இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) (ஆங்கிலம்:Life Insurance Corporation of India (LIC)) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். 1560481.84 கோடி (US $ 260 பில்லியன்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது .[1] ஒருவரின் வருமானத்தில் 8% முதல் 10% வரை ஆயுள் காப்பீடுக்காக ஒதுக்குவது பொதுவாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவில் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்திற்கு போட்டியாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், இந்நிறுவனத்தின் 10% வளர்ச்சியை எட்டுவதாக அதன் இணையத்தள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய மக்கள்தொகையான 130 கோடியில், சுமார் 30% நபர்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்தியாவின் மொத்த காப்பீட்டு வர்த்தகத்தில், 75 சதவீத இடத்தை, இந்நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.[2]

வரலாறு[தொகு]

246 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து நாட்டுடைமையாக்கி 1956 செப்டம்பர் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்ட[3] ஆயுள் காப்பிட்டு நிறுவனமான இது 2015 ஆம் ஆண்டு வைரவிழாவினைக் கொண்டாடுகிறது.[4]

வகைகள்[தொகு]

இந்திய மக்களில் பலர் இந்நிறுவனத்தின் எண்டோமென்ட், முழுஆயுள், மணிபேக், டெர்ம் அஷ்யூரன்ஸ், பென்ஷன், யூலிப், மைக்ரோ மற்றும் உடல்நல திட்டங்கள் போன்றவைகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். சாமான்ய மக்களுக்கென குறைந்த பிரீமியத்தில் பாலிசியாக, மைக்ரோத் திட்டம் செயல் படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தின் சந்தா வரம்புகள், பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, சாதரண மக்கள் கட்டும் வகையில் உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் ஏழைகளாகக் கருதப்படும் மக்களும் செலுத்தக் கூடிய வகையில், மிகவும் குறைவானத் தொகையை கொண்டது ஆகும்.[5]

புற்றுநோய் காப்பீடு[தொகு]

இந்நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, பல ஊடகங்கள் வழியே, அவ்வப்போது தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப் பட்டு வருகின்றன. அதோடு இந்நிறுவன முகவர்கள் வழியாகப் பரப்புரைகளும் செய்யப் படுகின்றன. மேலும், புதிய புதிய பாலிசிகள் உருவாக்கப்பட்டு, இந்திய மக்கள் பயன் அடையத் திட்டமிடுகின்றனர். அதில் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு புற்றுநோய்க்கு என்றே, தனித்துவமான எல்ஐசி பாலிசி அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த பாலிசி, மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த புற்றுநோய்க்கானத் திட்டத்தில் இணைந்த நபர், தொடக்க நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், காப்பீட்டுத் தொகையில் 25% வழங்கப்படும். அது மட்டுமின்றி அடுத்த மூன்று பாலிசி பிரீமியங்கள் அல்லது மீதிப் பாலிசி காலம் இதில் குறைந்தளவானது தள்ளுபடி செய்யப்படும். வளர்ந்த புற்றுநோய், முதல் முறையாக கண்டறியப்பட்டால், அந்நிலையில் முன்னதாக ஏதேனும் பலன் தொகை அளிக்கப்பட்டிருந்தால், அவற்றைக் கழித்து காப்பீட்டு தொகையின் 100% வழங்கப்படும். மேலும், அடுத்த பத்து வருடங்களுக்கு காப்பீட்டு தொகையின் 1% வருமான பயனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், வருமான உறுதியும் பெறுவார் என்பதால், அவரின் மன அடிப்படையில் ஆறுதலும் கிடைக்க வழிமுறைச் செய்யப் பட்டுள்ளது. இத்திட்டம், மருத்துவ காப்பீடு போல் இல்லாமல், காப்பீட்டு பணம் முற்றிலும், காப்பீடு செய்தவருக்கு வழங்கப்படுவதோடு, மருத்துவ அறிக்கைகள், ஆவணங்கள் எதுவும் தர வேண்டியது கட்டாயமாக்கப் படவில்லை. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ளவருக்கு, புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக நிரூபிக்கப்பட்டால் மட்டும் போதுமானது. இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றால், ஒருவரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 65 ஆகவும் இருக்க வேண்டும். இந்நோயிற்கான தொகை வரம்பு யாதெனில், குறைந்த பட்சக் காப்பு தொகை 10 இலட்சங்கள் எனவும், அதிகபட்ச காப்புத் தொகை வரம்பு 50 இலட்சங்கள் எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இதன் காப்பீடுக் காலத்தை 10 முதல் 30 வருடங்களாக அமைக்கப்பட்டு இருப்பதால், ஒருவர் தனக்கு ஒப்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.[6]

