எண்ணிம நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடென்பெர்க் திட்ட இணைய தளத்தின் படம்

எண்ணிம நூலகம் (digital library, மின்னூலகம், மின்நூலகம்) என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் நூல்கள், படங்கள், ஆவணங்கள், தகவல் தொகுப்புகளைச் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் கணினி வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும்.[1] இதில் எண்ணிம உள்ளடக்கங்களை (Digital content) கணினி இணையம் மூலமாக தொலைவில் இருந்தே அணுகிப் பெறலாம். எண்ணிம நூலகம் என்பது ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் (information retrieval system) ஆகும். எண்ணிம நூலகமானது மின் நூலகம் (electronic library), மெய்நிகர் நூலகம் (virtual library) போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்து, மேலாண்மை செய்து, பாதுகாத்து அதன் பயனர்களுக்கு அத் தொகுப்புகளை தேவைப்படும் போது தேவையான அளவில் எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் இருப்பல்லாத அமைப்புக்கு எண்ணிம நூலகம் என்று பெயர் என டெலோஸ் மின்னூலக உசாத்துணை முன்மாதிரி அமைவு [2] (DELOS digital library reference model) விளக்கம் அளிக்கிறது.

எண்ணிம நூலக வகைகள்[தொகு]

எண்ணிம நூலகம் என்ற சொல்லுக்கு பல்வகை எண்ணிமத் தொகுப்புகள் மற்றும் அமைப்புகளை மேற்கோள் காட்டலாம். எனினும், ஓரமைப்பை மின்னூலகம் என்று குறிக்க, அந்த அமைப்பு தகவல்களைச் சேகரித்து மேலாண்மை செய்து அதைப் பயனர்கள் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, சில இணையதளங்களைக் கூட மின்னூலகம் என்று வகைப்படுத்தலாம். மிகப் பரவலாக அறியப்பட்ட மின்னூலகங்கள் குறிப்பாக, பெர்சியசு திட்டம் (project perseus), குட்டென்பெர்க் திட்டம் (Project Gutenberg), ஐபிபிலியோ ஆகியவை இணையத்தைவிட பழமையானவை ஆகும். மேலும், உலகளாவிய இணையம் மற்றும் தேடு பொறிகளின் திறன் வளர்ச்சி ஆகியவற்றால் ஐரோப்பிய நூலகம், காங்கிரசு நூலகம் ஆகிய மின்னூலகங்கள் தற்போது இணைய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி, பொது நூலகங்களும் மின்னூல், ஒலி நூல், இசை, ஒளிப்படங்கள் போன்ற எண்ணிம உள்ளடக்கங்களை தரவிறக்கம் செய்வதற்கேற்ப மேம்படுத்தப்படுகின்றன.

ஓர் உள்ளடக்கம் உருவாக்கப்படும் போதே எண்ணிம அமைவில் இருந்தால் அதை இயல்பு எண்ணிம உள்ளடக்கம் (born-digit) என்றும், பருண்மையாக உள்ள புத்தகங்கள், காகிதங்களை எண்ணிம வடிவிற்கு மாற்றினால் அதை எண்ணிமப்படுத்திய உள்ளடக்கம் (digitized)) என்றும் அழைக்கலாம். இருப்பு வடிவிலும், எண்ணிம வடிவிலும் உள்ளடக்கத் தொகுப்புகளைக் கொண்டுள்ள நூலகத்திற்கு கலப்பு நூலகம் (hybrid library) என்று பெயர். காட்டாக, அமெரிக்கன் மெமரி (American Memory) என்பது காங்கிரசு நூலகத்தில் உள்ள ஒரு எண்ணிம நூலகம் ஆகும். சில இன்றியமையா எண்ணிம நூலகங்கள் நீண்ட நாளைய ஆவணக் காப்பகங்களாகவும் செயல்படுகின்றன. எ.கா. ஈபிரிண்ட் ஆர்க்சிவ் ((ePrint arXiv)), இணைய ஆவணகம் (Internet Archive).

