இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு (Indo-U.S. civilian nuclear agreement) அல்லது இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு என்பது இந்தியக் குடியரசிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே இருநாடுகளின் குடிசார் அணுவாற்றல் கூட்டுறவிற்காக ஏற்பட்ட உடன்பாடாகும். இந்த உடன்பாட்டிற்கான அடித்தளம் சூலை 18,2005 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்ஷும் வெளியிட்ட இணைஅறிக்கை மூலம் இடப்பட்டது. இதன்படி இந்தியா தனது படைத்துறை மற்றும் குடிசார் அணுவாலைகளை இனம் பிரித்து குடிசார் அணுவுலைகளை பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க உடன்படும்; எதிராக ஐக்கிய அமெரிக்கா இந்தியாவுடன் முழு குடிசார் அணுவாற்றல் கூட்டுறவிற்கு உழைக்க உடன்படும்.[1]

மூன்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க உள்நாட்டுச் சட்டத்திருத்தங்கள்,இந்தியாவில் குடிசார் மற்றும் படைத்துறை அணு நிலையங்களை பிரிப்பதற்கான திட்டம், இந்தியாவிற்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்குமிடையே ஆய்வுகளுக்கான உடன்பாடு, இந்தியாவிற்கு விலக்களிக்க அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தின் ஒப்புதல் என பற்பல கடினமான நிலைகளைக் கடந்து 2008ஆம் ஆண்டு இந்திய அமெரிக்க அணு உடன்பாடு ஏற்பட்டது.

இதன் இறுதி வடிவத்தின்படி இந்தியா தனது குடிசார் அணுநிலையங்கள் என்று வகையிட்ட நிலையங்களை என்றென்றும் காப்பமைப்புகள் கீழ் கொணரவும் அதேநேரம் அவ்வாறு வகைபடுத்தப்படாத இரகசிய உலைகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் குடிசார் செறிவூட்டல் மற்றும் மறுபயன்பாட்டிற்கு தயாரித்தல் போன்றவற்றையும் முற்றிலும் இக்கட்டுப்பாட்டுகளிலிருந்து விலக்கவும் உடன்படுகிறது. ஆகத்து 18, 2008 பன்னாட்டு அணுசக்தி முகமையக வாரிய ஆளுனர்கள் ஒப்புதல் அளிக்க,[2] பிப்ரவரி 2, 2009 அன்று இந்தியா இந்த முகமையகத்தினருடன் இந்தியாவிற்கேயான காப்புரிமை உடன்பாடு கண்டது.[3] இந்த உடன்பாட்டை அமலுக்குக் கொண்டுவந்த பின்னர் இந்தியா வகைபிரித்துள்ள 35 குடிசார் அணுவுலைகளில் படிப்படியாக ஆய்வுகள் மேற்கொள்ளும்.[4]

பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தினரின் ஒப்புதல் பெற்றபிறகு,ஐக்கிய அமெரிக்கா அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தினரிடம் இந்தியாவிற்கு விலக்கு அளிக்கக் கோரியது.[5] இந்தியா 1974ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதத்தை வெடித்த பிறகு உருவான இக்குழு ஆணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளுக்கு, அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (NPT)கையொப்பமிடாதவரை, அணுவாற்றலுக்குரிய பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. 45 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ள இக்குழு செப்டம்பர் 6, 2008 அன்று பிற நாடுகளிடமிருந்து அணுவாற்றல் தொடர்புடைய எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப வணிகத்திற்கு ஒப்புமை அளித்தது.[6] இதன்மூலம் அணுப்பரவாமை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாதும் அணுஆயுதம் கொண்டிருந்தும் அணுவாற்றல் வணிகம் அனுமதிக்கப்படிருக்கும் முதல் நாடு இந்தியாவாகும்.[7]

