கில்ஜி
கில்சி (Ghilji) கில்ஜி, கல்ஜி, அல்லது கில்சாய் , கில்ஜாய் என்றும் உச்சரிக்கப்படுகிறது ), மிகப்பெரிய பஷ்தூன் பழங்குடியினரில் ஒன்றாகும். இவர்களின் பாரம்பரிய தாயகம் ஆப்கானித்தானில் உள்ள காசுனி மற்றும் கலாட் என அறியப்படுகிறது. ஆனால் இவர்கள் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானிலுள்ள பஷ்தூன் பகுதி முழுவதும் பிற பகுதிகளிலும் குடியேறினர். ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி என்பவரல் தில்லியில் கில்ஜி வம்சம் நிறுவப்பட்டது. மேலும், கில்சி பழங்குடியினரான அலாவுதீன் கில்சியால் விரிவாக்கப்பட்டது. நவீன நாடோடி கொச்சி மக்கள் பெரும்பாலும் கில்சி பழங்குடியினரிடமிருந்து தோன்றியவர்கள். ஆப்கானித்தானின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 20-25% ஆக இருக்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் பஷ்தூவின் தெற்கு மற்றும் வடக்கு வகைகளுக்கு இடையில் இடைநிலை அம்சங்களுடன் பஷ்தூவின் மைய பேச்சுவழக்கு பேசுகிறார்கள்.
பெயர்க்காரணம்
[தொகு]வரலாற்றாசிரியர் கி. எ போசுவொர்த்தின் கூற்றுப்படி, "கில்சி" என்ற பழங்குடிப் பெயர் கலஜ் பழங்குடியினத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. வரலாற்றாசிரியர் விளாடிமிர் மைனர்சிகியின் கூற்றுப்படி, பெயரின் பண்டைய துருக்கியில் கலச் என்பது அரபுக்கு மாறும்போது கலஜ் என மாறியது ( கலச் > கலஜ் ). இந்த வார்த்தை இறுதியாக பஷ்தூவில் கில்ஜி அல்லது கில்ஜாய் என மாறியது.
பிரபலமான நாட்டுப்புற சொற்பிறப்பியல் படி, கில்ஜி அல்லது கில்ஜாய் என்ற பெயர் கர்சாய் என்பதிலிருந்து பெறப்பட்டது. (கர் என்றால் "மலை", -சாய் என்றால் "சந்ததி"). பஷ்தூவில் இது "மலையில் பிறந்தவர்" அல்லது " மலை மக்கள் " எனப் பொருள்படும்.
வம்சாவளி மற்றும் தோற்றம்
[தொகு]கில்ஜிகள் கலஜ் மக்களிடமிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று ஒரு தோற்றக் கோட்பாடு கூறுகிறது. வரலாற்றாசிரியர் கி. எ போசுவொர்த்தின் கூற்றுப்படி, கசானாவின் கலஜ் மக்கள் கில்ஜி பழங்குடியினரின் மையத்தை உருவாக்கியிருக்கலாம். இவர்கள் பொதுவாக துருக்கியர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.[1] கசானாவித்துகள் (977-1186) உட்பட பல உள்ளூர் வம்சங்களின் படைகளில் பஷ்தூன் பழங்குடியினருடன் சில சமயங்களில் கலஜ் குறிப்பிடப்பட்டனர். கஜினி மற்றும் கலாட் கில்ஜி பிராந்தியத்தின் பல கலஜ்கள் பெரும்பாலும் உள்ளூர் பஷ்தூன் மக்களுடன் இணைந்திருக்கலாம். மேலும் அவர்கள் கில்ஜி பழங்குடியினரின் மையமாக இருக்கலாம். அவர்கள் உள்ளூர் பஷ்தூன்களுடன் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளை ஏற்றுக்கொண்டனர்.
