ஐ. என். எசு. அரிகந்த்
ஐ.என்.எசு. அரிகந்த்
| |
கப்பல் (இந்தியா) | |
---|---|
வகுப்பும் வகையும்: | அரிகந்த் வகை நீர்மூழ்கி |
பெயர்: | மேம்பட்ட தொழில்நுட்பக் கலன் |
கட்டியோர்: | கப்பல் கட்டுமானத் தளம், விசாகப்பட்டிணம் |
துவக்கம்: | தகவல் இல்லை |
வெளியீடு: | 26 சூலை, 2009 |
பெயரிடப்பட்டது: | ஐ.என்.எசு. அரிகந்த் |
பணியமர்த்தம்: | 2012 (திட்டமிடப்பட்டுள்ளது) |
நிலை: | வெள்ளோட்டம் |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
வகை: | SSBN |
பெயர்வு: | 6000 டன்கள் (கணக்கிடப்பட்டுள்ளது) |
நீளம்: | 110 மீட்டர்கள் |
வளை: | 11 மீட்டர்கள் |
பயண ஆழம்: | 9 மீட்டர்கள் (29.5 அடிகள்) (கணக்கிடப்பட்டுள்ளது) |
உந்தல்: | PWR using 40% enriched uranium fuel (80MW); one turbine (47,000hp/70MW); one shaft; one 7-bladed, high-skew propeller. (Est.) |
வரம்பு: | உணவு இருப்பைப் பொருத்து மட்டும் |
சோதனை ஆழம்: | 300 மீட்டர்கள் (984.2 அடிகள்). (கணக்கிடப்பட்டுள்ளது) |
பணிக்குழு: | 100 அலுவலர்கள் மற்றும் பணியாட்கள் |
பணியாளர்: | 95 |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: | பாரத் மின்னணுவியல் நிறுவனம் (BEL), USHUS |
போர்க்கருவிகள்: | 6 x 533மி மீ நீர்மூழ்கிக் குண்டுகள், 12 x K-15 Sagarika SLBM |
ஐ.என்.எசு. அரிகந்த் (INS ARIHANT) என்பது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரான அணுக்கரு ஆற்றலினால் ஆன முதல் நீர்மூழ்கிக் கப்பல். இதனை வடிவமைத்து உருவாக்கியதன் மூலம், உருசியா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஆறாவது நாடாக இந்தியா உலக அரங்கில் சிறப்பைப் பெற்றுள்ளது. அரிஹந்த் என்கிற சமசுக்கிருதச் சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள். அதன் முதல் வெள்ளோட்டத்தை 2009]], [[ஜூலை 26|சூலை 26 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். 'போர்க்கப்பல்களைப் பெண்கள் தான் தொடங்கி வைக்க வேண்டும்' என்பது இந்தியக் கடற்படையின் வழக்க முறைமை. அதன்படி பிரதமரின் துணைவியார் குர்ஷரன் கௌர் தன் கையால் தேங்காய் உடைத்து ஐ.என்.எசு. அரிகந்த் கப்பலின் முதல் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்
[தொகு]அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் சேர்ந்து உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா தயாரித்து உள்ளது.[1] ரூ.14 ஆயிரத்து 500 கோடி செலவில் இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 112 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் எதிரியின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் நீண்ட காலம் கடலுக் குள்ளேயே இருக்கும் திறன் படைத்தது. மேலும் இக்கப்பல் கடலுக்குள் இருந்தபடி எதிரியின் இலக்கை குறிபார்த்து சகாரிகா பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைச் செலுத்த வல்லது. ஒரே நேரத்தில் 12 பாலிஸ்டிக் ஏவு கணைகளை நாலாபுறமும் இதனால் செலுத்த முடியும். இதன்மூலம் நிலம், நீர், ஆகாயம் ஆகிய மூன்றில் இருந்தும் அணு ஆயுதங்களைச் செலுத்தும் வல்லமையை இந்தியா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது [2].
