உள்ளடக்கத்துக்குச் செல்

வித்தியாரம்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயதசமி அன்று குழந்தைக்கு கல்விச் சடங்கு செய்யும் மலையாளிகள்

வித்தியாரம்பம் அல்லது குழந்தைக்கு கல்விச் சடங்கு (Vidyarambham ( சமசுகிருதம் : विद्यारम्भम्) என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கருநாடகம் போன்ற பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புறக் கலை போன்றவை கற்பிப்பது துவக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் விழாவை உள்ளடக்கியது. [1] தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்று அழைக்கின்றனர். ஒடிசாவில் இது காதி சுவான் (ஒடியா : ଖଡ଼ିଛୁଆଁ ) அங்கு இது குறிப்பாக விநாயக சதுர்த்தி மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. [2]

விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும், இறுதி நாளுமாகும், இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கற்றலின் துவக்க விழாவானது ஆயுத பூஜை சடங்குடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. வழக்கமாக விஜயதசமி நாளில்தான் பூஜைக்காக வைக்கப்பட்ட கருவிகள் மீண்டும் பயன்படுத்தப்பாட்டுக்கு எடுக்கப்படுகின்றன. கல்வி தெய்வமான, சரசுவதி மற்றும் ஆசிரியர் (குரு) ஆகியோருக்கு குரு தட்சணை கொடுத்து மரியாதை செய்ய வேண்டிய நாளாக இது கருதப்படுகிறது. குருதட்சிணையானது வழக்கமாக வெற்றிலை, பாக்கு, சிறிது பணம், ஒரு புதிய துண்டு - ஒரு வேட்டி அல்லது சேலை ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும். [3]

வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்") கோயில்களிலும் வீடுகளிலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளைக் கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம் .

எழுதத் துவக்கும் சடங்கின்போது பொதுவாக மந்திரத்தை எழுதித் துவங்கப்படுகிறது. குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது ஓம் நமச்சிவாய என்றோ ஓம் நமோ நாராயணாய என்றும் துவங்குவதும், சைனர்கள் ஓம் ஜிநாயநம எனத் துவங்குவது வழக்கம் என்று உ. வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.[4]

இந்தச் சடங்கின்போது ஒரு குருவின் முன்னிலையில், மந்திரமானது மணல் அல்லது அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் விரல் பிடித்து எழுதப்படுகிறது. பின்னர், குருவானவர் குழந்தையின் நாக்கில் மந்திரத்தைத் தங்கத்தைக் கொண்டு எழுதுகிறார். மணலில் எழுதுவது நடைமுறையைக் குறிக்கிறது. தானியங்களில் எழுதுவது அறிவைப் பெறுவதைக் குறிக்கிறது, இது செழிப்பைக் குறிக்கிறது. தங்கத்தைக் கொண்டு நாக்கில் எழுதுவது கல்விக் கடவுளின் அருளைக் குறிக்கிறது, இதன் மூலம் ஒருவர் உண்மையான அறிவுச் செல்வத்தை அடைவதாகக் கருதப்படுகிறது.

இப்போதெல்லாம், வித்யாரம்பம் விழாவானது அனைத்து சாதிகள் மற்றும் சமயத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. சடங்குகளில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. இந்தச் சடங்கு குறிப்பாகக் கோயில்களைத் தவிர கேரளம் முழுவதும் பல தேவாலயங்களிலும் செய்யப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Thiruvananthapuram gears up for Vidyarambham day". The Hindu. 2013-10-11. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/toddlers-make-a-beginning-with-divine-blessings/article344195.ece
  3. "Navratri rituals: Golu, Saraswati puja, Vidyarambham... : 4". The Deccan Chronicle. 2013-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  4. உ.வே. சா (2016). நல்லுரைக்கோவை. சென்னை: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம். p. 112.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாரம்பம்&oldid=3858565" இலிருந்து மீள்விக்கப்பட்டது