வரலாறு
[தொகு]இடைக்கால இசுலாமிய காலத்தில் கலஜ்கள்
[தொகு]கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டின் புவியியலாளர்கள் இபின் கோர்தாத்பே மற்றும் இசுதாக்ரி உட்பட இடைக்கால முஸ்லிம் அறிஞர்கள், நடு ஆசியாவில் இருந்து ஆமு தாரியாவைக் கடந்து இன்றைய ஆப்கானித்தானின் சில பகுதிகளில், குறிப்பாக கசுனி, கலாட்டியில் குடியேறிய ஆரம்பகால பழங்குடியினரில் கலஜ்களும் ஒருவர் என்று விவரித்தனர். குறிப்பாக கசுனி, கலாட் கில்ஜி (கலாட்டி கல்ஜி என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் சபுலிசுதான் பகுதிகளில் 10 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி புத்தகமான ஹுதுத் அல்-ஆலம், கலஜ்களை கஜினி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆடு மேய்க்கும் நாடோடிகள் என்று விவரிக்கிறது. அவர்கள் மேய்ச்சல் நிலங்களில் அலைந்து திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கல்ஜி வம்சம்
[தொகு]கல்ஜி அல்லது கில்ஜி [a] வம்சம் தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்தது. 1290 மற்றும் 1320 க்கும் இடையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளின் தனது அதிகாரத்தை அது கொண்டிருந்தது. [2] ஜலாலுதீன் பைருசு கில்ஜியால் கில்ஜி வம்சம் இந்தியாவின் தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த இரண்டாவது வம்சமாக நிறுவப்பட்டது. இது ஒரு புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்தது. இது துருக்கிய பிரபுக்களின் ஏகபோகத்திலிருந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட இந்திய-முஸ்லிம் பிரபுக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதைக் குறித்தது. [3] அதன் ஆட்சி இன்றைய தென்னிந்தியாவில் வெற்றி பெறுவதற்கும் தொடர்ச்சியான மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுப்பதற்கும் அறியப்படுகிறது.
தைமூரின் தாக்குதல்கள்
[தொகு]1506 நடைபெற்ற கலாட் கில்ஜி போருக்கு ஒரு வருடம் கழித்து, தைமூர் ஆட்சியாளர் பாபுர் கில்ஜி பஷ்தூன்களை நசுக்கும் நோக்கத்துடன் காபுலை விட்டு வெளியேறினார். வழியில், தைமூர் இராணுவம் சர்தே பந்த் என்னுமிடத்தில் முகமந்த் பஷ்தூன்களைக் கைப்பற்றியது. பின்னர் குவாஜா இசுமாயிலின் மலைகளில் கில்ஜி பஷ்தூன்களைத் தாக்கி கொன்று, "ஆப்கானிய தலைகளின் தூண்" என்று பாபர் தனது பாபர் நாமாவில் எழுதினார். தாக்குதலின் போது ஏராளமான ஆடுகளும் கைப்பற்றப்பட்டன. மான்களும் ஆசியக் காட்டுக் கழுதைகளும் அதிகம் இருந்த கதாவாசு சமவெளியில் அடுத்த நாள் வேட்டையாடிய பிறகு, பாபுர் காபூலுக்கு அணிவகுத்துச் சென்றார். [4] [5]
கோடக் வம்சம்
[தொகு]ஏப்ரல் 1709 இல், கில்ஜிகளின் கோடக் பழங்குடியினரின் உறுப்பினராக இருந்த மிர்வைசு கோடக், சபாவித்துகளுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான புரட்சியை வழிநடத்தினார். மேலும், காந்தகாரைத் தளமாகக் கொண்ட கோடக் வம்சத்தை நிறுவினார். அவரது மகன் மக்மூத் கோடக் 1722 இல் ஈரானைக் கைப்பற்றினார். மேலும் ஈரானிய நகரமான இசுபகான் ஆறு ஆண்டுகள் வம்சத்தின் தலைநகராக இருந்தது. 1738 இல் அதன் கடைசி ஆட்சியாளரான உசேன் கோடக், காந்தகார் போரில் நாதிர் சா அப்சரால் தோற்கடிக்கப்பட்டபோது வம்சம் முடிவுக்கு வந்தது.
