உள்ளடக்கத்துக்குச் செல்

கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடங்குள அணு ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது 2011 செப்டம்பர் முதல் தமிழ்நாடு கூடன்குளம் மற்றும் அயல் ஊர்களின் மக்கள் அங்கு அணு ஆலை இயக்க வைப்பதற்கு எதிராக நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இதை அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் முன்னெடுத்து வருகின்றது. இப்போராட்டக் குழுவின் தலைவராக முனைவர் உதயகுமார் இருந்து வருகிறார். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க அமெரிக்காவின் தன்னார்வ நிறுவனங்களின் நிதியுதவி பெற்று நடைபெறும் போராட்டங்களில் ஒன்றாகக் கூடங்குளம் போராட்டம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரு அரசின் ஆட்சிக்காலங்களிலும் குறிப்பிடப்படுகின்றது.[1][2]

காரணங்கள்[தொகு]

அணு ஆலைக்கு எதிராக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையானவை:

 • மக்கள் நெருங்கி வாழும் இடத்தில் அணு ஆலை இயக்குவது அந்தச் சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
 • அணு ஆலை விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள். முழுத் தமிழகமும், வட இலங்கையும் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
 • உயர் தொழில்நுட்பம் வாய்த்த சப்பான், செர்மனி போன்ற நாடுகளே அணு ஆலைகளை கைவிடும் பொழுது, இந்தியா அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை அல்ல.
 • கட்டுமானம் சீர்தரத்துக்கு ஏற்ற முறையில் இல்லை.
 • சுற்றுச்சூழல் பாதிப்படையும்.
 • கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம். தீவரவாதிகள் தாக்கலாம்.

போராட்டக் குழுவின் வாதங்கள்[தொகு]

 • இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதால் கேரளத்து மக்களே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்துப் போராடுகிறார்கள்.
 • வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் அதிகமான கதிர்வீச்சு ஏற்படும்.
 • இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா வரிசையில் கூடங்குளம் விபத்து ஏற்பட்டால் தமிழகமே சாம்பல் மேடாகும், பச்சைப் பசுஞ்சோலையான குமரி மாவட்டமும், அதன் நான்கு தினை வளங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களும் நிரந்தரமாக பட்டுப் போக வாய்ப்பிருக்கின்றது.
 • விபத்து எதுவும் ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும் எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான நெகிழிகளே வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.
 • இந்தியாவில் 97 சதவிகிதம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது.
 • மின்சார பற்றாக்குறையால் தமிழகம் இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?
 • 1974 ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய போது தாராப்பூர் அணு உலைக்கான எரிபொருள் தருவதை அமெரிக்கா நிறுத்தியது.மின்சாரம் தேவை என்று மக்களிடம் கூறி அணு ஆயுதத்திற்கான மூலப்பொருட்களை பெறுதல் என்பதே அணுவுலையின் உள்நோக்கம்.
 • விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டம் எதற்காக? அணு விபத்து பாதுகாப்பு ஒத்திகை எதற்காக? அணு உலையை ஒட்டியக் கடல்பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடிக்க கூடாது என்று சொல்வது ஏன்? உலக நாடுகள் அணுவுலைகளை மூடிவருவது ஏன்?
 • இத்தாலி போன்ற நாடுகள் அணு உலைகள் வேண்டாம் என்று பொது வாக்கெடுப்பில் தீர்மானித்துள்ளன.
 • செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்து இட்டது ரசியா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணு வுலைகள் எதுவும் அமைக்க வில்லை.
 • ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், செர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன.
 • இந்திய அரசு போப்பால் இரசாயண ஆலை பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகும் போப்பால் பேரழிவு நடந்து 20 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்[3].
 • செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும் போதும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டது.
 • 1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணு வுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
 • 1988 ல் மக்கள் எதிர்ப்பினால் தான் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.
 • இப்போதைய எழுச்சி ஃபுக்குசிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வும், சோதனை ஓட்டத்தில் எழும்பிய புகையும், ஓசையும், விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகையும் காரணமாகும்.
 • குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய வேறு வழிகள் இருந்தும் அதிக செலவில் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் குறைந்த மின்சாரமே தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்வதால் நாட்டுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.