தேவையும் பயனும்
[தொகு]இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிரிவின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. இது நாட்டின் கிழக்குப் பகுதியைப் பாதுகாப்பதோடு, இந்தியத் துறைமுக நகரங்கள், துறைமுகங்கள், எண்ணெய் வயல்கள் மற்றும் கடல் சார்ந்த சொத்துகள் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. கடல்வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் கடலோரப் பாதுகாப்பிலும் இந்தக் கிழக்குப் பிரிவு முக்கியப் பங்கு ஆற்றுகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் ராம்பிள்ளி பகுதியில் புதிதாக கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதனுடைய வலுவைக் கூட்டும் வகையில் அணுஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவே உள்நாட்டில் வடிவமைக்கத் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளது.
கட்டுமானத் திட்டம்
[தொகு]நீர்மூழ்கிக் கப்பல் வகைகளில் இந்தவகைக் கப்பல் இந்தியக் கடற்படையின் 'முன்னணித் தொழில்நுட்பக் கலன்' என்கின்ற திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இதனை இந்தியக் கடற்படை, பாபா அணு ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு, இந்திய அணுவாற்றல் துறை ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு உலையில் செறிவேற்றப்பட்ட யுரேனியப் பொருள் கடும் வெப்பத்தை வெளியிடும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பலில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீராவி ஒரு டர்பைனை இயக்கும். இதன் பலனாக நீர்மூழ்கிக் கப்பலில் சுழலி இயங்க நீர்மூழ்கிக் கப்பல் நீருக்குள் இயங்கும். அத்துடன் இந்த டர்பைன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பலில் கடல் நீரைக் குடிநீராக்க முடியும். நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க இயலும்.
நீர்மூழ்கிக் கப்பலில் அணு உலை எடை மிக்கது. ஆகவே நீர்மூழ்கிக் கப்பலின் ஸ்திர நிலை பாதிக்கப்படாத வகையில் அணுஉலை நீர்மூழ்கிக் கப்பலின் நடுப்பகுதியில் இடம்பெறும். அந்தவகையில் நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்படுகிறது. இந்தியா இது தொடர்பான பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்தது. இப்போது இந்திய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இடம்பெறும் அணுஉலை கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கான விசேஷ வகை உருக்கைப் பெறுவதிலும் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது.
எல்லா வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும் ஒருவகை சோனார் கருவிகள் உண்டு. இவை ஒலி அலைகளை வெளிப்படுத்தும். இந்த ஒலி அலைகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் மீது பட்டு எதிரொலித்துத் திரும்புவதை வைத்து அந்த நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து விட முடியும். எதிரி நீர்மூழ்கிக் கப்பலின் சோனார் கருவிகளை ஏமாற்றும் வகையில் இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் வெளிப்புறத்தில் நுண்ணிய துளைகள் கொண்ட ரப்பர் பொருள் ஒரு பூச்சாக அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களால் எளிதில் அடையாளம் காண முடியாது.
இந்தத் திட்டத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன.
முதல் கட்டம்
[தொகு]அணுவாற்றலில் இயங்க வல்ல நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து உருவாக்கிக் கடற்படையின் பலத்தினை அதிகரிப்பது:
26.11.2009-ல் இதன் வெள்ளோட்டம் தொடங்கி விட்டது. இதன் இயக்கத்துக்குத் தேவையான 80 மெகாவாட் அணுமின் நிலையம் கல்பாக்கம் பாபா அணுவாற்றல் ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதில் எழுந்த தொடக்கநிலைச் சிக்கல்களை எதிர்கொண்டபோது உருசியா இந்தியாவுக்கு ஆக்கபூர்வ உதவிகளைச் செய்துள்ளது. இதன் இயக்கத்திற்குத் தேவையான 'என்ரிச்டு' (ஊட்டம்பெற்ற) யுரேனியத்தை அணுவாற்றல் துறை தருகிறது.
