உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்து வரும் சிலரைப் பற்றிய அறிமுகம்.

ச. உமாகாந்தன்

பயனர்:Uksharma3

பயனர்:Uksharma3 (எஸ். எஸ். உமாகாந்தன்) சென்னையைச் சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துள்ளார். பள்ளிக் கல்வியை இலங்கை யாழ்ப்பாணத்திலும், பட்டப்படிப்பை 1964 ஆம் ஆண்டில் திருச்சியிலும் பெற்றார். இலங்கை அஞ்சல் துறையில் வானொலித் தந்தியாளராக பணியாற்றினார். கொழும்பு நகரில் ஊடகத்துறை பயிற்சி பெற்று இலங்கை தமிழ்/ஆங்கில பத்திரிகைகள், தமிழக இதழ்கள், இலங்கை வானொலி, சென்னை வானொலி, வெளிநாட்டுத் தமிழ்/ஆங்கில வானொலி ஒலிபரப்புகளிலும் பங்களிப்புகள் செய்துள்ளார். தமிழ் ஒலி என்ற வானொலி ஒலிபரப்புகள் தொடர்பான இதழை 1980களில் வெளியிட்டார். நெதர்லாந்து வானொலியின் ஆங்கில ஒலிபரப்பு 1990 ஆம் ஆண்டு நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். ஜெர்மன் வானொலியின் ஒலிபரப்பு அலைவரிசைக் கண்காணிப்பாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக செஞ்சிலுவை கமிட்டியில் (ஐ.சி.ஆர்.சி) பரப்புரை செயலாளர், ஊடக தொடர்பாளர், தமிழ்⇔ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணிகளில் 10 ஆண்டுகள் பல்வேறு நகரங்களில் பணியாற்றினார். பின்னர் வலைதளங்கள் வடிவமைக்கும் பயிற்சி பெற்று 7 ஆண்டுகள் வலைதள வியாபாரம் செய்து வந்தார். 2012 ஆம் ஆண்டு எல்லாப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றபின் தமிழ்/ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார்.

கோ. தாமோதரன்

தாமோதரன் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆகத்து 2018 முதல் பங்களித்து வருகிறார். இவர் நபர்கள் தொடர்பான கட்டுரைகளை அதிகமாக எழுதி வருகிறார். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்துமுள்ளார். உத்தவ் தாக்கரே, துஷ்யந்த் சவுதாலா, தேஜஸ்வி யாதவ், கே. டி. ராமராவ், ரேவந்த் ரெட்டி ஆகியவை இவரால் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளாகும்.

ராஜசேகர்

சுப. இராஜசேகர், 2011ஆம் ஆண்டு ஆங்கில விக்கிப்பீடியாவிலும், 2013ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவிலும் இணைந்தார். 2016ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் மொழிபெயர்ப்பு, கட்டுரையாக்கம், பராமரிப்புப் பணிகளில் பங்களித்து வருகிறார். 1,400 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியும், சுமார் 12,000 தொகுப்புகளையும் செய்து வருகிறார். சிந்துவெளி நாகரிகம், முகலாயப் பேரரசு, உரோமைப் பேரரசு, அக்பர், சிவாஜி (பேரரசர்), அசோகர், பேரரசர் அலெக்சாந்தர், முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் சிட்டுக் குருவி ஆகியவை இவர் பங்களித்த சில குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும். விக்கித் திட்டம் மங்கோலியர் இவர் பங்களித்த விக்கித் திட்டம் ஆகும்.

கிருஷ்ணானந்தலிங்கம் பிரஷாந்

கிருஷ்ணானந்தலிங்கம் பிரஷாந், யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் பொறியியல் இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இலங்கை ராசரட்டைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ள இவர், தற்போது, பின்லாந்தின் ஓலு நகரிலுள்ள ஓலு பல்கலைக்கழகத்தில் கம்பியில்லாத் தொலைத்தொடர்புப் பொறியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் அக்டோபர், 2010 முதல் பங்களித்து வருகிறார். பொதுவாக வரலாறு மற்றும் அறிவியல் துறைகளில் கட்டுரைகளை உருவாக்கியுள்ளதோடு உரைதிருத்தங்களும் செய்து வருகிறார். விக்கித்திட்டம் சமணம் துவங்கிப் பங்களித்துவருகிறார். எகிப்தியக் கோவில்கள், உருசியா, கோதுமை, பிரசெல்சு, சிங்க மனிதன், குய்வா த லாசு மானோசு மற்றும் சூவே குகை என்பன இவர் குறிப்பிடத்தக்க பங்களித்த கட்டுரைகளாகும்.

பிச்சைமுத்து மாரியப்பன்

சத்திரத்தான்

திருநெல்வேலி மாவட்டம் வி. எம். சத்திரத்தினைப் பிறப்பிடமாய் கொண்ட பிச்சைமுத்து மாரியப்பன் (சத்திரத்தான்) தற்பொழுது தஞ்சாவூரில் வசித்துவருகிறார். பள்ளி, கல்லூரிக் கல்வியினை பாளையங்கோட்டையில் பயின்ற இவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக உள்ளார். தமிழ் நாளிதழ்களில் அறிவியல் கட்டுரைகள் பல எழுதியுள்ள இவர், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிப்பீடியா பயிலரங்கம் ஒன்றின் மூலம் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். இதுவரை விக்கிப்பீடியாவில் 2732 பக்கங்களை உருவாக்கிய இவர் விக்கிப்பீடியாவின் விக்கிமூலம், விக்கிமீடியா பொதுவகம், விக்கியினங்கள் உள்ளிட்ட பிற திட்டங்களிலும் பங்களித்ததோடு ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். விலங்கியல் கட்டுரைகளை உருவாக்கத்தினை முதன்மையாகக் கொண்டாலும் அனைத்து துறைகளிலும் விக்கிப்பீடியாவில் பக்கங்களை உருவாக்கியும் கட்டுரைகளை மேம்படுத்தியும் உள்ளார். இவரது விக்கிப்பீடியா பங்களிப்புகளில் சில: இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள், தேசிய வேளாண் அறிவியல் கழகம், சோலி சொராப்ஜி, பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம், மரபணு மாற்றப்பட்ட சுண்டெலி, 2021 சுயஸ் கால்வாய் வழித்தடை, சக மதிப்பாய்வு, கூகுள் இசுகாலர், கருவுறுதல் சோதனை.