இதேநேரம் அமெரிக்க காங்கிரசு இருமுறை இந்த உடன்படிக்கையை விவாதித்தது. 2006ஆம் ஆண்டு ஹைட் சட்டம் திருத்தப்பட்டு அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள் திருத்தப்பட வழிவகுத்தது. 28 செப்டம்பர் 2008 அன்று இறுதி வடிவ உடன்பாடு காங்கிரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.[8]

இது இந்தியாவில் பெரும் விவாதங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.இந்திய நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாட்டினை விவாதிக்க மறுத்ததால், அப்போதைய காங்கிரசு-இடதுசாரி அரசு ஆட்டம் கண்டது. சூலை 2008 அன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க சமாஜ்வாடி கட்சியின் உதவியை நாடியது.

பிரான்சு இந்த உடன்படிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் அணு வணிகம் செய்ய உடன்பாடு கண்ட முதல் நாடாக விளங்கியது[9]

அமெரிக்க செயலர் ரைசும் இந்திய அமைச்சர் பிரணப் முக்கர்ஜியும் 123 உடன்பாட்டை அக்டோபர் 10, 2008 அன்று வாசிங்டனில் கையொப்பமிட்டபோது.

அக்டோபர் 1, 2008 அன்று மேலவையும் ஒப்புதல் அளித்தது.[10][11] இதனையடுத்து அக்டோபர் 8,2008 அன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் புஷ் ஐக்கிய அமெரிக்கா-இந்தியா அணுவாற்றல் கூட்டுறவு ஒப்புதல் மற்றும் அணுவாயுதப் பரவாமை மேம்பாடு சட்டம் (United States-India Nuclear Cooperation Approval and Non-proliferation Enhancement Act) என்று கையொப்பமிட்டு சட்டமாக்கினார்.[12] இந்த உடன்பாடு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முக்கர்ஜியும் அமெரிக்க சகா மாநில செயலர் காண்டலீசா ரைஸ்சும் அக்டோபர் 10 அன்று கையொப்பமிட்டவுடன் அமலுக்கு வந்தது[13][14]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Joint Statement Between President George W. Bush and Prime Minister Manmohan Singh
 2. IAEA Board Approves India-Safeguards Agreement
 3. India Safeguards Agreement Signed
 4. "INFCIRC/731" (PDF). 2011-09-08 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-08-27 அன்று பார்க்கப்பட்டது.
 5. "outlookindia.com | wired". Outlookindia.com. 2008-10-02 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Nuclear Suppliers Group Grants India Historic Waiver - MarketWatch". Marketwatch.com. 2008-10-02 அன்று பார்க்கப்பட்டது.
 7. 3 hours ago (3 hours ago). "AFP: India energised by nuclear pacts". Afp.google.com. 2009-12-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-02 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 8. "House of Reps clears N-deal, France set to sign agreement-USA-World-The Times of India". Timesofindia.indiatimes.com. 2008-10-02 அன்று பார்க்கப்பட்டது.
 9. "India, France ink nuclear deal, first after NSG waiver". Indianexpress.com. 2008-10-02 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Finally, it's done: India back on the nuclear train-USA-World-The Times of India". Timesofindia.indiatimes.com. 2008-10-02 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Senate approves nuclear deal with India - CNN.com". Edition.cnn.com. 2008-10-01. http://edition.cnn.com/2008/POLITICS/10/01/us.india.nuclear/. பார்த்த நாள்: 2008-10-02. 
 12. "Bush signs bill on N-deal on October 8". United States Office of the Press Secretary. 2008-10-08. 2008-10-08 அன்று பார்க்கப்பட்டது.
 13. Done Deal: India, US seal landmark nuclear pact CNN-IBN
 14. "Secretary of State Condoleezza Rice and Indian Minister of External Affairs Pranab Mukherjee At the Signing of the U.S.-India Civilian Nuclear Cooperation Agreement". 2008-10-13 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-10-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

ஐக்கிய அமெரிக்க அரசு இணைப்புகள்
இந்திய அரசு இணைப்புகள்
அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் இணைப்புகள்
பிற இணைப்புகள்