கல்வியக களஞ்சியங்கள்[தொகு]

பெரும்பாலான கல்வி நிலையங்கள் அவற்றின் புத்தகங்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிக் குறிப்பேடுகள், வெளியீடுகள் ஆகியவற்றைக் கொண்டு கல்வியக களஞ்சியமாக மாற்றி வருகின்றன. அவை இயல்பு எண்ணிம அல்லது எண்ணிமப்படுத்திய உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன. இவற்றில் பல களஞ்சியங்கள் அவற்றின் உள்ளடக்கங்களை பொதுமக்களும் சில விதிகளுக்குட்பட்டு பயன்படுத்த அனுமதிக்கின்றன. கல்வியக மற்றும் நிறுவனங்களின் இலவச களஞ்சியங்கள் சில வேளைகளில் எண்ணிம நூலகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

எண்ணிம ஆவணங்கள்[தொகு]

ஆவணங்கள் என்பவை நூலகங்கள் என்பதிலிருந்து வேறானவை. வழமையாக ஆவணங்கள் எனப்படுபவை,

  1. முதன்மை ஆதாரத் தகவல்களைக் கொண்டிருப்பவை. அஃதாவது, தனிநபர், நிறுவனங்களால் நேரடியாக உருவாக்கப்பட்ட எழுத்து, காகித அச்சு ஆகியவற்றை தொகுத்து வைத்திருப்பது. (நூலகத்தில் காணப்படும் புத்தகம் உள்ளிட்டவை துணைமுதல் ஆதாரத் தகவல்கள் ஆகும்)
  2. உள்ளடக்கங்களை தனித்தனியாக அல்லாமல் வகைப்படுத்தி வைத்தல்.
  3. தனித்துவமிக்க உள்ளடக்கங்களைக் கொண்டிருத்தல், என வரையறுக்கப்படும்.

ஆக்சுபோர்டு நூல் ஆவணகம் (The Oxford Text Archive) கல்வி சார்ந்த முதன்மை ஆதாரத் தகவல் உள்ளடக்கங்களைக் கொண்ட பழமையான எண்ணிம ஆவணகம் ஆகும்.

எண்ணிம நூலக முன்னோடிகள்[தொகு]

குட்டென்பர்க் திட்டம் (Project Gutenberg), கூகுள் புத்தக தேடி (Google Book Search), இணைய ஆவணகம் (Internet Archive),, கார்னெல் பல்கலைக்கழகம், காங்கிரசு நூலகத்தின் உலக மின்னூலகம் (World Digital Library),, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னூலகம், கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தின் பத்து இலட்சம் புத்தகச் செயற்திட்டம் (Million Book Project) ஆகியவை எண்ணிம நூலக உருவாக்கம், மேலாண்மையில் முன்னோடிகள் ஆகும்.

தமிழ் மின்னூலகங்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ் இணைய நூலகங்கள்

மின்னூலகத்தின் எதிர்காலம்[தொகு]

கூகுள், பத்து இலட்சம் புத்தகச் செயற்திட்டம், எம்எஸ்என், யாகூ போன்ற நிறுவனங்களில் பெருமளவிலான எண்ணிமப்படுத்தல் திட்டம் செயல்பட்டு வருகிறது. கூகுள், யாகூ, எம்எஸ்என் ஆகிய நிறுவனங்களின் முயற்சியால் புத்தகங்களைக் கையாள்வதிலும், காட்சிப்படுத்துதலிலும், புதிய தொழிற்நுட்பங்களான மின்னூல், ஒளி தகவேற்பி (optical character recognition) போன்றவற்றாலும் மின்னூலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நூலகங்களில் ஒலி, ஒளி உள்ளடக்கத் தொகுப்புகள் இருப்பது போல மின்னூலகமும் உருவாகி வருகின்றன.