இரா. இளங்கோ

இரா. இளங்கோ
இரா. இளங்கோ

இரா. இளங்கோ திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிறப்பிடமாய்க் கொண்டு வசித்து வரும் இவர் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார். ஆயிரத்திற்கும் அதிகமான திருத்தங்களைக் கைப்பேசிவழியே தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார். மேல்விக்கியில் மூவாயிரத்திற்கும் மேல் பக்கங்களை மொழிபெயர்த்துள்ள இவர் விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

சா அருணாசலம்

சா. அருணாசலம் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு முதுகலை வணிக மேலாண்மை படித்த பின்னர் 2015 முதல் 2022 வரை தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றினார். 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திலிருந்து விவசாயம் சார்ந்த குலதொழிலில் ஈடுபடுகிறார். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் நாளிலிருந்து விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். இவர் நபர்கள் மற்றும் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்கியும், ஒரு சில கட்டுரைகளை உருவாக்கியும் வருகிறார். இதுவரை நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். பிறைசூடன், தீபன் சக்ரவர்த்தி, காளிதாசன், காமகோடியன், கல்லாப்பெட்டி சிங்காரம், அவினாசி மணி, குருவிக்கரம்பை சண்முகம், பெ. அமுதா, இலாவண்யா சுந்தரராமன், ச. கல்யாணசுந்தரம், மணிமாலா ஆகியவை இவரால் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளாகும்.

காந்திமதி

சு.காந்திமதி தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். அரசு பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.யோகா, உடற்பயிற்சி, பள்ளிப்பணி என திட்டமிட்டு நேரத்தைச் செலவிடும் காந்திமதி கிடைக்கும் குறைந்த ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாத் திட்டங்களில் பங்களிப்பு செய்கிறார். விக்கிமூலத்தில் சுமார் 1700 தொகுப்புகளும், விக்கித்தரவில் சுமார் 1300 தொகுப்புகளும் செய்துள்ள காந்திமதி விக்கிப்பீடியாவில் வேங்கைத்திட்டம் 2.0 போட்டி, விக்கி மகளிர் நலம், விக்கிப் பெண்களை நேசிக்கிறது 2020 போன்ற திட்டங்களில் பங்கேற்று முக்கிய பங்காற்றியவர்.

பாத்திமா ரினோசா

பாத்திமா ரினோசா 2019 ஆம் ஆண்டு நடந்த புதுப்பயனர் போட்டியின் மூலம் விக்கிக்கு அறிமுகமானவர். வேங்கைத் திட்டம் 2.0, ஆசிய மாதம் 2019, விக்கி பெண்களை நேசிக்கிறது ஆகிய திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். வேங்கைத்திட்டம் 2.0 இல் இந்திய அளவில் முதலிடம் பெற்ற பெண் ஆவார். அப்போட்டியில் இந்திய அளவில் பத்தாவது இடத்தை பெற்றவர். உயர் தேசிய பட்டயம் கற்கும் மாணவியான இவர் இலங்கையில் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர்.

இவர் எழுதிய கட்டுரைகளில் சில : மூலக்கூற்று படியாக்கம், தாவர நோயியல், நொறுங்கு விண்மீன், சதிர்க்குரு, பரு, திமிங்கில எண்ணெய், செம்புள்ளி தொற்றுநோய்.

வசந்த லட்சுமி

வெ. வசந்த லட்சுமி 2018 இல் நடைபெற்ற வேங்கைத் திட்டம் 1.0 திட்டத்தின் மூலம் விக்கிக்கு அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற புதுப் பயனர் போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். இவர் தொடர்ந்து விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாகப் பங்களித்து வருகிறார். கணிதத்தில் முதுகலை பட்டதாரியான இவர் தமிழ்நாடு, சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர். அண்மையில் நடைபெற்ற வேங்கை திட்டப்போட்டியிலும் முன்னணிப் பங்களிப்பாளராக விளங்கியுள்ளார்.

பாலசுப்ரமணியன்

ஸ்ரீபாலசுப்ரமணியன் 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புதுப்பயனர் போட்டி மூலம் தமிழ் விக்கிக்கு அறிமுகமாகி அப்போட்டியில் முதலிடம் பெற்றவர். இவர் தொடர்ந்து விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாகப் பங்களித்து வருகிறார். தமிழ்நாடு, சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வித்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். அண்மையில் நடைபெற்ற வேங்கை திட்டப்போட்டியிலும் முன்னணிப் பங்களிப்பாளராக விளங்கினார்.

நா. ரெ. மகாலிங்கம்

நா. ரெ. மகாலிங்கம் 2017ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு நடைப்பெற்ற விக்கிப்பீடியா பயிற்சி மூலம் விக்கிக்கு அறிமுகமான இவர் விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாக பங்களித்துவருகிறார். தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவர் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக எழுதி வருகிறார்.

ஞா. ஸ்ரீதர்

ஞா. ஸ்ரீதர் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2017ல் மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி மூலம் விக்கிப்பீடியாவில் நுழைந்த ஸ்ரீதர் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பராமரிப்புப் பணிகளில் பங்களித்து வருகிறார். 2017-2018ம் ஆண்டு நடைப்பெற்ற வேங்கை திட்டப்போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். விக்கி திட்டங்களிலும் தொடர்ந்து தனது பங்களிப்புகளை நல்கி வருகிறார்.

கௌதம் சம்பத்

Gowtham Sampath
Gowtham Sampath

கௌதம் சம்பத் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். இவர் தற்போது சென்னையில் உள்ள ஐ. எப். எம். ஆர் என்னும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஓர் உழவரும் கூட! 2018 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பராமரிப்புப் பணிகளில் பங்களித்து வருகிறார். விக்கித்தரவு ஆகிய திட்டங்களிலும் பங்களிப்புகளை நல்கி வருகிறார். வல்லநாட்டு செட்டியார், தஞ்சாவூர் மராத்தி மொழி, பிரமலைக் கள்ளர், மாணிக்கம் தாகூர், இரவீந்திரநாத் குமார் முதலியவை இவர் பங்களித்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சில.

தமிழ்ப்பரிதி மாரி

Thamizhpparithi Maari
Thamizhpparithi Maari

முனைவர் தமிழ்ப்பரிதி மாரி தமிழ்நாட்டின் சின்னசேலத்தைச் சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2011 முதல் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். தொடர் பரப்புரை, ஊடகப் பங்களிப்புகள், விக்கிமேனியா, படிமங்கள் பதிவேற்றம் போன்ற களங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.

தமிழ் இணையக்கல்வி கழகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது தமிழக அரசு, அரசு சார் வெளியீடுகளை படைப்பாக்க பொதும உரிமையில் வெளியிடவும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் படைப்பாக்க பொதும உரிமையில் இணையத்தில் வெளியிடவும்,பக்க அடிப்படையில் 58 ஆம் இடத்தில் இருந்த தமிழ் விக்கி மூலத்தை எட்டாம் இடத்திற்குக் கொண்டு வரவும் பெரும்பங்களித்தவர். கட்டற்ற முறையில் ஒளிப்படங்கள், காண்பொலிகள், ஒலிக்கோப்புகள் போன்றவற்றை பொதுவகத்தில் பதிவேற்றியுள்ளார்.