அரசுத்தரப்பு வாதங்கள்[தொகு]

கூடங்குளம் அணுமின் நிலைய இயக்கத்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளயிட்டுள்ளார்.[4] அதன்படி:

 1. கூடங்குளம் அணு மின் நிலையம், நில நடுக்கம் ஏற்படக் கூடிய சாத்தியம் இல்லாத, இரண்டாம் நிலை மண்டலத்தில் தான் உள்ளது.
 2. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ஒரு வகையிலான குளிர்விப்பு முறையே போதும் என்ற போதிலும், நான்கு விதமான குளிர்விப்பு தொடர் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 3. கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
 4. அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

விளைவுகள்[தொகு]

இந்தப் போராட்டங்களின் விளைவாக அணு ஆலை தொடங்கப்படுவது ஒத்திப் போடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் எடுத்த நிலைப்பாட்டை மாற்றி, பொது மக்களின் அக்கறைகளைக் கவனத்தில் எடுக்கும் படி நடுவண் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு விதிகளை மீறி ஆலை கட்டப்பட்டது[தொகு]

கூடங்குளம் அணு ஆலை கட்டப்பட்டபோது அரசு விதிகள் மீறப்பட்டன என்று போராட்டக் குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர். அணு ஆலைக்கு மிக அருகில் கிட்டத்தட்ட 450 சுனாமி வீடுகள் உள்ளனவென்றும், கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை, பஞ்சல் ஆகிய ஊர்கள் அணு ஆலைக்கு 5 கி.மீ சுற்றளவுக்கு உள்ளேயே இருக்கின்றனவென்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், ஆலையிலிருந்து வெளியேறும் ஆபத்தான கதிர்வீச்சு கொண்ட அணுக் கழிவு ருசியாவுக்குக் கொண்டுபோகப்படுவதற்குப் பதிலாகக் கூடங்குளத்திலேயே கடலில் இடப்படும் என்னும் பேராபத்தும் உள்ளது.

அணு ஆலையினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவருவதால் அவர்கள் தங்கள் கருத்துகளைப் பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்[5].

அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருட்டிணன் ஜப்பானின் புகுசிமா அணுஉலைக்கு பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுஉலையை ஆராய்ந்து இதன் பாதுகாப்புக்கு 17 பரிந்துரைகளை அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அளித்தது என்றும் அவற்றை நிறைவேற்றாமல் கூடங்குளம் அணுஉலையை இயக்க அரசு முடிவெடுத்திருப்பது மக்களை ஏமாற்றுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார் [6].

அப்துல் கலாமின் பத்து அம்சத் திட்டங்கள்[தொகு]

பிரச்சனையில் நடுநிலையான ஒரு தலையீடு வேண்டியிருந்ததால், கூடங்குளம் அணு ஆலையை 2011 ஆம் ஆண்டு பார்வையிட்ட அப்துல்கலாம், கூடங்குளத்தை பாதுகாப்பானது என்று குறிப்பிட்டு, மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களையும் வலியுறுத்தினார்.[7]

 • கூடங்குளத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்ற கிராமங்களுடனும், 650 கி.மீ தொலைவிற்குள் உள்ள திருநெல்வேலி, கன்யாகுமரி, மதுரை ஆகிய நகரங்களுடனும் இணைப்பது.
 • இளைஞர்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு உரிய கடனுதவி வழங்குவது. 10000 பேர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களை முப்பதிலிருந்து அறுபது கி.மீ தொலைவிற்குள் அமைப்பது.
 • கூடங்குளத்திலும் அருகாமையிலும் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகளையும், அடுக்கு வீடுகளையும் அமைத்துத் தருவது.
 • மீனவர்களுக்கு வேண்டிய வசதிகளான பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்கும் குளிர்சாதன வசதிகளையும் மற்ற வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது.
 • பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்கும் விவசாயத்திற்குமான நீரைக் கொணர்வது. ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் லிட்டர் உப்பு நீரை நன்னீராக்கும் திட்டத்தினை ஆரம்பிப்பது.
 • 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை, அனைத்து கிராமங்களிலும் டெலி மெடிசின் வசதி கொண்ட மருத்துவமனைகள், நோய் கண்டறியும் கருவிகள் கொண்ட இரு நடமாடும் மருத்துவமனைகள் ஆகிய மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்தித்தருவது.
 • ஐந்து சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளிட்ட பத்து பள்ளிகளைத் தங்கிப்படிக்கும் வசதி கொண்டவையாகக் கட்டுவது.
 • பேரழிவு மேலாண்மை மையத்தினையும், தொலைதொடர்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது.
 • தேர்வு செய்த இளைய சமுதாயத்தினருக்கு தகுந்த உயர்கல்வியை பயிற்சியுடன் அளித்து நிரந்தரப் பணியில் அமர்த்துவது.
 • அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து வேண்டிய மற்ற திட்டங்களைத் தீட்டுதல்
 • மக்களின் அச்சத்தை நீக்குவதற்கு தேவையான சரியான தகவல்களை மக்களுக்குத் தருதல்.