உருவாக்கமும் ஒழுங்கமைப்பும்[தொகு]

மென்பொருள் கட்டமைப்பு[தொகு]

ஒரு மின்னூலகத்தை குறிப்பிட்ட மென்பொருள் களஞ்சியத்தின் அடிப்படையிலேயே உருவாக்க முடியும். காட்டாக, DSpace, Eprints, Fedora, dLibra (போலந்து), கிரீன்சுடோன் எண்ணிம நூலக மென்பொருள் (Greenstone Digital Library Software) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 2009-ஆம் ஆண்டு பெடோரா காமன்ஸ் மற்றும் டிஸ்பேசு பவுண்டேசனும் இணைந்து டூராஸ்பேசு (DuraSpace) எனும் நிறுவனமாகியது.[3] கட்டற்ற ஆவண தகவல் அமைவுக்கான (Open Archival Information System- OAIS) உசாத்துணை மாதிரி எண்ணிமப் பாதுகாத்தலுக்கான (digital preservation) கட்டமைப்பு வழிமுறைகளை வழங்குகிறது.[4]

எண்ணிமப்படுத்தல்[தொகு]

கடந்த சில ஆண்டுகளில் நூல்களை எண்ணிமப்படுத்தலின் (digitize) வேகம் அதிகரித்துள்ளது. மேலும் செலவு குறைவான வழிமுறைகளும் பெருகியுள்ளதால் ஓராண்டுக்கு லட்சக்கணக்கான நூல்களை எண்மயப்படுத்தி மின்னூலகம் உருவாக்குதல் எளிதாகி உள்ளது.[5]

தேடுதல்[தொகு]

பெரும்பாலான மின்னூலகங்கள் அவற்றின் உள்ளடக்கங்களைத் தேடிக் கண்டடைய அனுமதிக்கின்றன. இந்த தகவல்கள் காணவியலா தளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அதை தேடுபொறிகள் எளிதில் கண்டடைய முடியாது. சில மின்னூலகங்கள் அதற்கென பக்க வரைபடத்தைக் கொண்டிருக்கும். அதன் மூலம் தேடுபொறியானது தகவல்களைக் கண்டடையும். மின்னூலக ஐக்கிய அமைப்பில் தேடுவதற்கு இரண்டு பொதுவான வழிமுறைகள் உள்ளன. 1.பகிர்ந்தளிக்கப்பட்ட தேடுதல், 2. சேமிக்கப்பட்ட மிதப்புத் தகவலில் (meta data) தேடுதல்.

பகிர்ந்தளிக்கப்பட்ட தேடுதல்[தொகு]

பல தேடுதல் வேண்டுகோள்களை ஓர் அமைவில் உள்ள இணையான பல்வேறு வழங்கிகளுக்கு ஒரு வாங்கி அனுப்பும். முடிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, நகல்கள் நீக்கப்பட்டு அல்லது ஒன்றாக்கப்பட்டு திரும்பவும் வாங்கிக்கு அளிக்கப்படுகிறது. Z39.50 போன்ற நெறிமுறைகள் (protocol) பகிர்ந்தளிக்கப்பட்ட தேடுதலில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொருளடக்கம், சேமிப்பு போன்ற தகவல் செறிந்த பணி அந்த ஐக்கியத்தில் உள்ள வழங்கிகளிடம் விடப்படுகிறது என்பது இம்முறையின் பயனாகும். ஒவ்வொரு தகவல் தொகுப்பின் பல்வேறு திருப்பல், தர வரிசைப்படுத்தல் திறனைப் பொருத்து இந்த தேடுஞ் செயலமைப்பு மட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மிகப் பொருத்தமான முடிவுகளை தொகுப்பதை கடினமானதாக்குகிறது.