செயற்கைக்கோள் வாயிலாக 40 ஆயிரம் மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியையும், தமிழ்நாட்டரசின் நிதியுதவிடன் 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவைகளைத் தொடங்கி அதன்மூலம் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியளித்துள்ளார். இலண்டன், மெக்சிகோ நகரம், இலெசினோ லாரியோ (இத்தாலி),  ஆகிய இடங்களில் நடந்த விக்கிமேனியா மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரையாற்றியுள்ளார்.

பாலாஜி

ஜெ. பாலாஜி, கோவையைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். இவர் 2011 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருபவர். தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம் மற்றும் விக்கித்தரவு ஆகிய திட்டங்களில் கூடுதல் பங்களிப்புகளை நல்கி வருகிறார். தமிழ் விக்கிமூலத்தில் முதன்மைப் பக்கத்தை மாற்றியமைத்து, மெய்ப்பு பார்ப்பதற்கான பல வார்ப்புருக்கள் மற்றும் கருவிகளை நிறுவியுள்ளார். இவரின் தானியங்கி பல துப்புரவுப் பணிகள் செய்யப் பயன்படுகிறது.

சீனிவாசன்

த. சீனிவாசன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பல கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குவதுடன் கட்டற்ற மென்பொருள் தத்துவம் குறித்த விழிப்புணர்வையும் கூட்டி வருகிறார். 2016ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் எழுத்துணரியையும் விக்கி மூலத்தையும் இணைக்க இவர் எழுதிய OCR4wikisource நிரல், இந்திய மொழிகளின் விக்கிமூலம் திட்டத்தில் ~9,00,000 பக்கங்களைச் சேர்க்க உதவியது. பொதுவகத்தில் படங்களை மொத்தமாகப் பதிவேற்றுதல், பல்வேறு விக்கி துப்பரவுப் பணிகள் செய்தல் என இவர் எழுதிய நிரல்கள் பயன் மிக்கவை. தமிழில் கட்டற்ற உரிமையில் தமிழக வரைபடங்கள், உரைதிருத்தி, உரை ஒலி மாற்றி ஆகியவற்றை உருவாக்க, ஆய்வுகளைச் செய்து வருகிறார். விக்கிமூலம் மற்றும் பிற திட்டங்களுக்கு இவரது பங்களிப்பைப் பாராட்டி, 2016ம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டுள்ளது.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

மதுரையைச் சேர்ந்த எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில், தேர்வுநிலை கூட்டுறவு தணிக்கை அலுவலராகப் பணியாற்றி, 2009-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர். பிப்ரவரி 2013 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கி, இந்திய வரலாறு, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பண்டைய அண்மை கிழக்கு, இந்திய அரசியல், இந்து சமயம், புவியியல், நடப்பு நிகழ்வுகள், ஆளுமைகள் தொடர்பாக 5,000 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் பங்களித்துள்ளார். ஒளிப்படங்களையும் விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றியுள்ளார். இவரது 11 கட்டுரைகள் விக்கிப்பீடியாவின் முதற்பக்கக் கட்டுரைகள் பகுதியிலும், 19 கட்டுரைகள் விக்கிப்பீடியாவின் உங்களுக்குத் தெரியுமா? பகுதியிலும் வெளிவந்துள்ளன.

அருளரசன்

கு. அருளரசன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்தவர். செப்டம்பர் 2014 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். கர்நாடக மன்னர் மரபினரான மேலைக் கங்கர், சாளுக்கியர், மேலைச் சாளுக்கியர், போசளர், இராஷ்டிரகூட மன்னர்கள், மைசூர் உடையார்கள் ஆகிய மன்னர்கள் பற்றியும் கிருட்டிணகிரி மாவட்டம் பற்றியும் முதன்மையாகப் பங்காற்றி 624 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

உலோ. செந்தமிழ்க்கோதை

சென்னையில் வாழும் உலோ.செந்தமிழ்க்கோதை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மின்பொறியாளர். பல களஞ்சியப் பணிகளிலும் கலைச்சொல் தொகுப்புகளிலும் பங்களித்தவர். 1960களில் இருந்தே அறிவியல் தமிழ்வளர்ச்சியில் ஈடுபட்டு வருபவர். தமிழ்நாடு மின்வாரியத் தொழில்நுட்ப அகராதியை உருவாக்கியவர். 2014 திசம்பர் முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறார். தமிழ் விக்‌சனரியில் 600க்கும் மேற்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறையுடன் இட்டுள்ளார். வானியல், மெய்யியல் தொடர்பான 160 அளவுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அறிவியலின் மெய்யியல், பியேர் அபேலார்டு, தியானோ, தொல்மரபியல், கார்னியாடெசு,அர்செசிலௌசு, கரோலின் எர்ழ்செல், நாம் ஆற்றுப் போர் முதலியன இவர் பங்களித்த கட்டுரைகளுள் சில.

யோகிசிவம்

தில்லை நாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட யோகிசிவம், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பம்மனேந்தலைச் சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013‎இலிருந்து விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். நில அளவை (தமிழ்நாடு), அயிரை மலை, ஆலம் ஆரா, திராவிடதேசம், பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர், எஸ். வி. சகஸ்ரநாமம், கே. முத்தையா போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.

பா. ஜம்புலிங்கம்

பா. ஜம்புலிங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், சூலை 2014 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்கி 250 கட்டுரைகள் எழுதியுள்ளார். விக்கித் திட்டம் சைவம் மூலம் கும்பகோணத்திலுள்ள கோயில்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தியுள்ளார். மகாமகம், நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (நூல்), சோழர்கள் (நூல்), சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம், இளைய மகாமகம் 2015, தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள், தேனுகா (எழுத்தாளர்), திருவூடல் ஆகியன இவர் எழுதிய கட்டுரைகளில் சில. தமிழர் அல்லாதோரும் தமிழின், தமிழ்நாட்டின் பெருமையை அறியவேண்டும் என்ற நன்னோக்கிலும் தமிழ் விக்கிப்பீடியா தந்த அனுபவத்திலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் மே 2015 தொடங்கி இதுவரை 100 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சக்திகுமார் லெட்சுமணன்

சக்திகுமார் லெட்சுமணன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகேயுள்ள சடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது கோவை சட்டக்கல்லூரியில் பயின்று வரும் இவர் ஓர் உழவரும் கூட! இவர் ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கி மேற்கோள்கள் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இந்திய வங்கிகள், கல்வி, திரைப்படங்கள் சார்ந்த தலைப்புகளில் ஆர்வம் உடையவர். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை ஓர் இலட்சமாக உயர்த்துவதை முதன்மை இலக்காகக் கொண்டவர். ஐடிபிஐ வங்கி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள், ராதா (நடிகை), இந்திய நினைவு நாணயங்கள், திரிஷ்யம் முதலிய கட்டுரைகளில் முதன்மையாகப் பங்காற்றியுள்ளார்.

