நவ பிருந்தாவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்பது புகழ்பெற்ற மத்வ துறவிகளின் பிருந்தாவனங்களின் (சமாதிகள்) காட்சி — நவ பிருந்தாவனம்.

நவபிருந்தாவனம் (Nava Brindavana) நவவிருந்தாவனம் என்றும் அழைக்கப்படுகிறது); இந்தியாவின் கர்நாடக மாநிலம், அம்பிக்கு அருகில் உள்ள ஆனேகுந்தியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நவபிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது இந்து துவைதத் துறவிகளின் பிருந்தாவனங்கள் உத்திராதி மடம், வியாசராஜ மடம் மற்றும் இராகவேந்திர மடம் ஆகியவற்றுக்கு சொந்தமானது. இவர்கள் அனைவரும் மத்வரின் நேரடி சீடரான பத்மநாப தீர்த்தரின் வழிவந்தவர்கள்.

நவ பிருந்தாவனத்தில் உள்ள புனிதர்களின் பட்டியல்[தொகு]

நவ பிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது துறவிகள் பின்வருமாறு: [1]

  1. பத்மநாப தீர்த்தர்
  2. கவீந்திர தீர்த்தர்
  3. வாகீச தீர்த்தம்
  4. வியாசதீர்த்தர்
  5. சீனிவாச தீர்த்தர்
  6. இராமதீர்த்தர்
  7. [[இரகுவார்ய தீர்த்தர்
  8. சுதீந்திர தீர்த்தர்
  9. கோவிந்த உடையார்

வளாகத்தில் இரங்கநாதர் மற்றும் அனுமன் சன்னதிகளும் உள்ளன.

வரலாறு[தொகு]

நவ பிருந்தாவனம் சுக்ரீவனால் ஆளப்பட்ட ஒரு புராண இராச்சியமான கிட்கிந்தையின் ஒரு பகுதியாக இருந்த ஆனேகுந்தியில் அமைந்துள்ளது. இராமாயணத்தில், இராமனும் இலட்சுமணனும் சீதையைத் தேடும் போது, இராமன், இலட்சுமணனுக்கு ஒரு தீவை (இப்போது 'நவபிருந்தாவனம்' என்று அழைக்கப்படுகிறது) சுட்டிக்காட்டி, அந்தத் தீவில் வணங்கக் கேட்டுக்கொண்டார். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறந்த சக்தி வாய்ந்த துறவிகள் தங்கள் புனித தியானம் செய்ய அங்கு தங்குவதற்கு கீழே வருவார்கள் என இந்துக்கள் நம்புகின்றனர். [2] [3]

நவ பிருந்தாவனம் ஒரு கண்ணோட்டம்[தொகு]

நவபிருந்தாவனில் அமைந்துள்ள அனுமன் சிலை

நவ பிருந்தாவனம் என்பது அம்பி அல்லது விஜயநகருக்கு அருகிலுள்ள துங்கபத்திரை ஆற்றிலுள்ள ஒரு சிறிய தீவு ஆகும். பிருந்தாவனம் (ஒன்பது மத்வத் துறவிகளின் சமாதி) உள்ளதால், இது மத்வர்களுக்கு புனிதத் தலங்களில் ஒன்றாகும். வியாசதீர்த்தரின் பிருந்தாவனம் மையத்தில் உள்ளது. மற்ற எட்டு துறவிகளின் பிருந்தாவனங்கள் அதைச் சுற்றி வட்டமாக உள்ளன. ஒன்பது சன்னதிகளின் சமாதியைச் சுற்றி அமைதி மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்காக, சன்னதிகளின் முன் தரையில் மஞ்சள் வட்டம் வரையப்பட்டுள்ளது. புனித துறவிகளின் தியானத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு பக்தர்கள் இந்தக் கோட்டைக் கடக்க அனுமதிக்கப்படவில்லை. பிருந்தாவனங்களுடன், இரங்கநாதர் ( விஷ்ணுவின் ஒரு வடிவம்) மற்றும் அனுமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் இங்கு உள்ளன. வியாசராஜரால் இங்கு நிறுவப்பட்ட அனுமன் சிலை உண்மையில் தனித்துவமானது. இது அனுமன், பீமன் மற்றும் மத்துவர் ஆகிய மூன்று அவதாரங்களையும் ஒரே வடிவத்தில் சித்தரிக்கிறது. முகம் அனுமனைப் போன்றது, கைகள் மற்றும் தோள்கள் நன்கு வட்டமானது மற்றும் கதாயுதத்துடன் கூடிய தசைகள் பீமனைக் குறிக்கின்றன. அடுத்த யுகத்தில் அனுமனின் அவதாரம் மற்றும் அவரது கையில் உள்ள கையெழுத்துப் பிரதிகள் மத்துவாச்சார்யாவைக் குறிக்கின்றன.

