திருக்குறள் அகராதி (நூல்)
திருக்குறள் அகராதி என்னும் தலைப்பில் திருக்குறள் ஆய்வுநூல் ஒன்றினை எச். இராமசாமி 2004இல் வெளியிட்டார்.[1]
நூல் விவரங்கள்
[தொகு]இந்நூலில் திருக்குறளில் வருகின்ற அனைத்துச் சொற்களும் சொற்றொடர்களும் பொருளமைவுக்கு ஏற்றவாறு அகர வரிசையில் தரப்படுகின்றன. மு. வரதராசனார் தமது "திருக்குறள் தெளிவுரை"யில் பொழிப்புரையாகத் தருகின்ற பொருளின் அடிப்படையில் இங்கு ஆசிரியர் பதவுரை எழுதியுள்ளார். சிற்சில இடங்களில் பதத்திற்கு நேர்ப்பொருள் காண இயலாதபோது பரிமேலழகர் உரை துணையாகக் கொள்ளப்படுகிறது.
அகரவரிசையில் சொற்கள் 1) அடிச்சொல்; 2) திருக்குறள்சொல், சொற்றொடர்கள்; 3) அவை உள்ள திருக்குறள் எண்; 4) இலக்கணக் குறிப்பு; 5) உரை - இந்த வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலில் ஆசிரியர் தரும் தகவல்படி, திருக்குறளில் 1139 அடிச்சொற்கள் அமைந்துள்ளன. அவற்றுள் 411 பெயரடிகள், 389 வினையடிகள், 142 பெயருக்கும் வினைக்கும் பொதுவான அடிகள், 33 இடையடிகள், 11 உரியடிகள் என்றுள்ளன.
பிற்சேர்க்கைகள்
[தொகு]நூலின் மையப் பகுதியாகிய அகராதி முடிந்ததும் ஆசிரியர் பிற்சேர்க்கைகள் நான்கு தருகின்றார். பிற்சேர்க்கை -1 என்னும் பகுதியில் "திருக்குறளில் காணப்படும் வடமொழிச் சொற்களின் அகரவரிசை" தரப்படுகிறது. திருக்குறளில் 47 வடமொழி அடிச்சொற்கள் உள்ளன என்று கூறும் ஆசிரியர், சாமி வேலாயுதம் எழுதிய "திருக்குறள் சொல்லடைவு" என்னும் நூலிலிருந்து அத்தகவலைப் பெற்றதாகக் கூறுகிறார்.
பிற்சேர்க்கை - 2 என்னும் பகுதியில் "திருக்குறள் முடிப்பு அகராதி" தரப்படுகிறது. இங்கு ஒவ்வொரு குறளின் முடிவுச் சீரும் அகர வரிசையில் தரப்படுகிறது.
பிற்சேர்க்கை - 3 என்னும் பகுதியில் "திருக்குறள் நூலில் உள்ள அணிகளும் பாவின் எண்களும்" பற்றிய தகவல்கள் உள்ளன. திருக்குறளில் உருவக அணி 6 முறையும், உவமை அணி 140 முறையும், இல்பொருள் அணி ஒரு முறையும், எடுத்துக்காட்டு உவமை அணி 22 முறையும், எதிர்நிரல் நிறை அணி ஒரு முறையும், ஏகதேச உருவக அணி 5 முறையும், சொல்பின்வரு நிலையணி ஒரு முறையும், சொல்பொருள் பின்வருநிலையணி 27 முறையும், பிறிது மொழிதல் அணி 9 முறையும், முறை நிரல் நிறை அணி 2 முறையும், வேற்றுமை அணி 2 முறையும் வருவதாக தகவல் இந்நூலில் தரப்படுகிறது.
பிற்சேர்க்கை - 4 என்னும் பகுதியில் திருக்குறளில் "நிற்பன", "நீந்துவன", "ஊர்வன", "பறப்பன", "நடப்பன", "எத்தனை எத்தனை மனிதர்கள்", "மனிதர்க்குப் பயன்பட்ட வாகனங்கள், கருவிகள்" ஆகியவை எந்தக் குறளில் வருகின்றன என்று தொகுத்துத் தரப்படுகிறது.
குறிப்பு
[தொகு]- ↑ எச். இராமசாமி, திருக்குறள் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்கங்கள்: 182