கோகாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகா மகாராஜா
கோகாஜி குதிரையில் பவனி வருதல்
அதிபதிபாம்புக்கடியில் இருந்து காப்பாற்றும் கடவுள்
தேவநாகரிगोगाजी
இடம்தாத்ருவா, கோகமேடி, இராசத்தான், இந்தியா.
ஆயுதம்ஈட்டி
பெற்றோர்கள்அப்பா: மன்னர் சேவார் தாக்கர், அம்மா: அரசி பாச்சல்

கோகாஜி ( கோகா, ஜஹர் வீர் கோக்கா, குக்கா, குக்கா பீர், குக்கா ஜஹர்பீர், குக்கா சோஹன், குக்கா ராணா, குக்கா பீர் மற்றும் ராஜா மாண்ட்லிக் என்றும் அழைக்கப்படுகிறது) பிரபலமான ஒரு நாட்டுப்புற தெய்வம் ஆகும். இந்த தெய்வம் இந்தியாவின் வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசங்களில் வழிபடப்படுகிறது. ஹரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப் பகுதி, உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் குஜராத் . இந்த பகுதிகளில் போர்வீரனாகவும், துறவியைப்போலவும் மட்டுமல்லாது  பாம்புகளின் கடவுள் என்றும் போற்றப்பட்டு வணங்கப்படுகிறார்

ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதைகளில் அவரைப் பற்றிய பல்வேறு  குறிப்புகள் இருந்தாலும், கோகாவைப் பற்றிய சிறிய வரலாற்று குறிப்புக்கள் எங்குமே இல்லை எனலாம் , அவர் தாத்ருவாவின் சிறிய ராஜ்யத்தை (இன்றைய ராஜஸ்தானில்) பிருத்விராஜ் சவுகானின் சமகாலத்தவராக ஆட்சி செய்தார் என்றும் ஒரு கருத்து உண்டு.

சொற்பிறப்பியல்[தொகு]

புராண கதைகளின் படி,குரு கோரக்நாத், கோகாவின் தாய் பாச்சலுக்கு 'குகல்' பழத்தை கொடுத்து ஆசீர்வாதத்ததால் கோகா பிறந்த காரணத்தால் இந்த பெயரிடப்பட்டது என்ற கருத்தும், அவர் பசுக்களுக்கு ( சமஸ்கிருதத்தில் கோ) செய்த குறிப்பிடத்தக்க சேவையின் காரணமாக கோகா என்று அழைக்கப்பட்டார் என்ற கருத்தும் உண்டு

இராச்சியம்[தொகு]

கோகா கங்காநகருக்கு அருகில் பகத் டெட்கா என்று அழைக்கப்படும் ஒரு பகுதியை தன ராஜ்ஜியமாக கொண்டிருந்தார். அது ஹரியானாவில் ஹிசார் அருகே ஹன்சி வரையும் மற்றும் பஞ்சாபில் சட்லெஜ் நதி வரையிலான பிரதேசத்தை உள்ளடக்கியது. [1] [2] அவரது தலைநகரம் கங்காநகருக்கு அருகிலுள்ள தாத்ருவாவில் இருந்தது. [3]

புராணக்கதைகள்[தொகு]

குடும்பம்[தொகு]

கோகா ( இந்தி: गोगा ) ( ராஜஸ்தானி : (Gugo) गुग्गो) ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள சௌஹான் குலத்தைச் சேர்ந்த தாத்ருவாவில் உள்ள அரசி பாச்சல் ( கி.பி. 1173 இல் சிர்சாவை ஆட்சி செய்த கன்வர்பாலா என்ற ராஜபுத்திர ஆட்சியாளரின் மகள்,) மற்றும் மன்னர் சேவார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கோகா ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் சாதுல்பூர் தாலுகாவில் ஹிஸ்ஸார் - பிகானேர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாத்ருவா கிராமத்திலே தனது இளமை பருவத்தை பல்வேறு திறமைகளை கற்றுக்கொன்று வாழ்ந்தார். மற்றொரு இதிகாச கதைகளின் படி, சட்லஜ் முதல் ஹரியானா வரை பரவியிருந்த ஜங்கல் தேசத்தின் ராஜாவான வச்சா சௌஹான் இவருடைய தந்தை ஆவார். [4]

பிறப்பு[தொகு]

