வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம்
வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் (Variable Energy Cyclotron Centre) என்பது இந்திய அணு சக்தித்துறையின் மேற்பார்வையில் செயல்படும்[1] ஒரு ஆராய்ச்சியுடன் கூடிய மேம்பாட்டு மையம் ஆகும். இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ள ஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த நான்கு முதன்மை ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும்.[2]
வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ளது.[3] இந்த மையத்தில் ஆதார அணுக் கரு அறிவியல், பயன்முறை அணுக் கரு அறிவியல் ஆகிய துறைகளில் மிகவும் நவீனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. வேகமுடுக்கி இயற்பியல் தொழில் நுட்பங்களில் பெருமளவு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கணினி அறிவியல் தொழில் நுட்பங்களிலும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வேகமுடுக்கி இயற்பியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, இங்கு 1970 ஆம் ஆண்டுகளில் தொடங்கி, இந்திய வல்லுனர்களின் தொழில் நுட்பத்தில் ஒரு 224 செ.மீ. அளவுடன் கூடிய வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கியை வடிவமைத்து கட்டி முடித்தார்கள். இது 1977 ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் புரிவதற்காக பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் வேறுபடும் ஆற்றலளவு கொண்ட புரோட்டான், டியூட்டிரான், அலுபாத்துணிக்கை,(proton, deuteron, alpha particles), கனமான அயனிக்கற்றைகள் (heavy ion beams) ஆகியவற்றை இதர நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள். தற்பொழுது இங்கு மீக்கடத்து சுழல்முடுக்கி (superconducting cyclotron) ஒன்றையும் பணிந்து வருகிறார்கள். இது செயல்படும் பொழுது, இந்திய வல்லுனர்களால் மீக்கடத்து காந்தம், கடுங்குளிர் இயக்கம் (superconducting magnets, cryogenics) ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் அறிவியல் இரகசியங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.[4]
இதைத் தவிர இந்த மையத்தில் புதியதாக கதிரியக்க அயனிக்கற்றைகள் வேகமுடுக்கி விசைகளையும் (radioactive ion beam accelerators) அமைத்து வருகிறார்கள். இதன் மூலமாக உயர்ந்த வகையிலான அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிகளை செயல்படுத்தலாம்.
குவார்க்கு உட்கருத் துகள் இரத்த நீர்மம் (Quark Gluon Plasma) என அறியப்படும் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டதற்கு இந்நிறுவனம் வெளிநாடுகளில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது. ஹீலியம் வாயுவை பிரித்தெடுத்தல், நிலநடுக்கங்களை கண்டறிதல் ஆகிய ஆய்வுகளிலும் பல சாதனைகளை கண்டறிந்துள்ளனர்.
கணினி தொழில் நுட்பத்திலும் இம்மையம் பெயர்பெற்று விளங்குகிறது. வடக்கு, வட கிழக்கு மாநிலங்களுக்காக இம்மையம் வலைத்தளம் மூலமாக ERNET என்ற மின்னஞ்சல் வலைச்சேவைகளையும் வழங்கி வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ^ "Department of Atomic Energy, Government of India". Dae.gov.in.. 2009-11-03. http://www.dae.gov.in./contacts.htm பரணிடப்பட்டது 2011-02-27 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-08-06
- ↑ ^ Reservation bill passed in Lok Sabha
- ↑ ^http://www.vecc.gov.in/cominfgroup.php பரணிடப்பட்டது 2010-10-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ^http://www.vecc.gov.in/Official[தொடர்பிழந்த இணைப்பு] website