சங்லூன்
சங்லூன் | |
---|---|
Changlun | |
கெடா | |
ஆள்கூறுகள்: 6°26′N 100°26′E / 6.433°N 100.433°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | கோத்தா ஸ்டார் |
தோற்றம் | 1900-களில் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,506 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06010 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-04-4xxxxxxx |
சங்லூன் (மலாய்: Changlun; ஆங்கிலம்: Changlun; சீனம்: 长伦) என்பது மலேசியா, கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்த நகரம் அலோர் ஸ்டார் நகரில் இருந்து 42 கி.மீ. வடக்கே உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் புக்கிட் காயூ ஈத்தாம்.
இந்தச் சங்லூன் சிறுநகரம் தாய்லாந்து நாட்டிற்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இந்த நகரின் வழியாகத் தான் மலேசியாவின் வடக்கு தெற்கு விரைவுசாலை செல்கின்றது. தவிர சங்லூன் நகரையும் கோலா பெர்லிஸ் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலையும் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.[1] அதனால் இந்நகரம் அண்மைய காலங்களில் துரிதமான வளர்ச்சியையும் கண்டு வருகிறது.
பொது
[தொகு]வடக்கு தெற்கு விரைவுசாலை; சங்லூன்-கோலா பெர்லிஸ் விரைவுச்சாலை ஆகிய விரைவு நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி சிந்தோக் நகரை அடையலாம். அங்குள்ள உயர்க்கல்விக் கழகங்கள்:
- வடக்கு மலேசியப் பல்கலைக்கழகம் (Universiti Utara Malaysia)
- மாரா தொழிநுட்பப் பல்கலைக்கழகம் (Universiti Technology Mara)
- மலேசியப் பெர்லிஸ் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Perlis) (UniMAP)
கட்டணம் இல்லாத கூட்டரசு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி லங்காவி, கோலா பெர்லிஸ் போன்ற இடங்களுக்கும் விரைவாகச் செல்லலாம்.
வரலாறு
[தொகு]தாய்லாந்து மொழியில் இருந்து சங்லூன் எனும் பெயர் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சங் (Chang) என்றால் யானை. லூன் (Lun) என்றால் விழுந்தது அல்லது வீழ்ச்சி. முன்பு காலத்தில் இந்தப் பகுதியில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன. அவை இந்த இடத்திற்கு வந்ததும் சேறும் சகதியுமான சதுப்பு நிலங்களில் தடுமாறி விழுவது வழக்கம். அதனால் அந்த இடத்திற்கு யானைகள் விழுந்து செல்லும் இடம் என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சங்லூன் எனும் பெயர் வந்ததற்கான இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது. முன்பு காலத்தில் சங்லூன் பகுதியில் நிறைய காட்டு யானைகள் இருந்துள்ளன. காட்டில் இருந்து அந்த யானைகளைப் பிடித்து வந்து பழக்கி இருக்கிறார்கள். பக்குவம் அடைந்த யானைகளை நன்கு கவனித்து முறையாகப் பேணி வளர்த்து இருக்கிறார்கள். பின்னர் மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கும் பொருட்களைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.[2]
மூத்த யானை மயங்கி விழுந்ததால்
[தொகு]யானைகள் போக்குவரத்துச் சாதனங்களாகப் பயன்படுத்தப்பட்ட காலத்தில், ஒரு சமயம் யானைகளில் மூத்த யானை ஒன்று ஆற்று நீரைக் குடித்ததால் மயங்கி விழுந்து விட்டது. மயக்கமான நிலையில் ஒரு நாள் முழுவதும் அப்படியே கிடந்து இருக்கிறது. சங்லூன் கிராமத்திற்கு அருகில் ஓர் ஆற்றோரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து இருக்கிறது.
அதன் பின்னர் அந்த இடத்திற்கு யானைப் பாகர்கள் வந்ததும் சாங் லூன் என்று சயாமிய மொழியிலேயே சொல்லி வந்து இருக்கிறார்கள். சங்லூன் சங்லூன் என்று அடிக்கடி சொல்லி வந்ததால் பின்னர் நாட்களில் சங்லூன் எனும் பெயரும் நிலைத்து விட்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]
2010 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி சங்லூன் நகரின் மக்கள் தொகை 1506. மற்ற மலேசிய நகரங்களைப் போல இங்கேயும் மலாய்க்காரர்கள் மிகுதியாகவே வாழ்கின்றனர்.
- மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 694 (46.1%).
- சீனர்களின் எண்ணிக்கை 583 (38.7%).
- இந்தியர்களின் எண்ணிக்கை 86 (5.7%).
- பூமிபுத்ராக்கள் மற்றும் சயாமியர்களின் எண்ணிக்கை 28 (1.9%).
- மலேசியர் அல்லாதவர்களின் எண்ணிக்கை 115 (7.6%).[3]
இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். இவர்கள் அருகாமையில் உள்ள ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். தவிர சிலர் சிறு தொழில் வியாபாரங்கள் செய்கின்றனர். மேலும் சிலர் அரசாங்கத் துறை ஊழியர்களாகவும், தனியார் நிறுவனச் சேவையாளர்களாகவும் பணிபுரிகின்றனர். தாய்லாந்து நாட்டின் எல்லை அருகே இந்தச் சங்லூன் நகரம் அமைந்து இருப்பதால், இங்குள்ள தமிழர்களிடையே சயாமிய கலாசாரத் தாக்கங்கள் பரவலாகக் காணப் படுகின்றன.