நாசவேலை சம்பவம்[தொகு]

18 ஜூலை 2019 அன்று வியாசராஜ தீர்த்த பிருந்தாவனத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.[4] மத்துவ சமூகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களால் விரைவான புனரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நாசம் செய்தவர்களை 3 நாட்களுக்குள் காவலர்கள் கைது செய்தனர் [5]

பூசை[தொகு]

நவ பிருந்தாவனம் ஒரு தீவு என்பதால் இங்கு பூசாரிகள் கிடைக்க மாட்டார்கள். ஆனேகுந்தியில் உள்ள மத்வ மடங்களில் பூசாரிகள் தங்குயிருப்பார்கள். தினமும் அதிகாலை 7 மணிக்கு, ஆனேகுந்தியிலிருந்து படகுகளில் பயணம் செய்து நவ பிருந்தாவனம் வந்து அபிசேகம் செய்துவிட்டு மதியத்திற்கு முன்பே திரும்பிவிடுவார்கள்.

பயணம்[தொகு]

ஆனேகுந்தி நகரத்தின் வரைபடம்
  • கர்நாடகாவில் அமைந்துள்ள கங்காவதி நகரத்திற்கு பயணம்:
    • பெங்களூரிலிருந்து கங்காவதிக்கு வழக்கமான பேருந்துகள் உள்ளன
    • பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து ஹோஸ்பெட்டை அடைய தொடர் வண்டிகள் உள்ளன. மேலும் பேருந்து அல்லது மகிழுந்து மூலம் கங்காவதிக்கு செல்வது எளிது.
    • ஹூப்ளி விமான நிலையம் அருகிலுள்ளது. பெங்களூரிலிருந்து ஹூப்ளிக்கு சில விமானங்கள் உள்ளன. மேலும் மகிழுந்து அல்லது பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி கங்காவதி/ஆனேகுந்திக்கு பயணிக்கலாம்.
  • கங்காவதி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று சக்கர வாகனம், மகிழுந்து அல்லது பேருந்து மூலம் 25 நிமிடப் பயணத்தில் கங்காவதியிலிருந்து ஆனேகுந்தி கிராமத்தை அடைந்து ஆற்றின் கரையை நோக்கி நடக்க வேண்டும் ( ஆனேகுந்தி வரைபடத்தில் எண் 19 ஐப் பார்க்கவும்)
  • ஆனேகுந்தியிலிருந்து படகில் நவபிருந்தாவனம் செல்லலாம்

வழிகள்:

தொடருந்து பாதை:

பெங்களூரில் இருந்து ஹொசபேட்டை வரை:

பெங்களூரு - ஹுப்ளி -அம்பி தொடர்வண்டி தினமும் ஹோசப்பேட்டை வழியாக செல்கிறது.

சென்னையில் இருந்து ஹோசப்பேட்டைக்கு தொடர்வண்டி

விருப்பம் 1:

சென்னையிலிருந்து குண்டக்கல் (மும்பை தொடர் வண்டிகள் இந்த நிலையத்தின் வழியாகச் செல்கின்றன) மற்றும் குண்டகலில் இருந்து ஹோசப்பேட்டை தொடருந்து தினசரி கிடைக்கின்றன.

விருப்பம் 2:

சென்னையிலிருந்து ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு (தினமும் குறைந்தபட்சம் 4 தொடருந்துகள் வருகின்றன) மற்றும் ரேணிகுண்டாவிலிருந்து ஹோசப்பேட்டை தொடருந்து (ஹரிப்ரியா எக்ஸ்பிரஸ்) தினசரி வருகிறது.

பேருந்து பாதை:

பெங்களூர் - தும்கூர் - சிரா - சித்ரதுர்கா - ஹோசபேட்டை - ஆனேகுந்தி. தூரம்: தோராயமாக 365 கி.மீ

சென்னையிலிருந்து ஒரு மாற்று வழி:

சென்னை - திருப்பதி - அனந்தபூர்; அனந்தபூர் - கூட்டி ; கூட்டி - பெல்லாரி - ஹோசப்பேட்டை - ஆனேகுந்தி

மந்திராலயத்திலிருந்து நவபிருந்தாவனம் செல்வதற்கான வழி:

சாலை வழியாக பயணம்,

கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் (KSRTC) , மந்திராலயத்திலிருந்து ராய்ச்சூருக்கு சென்று (1.5 மணி நேரம் பயணம்). அங்கிருந்து கங்காவதிக்கு பேருந்தில் பயணம் செய்யவேண்டும் (3 மணிநேர பயணம்). அங்கிருந்து உள்ளூர் பேருந்தில் ஆனேகுந்தியை (20 நிமிட பயணம்) அடையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma 2000, ப. 294.
  2. Alexandra van der Geer (31 October 2008). Animals in Stone: Indian Mammals Sculptured Through Time. BRILL. பக். 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789047443568. https://books.google.com/books?id=fs36CQAAQBAJ&pg=PA392. பார்த்த நாள்: 28 July 2022. 
  3. Bernardo Urbani (18 August 2022). World Archaeoprimatology: Interconnections of Humans and Nonhuman Primates in the Past. Cambridge University Press. பக். 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108487337. https://books.google.com/books?id=uUp6EAAAQBAJ. பார்த்த நாள்: 28 July 2022. 
  4. "Nava Brindavana: Religious site vandalised in Koppal". 18 July 2019. Archived from the original on 18 July 2019. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  5. "Over 1,000 volunteers reconstruct saint Sri Vyasaraja Tirtha's vandalised tomb in Koppal". July 20, 2019. Archived from the original on 2019-08-03. பார்க்கப்பட்ட நாள் 2019-07-21.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_பிருந்தாவனம்&oldid=3869085" இலிருந்து மீள்விக்கப்பட்டது