கி. மூர்த்தி

கி. மூர்த்தி, தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். வேதியியல் பட்டதாரி. தமிழக அரசின் கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிகிறார். மொழியார்வம் மிக்க இவர் விடுமுறை நாள்களிலும் ஓய்வு நேரங்களிலும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறார். வேதியியல் தொடர்பான கட்டுரைகளில் முதன்மையாகப் பங்களித்து வரும் இவர், தமிழ், சதுரங்கம், வானியல் தொடர்பான கட்டுரைகளையும் எழுதிவருகின்றார். அசிட்டிக் நீரிலி, விக்டர் மேயர் உபகரணம், காலவரிசையில் வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு, யானைப் பற்பசை, மதராசியக் கலாச்சாரம், பெங்கோ திறப்பு, ஓயாமல் முற்றுகை, இந்திய விண்மீன் குழாம் போன்றவை இவர் பங்களித்துள்ள கட்டுரைகளில் சிலவாகும்.

மொஹம்மத் இஜாஸ்

மொஹம்மத் இஜாஸ் , இலங்கையில் உள்ள கண்டி உடத்தலவின்னையைச் சேர்ந்தவர். சனவரி 7 2014 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்பார்வையராகப் பணியாற்றி வருகிறார். புதுப்பயனர் வரவேற்பு, பகுப்பாக்கம் , விக்கி பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்.

நந்தினி

நந்தினி, சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர். சென்னையில் தனியார் மென்பொருள் தீர்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் 2013 ஆம் நடந்த தொடர் கட்டுரைப் போட்டியின் மூலம் விக்கிக்குள் நுழைந்தவர். இவர் அக்கட்டுரைப் போட்டியில் நான்கு பரிசுகளைப் பெற்றவராவார். முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கூடலில் பாராட்டுப்பத்திரம் பெற்றார். விக்கித்திட்டம் திரைப்படம் மற்றும் விக்கித் திட்டம் சைவம் ஆகியவற்றில் பங்களித்துவருகிறார். குவார்க்கு, கோலா, கித்தார், ஜேம்ஸ் குக், மைக்கல் ஜாக்சன் போன்றவை இவர் பங்களித்த முக்கிய கட்டுரைகளாகும்.

செம்மல்

செம்மல் (இறப்பு: 7 அக்டோபர் 2018), தஞ்சையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வைப்பகப் பணியாளர். தனித்தமிழ் இயக்கத்துடன் தொடர்புடைய இவர், திசம்பர் 2013 முதல் தமிழ் விக்கிப்பீடீயாவில் பங்களிக்கத் தொடங்கி 543 கட்டுரைகள் எழுதினார்; 10,000இற்கு அதிகமான தொகுப்புகளை செய்தார். இரா. இளவரசு, மார்க்கண்டேய கட்சு, ஆல்பர்ட் சுவைட்சர், வி. பொ. பழனிவேலன், சோபா டே, வி. சு. நைப்பால், நிகில் சக்கரவர்த்தி, சங்கமித்ரா முதலியவை குறிப்பிடத்தக்கவை. கட்டுரைகளில் உரை திருத்தம் செய்வதும் தமிழ் இலக்கணம் தொடர்பாக வழி காட்டுதலையும் தனது விருப்பப் பணிகளாகக் கொண்டிருந்தார்.

இராஜ்குமார்

இராஜ்குமார், அரியக்குடியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றுகிறார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். முழு அக எதிரொளிப்பு, மின்னழுத்தமானி, செம்மை நெல் சாகுபடி, கீற்று முடைதல், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் பட்டியல், இயக்கி, எதிரொளிப்பு, அலைநடத்தி, மாறுதிசை மின்சார இயக்கி ஆகிய கட்டுரைகளில் முதன்மையாக பங்காற்றியுள்ளார் .

சரவணன்

சரவணன் பெரியசாமி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சார்ந்தவர். உயிர்நுட்பவியலின் முதுகலை அறிவியலும், முதுகலை மேலாண்மையும் பயின்றவர். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் மனிதவள மேலாண்மைத்துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கியில் உரைத் திருத்தம், கட்டுரையாக்கம், போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.

தமிழ்க்குரிசில்

தமிழ்க்குரிசில், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சென்னையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். நிரலாக்கம், மொழியியல் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2012-ஆம் ஆண்டு முதல் கணிப்பொறியியல், மக்கள், புவியியல், மொழியியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுகிறார். கூகுள் குரல்வழித் தேடல், டெக்னோபார்க், திருவனந்தபுரம், ஸ்வரம் (நிரலாக்க மொழி), மராத்தியர், ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், கன்னட இலக்கிய மன்றம், இலங்கையின் இடப்பெயர்கள், கடலியல், இந்திய தேசிய நூலகம் ஆகியன இவர் எழுதிய கட்டுரைகளில் சில. உரை திருத்தம், புதுப்பயனர் வரவேற்பு, துப்புரவு, அடைக்காப்பக மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் பங்களித்து வருகிறார்.

சிவ கார்த்திகேயன்

சிவ கார்த்திகேயன் கும்பகோணத்தைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர். தற்போது சென்னையில் வாழ்கிறார். 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்குப் பங்களித்து வருகிறார். இவர் தொடங்கிய முக்கிய கட்டுரைகளாக குழந்தை, எரித மின்னஞ்சல், மனித நேயம், கும்பகோணம் மகாமக குளம், தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும், இருக்கைப் பட்டை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சென்னைப் பல்கலைக்கழகம், இந்திய படைத்துறையின் வரலாறு போன்ற கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைத் தந்துள்ளார். பிற தமிழ் விக்கிமீடியா திட்டங்களான விக்கிநூல்கள், விக்சனரி போன்றவற்றிலும் பங்கு பெறுகிறார்.

செல்வராசு

இரா. செல்வராசு, ஈரோட்டைச் சேர்ந்த வேதிப்பொறிஞர். அழகப்பர் நுட்பியல் கல்லூரியிலும் அமெரிக்காவில் உள்ள லூயிவில் பல்கலைக்கழகத்திலும் வேதிப்பொறியியல் துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, அமெரிக்காவில் உள்ள ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சூன் 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், உரை திருத்தம் முதலிய பங்களிப்புகளை நல்கி வருகிறார். அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் பற்றிய கட்டுரைகளிலும், குறிப்பாக வேதிப்பொறியியல், ஆற்றல் தொடர்பான கட்டுரைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் தொடங்கிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சில: பாறைநெய் தூய்விப்பாலை, இயற்கை எரிவளி, களிப்பாறை வளிமம், பிசுக்குமை, ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி, நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு.