அப்துல் கலாம் போராட்டக் குழுவினர் தம்மை சந்திக்க விருப்பப்பட்டால் சந்திக்கலாம் என்று கூறியிருந்தும் அவரது கருத்துக்கள் போராட்டக்குழுவினரை ஈர்க்கவில்லை

நிபுணர் குழு ஆய்வு அறிக்கைகள்[தொகு]

தமிழில் பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம் ஆங்கிலத்தில் பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம்

செப்டம்பர் 2012 முற்றுகைப் போராட்டம்[தொகு]

1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தது, உச்சகட்டமாக மின் உற்பத்திக்கு முதற்கட்டமான எரிபொருள் நிரப்பும் பணி அணு உலையில் துவங்கவிருக்கிறது என இந்திய அரசு அறிவித்ததன் விளைவாக செப்டம்பர் 10 2012 ல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அணு உலையை முற்றுகையிட்டனர்.[8] அணு உலை எதிப்பாளர்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தடியடி பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தியதில் பலர் காயமுற்றனர். தடியடியிலிருந்து தப்ப சிலர் கடலில் குதித்துள்ளார்கள் அப்போது சில காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது.[9][10][11][12]

நீரில் நின்று போராட்டம்[தொகு]

வன்முறையை தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காவல்துறையிடம் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் வருவதாக இருந்ததை போராடு மக்கள் விரும்பாமல் உதயகுமாரை தூக்கிச் சென்று தலைமறைவாக வைத்தனர். போராட்டத்தை போராட்ட குழுவின் மற்றொரு தலைவரான மை.பா சேசுராஜ் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் நின்று போராடும் போராட்டத்தை தொடங்கினர். இந்திய கடலோர காவல்படையின் ரோந்து விமானம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை தாழ்வாக பறந்து போராடும் மக்களை கண்காணித்து வந்தது. விமானம் தாழ்வாக பறந்த சத்தம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் சகாயம் என்ற மீனவர் பாறையில் விழுந்து பலத்த காயமடைந்தார், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்[13][14]. இதனால் மீண்டும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலைக்கு ஏதிராக ஜப்பான்[தொகு]

புக்குசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய பாதிப்பை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் ஜப்பான் ஆட்சியாளர்கள் வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்றும், 2040ம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடுவது என்றும் தீர்மானித்துள்ளது.[சான்று தேவை]

உச்சநீதி மன்றத்தில் மனு[தொகு]

எரிபொருள் நிரப்பும் செயலுக்குத் தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதி மன்றம், இத்தடையை விதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது என்றாலும் மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதைக் கருத்தில் கொண்டு ஆபத்துகளின் சாத்தியங்கள் ஆய்வு செய்யப்படும் எனக் கூறியுள்ளது.[15] பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் 2012ஆம் ஆண்டு திசம்பர் 6-ஆம் நாள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மே 6, 2013 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில்

அணு உலை தொடர்பான பாதுகாப்பு குறித்து ஆராயவென அமைக்கப்பட்ட அனைத்து நிபுணர் குழுக்களும் அணு உலையின் பாதுகாப்பு குறித்து திருப்தி தெரிவித்திருப்பதாலும் உலை பாதுகாப்பாக செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில்கொண்டு அணு உலை செயல்படத் துவங்கலாம்

எனக் கூறியுள்ளது.[16] இந்தத் தீர்ப்பை நிராகரிப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.[17]

போராட்டக் குழுத் தலைவர் நிலைப்பாடு[தொகு]

