உள்ளடக்கத்துக்குச் செல்

சாலமோனின் ஞானம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞானம் பெண்ணாக உருவகிக்கப்பட்ட படிம ஓவியம். காலம்: சுமார் 17ஆம் நூற்றாண்டு.

சாலமோனின் ஞானம் (Book of Wisdom) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்[1]. இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

பெயர்

[தொகு]

சாலமோனின் ஞானம் என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் sofía solomóntos (Σοφία Σολομώντος) எனவும் இலத்தீனில் Sapientia என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்நூல் இணைத் திருமுறை விவிலிய நூல் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. இந்நூலின் மூல பாடம் (செப்துவசிந்தா) [2] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது.

உள்ளடக்கம்

[தொகு]

சாலமோனின் ஞானம் என்னும் இந்நூல் சாலமோனைப் பற்றிய சில மறைமுகக் குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண்க: 8:9-15; 9:7,8,12), காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி. பாலசுத்தீனத்துக்கு வெளியே, எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவில் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம் பெற்றிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாலசுத்தீனத்துக்கு வெளியே வாழ்ந்துவந்த யூதர்களுள் சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்டதோடு, யூத மறையைவிடக் கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறான எண்ணத்தால் தூண்டப்பெற்று யூத மறையைக் கைவிட்டனர்.

இவர்கள் யூத மறைக்கு மனம் மாறி வர அழைப்பு விடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில், யூதக் கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்; கிரேக்கருடைய சிலைவழிபாடு மடமை என்று அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர்மீது அச்சம் கொள்வதே - அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதே - உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டி, யூத மறையைத் தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார்.

கிரேக்கருக்கும் கிரேக்கச் சூழலில் வாழ்ந்துவந்த யூதருக்கும் யூதநெறிக் கோட்பாடுகளை விளக்க எழுந்த இந்நூலில் கிரேக்க மெய்யியல், நடை, சொல்லாட்சி முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன.

முழு நூலும் இனிய கவிதை நடையில் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதி (அதிகாரங்கள் 10-19), யூதப் போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்க் முறையான "மித்ராஷ்" என்னும் இலக்கிய வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கிறித்தவப் பார்வையில் சாலமோனின் ஞானம் நூல்

[தொகு]

ஞானம் ஆளாக, குறிப்பாக, ஒரு பெண்மணியாக, இந்நூலில் உருவகிக்கப்படுகிறது. எபிரேய மொழியிலும் கிரேக்க மொழியிலும் "ஞானம்" என்பதற்கு இணையான சொல் பெண்பால் சார்ந்ததே. ஞானத்துக்கு இணையான எபிரேயச் சொல் Ḥokmot (חכמות); கிரேக்கச் சொல் Sophia (Σοφíα); இலத்தீனில் Sapientia. இவை அனைத்தும் பெண்பாற் சொற்களாகும்.

இவ்வாறு ஆள்நிலை கொண்ட ஞானம் கடவுளுக்குரிய பண்புகளையும் கொண்டுள்ளது.


"ஞானம் - ஆற்றல் கொண்டது.
அவ்வாற்றல் அறிவுடையது;
மனித நேயம் கொண்டது...
ஞானம் கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி;
எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து
எழும் தூய வெளிப்பாடு (சாலமோனின் ஞானம் 7:22-35).

மேலும் ஞானம் "கடவுளுடைய செயல்களைத் தேர்வுசெய்கிறது" (8:4). "ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்" (7:26). இப்பண்புகள் எல்லாம் கடவுளுக்கு உரியவை என்னும் விதத்தில் அவற்றைக் கிறித்தவம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்றி உரைக்கிறது. எபிரேயருக்கு எழுதிய திருமுகம் இதைத் தெளிவாகக் கூறுகிறது: "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இறைமகன் தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்" (எபி 1:3).

ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் உள்ளார் என்னும் கொள்கை கிறித்தவத்துக்கு அடிப்படையானது. அதுவும் உருவகமாக சாலமோனின் ஞானம் நூலில் உள்ளது:


நீர் ஞானத்தை அருளாமலும்,
உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை
அனுப்பாமலும் இருந்தால்
உம் திட்டத்தை யாரால் அறிந்துகொள்ள இயலும்?"

ஞானம் என்பது கடவுளின் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கும், தூய ஆவி கடவுளின் வல்லமையாக நமக்கு வழங்கப்படும் கொடையாகிய ஆவியாருக்கும் உருவகம் என்பது கிறித்தவப் பார்வை.

இயேசு கிறிஸ்து மனிதரின் பாவங்களுக்காகத் துன்புற்று இறந்ததை முன்னறிவிக்கும் வகையிலும் இந்நூலில் பல குறிப்புகள் உள்ளன. இறைப்பற்றில்லாதவர்கள் நேர்மையாக வாழ்வோரைச் சாவுக்குத் தீர்ப்பிட எண்ணுகிறார்கள் (2:20). "நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்" என்று கூறி இறைப்பற்றில்லாதவர்கள் ஏளனம் செய்கிறார்கள் (2:18). இக்கூற்றுகள் இயேசுவுக்குப் பொருத்தி உரைக்கப்படுகின்றன.

நூலிலிருந்து ஒரு பகுதி

[தொகு]

சாலமோனின் ஞானம் 5:8-13)


"இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன?
செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன?
இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின;
புரளி போல விரைந்து சென்றன.
அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது.
அது சென்ற தடத்தை யாரும் காண முடியாது;
அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை...
இவற்றைப் போன்றதே நம் நிலையும்!
நாம் பிறந்தோம்; உடனே இறந்துபட்டோம்."

உட்பிரிவுகள்

[தொகு]
பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. ஞானமும் மனிதரின் முடிவும் 1:1 - 5:23 69 - 75
2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி 6:1 - 9:18 75 - 82
3. மீட்பு வரலாற்றில் ஞானம் 10:1 - 19:22 82 - 101

ஆதாரங்கள்

[தொகு]
  1. சாலமோனின் ஞானம்
  2. செப்துவசிந்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலமோனின்_ஞானம்_(நூல்)&oldid=4041134" இலிருந்து மீள்விக்கப்பட்டது