காரைக்கால் அம்மையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் காரைக்கால் மாநகரில் பிறந்தமையால் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்படுகிறார்.

பொருளடக்கம்

[தொகு] இளமைக் காலம்

முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர்,தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார். அவர் இறைவர் பால் நிலைபெற்ற அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்.

[தொகு] இல்லறம்

பெற்றோர் திருமணப்பருவம் வந்ததும் தகுந்த வரன் தேடினர். நட்பு முறையிலான உறவினராகிய காரைக்கால் மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் காசுக்கடை(jewelery)வைத்திருந்த பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர்.

[தொகு] மாங்கனி நிகழ்வு

ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு அடியார் ஒருவர் வந்தணைந்தார். அவரை வரவேற்ற அம்மையார் அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறிய அம்மையார்,சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார்."மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே " அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவனுக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார்.  அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார் . உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தான். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களுட் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றான்

காரைக்கால் அம்மையார் திருக்கோயில்

[தொகு] பெறுதற்கரிய பேய் வடிவு பெறுதல்

பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையார் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.

[தொகு] கயிலாயம்

அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க "நம்மைப் பேணும் அம்மை காண்" எனக் கூறி "அம்மையே வருக" என்றழைத்து "வேண்டுவன கேள்" என விளித்தார்,அதற்கு அம்மையார் "பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்" என்றார். பின்னும் தான் என்றும் நின் திருவடிக் கீழ் இருக்க வேண்டும் என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அவருக்கு முக்தியளித்துத் தன் திருவடிக் கீழிருக்கப் பணித்தார்.

[தொகு] எழுதியுள்ள நூல்கள்

காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே இணைந்து "காரைக்கால் அம்மையார்" என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

[தொகு] இறைவனின் பெயர்கள்

தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன். ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் எங்கும் காணப்படுகிறது.

ஆடற்பெருமானையே அவர் முழு முதலாகக் கருதி வழிபட்டாலும், தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயர் அவரால் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

[தொகு] வெளி இணைப்பு

நாயன்மார்கள் Tamil Om4.JPG
அதிபத்த நாயனார் | அப்பூதியடிகள் நாயனார் | அமர்நீதி நாயனார் | அரிவாட்டாய நாயனார் | ஆனாய நாயனார் | இசைஞானியார் நாயனார் | இடங்கழி நாயனார் | இயற்பகை நாயனார் | இளையான்குடி மாறநாயனார் | உருத்திர பசுபதி நாயனார் | எறிபத்த நாயனார் | ஏயர்கோன் கலிக்காம நாயனார் | ஏனாதி நாத நாயனார் | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | கணநாத நாயனார் | கணம்புல்ல நாயனார் | கண்ணப்ப நாயனார் | கலிய நாயனார் | கழறிற்றறிவார் நாயனார் | கழற்சிங்க நாயனார் | காரி நாயனார் | காரைக்கால் அம்மையார் | குங்கிலியக்கலய நாயனார் | குலச்சிறை நாயனார் | கூற்றுவ நாயனார் | கலிக்கம்ப நாயனார் | கோச் செங்கட் சோழ நாயனார் | கோட்புலி நாயனார் | சடைய நாயனார் | சண்டேஸ்வர நாயனார் | சத்தி நாயனார் | சாக்கிய நாயனார் | சிறப்புலி நாயனார் | சிறுத்தொண்ட நாயனார் | சுந்தரமூர்த்தி நாயனார் | செருத்துணை நாயனார் | சோமாசிமாற நாயனார் | தண்டியடிகள் நாயனார் | திருக்குறிப்புத் தொண்ட நாயனார் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் | திருநாவுக்கரசு நாயனார் | திருநாளைப் போவார் நாயனார் | திருநீலகண்ட நாயனார் | திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் | திருநீலநக்க நாயனார் | திருமூல நாயனார் | நமிநந்தியடிகள் நாயனார் | நரசிங்கமுனையரைய நாயனார் | நின்றசீர் நெடுமாற நாயனார் | நேச நாயனார் | புகழ்ச்சோழ நாயனார் | புகழ்த்துணை நாயனார் | பூசலார் நாயனார் | பெருமிழலைக் குறும்ப நாயனார் | மங்கையர்க்கரசியார் நாயனார் | மானக்கஞ்சாற நாயனார் | முருக நாயனார் | முனையடுவார் நாயனார் | மூர்க்க நாயனார் | மூர்த்தி நாயனார் | மெய்ப்பொருள் நாயனார் | வாயிலார் நாயனார் | விறன்மிண்ட நாயனார்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்_அம்மையார்&oldid=987802" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்