பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் (Institute for Plasma Research) இயற்பியலில் ஆராய்ச்சிகளை தனித்தியங்கி செயல்படுத்தும் ஒரு புகழ் பெற்ற இந்திய நிறுவனமாகும். இந்நிறுவனம் பிளாசுமா சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை, அடிப்படை பிளாசுமா இயற்பியல் ஆய்வுகள், காந்தச் சிறைப் பிணைவு ஆய்வுகள், பிளாசுமா தொழில்நுட்பங்கள், ஆகிய பிரிவுகளில் தொழில் முறையில் மேம்படுத்த கவனம் செலுத்துகிறது. இது ஒரு பெரிய நிறுவனமாகவும், முன்னணி நிறுவனமாகவும் இருக்கிறது. அனைத்துலக அணுப்பிணைவு ஆற்றல் முனைப்பில் மிகவும் தீவிரமான ஈடுபாட்டுடன் செயல்படுகிறது.[1]. இதற்கான பொருளாதார உதவி முக்கியமாக இந்திய அணுசக்தித் துறையால் வழங்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் குஜராத்தில், காந்திநகர் மாவட்டத்தில், சபர்மதி ஆற்றின் அருகிலுள்ள பட் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது அகமதாபாத், காந்திநகர் ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில் உள்ளது. அகமதாபாத் விமானநிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், அகமதாபாத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 14 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது[2].

வரலாறு[தொகு]

வளர்ந்து வரும் பிளாசுமா ஆராய்ச்சியில் 1982 ஆம் ஆண்டில் இந்திய அரசு மிகவும் ஈடுபாடு கொண்டு அதில் பங்கேற்க நினைத்ததால், 1986 ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தியது.

1989 ஆம் ஆண்டில், 'ஆதித்யா' (ADITYA) திட்டத்தை செயல்படுத்தியதுடன், டோகாமாக் (tokamak)[3] வகை ஆய்வுகளை முழு வீச்சுடன் இந்நிறுவனம் செயல்படுத்தத் துவங்கியது[3].1995 ஆம் ஆண்டில், இரண்டாவது தலைமுறையை சார்ந்த டோகாமாக் வகை [4] இயந்திரங்களை நிறுவ முடிவெடுத்தார்கள். இது மீக்கடத்துத் தன்மையுடன் தளராநிலையில் நொடிக்கு ஆயிரம் செய்பணிகளை இயக்க வல்லதாகும். இந்த நிறுவனம் வெகு விரைவில் வளர்ந்தமையால், இந்திய அணு சக்தித் துறையின் கீழ் மாற்றியமைக்கப் பெற்றது. இதன் தொழிலகத்துடன் கூடிய செயல்பாடுகளை நிறைவேற்ற இதற்கான வசதிகளை எளிதாக்கும் பொருட்டு (FCIPT) காந்திநகரில் வேறோரிடத்திற்கு 1998 ஆம் ஆண்டில் மாற்றியமைத்தார்கள்.

இந்த எளிதாக்கு வசதியுடன் கூடிய அமைப்பு 1997 ஆம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கியது. வணிக ரீதியில் தொழில்மயமாக்கக் கூடிய பிளாசுமா சார்ந்த தொழில் நுட்பங்களை இங்கு பல முன்னணி நிறுவனங்களுக்கு அவர்கள் தேவைக்கிணங்க வழங்கியுள்ளனர். இந்த சேவைகளை வழங்குவதில் ஒரு தன்னிகரற்ற நிலையை அடைந்துள்ளது. அதற்காகவே இதன் உட்கட்டமைப்பும் நவீன வசதிகளுடனும் கருவிகளுடனும் அமைந்துள்ளது. இங்கே செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் சில: உலோகவமைப்பியல் ஆய்வுக்கூடம், மின்னணுவியல் அளவுக்கருவிமயமாக்கல், செயல்முறைக் காட்சி போன்றவை.[5]

இந்த அமைப்பு கழிவுப்பொருட்களை மீட்பது, கழிவுப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, மேற்பரப்பை கடினமாக மாற்றுவது, வெப்பப் பதனிடல் ஆகிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது. தேவைப்படும் நிறுவனங்கள் நேரடியாக இங்கு தொடர்பு கொள்ளலாம்.[5]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Official website of the Institute for Plasma Research
  2. "பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனத்தின் அமைவிடம்". 2007-05-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Aditya tokamak". 2006-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-04 அன்று பார்க்கப்பட்டது.
  4. "SST-1 Tokamak". 2014-06-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-04 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "Facilitation Centre for Industrial Plasma Technologies (FCIPT)". 2011-07-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-04 அன்று பார்க்கப்பட்டது.