உள்ளடக்கத்துக்குச் செல்

சாப்பர் மேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குகா ஜீ
குகா ஜீ

சாப்பர் மேளா ( Chhapar Mela ) என்பது சாப்பர் என்னும் கிராமத்தில் ஒவ்வோராண்டும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் ஒரு விழா ஆகும். இந்த சாப்பர் கிராமம் இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ளது.[1] இந்த விழா குக்கார் என்பவரின் நினைவாக நடக்கிறது,[2] இது மால்வா பிராந்தியத்தின் புகழ்வாய்ந்த திருவிழாக்களில் ஒன்று.[3]

இந்த விழாவில் மக்கள் முதன்மையாக சீறும் பாம்பான குகாரை வணங்குகின்றனர். இந்த விழா ஒவ்வோராண்டும் பத்தாஸ் மாதத்தின் நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவைத் துவங்கி 150 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மைக் காலங்களில் இந்த விழாவில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சம்வரை உயர்ந்துள்ளது.[4]

குகா விழாவைத் தொடரந்து இதே இடத்தில் சிறிய சாப்பர் விழாவும் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது இங்கு வரும் பக்தர்கள் கரண்டியால் மண்ணை கொத்தி எடுக்கின்றனர் (ஏழு முறை) இவ்வாறு மண்ணை கொத்தி தங்களை பாம்புக் கடியில் இருந்து பாதுகாக்க குகாவை வேண்டி வணங்குகின்றனர். இந்த விழாவில் இசையும், மகிழ்ச்சியும், ஆட்டமும் கொண்டதாக இருக்கும். இந்த விழா கடந்த சில தசாப்தங்களாக ஒரு மகத்தான விழாவாக வளர்ந்துள்ளது.[5]

செவிவழிக் கதைப்படி சாப்பர் கிராமத்தில் இருந்த ஒரு வேளாண் குடும்பத்தில் ஒரு சிறுவனும், பாம்பும் ஒன்றாக பிறந்து, சிறுவனும் பாம்பும் ஒற்றுமையாக இருந்தனர். ஒரு சமயம் சிறுவனின் தாய் குழந்தையை திறந்தவெளியில் கட்டில் மேல் கிடத்திவிட்டு பாம்பு மகனின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வயலுக்கு சென்றாள். குழந்தை வெயிலால் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் பாம்பு குழந்தையின் தலைக்கு மேலே படமெடுத்து நிழல் தந்தபடி இருந்தது. இதை ஒரு வழிப்போக்கர் கண்டு குழந்தையை பாம்பு கடிக்க இருப்பதாக எண்ணி ஒரு குச்சியால் பாம்பை அடித்துக்கொன்றுவிட்டார். பாம்பு இறந்தவுடன் குழந்தையும் இறந்துவிட்டது. இதனால் குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தது. ஒரு முதிய சாமியாரின் ஆலோசனையின்பேரில் குடும்பத்தார் இறந்தவர்களின் நினைவாக ஒரு ஆட்டுக் கிடாயை நேர்ந்து விட்டனர் ஆட்டுக் கிடாய் ஒரு குறிப்பிட்ட இடத்தருகே சென்று நின்றது. அந்த இடத்தில்தான் மக்கள் குகா வழிபாட்டையும், விழாவையும் செய்யகின்றனர். மால்வா வட்டார வேளாண் மக்கள் இந்த திருவிழாவின்போது வேளாண்பணிகளை ஒத்திவைத்து விழாவை அங்கீகரித்து சிறப்பாக்குகின்றனர்.

இந்த இடத்தில் மக்கள் கொண்டாடும் இரண்டாவது சிறிய விழாவான சிறிய சாப்ரா விழா குறித்து மக்களிடையே நிலவும் கதை என்னவென்றால் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தப் பகுதியின் மகாராஜா சாப்ரா விழாவை சில விவசாயிகளின் புகாரை அடுத்து தடை செய்யது கட்டளையிட்டார். இதன் பிறகு மன்னருக்கு சொந்தமான குதிரைகள் மர்மமான முறையில் இறக்கத்தொடங்கின. விழாவை தான் தடைசெய்ததே காரணம் என்பதை மன்னர் உணர்ந்து, பெரிய விழா முடிந்த்தும் அதைத்தொடர்ந்து சிறியசாப்ரா விழாவை நடத்த மன்னர் அறிவித்து அதன்படி செய்தார் அதன்பிறகு எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-20. Retrieved 2016-07-11.
  2. http://www.unp.me/f16/mela-chappar-da-17681/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. Retrieved 2016-07-11.
  4. http://www.festivalsofindia.in/chappar-mela/#sthash.e3jb2oL6.dpuf
  5. http://www.festivalsofindia.in/chappar-mela/#sthash.e3jb2oL6.dpuf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்பர்_மேளா&oldid=3553425" இலிருந்து மீள்விக்கப்பட்டது