பாச்சல் மற்றும் அவளது இரட்டை சகோதரி இருவரும் கோரக்நாத்தை வழிபட்டு அவரது ஆசிர்வாதத்தை பெற முயற்சித்தபோது , அவளது இரட்டை சகோதரி கோரக்நாத்தின் ஆசீர்வாதத்தை குறுக்கு வழியில் பெற முடிவு செய்தார். அதன்படி நள்ளிரவில் தன் சகோதரியான பாச்சலின் ஆடைகளை அணிந்து கொண்டு, கோரக்நாத்தை ஏமாற்றி, ஆசிர்வாதப் பலனைக் பெற்றுக்கொண்டாள் . பாச்சல் அதை உணர்ந்ததும், கோரக்நாத்திடம் விரைந்து சென்று, தான் அவரிடம் ஆசீர்வாதமாக எதையும் பெறவில்லை என்று கூறினாள். இதற்கு பதிலளித்த கோரக்நாத், தான் ஏற்கனவே ஆசிர்வாதம் அளித்துவிட்டதாகவும், இனி ஆசிர்வதிக்க இயலாது என்றும் கூறினார். தனது சகோதரி தன்னை ஏமாற்றியதைக் கூறி வேண்டிக்கொண்ட பாச்சலின் கோரிக்கைகளுக்குப் பிறகு, கோரக்நாத் மனமிரங்கி இரண்டு குகல் பழங்களைக் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட பாச்சல்  குழந்தை இல்லாத பெண்களுக்கு அந்த பழங்களை பகிர்ந்தளித்தார். குரு பாச்சலுக்கு இந்த பழங்களை கொடுத்து ஆசி வழங்கியபோது, அவளுக்கு பிறக்கும் மகன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருப்பான் என்றும், பாச்சலின் சகோதரியான காச்சலின் இரண்டு மகன்களையும் ஆள்வான் என்றும் அவர் முன்னறிவித்தார்.

திருமணம்[தொகு]

கோகா தந்துல் நகரியின் மன்னரான சிந்தா சிங்கின் மகளான ஷ்ரேயல் ராஸ் என்பவரை  மணந்தார்.

மற்ற கதைகள்[தொகு]

மற்றொரு கதை என்னவென்றால், டெல்லியின் மன்னர் அனங்பால் தோமருடன் இணைந்து அர்ஜனும் சர்ஜனும் கோகாவுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை தீட்டினர். மூவரும் இணைந்து கோகாவிற்கு எதிராக பகாட் பகுதியை தாக்கினார். ஆனால் அவ்விருவரும் கோகாவால் கொல்லப்பட்டனர். மேலும் கோகா தனது துன்பத்திற்கு காரணமான டெல்லியின் மன்னரை மட்டும் உயிரோடு மன்னித்து விட்டார். நிலம் தொடர்பான தகராறில், அவர் தனது இரண்டு சகோதரர்களைக் கொன்றதன் காரணமாக அவர் தனது தாயின் கோபத்தை தன் மீது வரவழைத்துக்கொண்டார் என்பதாக ஒரு கதை உள்ளது

விழா மற்றும் கொண்டாட்டங்கள்[தொகு]

கோகாஜியின் வரலாறு நாட்டுப்புற மதத்திற்குள் அடங்கும், எனவே அவரை அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் பின்பற்றி வருகிறார்கள். கோகா தன்னைப் பின்பற்றுபவர்களை பாம்புகள் மற்றும் பிற தீய விலங்குகளினால் ஏற்படும் தீமைகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு தெய்வப்பிறவியாக பிரபலமானவர். மேலும் அவர் ஒரு பாம்பு கடவுளாக கருதப்படுகிறார், மேலும் தற்போது ராஜஸ்தானில் உள்ள நாகா வழிபாட்டைப் பின்பற்றுபவர்களால் வழிபடப்படும் ஒரு முக்கிய தேவதையாக உள்ளார், மேலும் மேற்கு இமயமலை பகுதிகளில் உள்ள மக்களால் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து  இவரை வழிபட்டு வருகிறார்கள். ஒருவேளை அம்மக்கள் ராஜஸ்தானில் இருந்து குடிபெயர்ந்ததன் விளைவாக கூட இது இருக்கலாம். [5]

விவசாயத் தொழிலில் ஈடுபடும் மக்களிடையேயும் அவர் பிரபலமானவர், அவர் ஒரு இந்துவாக இருந்தாலும் இந்துக்களிடையே மட்டுமல்லால் இசுலாம் மக்களிடையே கூட அவரை குறிப்பாக பாம்புக்கடி விஷத்தின்  (ஜஹர்) விளைவுகளை குணப்படுத்தும் சக்தி கொண்ட ஒரு துறவி ( பீர் ) என்று கருதப்பட்டு வழிபடுகிறார்கள். [6]

குரு கோரக்நாத்தின் சீடர் என்று பெயர் பெற்றவர். பஞ்சாபில் நிலவும் முஸ்லீம் வாய்வழி பாரம்பரியத்தின் படி, அவர் பதிண்டாவைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பீர் ஹாசி ரத்தன் மூலம் எந்த வித நிலத்திற்குள்ளும் உள்நுழைந்து வெளியேறும் திறமையை கற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது. [7] [8] கோகா பதிண்டாவில் சில காலம் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. [9]

பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்கள் உட்பட ராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த கோகாஜியை வழிபடும் வழிபாட்டு முறை பரவலாக உள்ளது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் அவரைப் பின்பற்றுபவர்கள் பலர் உண்டு.பெரும்பாலான வட இந்தியர்கள் அவரை வழிபடுகின்றர்.