 • திலகர் முதலான மூத்த சுதந்திரப் போராட்ட வீர்கள் முதற்கொண்டு, ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் போன்ற விஞ்ஞானிகளோடு தமிழக முதல்வர் , பத்திரிக்கைகள் என சராமாரியாக இந்தியர்கள் அனைவரும் சாதி, மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட்டார்கள். அவர்களது நிலைப்பாடுகளும் அந்த அடிப்படையிலேயே பார்க்கப்பட்டன.[18]
 • குழப்பமான பார்ப்பணுத்துவம் (Brahmanuclearism) என்ற புதிய சொல் போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமாரால் உருவாக்கப்பட்டது. இதில் உயர்மட்ட அணுமின் விஞ்ஞானிகள் அனைவரும் மற்றும் பலரும் இந்த சொல்லால் சுட்டப்பட்டனர். அப்துல் கலாமின் கருத்துகளை பொய்யானவை என்றும், அப்துல் கலாமும்,ஒய்.எஸ்.ராஜனும் இணைந்து எழுதிய "இந்தியா 2020" நூலை ’பார்பணுத்துவத்தின்’ புனித நூலாகவும் கூறப்பட்டது.[18]
 • திலகர்,சாவர்க்கர் சகோதரர்கள் முதலான பல்வேறு தீவிர சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகள், 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ல் ஆங்கிலேய நீதிபதியான ரவுலட் குழுவின் அறிக்கையில் தேசத்துரோகிகள் என்று அவர்களைக் குற்றம் சாட்டும் போது அதற்காக ஆங்கிலேயர் ஆராய்ந்த சாதி மதங்கள் அடிப்படையில் பார்க்கப்பட்டு, இந்திய விடுதலைக்காகப் போராடிய அந்த வீரர்கள் சாதி மற்றும் மதத்திற்காகப் போராடியதாகக் குறிப்பிடப்பட்டனர்.[18]
 • அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் நாளடைவில் இந்து சமுதாயத்திற்கு எதிராக தனது இலக்கை மாற்றிக்கொண்டது. இப்போராட்டக்குழுவின் தலைவர் முனைவர் சுப.உதயக்குமார் வெளியிட்ட தனது நூலில் அட்டைப்பக்கம் ஏழை மீது அரசியல்வாதிகளோடு சைவ வைணவ மதச் சின்னங்கள் அணிந்தவர்கள் உச்சியில் அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டது.[18]

மேற்கோள்கள்[தொகு]

 1. கூடங்குளப் போராட்டம்: யு.எஸ் என்.ஜி.ஓ நிதிஉதவி;முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
 2. http://www.thehindu.com/news/national/tamil-nadu/udayakumar-church-has-not-sponsored-me/article5860022.ece
 3. போபால் விபத்து பி.பி.சி.
 4. அச்சம் தேவையில்லை:முதலமைச்சர் பரணிடப்பட்டது 2013-05-30 at the வந்தவழி இயந்திரம் மாலைச்சுடர்
 5. கூடங்குளம் அணு உலை தேவையா? – மக்கள் கருத்து
 6. அரசு மக்களை ஏமாற்றுகிறது என முன்னாள் AERB தலைவர் கோபாலகிருட்டிணன் குற்றச்சாட்டு
 7. http://www.ndtv.com/article/india/kalam-suggests-10-point-development-programme-for-kudankulam-147551
 8. கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை; பதற்றம் நீடிப்பு தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]
 9. Kudankulam nuclear plant: Police lathicharge protesters Times of India
 10. Cops clash with villagers near Kudankulam site Business Standard Monday, Sep 10, 2012
 11. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தடியடி; கண்ணீர் புகைவீச்சு, பி.பி.சி.
 12. போராட்டக் குழு தண்டோரா தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]
 13. "Fisherman injured in fall during Idinthakarai 'jal satyagraha' dies". Archived from the original on 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.
 14. Kudankulam controversy: 'Jal Satyagraha' by protesters enters second day
 15. http://www.thehindu.com/news/national/article3892860.ece?homepage=true
 16. "கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி". பிபிசி. 06 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 06 மே 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 17. "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரிக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி". மாலைமலர். 06 மே 2013. Archived from the original on 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 06 மே 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 18. 18.0 18.1 18.2 18.3 பார்ப்பனத்துவம் அணுத்துவம்; முனைவர் சுப உதயகுமார்; 2013; பக்கம் 10,11,16,அட்டைப்படம்

வெளி இணைப்புகள்[தொகு]