பூங்கோதை

பூங்கோதை, கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் இவர், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த உரை திருத்துனரான இவர் புதுப்பயனர்களுக்கு உதவுவது, அனைத்து கட்டுரைகளையும் மேம்படுத்துவது முதலிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2012 தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியை முன்னிட்டு தமிழ் விக்சனரியில் 6000க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். 2012 விக்கிமேனியா நிகழ்வில் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது. இருபடிச் சமன்பாடு, பரவளைவு, சார்பு, நீள்வட்டம், அதிபரவளைவு முதலியன இவர் பெரிதும் பங்களித்த கட்டுரைகளில் சில.

ஜெகதீஸ்வரன்

ஜெகதீஸ்வரன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் பிறந்தவர். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் கதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் புதினம் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை, பேட்வுமன், பேட்கேர்ள் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளர். சோழர், பொன்னியின் செல்வன், பேட்மேன் என சில வார்ப்புருக்களை வடிவமைத்துள்ள இவர், விகடன் குழும இதழ்களின் அட்டைப் படங்களையும், பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் ஓவியங்களையும் பதிவேற்றியுள்ளார்.

தினேஷ்குமார் பொன்னுசாமி

தினேஷ்குமார் பொன்னுசாமி தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருளாளர். புனே நகரில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் நவம்பர், 2011 முதல் பங்களித்து வருகிறார். நிக் வோய்ச்சிச், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, பண்பலை, 100 (எண்), ஆள்கூற்று முறைமை, படிமப் பதிவு முறை, இரங்கநாதன் தெரு, நுபீடியா, அமலா பால், மீன் பிடித்தல் முதலியன இவர் பங்களித்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் சில. விக்கி பராமரிப்புப் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

கார்த்திக்

கார்த்திக், தமிழகத்தில் உள்ள இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர். பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மைசூர் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தற்போது ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில இருகலப்பாசிகளைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறார். பறவைகள், உயிரியல் தொடர்பாக ஆர்வமுள்ள இவர், மே 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஆகாயத்தாமரை, கடமா, பறவைகளின் தமிழ்ப் பெயர்கள், கழுதைப்புலி, புல்வாய், வரையாடு, கேழல்மூக்கன், சலீம் அலி ஆகியன இவர் முதன்மைப் பங்களித்த கட்டுரைகளில் சில.

இரா.முத்துசாமி

இரா. முத்துசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர். சென்னை, ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் என்ற ஆய்வுக்கூடத்தில் நூலகராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாக்களில் திசம்பர் 2011 முதல் பங்களித்து வருகிறார். திருவிளக்கு வழிபாடு, மூலிகைக் குடிநீர், ஈயம் பூசுதல், திருமயம் மலைக்கோட்டை, அத்தி மரச்சிலைகள், வைரப்பெருமாள் கதை, ரேக்ளா வண்டிப் பந்தயம், பவானி கைத்தறி தரை விரிப்பு, மரப்பாச்சி பொம்மைகள், கொலுசு, திருமண் முதலியன இவர் பங்களித்த முக்கிய கட்டுரைகளில் சில. விக்கிமீடியா காமன்சிலும், தமிழ் விக்சனரியிலும் பங்களித்து வருகிறார்.

நீச்சல்காரன்

நீச்சல்காரன், மதுரையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறு கருவிகள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் நிரல்கள் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும், புள்ளிவிபரங்கள் சேகரிக்கவும் இவரின் தானியங்கி பயன்படுகிறது.

அருணன் கபிலன்

அருணன், புதுச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். புகைப்படக் கலையிலும், ஆவணப்படங்கள் இயக்குவதிலும் ஈடுபாடு மிக்கவர். காந்தியம், தமிழ் மற்றும் தமிழர் மரபு, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் தொடர்பான பதிவுகளை விக்கிப்பீடியாவுக்கு அளித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றவர். பறம்புமலை பெருமுக்கல், ஆரோவில், சத்தியசோதனை ஆகியன இவர் உருவாக்கிய குறிப்பிடத் தகுந்த சில கட்டுரைகள்.

கி. கார்த்திகேயன்

கி. கார்த்திகேயன், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் கணினி மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார். சூன் 2010 முதல் தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பராமரிப்புப் பணிகளில் பங்களித்து வருகிறார். மேரி கோம், தாமஸ் பாரி, பாஸ் லினக்ஸ், தி ஸ்டோரி ஆஃப் இந்தியா, ஜி. ராமநாதன், கென் தாம்ப்சன், ஆரோக்கியசாமி பவுல்ராஜ், பள்ளிக்கரணை சதுப்புநிலம் முதலியவை இவர் பங்களித்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சில.

சசிக்குமார்

எஸ். ஆர். சசிக்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டமும், மதுரை காமராசர் பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்று, மதுரையில் உள்ள செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். மதுரைத் தமிழ், டைம்ஸ் சதுக்கம், ஜன் லோக்பால் மசோதா, திருமங்கலம் சூத்திரம், நோபல் பரிசு சர்ச்சைகள், இழிவான போர் (அர்ஜென்டினா), அவகாதரோவின் விதி முதலியவை இவர் தொடங்கிய முக்கியக் கட்டுரைகளில் சில. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடைய சசிக்குமார் தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிமீடியா காமன்சிலும் பங்களித்து வருகிறார்.

மதனாஹரன்

க. மதனாகரன், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திசம்பர் 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல் தொழினுட்பம், கணிதம், சதுரங்கம், துடுப்பாட்டம், மென்பொருள்கள் சார்ந்த துறைகளில் பங்களித்து வருகின்றார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் சில: ஈரசோனியச் சேர்மம், இறுதி முற்றுகை, கடவுச் சொல், முட்டாளின் இறுதி, பை மாறிலியின் அண்ணளவாக்கங்கள், மாலை மாற்று, உம்மைக் குறி. தமிழ் விக்சனரியிலும் மொழிபெயர்ப்பு விக்கியிலும் சிறிதளவில் பங்களித்து வருகின்றார்.