ஆசாத் கான் ஆப்கான்
[தொகு]1747 இல் நாதர் சா அப்சரின் மரணத்திற்குப் பிறகு மேற்கு ஈரானில் நடந்த அதிகாரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆசாத் கான் ஆப்கானித்தான், கில்ஜிகளின் அந்தார் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் குர்து மற்றும் துருக்கியத் தலைவர்களுடனான தொடர் கூட்டணி மற்றும் ஜார்ஜிய ஆட்சியாளர் இரண்டாம் எரெக்லேவுடனான சமரசக் கொள்கையின் மூலம் - அவரது மகளை அவர் திருமணம் செய்து கொண்டார் - ஆசாத் 1752 மற்றும் 1757 க்கு இடையில் அதிகாரத்திற்கு உயர்ந்தார். வடமேற்கில் உள்ள ஊர்மியா நகரம் வரை அசர்பைசான் பகுதியின் ஒரு பகுதி உட்பட வடக்கு பெர்சியா, மற்றும் தென்மேற்கு துர்க்மெனிஸ்தான் மற்றும் கிழக்கு குர்திஸ்தானின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தினார். [6]
பிரித்தானிய படைகளுடன் மோதல்
[தொகு]முதல் ஆங்கிலேய-ஆப்கான் போரின் போது (1839-1842), பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிரான ஆப்கானிய வெற்றியில் கில்ஜி பழங்குடியினர் முக்கிய பங்கு வகித்தனர். 1842 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, காபூலில் இருந்து 16,000 வீரர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய பிரித்தானிய இந்திய படைப்பிரிவு பின்வாங்கியபோது, கில்ஜி படை இந்து குஃசு மலைப்பகுதி வழியாக அவர்களைத் தாக்கியது. ஜனவரி 12 அன்று, பிரித்தன் படைப்பிரிவு காண்டமாக் அருகே ஒரு மலையை அடைந்தபோது, அவர்கள் கில்ஜி படையால் கொல்லப்பட்டனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டனர். இராணுவத்தில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய உதவி மருத்துவரான வில்லியம் பிரைடன் என்ற ஒரே ஒரு பிரித்தானியர் மட்டுமே உயிர் பிழைத்தார்.[7] இந்த போர் கில்ஜிகளின் வாய்வழி வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் எதிரொலிக்கும் நிகழ்வாக மாறியது. இது பழங்குடியினரின் துணிச்சலைப் பற்றி தனது மக்களிடம் கூறுவதற்காக பிரைடனை வேண்டுமென்றே தப்பிக்க விடப்பட்டதாக விவரிக்கிறது.
பராக்சாய் காலம்
[தொகு]கில்ஜிக்கள் 1886 இல் ஆப்கானித்தானின் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதன் பிறகு அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பராக்சாய் எமிர் அப்துர் ரகுமான் கானால் வடக்கு ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [8]
நாடு கடத்தப்பட்டவர்களில் கரோட்டி கில்ஜி பழங்குடியினரின் தலைவரான சேர் கான் நசீர் 1930 களில் கட்டகான்-படக்சன் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி, அவர் இசுபின்சார் காட்டன் நிறுவனத்தை நிறுவினார். மேலும், குந்தூசை பணக்கார ஆப்கானிய நகரங்களில் ஒன்றாக மாற்ற உதவினார். [9] [10] சேர் கான், தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள பாஞ்ச் ஆற்றின் மீது கீசல் காலா துறைமுகத்தையும் செயல்படுத்தினார். இது பின்னர் அவரது நினைவாக சேர்கான் பந்தர் என்று பெயரிடப்பட்டது.
நவீன காலம்
[தொகு]மிக சமீபத்தில், பதவியிலிருந்த ஆப்கானித்தானின் முன்னாள் அதிபர்களான அசரஃப் கனி அகமத்சய் (2014-2021) மற்றும் முகமது நஜிபுல்லா (1987-1992) ஆகியோர் கில்ஜி பழங்குடியினரின் அகமத்சாய் கிளையைச் சேர்ந்தவர்கள்.
