பெயர் சூட்டுதல்
பெயர் சூட்டுதல் (Namakarana) என்பது குழந்தைக்கு பெயர் வைக்கும் இந்து சமய சடங்காகும். தற்காலத்தில் பெயர் சூட்டுதல் விழாவாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த சடங்கினை நாமகரணம் என்ற வடமொழி வழக்கிலும் அழைக்கின்றனர். இச்சடங்கு முறை சாதி, சமூக மற்றும் புவியியல் சார்ந்து நடைமுறைகள் வேறுபடுகின்றன.
இலங்கையில் பெயர் சூட்டல்
[தொகு]பூமியிலே பிறக்கும் குழந்தைக்கு முதன் முதலில் நடத்தப்படும் கிரியை “நாமகரணம்”. 31 நாட்கள் வரை குழந்தையை வெளியே கொண்டு செல்லலாது 31ஆம் நாள் ஆசௌச கழிவு நடத்தப்படும். இதனை 31ஆம் நாள் துடக்குக் கழிவு என்றும் சொல்வர். 31ஆம் நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு, வாசலில் நிறைகுடம் வைத்து விளக்குகள் வைக்கப் படும். குழந்தைக்கு அன்று முடியை இறக்கி நிராட்டி புத்தாடை அணிவர். வேதியரை அழைத்து அவர் முன்னிலையில் பின்வருவன நடைபெறும்.
தேவையான பொருட்கள்
[தொகு]நிறைகுடம் (நீர் நிரம்பிய குடம்), முடியுடன் தேங்காய், மாவிலை 5, தலைவாழையிலை அல்லது தாம்பாளம், நெல் அல்லது பச்சை அரிசி, குத்துவிளக்கு, எண்ணெய், திரி, பூமாலை, விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர்த் தட்டத்தில் வைக்கவும். பிள்ளையார் மஞ்சளில் பிடித்து வைக்கவும். கற்பூரம், கற்பூரத் தட்டு, ஊதுபத்தி, சாம்பிராணி, சாம்பிராணித்தட்டு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம் ஒரு தட்டில் வைக்கவும். பழத்தட்டு, பூத்தட்டு, பால், கற்கண்டு, அறுகம்புல், மாவிலை.
நிகழ்வு
[தொகு]வீட்டுப் பொருட்கள், உடைகள், உபயோகிக்கும் பொருட்கள் யாவும் சுத்தம் செய்தபின், வீட்டில் உள்ளோர் குழந்தை உட்பட யாவரும் தோய்ந்து சுத்தமாகிய பின் வேதியரை அழைத்து வந்து புண்ணியவாசனம் செய்வர். மந்திரம் ஓதிய நீரை அங்குள்ளோர் மீதும் மனை ஏனைய பொருட்கள் மீதும் தெளிப்பது வழக்கம். துடக்குக் கழிந்த பின் பெயர் சூட்டுதல் மரபாகும். வேதியர் குழந்தையின் நட்சத்திரத்தைக் கூறிப் பூசை செய்தபின்னர் தாய்மாமன் அல்லது பெரியவர் ஒருவர் மடியில் குழந்தையை இருத்தி, அதன் பெயரை வலது காதிலே மூன்று முறை ஓதி கற்கண்டு தண்ணீர் பருகுவர். குழுமியிருப்போருக்கும் இனிப்புப் பானம் வழங்கப்படும். இதன் பொருள் வம்சத்தில் தோன்றியுள்ள குழந்தை இறைவன் அருளால் பெயரும் வாழ்வும் பிரகாசிக்க வேண்டும் என்பதாகும். அதன்பின்பு இனபந்தங்கள் குழந்தையின் பெயரை ஓதுவார்கள்.