இரண்டாம் கட்டம்
[தொகு]அரிகந்த் நீர்மூழ்கிக் கப்பலில் ஏவுகணைகள் பொருத்தி இந்தியா தரைவழி, வான்வழி, கடல்வழி அணு ஆற்றல் கலன்களைப் பயன்படுத்த வல்ல நாடு என்கிற நிலையை அடைவது:
நீருக்கடியில் ஏவுகணைகளை இயக்கும் நுட்பத்தில் ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு தேர்ச்சி பெற்றிருப்பதால், அரிகந்த்தின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்த நிலையில் K-15 வகை ஏவுகணைகள் அதில் பொருத்தப்படும்.
எதிர்காலத் திட்டம்
[தொகு]சகாரிக்கா (SAGARIKA) என்கிற 750 கிமீ. தூரம் சென்று தாக்க வல்ல ஏவுகணை மற்றும் அக்னி-3 ஏவுகணை ஆகியவையும் அரிகந்தில் பொருத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த இரண்டு அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களின் பாகங்கள் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தாரால் குசராத் மாநிலம் அச்சிராவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
2025-க்குள் இந்தியா ஐந்து ஏவுகணை ஆற்றலுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவல்[3].
விமர்சனங்கள்
[தொகு]இந்தியா அணு ஆயுதப் போட்டியை மேலும் உந்திவிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படைத்துறைக்கு செல்வது அதன் மக்கள் நல மேம்பாட்டுக்கு தடையாக உள்ளது. தெற்காசியாவின் அமைதிக்கு இது கேடு விளைவித்துள்ளதாக பாக்கிசுத்தான் கூறி உள்ளது.[4]
இந்தியாவின் டீசல் - எலக்ட்ரிக் நீர்மூழ்கிக்கப்பல்களால் அதிக தொலைவு செல்ல இயலாது என்ற காரணத்தால் அவை இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இப்போது இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடியது. இதுபோன்று மேலும் பல அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இவையும் கடலில் இயங்க ஆரம்பித்ததும் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயங்கும்.
தற்போதைய நிலை
[தொகு]2016 பிப்ரவரி நிலவரப்படி கடந்த ஐந்து மாதங்களாக நடந்த ஆழிகடல் சோதனையிலும், ஆயுத சோதனையிலும் வெற்றிபெற்று கடற்படையில் சேர்க்கும் நிலைக்கு வந்துவிட்டது. [5]
ஏவுகனை சோதனை
[தொகு]14 அக்டோபர் 2022 அன்று அணுசக்தியால் இயங்கும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலிருந்து ஏவுகணை ஏவும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வங்க கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானை நீர்மூழ்கி கப்பலில் இருந்தே துல்லியமாக தாக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.[6]
இதனையும் காண்க
[தொகு]- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
- ஐ.என்.எஸ். காமோர்த்தா
- ஐ.என்.எஸ். சுனைனா
- ஐ.என்.எஸ். தரங்கிணி
- ஐ.என்.எஸ்.சக்ரா
- ஐஎன்எஸ் கொச்சி
- ஐஎன்எஸ் சக்ரா 2
- ஐஎன்எஸ் சரயு (பி57)
- ஐஎன்எஸ் சென்னை
- ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
- ஐஎன்எஸ் ராணா (டி52)
- ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
- எச். எம். எஸ் பஞ்சாபி
- ராஜபுதன வகுப்பு அழிகலன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்தியாவின் முதல் அணு- நீர்மூழ்கிக் கப்பலின் அணு உலை இயங்குகிறது பிபிசி
- ↑ நக்கீரன்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ India plans to build a fleet of five nuclear-powered submarines
- ↑ India submarine 'threatens peace'
- ↑ அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் அனைத்து சோதனைகளிலும் வெற்றி தி இந்து தமிழ் 24 பிப்ரவரி 2016
- ↑ நீர்மூழ்கி கப்பல் வாயிலாக ஏவுகணை சோதனை
வெளி இணைப்புகள்
[தொகு]- Prime Minister to launch INS Arihant at Vizag today பரணிடப்பட்டது 2009-07-29 at the வந்தவழி இயந்திரம் – த இந்து - செய்தித் தாள் நாள்:26.07.09 - (ஆங்கில மொழியில்)
- India Joining Another Club - (ஆங்கில மொழியில்)
- India submarine 'threatens peace' - (ஆங்கில மொழியில்)