செல்வசிவகுருநாதன்

மா. செல்வசிவகுருநாதன் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் அக்டோபர் 2011 முதல் பங்களித்து வருகிறார். இசை, தமிழ்த் திரைப்படம், பொறியியல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். கட்டுரைகளில் தேவைப்படும் திருத்தங்களை செய்தல், கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் முதலிய பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

சண்முகம்

ப. சண்முகம், தமிழ்நாட்டில் உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரிவுகளும் மாவட்டங்களும், ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம், இன்சாட் செயற்கைக் கோள் முதலிய சில கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். புதுப்பயனர் வரவேற்பு, எரிதக் கண்காணிப்பு, பகுப்பாக்கம் போன்ற விக்கி பராமரிப்புப் பணிகளில் ஆர்வம் உள்ளவர். மொழிபெயர்ப்பு விக்கியிலும், மற்ற விக்கிமீடியா திட்டங்களிலும் அவ்வப்போது பங்களித்து வருகிறார்.

வாசு

வாசு, தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்தவர். பிட்ஸ், பிலானியில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். 2008 முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் கருநாடக இசை, படப்பிடிப்பு தொடர்பாக பங்களித்து வருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் மேளகர்த்தா இராகங்களின் படிமங்களையும் ஜன்னிய இராகங்களின் படிமங்களையும் சேர்த்திருக்கிறார். இவற்றைத் தவிர, பல வகையான ஒளிப்படங்களையும் விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றியுள்ளார்.

சிறீதரன்

சிறீதரன் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். தற்பொழுது புலம் பெயர்ந்து சிட்னியில் பணியாற்றுகிறார். மாஸ்கோ லுமும்பா, மற்றும் வட அயர்லாந்து குயின்சு பல்கலைக்கழகங்களில் ஒளி மின்னணுவியலில் முதுமாணிப் பட்டம் பெற்று மட்டக்களப்பு, யாழ், கொழும்பு, மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2006 சனவரி முதல் பங்களித்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் 2000 இற்கும் அதிகமான கட்டுரைகளை ஆரம்பித்து எழுதியிருக்கிறார். 365 நாட்களுக்கும் நாட்கள் வாரியாக வரலாறுகளை இற்றைப் படுத்தியமை, முதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் விக்கிசெய்திகளில் தொடர்பங்களிப்புகள் ஆகியவை இவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

ஸ்‌ரீகாந்த்

ஸ்‌ரீகாந்த், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர். தற்போது ஐதராபாத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். போக்குவரத்து, திறமூல, திற-தரவு சார்புடைய திட்டங்களில் ஆர்வம் மிக்கவர். 2010 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்பம் சார்ந்து பங்களித்து வருகிறார். மீடியாவிக்கி வழு மேலாண்மை, குறுந்தொடுப்பு, சில கருவிகளுக்கான நிரலாக்கம், தள அறிவிப்புகள் திட்டம், தமிழ் விக்கி ஊடகப் போட்டி, நரையம், இணைய எழுத்துரு நீட்சிகள் சோதனை முதலியவற்றில் ஈடுபட்டுள்ளார். விக்கிப்பீடியா பரப்புரையிலும் ஆர்வமுள்ள இவர், சென்னையில் நடந்த சில விக்கிப்பீடியா பட்டறைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

அஸ்வின்

அஸ்வின் குமார் .த சென்னையைச் சேர்ந்தவர். தற்போது இயந்திரப் பொறியியல் பயின்று வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏப்ரல் 22, 2011 முதல் பங்களித்து வருகிறார். மில்லெனியம் பூங்கா, மிச்சிகன் அவென்யூ (சிகாகோ), சிகாகோ பெருந்தீ போன்றவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் பகுப்பு உருவாக்கம், வார்ப்புரு பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தென்காசி சுப்பிரமணியன்

தென்காசி சுப்பிரமணியன், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் படிக்கும் தென்காசியைச் சேர்ந்த இயந்திரப் பொறியியல் மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 15 சூலை 2011 முதல் பங்களித்து வருகிறார். மயன் செங்கோண முக்கோண விதி, புடைநொடி ஆகிய படங்களை தமிழ் விக்கிப்பீடியாவுக்காக வரைந்திருக்கிறார். தமிழ் தொன்மவியல், தமிழர் வரலாறு, அண்டவியல், தமிழர் அறிவியல், சித்தரியல், நாகரிகங்கள், ஆயுதங்கள் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். குமரிக்கண்டம், தென்காசி பாண்டியர், பேரண்டத்தில் புவியின் அமைவிடம், சங்க கால வானியல், சித்தர்களின் அண்டவியல், இன்கா தகவல் பரிமாற்றம், பினாகா ஆகியவை இவர் அதிகமாக பங்களித்த கட்டுரைகளில் சில.

கார்த்திக் இராமானுஜம்

கார்த்திக் ராமானுஜம், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட மதுரை தமிழர். தற்பொழுது சிங்கப்பூரில் பொறியியலில் பட்ட மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார். 2007 ஆம் ஆண்டு ஆங்கில விக்கியில் தன் பணியை தொடங்கிய இவர், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். அறிவியல், சமயம், தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் சார்ந்த தலைப்புகளில் விருப்பமுடையவர். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: சிலம்பு, வாத்தலகி, ஹஜ், இந்து சமய மெய்யியலாளர்கள், ஹராம், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள், சிங்கப்பூரில் தமிழ் கல்வி, சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில். தற்பொழுது இந்திய நகரங்கள் குறித்த கட்டுரைகளை முன்னிலைப்படுத்தி எழுதி வருகிறார்.

கிருஷ்ணபிரசாத்

கிருஷ்ணபிரசாத், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த குடிசார் பொறியாளர் . தமிழ் விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 2011 முதல் பங்களித்து வருகிறார். பொறியியல், கணனி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கம், உரைதிருத்தம், வார்ப்புரு பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் செயல்பட்டு வருகிறார். குடிசார் பொறியாளர், ஊடக இயக்கி, தொடுதிரை, தாய்ப்பலகை, வரைவியல் முடுக்கி அட்டை, விக்கிமூலம், வான்கப்பல் போன்றவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை.

சிங்கமுகன்

லியோ ஆண்டனி என்ற இயற்பெயர் கொண்ட சிங்கமுகன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சிக் கழகம், கேரளாவில் முதுஆய்வு மாணவராக உள்ளார். பெப்ரவரி 2011 முதல் தமிழ் விக்கித்திட்டங்களில் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் நுண்ணுயிரியல், உயிரியல், தாவரங்கள் போன்ற துறைகளில் கட்டுரையாக்கம், உயிரியல் கலைச்சொல்லாக்கம் போன்ற பங்களிப்புகளை செய்து வருகிறார். நீலப்பச்சைப்பாசி, மிதவைவாழி, உயிர்வழிப்பெருக்கம், வங்கவராசி, பயறு, நுண்ணுயிர்த் தின்னி ஆகியவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் சில.

