உள்ளடக்கத்துக்குச் செல்

பதுருப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ர் போர்
Battle of Badr
முசுலிம்-குறைசி போர்கள் பகுதி
நாள் மார்ச் 17, 624 கிபி/17 ரமழான், 2 AH
இடம் பத்ர் (மதீனாவின் தென்மேற்கே 130 கிமீ
முசுலிம்கள் வெற்றி
பிரிவினர்
மதீனாவின் முசுலிம்கள் மக்காவின் குறைசிகள்
தளபதிகள், தலைவர்கள்
முகமது நபி
ஃகம்சா இப்னு அப்துல் முத்தலிப்
அலீ இப்னு அபீதாலிப்
அபூஜகீல் (போரில் கொல்லப்பட்டார்
உத்பா இப்னு ரபீஆ (கொல்லப்பட்டார்)
உமையா இப்னு கலஃப் (கொல்லப்பட்டார்)
பலம்
313 பேர், 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள் 1000 பேர், 100 குதிரைகள், 170 ஒட்டகங்கள் [1]
இழப்புகள்
14 பேர் கொல்லப்பட்டனர் [2] 70 பேர் கொல்லப்பட்டனர்
43-70 பேர் பிடிக்கப்பட்டனர்

பதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر‎, மார்ச் 17, கிபி 624) [3]இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹெஜாஸ் பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[4] முஸ்லிம்கள் பதுருச் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் வலிமையோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும் இறைவனின் உதவியுமே என இஸ்லாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனிற் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில போர்களில் பதுருப் போரும் ஒன்றாகும்.[5][6][7][8]

இப்போருக்கு முன்னரும், முஸ்லிம்களும் குறைசியர்களும் சில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெருஞ் சமர் ஆகும். முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரபு நாட்டின் வலிமை மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதுமாகத் திகழ்ந்த நகரமாக மக்கா விளங்கியது. முசுலிம்களின் படை வலிமையை விட மூன்று மடங்கு படையினரை மக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிம்கள் பத்ருப் போரிற் பெற்ற வெற்றி அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது மதீனாவிற் பிரிந்திருந்த பிரிவினரிடையே முகம்மது நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.[9]

போருக்கான காரணம்

[தொகு]

பத்ருப் போர் நடைபெறுவதற்குப் பல காரணங்கள் அப்போது இருந்ததாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இசுலாம் தனிப்பெரும் அரசாக வளர்ந்து வந்தமை அதன் எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். எனவே தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமற் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.[5][6]

மக்காவின் குறைசியர்கள் முகம்மது நபியோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர் மதீனாவிற் தம்மைத் திடப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து சிரியாவை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும். [10][11]

அத்தோடு நபியவர்களது பரப்புரை மக்காவையும் புனித கஃபாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மது நபி அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் எண்ணினர்.[12]

இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் சஃகுழ்சியின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் ஹள்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் ஹள்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு முகம்மது நபிக்கு மனநிறைவை அளிக்கவில்லை. எனினும் இசுலாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முசுலிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.[13]

போர் நிகழ்வு

[தொகு]
பதுருப் போர் நிகழ்ந்த இடம்

மேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசுபியான் 50 ஆயிரம் தினார் பெறுமதி கொண்ட வர்த்தகப் பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மது நபியின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசுபியானிடம் இருந்ததனால் இது ஒரு பெரும் சிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களிற் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.

இசுலாமிய நாட்காட்டியில் 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 மைல் தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.

மறு நாட் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு போர் தொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையிற் பின்வருமாறு இறைஞ்சினார். இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும் ஆயுத வலிமையோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான் என்று கூறி ஆறுதல் படுத்தினார்.

இப்போராட்டத்தில் முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக குடல்வாய் உறவுகளைப் போர்க் களத்திற் சந்தித்தனர். குடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இசுலாமிய கொள்கை வலிமை மிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவினர்.[14] [15]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Watt 1961, ப. 123.
  2. Sahih al-Bukhari: Volume 4, Book 52, Number 276
  3. W. Montgomery Watt (1956), Muhammad at Medina Oxford: Clarendon Press, p. 12. Watt notes that the date for the battle is also recorded as the 19th or the 21st of Ramadan (15 or 17 March 624).
  4. Quraish refers to the tribe in control of Mecca. The plural and adjective are Quraishi. The terms "Quraishi" and "Meccan" are used interchangeably between the Hijra in 622 and the Muslim Conquest of Mecca in 630.
  5. 5.0 5.1 Buhl & Welch 1993, ப. 364.
  6. 6.0 6.1 "Muhammad | Biography, History, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2023-05-24. பார்க்கப்பட்ட நாள் 2023-05-27.
  7. Lewis 2002, ப. 35–36.
  8. Gordon 2005, ப. 120-121.
  9. "Encyclopaedia of Islam, Volume I (A-B): [Fasc. 1-22]", Encyclopaedia of Islam, Volume I (A-B) (in ஆங்கிலம்), Brill, 1998-06-26, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-08114-7, பார்க்கப்பட்ட நாள் 2023-05-28, p. 868
  10. Buhl & Welch 1993, ப. 364-369.
  11. "Aws and Khazraj". www.brown.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-05-27.
  12. Peters, Francis E. (1994-01-01). Muhammad and the Origins of Islam (in ஆங்கிலம்). SUNY Press. pp. 211–214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-1875-8.
  13. Mubārakfūrī, Ṣafī al-Raḥmān (2002). The Sealed Nectar: Biography of the Noble Prophet (in ஆங்கிலம்). Darussalam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-899-55-8.
  14. "Sahih al-Bukhari: Volume 4, Book 53, Number 359". Usc.edu. Archived from the original on 20 July 2010. பார்க்கப்பட்ட நாள் 16 September 2010.
  15. "Witness-pioneer.org". Witness-pioneer.org. 16 September 2002. Archived from the original on 5 February 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுருப்_போர்&oldid=3885239" இலிருந்து மீள்விக்கப்பட்டது