ராஜஸ்தான்[தொகு]

அவரது ஆலயம், மெடி ( சமாதியின் சுருக்கமான பேச்சு வார்த்தை) என குறிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு மூலையிலும் ஒரு மினாரட் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்து கல்லறையுடன் உள்ள ஒரு அறை கட்டிடமே கோவிலாக உள்ளது, இது நீண்ட மூங்கில் மயில் தோகைகள், ஒரு தேங்காய், சில வண்ண நூல்கள் மற்றும் சில கைபங்கங்கள் மற்றும் மேலே ஒரு நீல கொடியுடன் கூடிய ஒரு நிஷானால் (ஒரு சின்னம் அல்லது அடையாளம்) குறிக்கப்படும்,

கோகா வழிபாடு இந்து நாட்காட்டியின் பத்ரா மாதத்தில் தொடங்குகிறது. பத்ரா 9 ஆம் தேதி, மக்கள் அவரது சின்னமான கருப்பு பாம்பை சுவரில் வரைந்து வணங்குகிறார்கள். வழிபாட்டாளர்கள் கிராமத்தைச் சுற்றி வரும் சாரி என்று அழைக்கப்படும் பூச்சிகளை கொல்ல பயன்படும் சிறு மட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். பக்தர்கள் அவருக்கு நேர்த்திக்கடனாக செலுத்தி, சுர்மா எனப்படும் இனிப்புகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். சவாயன் இனத்தை சார்ந்தவர்கள் அவரது நினைவாக 'பிர் கே சொலே' எனப்படும் பக்திப் பாடல்களை டெரூஸின் துணையுடன் பாடுகின்றனர். டெரூஸை அடிப்பது சவாயன் சமூகத்தின் தனிச் சிறப்பு; மற்றவர்கள் பாடலாம், நடனமாடலாம் அல்லது சர்ஹாவாவை காணிக்கையாக வழங்கலாம். இரும்புச் சங்கிலிகளால் தன்னைத் தானே அடித்து பாடி வரும் பக்தர்களான நடனக் கலைஞர்களிடம்  கோகாவின் ஆவி தற்காலிகமாகத் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் (பத்ர கிருஷ்ண பக்ஷ நவமி) மக்கள் தங்கள் ராக்கிகளைத் திறந்து அவருக்கு வழங்குகிறார்கள். அவர்கள் இனிப்பு பூரி (இனிப்பு சப்பாத்தி வகை) மற்றும் பிற இனிப்புகளையும் வழங்கி அவரது ஆசிர்வாதத்தைப் பெறுகிறார்கள்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து 359  கி.மீ. தொலைவில் உள்ள  ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள கோகமேடியில் கோகா சமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. சமாதி சாதல் கோகமேடியில் பிரமாண்டமான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் பாத்ரபத மாதத்தில் மூன்று நாட்கள் கோகா திருவிழா நடைபெறும் . அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூடுவார்கள். பத்ரபாதத்தின் (கோக நவமி) இருண்ட பாதியின் ஒன்பதாம் நாளிலிருந்து அதே மாதத்தின் இருண்ட பாதியின் பதினொன்றாம் நாள் வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கைகளில் நிஷான்ஸ் என்று அழைக்கப்படும் நீல வண்ணக் கொடிகளுடன் மத்தளங்களின் தாளங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள். கோகாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய பாடல்கள் மற்றும் பஜனைகள் டமாரம், சிம்தா போன்ற பாரம்பரிய கருவிகளுடன் இசைக்கப்படும் இசையுடன் வாசிக்கப்படுகின்றன. அவரது பிறந்த இடமான தாத்ருவாவில், ஒரு மாதத்திற்கும் மேலாக கண்காட்சி நடைபெறுகிறது. பத்ரா மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தாத்ருவாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்து பக்தர்கள் வரத் தொடங்குகிறார்கள். இந்த பக்தர்கள் பொதுவாக பர்பியா (கிழக்கை சேர்ந்தவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் கழுத்துகளில் பாம்பு உருவத்தை மாட்டிக்கொண்டு வருவார்கள். அவரது பிறந்த இடமான தாத்ருவா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, யாராவது ஜோஹ்ராவிலிருந்து ( தாத்ருவாவில் ஒரு புனித குளம் உள்ள தரிசு நிலம்) ஒரு குச்சியை எடுத்தால் அது பாம்பாக மாறும் என்று நம்பப்படுகிறது. கோகாஜியின் பக்தர்கள் பாம்பு கடித்தால் அவரை வணங்கி, கடிபட்ட இடத்தில் உடனடி பரிகாரமாக புனித சாம்பலை ( பாபூத் ) தடவுகிறார்கள்.