பார்வதிஸ்ரீ

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும், பெரியார் பலகலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், செம்பகராமன் பிள்ளை, ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆர்தர் சி. கிளார்க்‎, கப்ரேக்கர் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர். கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருகின்றார். பல ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பின் கணினித் துறையிலும் பணியாற்றியவர். தற்சமயம் இவர் மலேசிய நண்பன் நாளிதழின் ‘கணினியும் நீங்களும்’, ‘மாணவர் சோலை’ எனும் பகுதிகளுக்கு பொறுப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசிய நகரங்கள், நபர்கள், அமைப்புகள், வரலாறு, அரசியல், பள்ளிகள் ஆகியவற்றைவைப் பற்றி ஏறக்குறைய 150 கட்டுரைகளை எழுதியுள்ளார். சிபில் கார்த்திகேசு, ஈப்போ, பரமேசுவரா, கம்பார் நகரம், பேராக், தேசிய முன்னணி (மலேசியா). மலேசிய தமிழ்ப்பள்ளிகள், சுங்கை பட்டாணி போன்றவை அவற்றுள் சில.

நந்தகுமார்

நந்தகுமார் தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்தவர். தற்பொழுது பேராசிரியராக சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (குவாங்சௌ, சீனா) பணியாற்றி வருகிறார். கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் இணை பேராசிரியராகவும் உள்ளார். முன்பு லுண்ட் பல்கலைக்கழகம், உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராக இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் லுண்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2011 ஜனவரி முதல் பங்களித்து வருகிறார்; ஏறத்தாழ 200 உயிரிவேதியியல் மற்றும் மருத்துவத் துறைசார் கட்டுரைகள் எழுதியுள்ளார். அஃப்ளாடாக்சின், அகநச்சு, அமினோ அமிலம் (புரதமாக்குபவை), கரோலின்ஸ்கா மையம், கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா, கிளைசின், சிட்ரிக் அமில சுழற்சி, நோய் மாதிரி, யூரியா சுழற்சி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்சனரியிலும் உயிர்வேதியியல் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்து வருகிறார்.

சஞ்சீவி சிவகுமார்

thump
thump

சஞ்சீவி சிவகுமார் , இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக பிரதிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். காலநிலை மாற்றம், முதியோர் சுகாதாரம், மரபியல் நோய், தமிழ் பெயரிடல், தோப்புக்கரணம், சாய்தளம், இந்துக்களின் ஓவியக் கலை மரபு, நையாண்டிப் பாடல், இலங்கையில் கல்வி, கதைப்பாடல் என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில. இவர் தமிழ் விக்கிப்பீடியா 2011-12 இல் நடாத்திய தமிழ் விக்கி ஊடகப் போட்டிகளில் இணைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.

சூர்ய பிரகாசு

சூர்ய பிரகாசு.ச.அ. , சேலத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் இயந்திரவியல் பொறியியல் (முதலாமாண்டு) பயின்று வருகிறார். தமிழ் மீது தணியா ஆர்வம் உடையவர். சூன் 2010 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இதுவரை இவர் எழுதிய கட்டுரைகளாவன வருடு ஊடுருவு நுண்ணோக்கி, குரோமாகுநன், தியான்கே-1, மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள். மேலும் பல புதிய அறிவியற்கட்டுரைகளை அளிப்பதே இவரின் குறிக்கோள். மேலும் துப்புரவுப் பணிகளையும் முதற்பக்க இற்றைப்படுத்துதல் பணிகளையும் செய்து வருகிறார்.

பவுல் லியோன் வறுவேல்

முனைவர் பவுல் லியோன் வறுவேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திட்டுவிளை என்னும் ஊரில் பிறந்தவர். நாகர்கோவில், உரோமை நகர், நியூயார்க் ஆகிய நகர்களில் கல்விபயின்று கிறித்தவ இறையியலில் முனைவர் பட்டமும், மெய்யியலில் பேராசிரியர் நிலையும் பெற்று, திருச்சிராப்பள்ளி தூய பவுல் இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தற்போது நியூயார்க் மாநிலத்திலுள்ள பஃபலோ நகரில் கிறித்து அரசர் இறையியல் கல்லூரியில் பேராசிரியராகச் செயல்படுகின்றார். இவரது ஆர்வத்துறைகள் கிறித்தவ இறையியல், மெய்யியல் கோட்பாடுகள், சமூகவியல், தமிழ் இலக்கியம், சமயமும் சமூகமும் முதலியனவாம். 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் நடுவராகப் பங்கேற்க முன்வந்த இவர், செல்வா அளித்த ஊக்கத்தை ஏற்று, மார்ச்சு 30, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: இயேசுவின் உயிர்த்தெழுதல், சிலுவைப்பாதை, தமிழ் விவிலியம், எஸ்தாக்கியார் நாடகம், துக்கப்பாட்டு, நற்செய்தி, கிறித்தவ இறைவேண்டல்கள், ஒத்தமை நற்செய்திகள், கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை, செப்துவசிந்தா, இறையியல், கிறித்தவ இறையியல், உடன்படிக்கை (விவிலியம்), தமிழ் நடை. மேலும், இயேசு கிறித்து, கிறித்துமசு, சென்னை சாந்தோம் தேவாலயம். விக்கிமூலத்தில் திருவிவிலியம் முழுவதையும் ஒவ்வொரு நூலாகப் பதிவேற்றிவருகின்றார்.

பீ.எம். புன்னியாமீன்

பீ. எம். புன்னியாமீன், (நவம்பர் 11, 1960 - 10 மார்ச் 2016) இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் 2012 வரை தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்துள்ளார். கல்வித்துறையில் பணியாற்றிய புன்னியாமீன் இதழியலில் ஆர்வம் உள்ளவர். இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். 173 நூல்களை எழுதி வெளியிட்டார். விக்கிப்பீடியாவில் இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கியப் பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றது.

மு. சிவகோசரன்

மு.சிவகோசரன், யாழ்ப்பாணத்திலுள்ள உடுவிலைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர். பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர் விக்கிப்பீடியா பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். வேண்டிய பகுப்புகள் மற்றும் வார்ப்புருக்களை அமைத்தல், கட்டுரைகளில் உள்ள இணைப்புகளை ஆராய்ந்து சீர்செய்தல், புதிய கட்டுரைகளை உருவாக்குதல் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க பணிகள். இந்து சமயம், துடுப்பாட்டம் மற்றும் புவியியல்/நாடுகள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் பட்டியல்களைச் சீர்செய்வதில் ஆர்வமுடையவர். யெரெவான், உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் உட்பட 40க்கு மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார்.

செங்கைப் பொதுவன்

செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.