குடியிருப்பு வளாகங்கள்
[தொகு]சங்லூன் நகரம் அண்மைய காலங்களில் துரிதமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. பழைய சங்லூன் நகரத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதால், சங்லூன் 2 (Pekan Changlun 2) எனும் புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- தாமான் அங்சானா (Taman Angsana)
- தாமான் பெரிங்கின் (Taman Beringin)
- தாமான் பெர்சத்து (Taman Bersatu)
- தாமான் ஜாத்தி (Taman Jati)
- தாமான் மெராந்தி (Taman Meranti)
- தாமான் பெர்த்தாமா (Taman Pertama)
- தாமான் ரேசாக் (Taman Resak)
- தாமான் சாயாங் (Taman Sayang)
- தாமான் செத்தியா ஜெயா (Taman Setiajaya)
- தாமான் ஸ்ரீ சங்லூன் (Taman Seri Changlun)
- தாமான் மெர்பாவ் (Taman Merbau)
- தாமான் ஸ்ரீ மெர்பாவ் (Taman Seri Merbau)
- தாமான் ஸ்ரீ மெராந்தி (Taman Sri Meranti)
- தாமான் தேஜா (Taman Teja)
- கம்போங் ஜெராகான் (Kampung Jeragan)
- கம்போங் திரேடிசனல் (Kampung Tradisional)
கல்வி நிலையங்கள்
[தொகு]தொடக்கப் பள்ளிகள்
[தொகு]- பத்து லாப்பான் தேசியப்பள்ளி (SK Batu Lapan)
- சங்லூன் தமிழ்ப்பள்ளி (SRJK(T) Changlun)
- இட் மின் சீனப்பள்ளி (SRJK(C) Yit Min)
- டத்தோ வான் கெமாரா தேசியப்பள்ளி (SRK Dato' Wan Kemara)
- அட் தோயிபா சமயப்பள்ளி (Sekolah Agama At-Toyyibah)
- பெல்டா புக்கிட் தாங்கா தேசியப்பள்ளி (Sekolah Kebangsaan Felda Bukit Tangga)
உயர்நிலைப்பள்ளிகள்
[தொகு]- சங்லூன் உயர்நிலைப்பள்ளி (SMK Changlun)
- அட் தோயிபா சமயப்பள்ளி (Sekolah Agama At-Toyyibah)
கல்லூரிகள்
[தொகு]- கெடா மெட்ரிகுலேசி கல்லூரி (Kolej Matrikulasi Kedah)
சங்லூன் தமிழ்ப்பள்ளி
[தொகு]சங்லூன் தமிழ்ப்பள்ளி 30 மாணவர்களுடன் 1947 ஜூன் 01 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. முதன்முதலில் சங்லூன் பகுதியில் இருந்த கியெட் லூங் (Ladang Kiet Loong Changlun) எனும் ரப்பர் தோட்டத்தில் உருவானது. ஒரே ஓர் ஆசிரியர்தான் பணிபுரிந்தார். 1948 இல் மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு கண்டது. அடுத்து வந்த காலங்களில் தமிழ்மொழியின் மீது ஏற்பட்ட தாக்கத்தினால் பெற்றோர்கள் பலர் தங்களின் பிள்ளைகளைச் சாங்லூன் தமிழ்ப்பள்ளியிலேயே பதிவு செய்தனர்.
1969 ஆம் ஆண்டு பள்ளியின் கட்டுமானத்தில் சேதங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் தொடர்ந்து அப்பள்ளியில் கல்வி கற்றால் உயிர் ஆபத்துகள் ஏற்படலாம் என கல்வி இலாகா அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். அதனால் அங்கு பயின்ற மாணவர்களை வேறு ஓர் இடத்திற்கு மாற்ற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் சங்லூன் டத்தோ வான் கெமாரா தேசியப் பள்ளிக்கு மாற்றப் பட்டனர்.
புதிய நான்கு மாடிக் கட்டடம்
[தொகு]சில ஆண்டுகள் சங்லூன் தமிழ்ப்பள்ளி, டத்தோ வான் கெமாரா தேசியப் பள்ளியில் இயங்கி வந்தது. பின்னர் இட் மின் சீனப்பள்ளிக்கு மாற்றம் கண்டது. 1981 ஆம் ஆண்டு சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய பள்ளி கட்டுவதற்குத் தனியாக ஒரு நிலம் கிடைத்தது. அந்தப் புதிய நிலத்தில் தான் இப்போதைய பள்ளியும் அமைந்து உள்ளது.
1987 ஆம் ஆண்டு சங்லூன் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவின் பேரில் சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய இணைக் கட்டமும் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு புதிய நான்கு மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த நிலத்தைச் சங்லூன் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாங்கிக் கொடுத்தது.
- மலேசியக் கல்வியமைச்சின் சார்பில் துணைக்கல்வி அமைச்சர் பி. கமலநாதன்,
- சங்லூன் தமிழ்ப்பள்ளியின் சார்பில் தலைமையாசிரியை குமாரி. ஜி. சாந்தி,
- பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சு. இராஜேந்திரன்,
- பள்ளி வாரியத்தின் சார்பில் கோ. கருணாநிதி
ஆகியோரும் உள்ளூர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.[4]
மேற்கோள்
[தொகு]- ↑ Changlun–Kuala Perlis Highway, Federal Route is a highway in Malaysia which links the towns of Perlis with the main expressway of Peninsular Malaysia, the North-South Expressway.
- ↑ Katanya, gajah itu yang sedang mengangkut barang tiba-tiba terjatuh ketika berada di tepi sungai di Kampung Changhai.
- ↑ 3.0 3.1 "2010 Population and Housing Census of Malaysia" (PDF) (in Malay and English). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24 (ksmuthukrishnan).
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ A total of RM100mil was allocated during the budget announcement in 2012, of which RM13mil was used for small improvements in 184 schools, while the other RM87mil was for larger projects in 39 schools.