சேமிக்கப்பட்ட மிதப்புத் தகவலில் தேடுதல்[தொகு]

ஏற்கெனவே ஐக்கிய நூலகங்களில் இருந்து சேகரித்து உள்ளமைவுகளில் வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் தேடுவதாகும். ஒரு தேடுதல் நடத்தப்படும்போது, தேடுஞ் செயலமைப்பு மின்னூலகத்தில் தொடர்பு கொண்டு தேட வேண்டியதில்லை. அது ஏலவே உள்ளமைவு பிரதி அமைப்பில் கொண்டுள்ள தகவல்களிலேயே தேடிக் கண்டடையலாம். மற்ற மின்னூலகங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து தொகுப்புகளையும் அன்றாடம் பெற்று தகவல் திருப்பலை (indexing) இம்முறையில் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆதாரங்களை எளிதில் தேடிக் கண்டடையலாம்.

தேடுஞ் செயலமைப்பு திருப்பல், தரவரிசை நெறிமுறைகளில் தனது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதால் மிகப் பொருத்தமான முடிவுகளை வழங்கும் என்பதே இதன் சிறந்த பயனாகும். அதே வேளை, தகவல்களை சேகரித்தல், பொருளடக்க அமைவு ஆகியவை மிக அதிக தகவல் செறிந்த தன்மையது ஆதலால் இம்முறை செலவு மிக்கது என்பது இதன் பின்னடைவாகும்.

நன்மைகள்[தொகு]

எளிதில் அணுகி நூல்கள், ஆவணங்கள், பல்வேறு ஒலி, ஒளித் தகவல்களைப் பெறமுடியும் என்பதால் எண்ணிம நூலகங்கள் தற்போது வணிக மற்றும் அரசுகளின் விருப்பமான துறையாகி வருகிறது. மரபான நூலகங்களில் ஓரளவிற்கே தகவல்களைச் சேகரித்து வைக்க முடியும். ஆனால் எண்ணிம நூலகம் அமைக்க குறைந்த இடமே போதுமானது என்பதால் மிக மிக அதிக தகவல்களைச் சேமித்து வைக்க முடிகிறது.

இருவகையான நூலகத்திலும் உள்ளடக்க வகைப்படுத்தல் செய்தாலும், எண்ணிம நூலகத்தின் வகைப்பாடானது மிகப் புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இதனால் எளிதான உள்ளீடுகளைக் கொண்டு நூல்கள், ஆவணங்கள், ஒலி, ஒளிக் குறிப்புகளை எளிதில் பெற முடியும். மேலும், விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள் போன்றவற்றில் இருந்தும் தகவல்களைப் பெற முடியும். எண்ணிமப்படுத்துவதால் ஒரே தகவல்களை ஏராளமான பயனர்கள் ஒரே நேரத்தில் பெற முடியும். ஆனால் மரபான நூலகங்களில் நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால் ஒரு சிலருக்கு மட்டுமே அது கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

எல்லையற்றது[தொகு]

மின்னூலகப் பயனர் நேரடியாக அங்கு செல்ல வேண்டியதில்லை. இணையத் தொடர்பின் மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தகவல்களைப் பெற முடியும்.

எந்நேரமும் செயல்படுதல்[தொகு]

இரவு, பகல் என்று எந்நேரமும் எண்ணிம நூலகத்தைப் பயனர்கள் பயன்படுத்த முடியும் என்பது மிகச் சிறந்த நன்மையாகும்.

பல்முனை அணுக்கம்[தொகு]

ஒரே தகவல் பல்வேறு தரப்பினரால் ஒரே நேரத்தில் பெற முடியும்.

தகவல் மீட்டெடுப்பு[தொகு]

அனைத்து உள்ளடக்கத்திலிருந்தும் தங்களுக்குத் தேவையான தகவல்களை பயனர்கள் எந்தவொரு சொல், பெயர், தலைப்பையும் உள்ளிட்டுப் பெற முடியும்.

பாதுகாத்தல்[தொகு]

எண்ணிமப்படுத்தல் என்பது தகவல்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பதற்கான ஒரே தீர்வு எனக் கூற முடியாது. ஆனால் அச்சில் இல்லாத நூல்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த நூல்கள், ஆவணங்கள், படங்கள், குறிப்பேடுகள், செய்தித் தாட்கள் போன்றவற்றை எண்மயப்படுத்துதல் நலம் பயக்கும்.

