இந்தியாவின் மின்சாரத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராமகுண்டம் அனல் மின்நிலையம், ஆந்திரப் பிரதேசம்
சபர்மதி அனல் மின்நிலையம், குசராத்

இந்தியாவின் மின்சாரத்துறை நடுவண் அரசு, மாநில அரசுகளின் ஒன்றிணைந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியமான கட்டமைப்புத் துறை ஆகும். திசம்பர் 2012 நிலவரப்படி 210.544 கிகாவாட் நிறுவப்பட்ட திறனளவைக் கொண்டு[1] உலகின் ஐந்தாவது பெரும் துறையாக விளங்குகிறது.[2] மேலும் தொழிற்சாலைகளின் சுயத்தேவைக்காக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களின் திறனளவு கூடுதலாக 31.5 கிகாவாட் ஆகும். புதுப்பிக்கவியலா மின்நிலையங்களின் பங்கு 88.55% ஆகவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அளவு 12.45% ஆகவும் உள்ளது.[1]. 2011-12ஆம் ஆண்டில் 855 BU (855 000 MU அதாவது 855 TWh[3]) அளவிலான மின்சாரம் தயாரிக்கப்பட்டது.

எரிபொருட்களின்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனளவில், நிலக்கரியால் இயங்கும் மின்நிலையங்களின் பங்கு 56% ஆக உள்ளது. நிலக்கரிக்கு அடுத்தநிலையில் புதுப்பிக்கத்தக்க நீர் மின் ஆற்றல் 19% ஆகவும், பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 12% ஆகவும் இயற்கை எரிவளி 9% ஆகவும் பங்கு வகிக்கின்றன.[4][5]

திசம்பர் 2011 புள்ளிவிவரங்களின்படி 300 மில்லியனுக்கும் கூடுதலான இந்தியர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. மூன்றிற்கு ஒரு பங்கு சிற்றூர்களில் மின்சாரம் எட்டவில்லை. நகர்ப்புறப் பகுதிகளில் 6% மக்கள் மின்வசதியின்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்வசதி கிடைக்கப்பெற்றோரும் மின்தடங்கல்கள், மின்வெட்டுக்கள் மற்றும் சீரான அழுத்தமின்மை போன்ற பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். மின்வெட்டுக்களாலும் இருட்டடிப்புகளாலும் நாட்டின் வேளாண்மை மற்றும் உற்பத்தித்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.[6][7]

இந்தியாவின் தனிநபர் ஆண்டு வீட்டு மின்நுகர்வு 2009ஆம் ஆண்டில் சராசரியாக 96 kWh ஆக இருந்தது. இது உலகளவில் விளங்கும் 2600 kWhக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 6200 kWh மின்நுகர்வுகளைவிட பலமடங்கு குறைவானது.[8] வீடு, விவசாயம் மற்றும் தொழிற்துறைத் தேவைகளை உள்ளிட்ட இந்தியாவின் மொத்த தனிநபர் மின்நுகர்வு 400 முதல் 700 kWh ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[9][10] சனவரி 2012இல் வெளியான ஒரு மதிப்பீட்டின்படி இது 778 kWh ஆகும்.[6]

இந்திய மின்கட்டமைப்புப் பிணையத்தில் ஏற்படும் இழப்பு 2010இல் 32%ஆக இருந்தது. இது உலகின் சராசரியான 15%ஐ விட இருமடங்காகும். இந்த இழப்பிற்கு தொழிற்நுட்பக் காரணங்களன்றி பிற காரணங்களும் உள்ளன. இவற்றில் பிழையான மின்னோட்ட அளவுமானிகளும் மின்திருடலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு இந்த இழப்பினை 2022ஆம் ஆண்டிற்குள் 14.1%ஆக கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. கேரளாவில் நடத்தப்பட்ட ஓர் சோதனையோட்டத்தில் பிழையான அளவுமானிகளை மாற்றுவது மூலம் மின்இழப்பை 34% இலிருந்து 29%ஆக குறைக்க முடிந்துள்ளது.[7]

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.renewindians.com/2012/12/Renewable-energy-contribution-in-india.html
  2. "ALL INDIA REGIONWISE GENERATING INSTALLED CAPACITY OF POWER". Central Electricity Authority, Ministry of Power, Government of India (October 2012).
  3. "Get enlightened about electricity - India ((1 MU = 1 Million Units in India = 1 GWhr))". The Financial Express (December 20, 2004).
  4. "Power sector at a glance: All India data". Ministry of Power, Government of India (June 2012).
  5. "World Coal Institute – India The coal resource, a comprehensive overview of coal". World Coal Institute (March 2009).
  6. 6.0 6.1 "For India, a Power Failure Looms". The Wall Street Journal (2 January 2012).
  7. 7.0 7.1 Uwe Remme et al. (February 2011). "Technology development prospects for the Indian power sector". International Energy Agency France; OECD.
  8. "World Energy Outlook 2011: Energy for All". International Energy Agency (October 2011).
  9. "Power Sector in India: White paper on Implementation Challenges and Opportunities". KPMG (January 2010).
  10. "The World Factbook". நடுவண் ஒற்று முகமை (2008). பார்த்த நாள் December, 2011.