இமாச்சல பிரதேசம்[தொகு]

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனீக் புராவில், கோகா நவமி அன்று மிகப் பெரிய அளவிலான திருவிழா மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோகாஜியின் கதையானது, அவரை பின்பற்றுபவர்களால் ரக்ஷா பந்தன் முதல் கோகா நௌமி வரை, இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று  வாசிக்கப்படுகிறது. அவரது சீடர்கள் கோகாஜியின் கதைகளைப் பாடும்போது ஒரு சாட் (ஒரு மரக் குடை) எடுத்துச் செல்கிறார்கள், மேலும் மக்கள் அவர்களுக்கு தானியங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குகிறார்கள். சேகரிக்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் மொத்தமாக கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள், பின்னர் கோகா நவமி பெருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு பூஜைகள் மற்றும் சடங்குகள் தவிர, மல்யுத்தப் போட்டி ( மால் அல்லது தங்கல் ) மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அங்கு பிரதேசம்  முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அலங்கார பொருட்கள், கைவினைப்பொருட்கள், உடைகள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொம்மைகளை கொண்ட வருடாந்த மூன்று நாள் கண்காட்சி இந்த விழாக்களில் ஒரு பகுதியாகும், அவரது கதையை கேட்டுக்கொண்டே சிறந்த உணவுகளை சாப்பிட்டு கொண்டும், பொருட்களை வாங்கியும் அவரை நினைவு கூறுகிறார்கள்.

பஞ்சாப்[தொகு]

கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்ட கோகா பஞ்சாபில் குக்கா என்று அழைக்கப்படுகிறார். பல பஞ்சாபி கிராமங்களில் குக்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. சாப்பர் கிராமத்தில் ஆண்டுதோறும் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது, இது சப்பர் மேளா என்று அழைக்கப்படுகிறது.  பஞ்சாபில் மான்சாவிலிருந்து 51 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பரேட்டா மண்டி போன்ற நகரங்களில் குக்காவின் பாரம்பரியத்தை காணலாம். "இந்த நகரத்தில் முக்கியமாக சௌஹான்கள் வசிக்கின்றனர், அவர்கள் 'பாம்புகளின் இறைவன்' குக்காவிலிருந்து தங்கள் தோற்றத்தைக் கண்டறிந்துள்ளனர். குக்காயின் அருளால் இங்கு யாரும் பாம்புக்கடியால் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது." [10]


குக்கா நௌமி நாளில், இனிப்பு உணவை வழங்கும்போது, பின்வரும் பாடல்கள் பாடப்படுகின்றன:

பஞ்சாபி :

ਪੱਲੇ ਮੇਰੇ ਮਥੀਆਂ

ਨੀ ਮੈਂ ਗੁੱਗਾ ਮਨਾਓੁਣ ਚੱਲੀਆਂ

ਨੀ ਮੈਂ ਬਾਰੀ ਗੁੱਗਾ ਜੀ

[11]

மொழிபெயர்ப்பு

எனக்கு மத்யா கிடைத்தது
நான் குக்கா ஜியை வணங்கப் போகிறேன்
ஓ குக்கா ஜி

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajasthan [district Gazetteers].: Ganganagar (1972)
  2. [1] Gupta, Jugal Kishore: History of Sirsa Town
  3. "Welcome to the official website of the Municipal Corporation Bathinda". Mcbathinda.com. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  4. Census of India, 1961: India, Volume 1, Issue 4; Volume 1, Issue 19
  5. Naga Cults and Traditions in the Western Himalaya: Omacanda Hāṇḍā
  6. Hāṇḍā, Omacanda (2004). Naga Cults and Traditions in the Western Himalaya. New Delhi: Indus Publishing. பக். 317–320, 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173871610. https://books.google.com/books?id=Xd50t19YpJEC&pg=PA317. பார்த்த நாள்: 17 October 2012. 
  7. Bhatti, H.S Folk Religion Change and Continuity Rawat Publications
  8. Shivam Vij 18/01/2013
  9. James Todd (1920) Annals and Antiquities of Rajasthan: Or The Central and Western Rajput States of India, Volume 2
  10. "Punjab Revenue". Punjabrevenue.nic.in. 1992-04-13. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  11. Alop ho riha Punjabi virsa – bhag dooja by Harkesh Singh Kehal Unistar Book PVT Ltd பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5017-532-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகாஜி&oldid=3686178" இலிருந்து மீள்விக்கப்பட்டது