ஓய்வுதியக் காப்பீடு[தொகு]

இன்று வளர்ந்து வரும் மருத்துவ மற்றும் விஞ்ஞானத் துறைகளால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதனால், வயதில் முதிர்ந்தோர்கள் எண்ணிக்கையும் பெருகி வருகின்றன. எனவே, முதியவர்களுக்காகவே, தனித்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இதனால் பிற்காலத்தில் அவர்கள் முதியோர் இல்லத்தை நாடாமல், தங்கள் வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, இதன் ஓய்வூதித் தொகை இந்த பென்ஷன் தொகை, வயது முதியவர்களுக்கு உதவும் என கருதப்படுகிறது.இந்த ஓய்வூதியக் காப்பீடு முதியவர்களை மகிழ்ச்சி படுத்துகிறது

அலுவலகப் பணி[தொகு]

இதன் பணியாளர்களை அலுவலகப் பணியாளர்கள் என்றும், வளர்ச்சி அதிகாரி என்றும், முகவர்களுக்கான பணியாளர் என்றும் வகைப் படுத்தலாம். அலுவலக எழுத்தர்பணியில் சேர, 21 வயதுக்கு மேற்பட்ட இந்தியராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பலக்கலையில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரு கட்டங்களில், அப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்குரிய விளம்பரங்களை, அவ்வப்போது இந்திய நாளிதழ்களில் வெளிவரும் போது, தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.

முகவர் பணி[தொகு]

இந்நிறுவனத்தின் முகவராக பணி செய்ய விரும்பினால், பள்ளிக்கல்வியை முடித்து இருக்க வேண்டும். அதாவது, குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், முகவராக 10-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். 18 வயது முடிந்தவராக இருக்க வேண்டும். அதிக பட்ச வயதுவரம்பு எதுவும் இல்லை. எனவே இந்திய சட்டப்படி வயதுக்கு வந்தோர் எவரும் முகவராக முடியும். இவர்களுக்கு 50 மணி நேரங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அப்பயிற்சிக்குப் பிறகு, அவர்களுக்கு இணையவழி முறையில் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால், ஹைதராபாத்திலுள்ள காப்பீட்டு கட்டுப்பாடு வளர்ச்சி ஆணையம் (I.R.D.A.) நிறுவனம் அவர்களுக்கு, முகவர் உரிமம் வழங்கும். அதன்பின் சேர்ந்த ஓராண்டுக்குள், அப்புதிய முகவர், 12 புதிய காப்பீட்டு தாரர்களைச் சேர்க்கவேண்டும். ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை காப்பீட்டு பகுதித் தொகைச் வசூலித்துக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் முகவராக தொடர்ந்து நீடிக்க இயலும். இல்லை யென்றால், அவரது முகவர் உரிமம் இரத்து செய்யப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Telegraph - Calcutta (Kolkata) | Business | LIC seeks to pack greater funds punch". Calcutta, India: Telegraphindia.com. 2010-03-08. http://www.telegraphindia.com/1100308/jsp/business/story_12190577.jsp. பார்த்த நாள்: 2010-08-30. 
  2. https://www.bseindia.com/stock-share-price/lic-housing-finance-ltd/lichsgfin/500253/
  3. க.சுவாமிநாதன் (2 ஆகத்து 2014). "நடந்தாய் `வாழி' அந்நிய முதலீடு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 2 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. எல்ஐசி எனும் வைரம் தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2015
  5. https://www.licindia.in/Products/Micro-Insurance-Plans
  6. https://www.licindia.in/Products/Health-Plans