விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பேராசிரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்து வரும் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிலரைப் பற்றிய அறிமுகம்.

செங்கைப் பொதுவன்[தொகு]

Wikipedia WikimeetupChennai2 14Nov2010 0944.jpg

செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.

செல்வா[தொகு]

Selva IWPSD.jpg

செல்வா என்று அழைக்கப்படும் செ. இரா. செல்வக்குமார், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பின்னர் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய ஆய்வுத்துறை குறைக்கடத்திக் கருவிகள் நுட்பம் பற்றியது. மே 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் (இதுவரை ஏறத்தாழ 800 கட்டுரைகள்), உரைதிருத்தம், படங்கள் உருவாக்குதல், இணைத்தல், தமிழ்விக்கி கொள்கை, நடை பற்றிய உரையாடல்களில் பங்களித்தல் முதலான பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். கலைச்சொற்கள் ஆக்கித் தருவதிலும், விக்கிப்பீடியர்களுக்கு ஊக்கம் தந்து உதவுவதிலும் ஆர்வம் காட்டுகின்றார். கனடாவில் விக்கிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், பொதுவாக இணைய உலகில் விக்கிப்பீடியாவின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தல் முதலான பணிகளிலும் ஈடுபடுகின்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு நடத்திய விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியை உருவாக்குவதற்கும், நடுவர்கள் தேர்வுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

நந்தகுமார்[தொகு]

Nandakumar.jpg

நந்தகுமார் தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்தவர். தற்பொழுது பேராசிரியராக சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (குவாங்சௌ, சீனா) பணியாற்றி வருகிறார். கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் இணை பேராசிரியராகவும் உள்ளார். முன்பு லுண்ட் பல்கலைக்கழகம், உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராக இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் லுண்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2011 ஜனவரி முதல் பங்களித்து வருகிறார்; ஏறத்தாழ 200 உயிரிவேதியியல் மற்றும் மருத்துவத் துறைசார் கட்டுரைகள் எழுதியுள்ளார். அஃப்ளாடாக்சின், அகநச்சு, அமினோ அமிலம் (புரதமாக்குபவை), கரோலின்ஸ்கா மையம், கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா, கிளைசின், சிட்ரிக் அமில சுழற்சி, நோய் மாதிரி, யூரியா சுழற்சி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்சனரியிலும் உயிர்வேதியியல் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்து வருகிறார்.

பவுல் லியோன் வறுவேல்[தொகு]

முனைவர் பவுல் லியோன் வறுவேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திட்டுவிளை என்னும் ஊரில் பிறந்தவர். நாகர்கோவில், உரோமை நகர், நியூயார்க் ஆகிய நகர்களில் கல்விபயின்று கிறித்தவ இறையியலில் முனைவர் பட்டமும், மெய்யியலில் பேராசிரியர் நிலையும் பெற்று, திருச்சிராப்பள்ளி தூய பவுல் இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தற்போது நியூயார்க் மாநிலத்திலுள்ள பஃபலோ நகரில் கிறித்து அரசர் இறையியல் கல்லூரியில் பேராசிரியராகச் செயல்படுகின்றார். இவரது ஆர்வத்துறைகள் கிறித்தவ இறையியல், மெய்யியல் கோட்பாடுகள், சமூகவியல், தமிழ் இலக்கியம், சமயமும் சமூகமும் முதலியனவாம். 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் நடுவராகப் பங்கேற்க முன்வந்த இவர், செல்வா அளித்த ஊக்கத்தை ஏற்று, மார்ச்சு 30, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: இயேசுவின் உயிர்த்தெழுதல், சிலுவைப்பாதை, தமிழ் விவிலியம், எஸ்தாக்கியார் நாடகம், துக்கப்பாட்டு, நற்செய்தி, கிறித்தவ இறைவேண்டல்கள், ஒத்தமை நற்செய்திகள், கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை, செப்துவசிந்தா, இறையியல், கிறித்தவ இறையியல், உடன்படிக்கை (விவிலியம்), தமிழ் நடை. மேலும், இயேசு கிறித்து, கிறித்துமசு, சென்னை சாந்தோம் தேவாலயம். விக்கிமூலத்தில் திருவிவிலியம் முழுவதையும் ஒவ்வொரு நூலாகப் பதிவேற்றிவருகின்றார்.

பேராசிரியர். வி. கிருஷ்ணமூர்த்தி[தொகு]

Profvk-thumb.JPG

பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணிதம், ஆன்மிகம் முதலிய தலைப்புகளில் 2007ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இடவியல், வரிசைமாற்றம், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், வைணவம் கட்டுரைகள் போன்று ஆழமான நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை இவர் விக்கிக்கு அளித்துள்ளார். இவர் பிர்லா அறிவியல் நுட்பவியல் கழகம் (BITS பிலானி), அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியராக இருந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எல்லோரும் ஏன் பங்களிக்க வேண்டும் என விக்கி பட்டறைக்கு அவர் வழங்கிய உரையை இங்கு படிக்கலாம்.

மகிழ்நன்[தொகு]

MakizNan3-cropped.JPG

மகிழ்நன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள மேலக்கால் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில் நுட்பவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் வெண்டை மஞ்சள் நரம்பு தீ நுண்மத்தில் ஆய்வுப் பட்டமும், இசுரேல், பெட்-தேகன், வல்கானி மையத்தில் தக்காளி இலை சுருட்டு தீ நுண்மத்தில் ஆய்வும், இசுரேல், ரேகொவாட், வைசுமன் மையத்தில் மூளை புற்றுநோய் குருத்தணுக்கள் குறித்த ஆய்வும் செய்துள்ளார். தற்பொழுது மூளையில் காயங்களினால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் மூலக்கூற்று உயிரியல், மரபியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல ஆழ்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். கணிமி, டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி, பக்டிரியல் படிவாக்கம், செமினிவிரிடீ, வெசுட்டர்ன் படிவு ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.