ஆப்கானித்தானின் மற்ற இரண்டு முன்னாள் அதிபர்கள், நூர் முக்ச்ம்மது தாரகி (1978-1979) மற்றும் அபிசுல்லா அமீன் (1979), முறையே கில்ஜி பழங்குடியினரின் தாரகை மற்றும் கரோட்டி கிளைகளைச் சேர்ந்தவர்கள். [11]
குடியேற்றப் பகுதிகள்
[தொகு]ஆப்கானித்தானில், கில்ஜிகளின் குடியேற்றம் முதன்மையாக தென்கிழக்கில் துராந்து எல்லைக்கோட்டாலும், வடமேற்கில் காந்தகாரிலிருந்து காசுனி வழியாக காபுல் வரையிலும், வடகிழக்கில் சலாலாபாத் வரையிலும் எல்லையாக உள்ள ஒரு பகுதியில் குவிந்துள்ளது. 1886 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வடக்கு ஆப்கானித்தானுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது [12]
1947 இந்தியப் பிரிவினைக்கு முன், சில கில்ஜிகள் இந்தியாவில் நாடோடி வணிகர்களாகப் குளிர்காலத்தில், அங்கு பொருட்களை வாங்கி, அவற்றை கோடையில் ஒட்டக வண்டிகள் மூலம் ஆப்கானித்தானில் விற்பனைக்காகவோ அல்லது பண்டமாற்றுக்காகவோ எடுத்துச் சென்றனர். [13]
பஷ்தூ பேச்சுவழக்கு
[தொகு]மத்தியப் பகுதியின் கில்ஜி மத்திய பஷ்தூவை பேசுகிறார்கள். இது தனித்துவமான ஒலிப்பு அம்சங்களைக் கொண்ட ஒரு பேச்சுவழக்கு. மேலும், பஷ்தூவின் தெற்கு மற்றும் வடக்கு பேச்சுவழக்குகளுக்கு இடையில் மாறுபாடும் உள்ளது.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sunil Kumar (1994). "When Slaves were Nobles: The Shamsi Bandagan in the Early Delhi Sultanate". Studies in History 10 (1): 23–52. doi:10.1177/025764309401000102. https://www.researchgate.net/publication/249767771.
- ↑ Dynastic Chart The Imperial Gazetteer of India, v. 2, p. 368.
- ↑ Mohammad Aziz Ahmad (1939). "The Foundation of Muslim Rule in India. (1206-1290 A.d.)". Proceedings of the Indian History Congress (Indian History Congress) 3: 832–841.
- ↑ Verma, Som Prakash (2016). The Illustrated Baburnama (illustrated ed.). Routledge. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1317338635.
- ↑ Beveridge, Annette Susannah (7 January 2014). The Bābur-nāma in English, Memoirs of Bābur. Project Gutenberg.
- ↑ Perry, J. R. (1987), "Āzād Khan Afḡān", in: Encyclopædia Iranica, Vol. III, Fasc. 2, pp. 173-174. Online (Accessed February 20, 2012).
- ↑ Dalrymple, William Return of a King, London: Bloomsbury, 2012, pages 385.
- ↑ Title The Wars of Afghanistan: Messianic Terrorism, Tribal Conflicts, and the Failures of Great Powers Peter Tomsen, PublicAffairs, 2011
- ↑ Wörmer, Nils (2012). "The Networks of Kunduz: A History of Conflict and Their Actors, from 1992 to 2001" (PDF). Stiftung Wissenschaft und Politik. Afghanistan Analysts Network. p. 8
- ↑ Grötzbach, Erwin: Afghanistan, eine geographische Landeskunde, Darmstadt 1990, p. 263
- ↑ "ḠILZĪ" - Encyclopaedia Iranica, December 15, 2001 (M. Jamil Hanifi)
- ↑ "ḠILZĪ" - Encyclopaedia Iranica, December 15, 2001 (M. Jamil Hanifi)
- ↑ "Ghilzay". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 4 June 2020.
- ↑ Peter Gottschalk (27 October 2005). Beyond Hindu and Muslim: Multiple Identity in Narratives from Village India. Oxford University Press. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-976052-7.
- ↑ Heramb Chaturvedi (2016). Allahabad School of History 1915-1955. Prabhat. p. 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8430-346-9.