மதிப்புக் கூட்டிய பயன்[தொகு]

படங்கள், ஒலி, ஒளித் தகவல்களை மேம்படுத்த முடியும். மேலும் கிடைத்தற்கரிய தகவல்களை செம்மைப்படுத்தி சேமித்து வைப்பதால் அவற்றை அழிவிலிருந்து காக்க முடிகிறது.

சிக்கல்கள்[தொகு]

எண்ணிமப் பாதுகாப்பு[தொகு]

தொழினுட்பம் காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மின்னூலகமும் தொழில்நுடபத்தை மேம்படுத்த வேண்டும். நிலையில்லா தகவல் சேமிப்பில் இருந்து மிக நிலையான அமைப்பு, நிரல் மொழி அல்லது இயங்கமைப்புக்கு இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும். இல்லாதொழியும் நிலையில் உள்ள ஆவணங்கள், தகவல்களை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்றலாம். இவ்வாறான இடப்பெயர்ச்சி (migration) அழியும் நிலையில் உள்ள ஆவணங்களைக் காப்பாற்ற குறுகிய காலத் தீர்வாக அமைந்தாலும் கணினி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இடப்பெயர்ச்சி என்பது முடிவில்லா செயல்பாடாக மாறி வருகிறது. மேலும், புதிய இயங்கமைப்பு அல்லது நிரல் மொழிக்கு தகவல்களை இடப்பெயர்ச்சி செய்யும் போது, தகவல் இழப்புக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.[6]

ஏராளமான ஓவியத் தகவல்கள் உலகெங்கிலும் உள்ள நூலகங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஏனெனில், அதை எண்மயமாக்கத் தேவையான தொழில்நுட்பம் இல்லாததே காரணமாகும். மேலும், வளரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தகவல் இடப்பெயர்ச்சி செய்வதால் செலவு மிகுந்து வருகிறது. இதனால் எண்மப் பாதுகாப்பு என்பது மிகச் சிக்கலாகி வருகிறது.

காப்புரிமையும் உரிமமும்[தொகு]

எண்ணிம நூலகங்கள் காப்புரிமை சட்டத்தை சிதைக்கும் வகையில் செயல்படுகின்றன என சிலர் விமர்சிக்கின்றனர். எண்ணிம நூலகங்கள் நூல்கள், தகவல்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து பெற்று மறுவெளியீடாக்குகின்றன. இதனால் அந்த நூல்களின் பதிப்பாளர்கள் தங்களது வணிக நோக்கிலான எண்ணிம பதிப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என்று வாதிடுகின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenstein, Daniel I., Thorin, Suzanne Elizabeth. The Digital Library: A Biography பரணிடப்பட்டது 2008-04-07 at the வந்தவழி இயந்திரம். Digital Library Federation (2002) ISBN 1933645180. Accessed June 25, 2007.
  2. L. Candela et al.: The DELOS Digital Library Reference Model - Foundations for Digital Libraries. Version 0.98, February 2008 (PDF)
  3. "Fedora Commons and DSpace Foundation Join Together to Create DuraSpace Organization". Archived from the original on 2009-05-15. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  4. "The DSpace team recognized the value of the OAIS framework and recast the repository’s architecture to accommodate this archival framework" Baudoin, P. (2004), MIT's DSpace experience: a case study (PDF) {{citation}}: Unknown parameter |coauthors= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Committee on Institutional Cooperation: Partnership announced between CIC and Google பரணிடப்பட்டது 2007-06-14 at the வந்தவழி இயந்திரம், 6 June 2007, Retrieved 7 July 2007.
  6. Breeding, Marshall. “Preserving Digital Information.”. Information Today 19:5 (2002).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_நூலகம்&oldid=3909176" இலிருந்து மீள்விக்கப்பட்டது