திருநீலநக்க நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநீலநக்க நாயனார்
திருநீலநக்க நாயனார்
பெயர்:திருநீலநக்க நாயனார்
குலம்:அந்தணர்
பூசை நாள்:வைகாசி மூலம்
அவதாரத் தலம்:சாத்தமங்கை
முக்தித் தலம்:நல்லூர்ப் பெருமணம்[1]

திருநீலநக்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.[2][3].

வரலாறு[தொகு]

திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரத் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.

நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று சினந்தார். சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன் என்றார் மனைவியார். நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த யான் இனித் துறந்தேன். நீங்கி விடு என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.

நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதித்துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்தபின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார்.

நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார்.

சம்பந்தரைத் தரிசித்தல்[தொகு]

அந்நாளில் சீர்காழிப் பிள்ளையாரின் சீரை உலகெலாம் போற்றுவதை அறிந்தார். தாமும் திருஞானசம்பந்தரின் திருப்பாதத்தைப் தம் தலைமிசைச் சூடிக்கொள்ள வேண்டுமெனும் விருப்புடையவரானார். இவ்வாறு விரும்பியிருந்த வேளையில் சண்பையார் மன்னர் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டுவரும் வழியில் சாத்தமங்கையை அடைந்தார். சம்பந்தப் பிள்ளையார் வரும் செய்தியறிந்த திருநீலநக்கர் அப்பொழுதே மகிழ்ந்தெழுந்து கொடிகள் தூக்கி, தோரணம் நாட்டி, நடைபந்தலிட்டு வீதியெல்லாம் அலங்கரித்தார். தாமும் சுற்றமுமாய்ச் சென்று சம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அழைத்து வருவோமென ஆசை கொண்டார். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்றிரவில் சம்பந்தர் தம்மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். சம்பந்தரும், திருநீலகண்டத் திருப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ்வந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார்.

சம்பந்தப் பிள்ளையார் மறுநாள் எழுந்து அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார்.

சம்பந்தப்பெருமான் சாத்தமங்கையின்றும் புறப்பட்டபோது அவரோடு தொடர்ந்து செல்லவே நீலநக்கர் விரும்பினார். ஆனால் பிள்ளையார் அவரை அங்கேயே இருந்து அயவந்திப் பெருமானைப் பூசிக்குமாறு அருளிய வாக்கினை மீறவியலாது தம் உள்ளத்தைப் பிள்ளையாருடன் செல்லவிட்டுத் தான் அயவந்தியில் தங்கினார். சம்பந்தர் திருப்பாதம் நினைந்த சிந்தையராய் பூசனையை முன்னரிலும் சிறக்கச் செய்தார். முருகனார், ஆளுடைய அரசு, சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாருடனெல்லாம் அளவளாவி உடனுறையும் இன்பம் பெற்றார்.

இவ்வண்ணம் ஞானசம்பந்தரால் பேரன்பு அருளப்பெற்ற திருநீலநக்கனார் அவர் தம் திருமணத்திற்குப் புரோகிதம் பார்க்கும் பேறு பெற்றார். அந்த நல்லூரிப் பெருமணத்திலேயே சோதியுட் புகுந்தார்.

"ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்”திருத்தொண்டத் தொகை

வெளியிணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

மேற்கோள்கள்[தொகு]

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  3. 63 நாயன்மார்கள், ed. (31 ஜனவரி 2011). திருநீலநக்க நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநீலநக்க_நாயனார்&oldid=3395261" இலிருந்து மீள்விக்கப்பட்டது