும்.

மற்ற பல குயில்களைப் போலவே, இந்த இனமும் பிற பறவைகளின் கூட்டில் முட்டையிடக்கூடியது ஆகும். பல சிரிப்பான்கள் (எடுத்துக்காட்டு Pterorhinus sannio ) குயில் முட்டைகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் திறன் கொண்டவை. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Hierococcyx sparverioides". IUCN Red List of Threatened Species 2016: e.T22728111A94970879. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728111A94970879.en. https://www.iucnredlist.org/species/22728111/94970879. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. McAllan, I.A.W., James, D.J. 2008 Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides on Christmas Island.
  3. Payne, Robert B. (2005) The Cuckoos, Oxford University Press.
  4. Yang, Canchao; Su, Tongping; Liang, Wei; Møller, Anders Pape (2015-08-01). "Coevolution between the large hawk-cuckoo (Cuculus sparverioides) and its two sympatric Leiothrichidae hosts: evidence for recent expansion and switch in host use?" (in en). Biological Journal of the Linnean Society 115 (4): 919–926. doi:10.1111/bij.12538. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_அக்காக்_குயில்&oldid=3779823" இலிருந்து மீள்விக்கப்பட்டது