சாதிக் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதிக் அலி (Sadiq Ali, 1910–2001[1]) இராச்சசுத்தானில் உள்ள உதயப்பூரில் பிறந்த ஓர் விடுதலை இயக்க வீரர் ஆவார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சாதிக் அலி பின்னர் விடுதலை இயக்கத்தில் இணைந்தார்; பலமுறை சிறை சென்றுள்ளார். அனைத்திந்திய காங்கிரசு கட்சிக் குழுவிற்கு 1936இலிருந்து 1948 வரை அலுவலகச் செயலராகவும் நிரந்தரச் செயலராகவும் பணியாற்றினார். 1958 முதல் 1962 வரையும் பின்னர் 1964 முதல் 1969 வரையும் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1950-52இல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1957 முதல் 1970 வரை மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அனைத்திந்திய காங்கிரசு கட்சிக் குழுவின் பொருளியல் மீளாய்வு இதழின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார்.

பழமைவாத இந்திய தேசிய காங்கிரசின் (காங் (ஓ)) தலைவராக 1971 முதல் 73 வரை இருந்துள்ளார். மகாராட்டிர ஆளுநராக 1977 முதல் 1980 வரையும் தமிழக ஆளுநராக 1980 முதல் 82 வரையும் பொறுப்பாற்றி உள்ளார். 1992 முதல் 1996 வரை புது தில்லி இராச்காட்டு சமாதி குழுத் தலைவராக பணி புரிந்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிக்_அலி&oldid=3423123" இலிருந்து மீள்விக்கப்பட்டது