சோடாபாட்டில்

சோடாபாட்டில் நேர்காணல்

சோடாபாட்டில் தமிழ்நாடு, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முதலில் ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார்; பின் 2010 விக்கிப்பீடியா தகவல் பக்கப் போட்டியில் போட்டியாளராகக் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர், தமிழ்நாடு மற்றும் இந்தியத் தேர்தல்கள், ஆங்கில மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், இந்திய விடுதலை இயக்கம் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார். மேலும், புதிய கட்டுரைகளின் விக்கியாக்கம், பகுப்பு உருவாக்கம், துப்புரவு போன்ற பராமரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு, விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

செந்தி

செந்தி, யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பெலருசில் மருத்துவப் பட்டமும் பின்னர் இதயவியலில் சிறப்பு மருத்துவமும் பயின்று உள்ளார். மே 2010 இல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். மருத்துவம், உயிரியல், வானியல் தொடர்பான கட்டுரைகள் ஆக்கம், உயிரியல் மற்றும் மருத்துவக் கலைச்சொல்லாக்கம், உரைதிருத்தம், படங்கள் உருவாக்கி இணைத்தல், கட்டுரை விரிவாக்கம் போன்ற பணிகளைச் செய்து வருகின்றார். தமிழ் விக்சனரியில் உருசியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வதிலும் மருத்துவக் கலைச்சொற்கள் திருத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றார். உயிர்ச்சத்து, கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், விண்மீன் உயிரி, பெரிபெரி, பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் மூலம் மருத்துவக் கல்வியை ஊக்குவிப்பதும், மருத்துவத்தைத் தமிழ் மொழி மூலம் அறிந்துகொள்ள தமிழ் விக்கிபீடியாவை ஒரு முதன்மைத் தளமாக உருவாக்குவதும் இவரின் குறிக்கோள்கள்.

ஜெயரத்தின மாதரசன்

ஜெயரத்தின மாதரசன், புதுச்சேரியைச் சேர்ந்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் கணிணியின் பயன்பாட்டியலில் முதுகலையைப் பயின்று வருகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். நடப்பு நிகழ்வுகள், கத்தோலிக்கம், கிறித்தவப் புனிதர்கள், கிறித்தவ இறையியல் முதலியன இவரது ஆர்வத் துறைகள்.விவிலிய புத்தகங்கள், திருத்தூதர், சமவெளிப் பொழிவு, பாஸ்கா புகழுரை, பாஸ்கா திரி, பதுவை அந்தோனியார், செபமாலை திருத்தந்தையர்களின் பட்டியல், குல மரபுச் சின்னம், ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில. மேலும் கிறித்தவத் தலைவர், புனிதர் முதலிய தகவற்சட்டங்களை உருவாக்கியும் மேம்படுத்தியும் உள்ளார். பவுல் லியோன் வறுவேல் மற்றும் கனகரத்தினம் சிறீதரன் ஆகியோருடன் இணைந்து கிறித்தவம் வலைவாசலை உருவாக்கப் பணியாற்றியுள்ளார்.

பாஹிம்

பாஹிம், இலங்கையில் வெலிகமையைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநகரில் வணிகம் புரிவதுடன் பன்னாட்டளவில் மொழிபெயர்ப்பாளராகவும் மொழியியலாளராகவும் பணியாற்றுகிறார். 2010 முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளுள் ஆசிய மரநாய், இலங்கையின் மலைசார் மழைக்காடுகள், இலங்கைச் சிங்கம், செம்முகப் பூங்குயில், ஓஊ, ஈஈ, கருமுதலை, வெண் புள்ளிச் சருகுமான், யால தேசிய வனம், அச்சே சுல்தானகம், இப்றாகீம் பாசா என்பன குறிப்பிடத் தக்கவை. இவை தவிர ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் உரைதிருத்தத்திலும் மொழிசார் கலந்தாய்வுகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீதர்

ஸ்ரீதர் நாராயணசாமி, திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர். நூற்பாலை எழுத்தராக பணிபுரிந்து, தற்போது உழவராக உள்ள இவர், அக்டோபர் 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். கட்டுரை உருவாக்கம், விரிவாக்கம், உரைதிருத்தம் ஆகிய பணிகளில் செயல்பட்டு வருகிறார். ரா. கிருஷ்ணசாமி நாயுடு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பட்டுப்புழு வளர்ப்பு, பஞ்சகவ்யம், கஸ்தூரிபாய், ராட்டை முதலியன இவர் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்கிமீடியாவின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

பேராசிரியர். வி. கிருஷ்ணமூர்த்தி

பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணிதம், ஆன்மிகம் முதலிய தலைப்புகளில் 2007ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இடவியல், வரிசைமாற்றம், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், வைணவம் கட்டுரைகள் போன்று ஆழமான நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை இவர் விக்கிக்கு அளித்துள்ளார். இவர் பிர்லா அறிவியல் நுட்பவியல் கழகம் (BITS பிலானி), அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியராக இருந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எல்லோரும் ஏன் பங்களிக்க வேண்டும் என விக்கி பட்டறைக்கு அவர் வழங்கிய உரையை இங்கு படிக்கலாம்.

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

மகிழ்நன்

மகிழ்நன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள மேலக்கால் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில் நுட்பவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் வெண்டை மஞ்சள் நரம்பு தீ நுண்மத்தில் ஆய்வுப் பட்டமும், இசுரேல், பெட்-தேகன், வல்கானி மையத்தில் தக்காளி இலை சுருட்டு தீ நுண்மத்தில் ஆய்வும், இசுரேல், ரேகொவாட், வைசுமன் மையத்தில் மூளை புற்றுநோய் குருத்தணுக்கள் குறித்த ஆய்வும் செய்துள்ளார். தற்பொழுது மூளையில் காயங்களினால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் மூலக்கூற்று உயிரியல், மரபியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல ஆழ்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். கணிமி, டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி, பக்டிரியல் படிவாக்கம், செமினிவிரிடீ, வெசுட்டர்ன் படிவு ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

தானியல் பாண்டியன்

தானியல் பாண்டியன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பங்களாச்சுரண்டையைச் சேர்ந்தவர். தற்போது, சிகாகோ நகரில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கி முழுமையாக்குவதில் ஆர்வம் உடையவர். நீர் மின் ஆற்றல், மனித மூளை, கொல்கத்தா, சூரியன், சிகாகோ, இந்தியத் தரைப்படை, நீர்மூழ்கிக் கப்பல் முதலிய இவர் உருவாக்கிய கட்டுரைகளில் சில.

தகவல் உழவன்

தகவலுழவன் 2007ஆம் ஆண்டில் இருந்து தமிழ் விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாக பங்களித்துவருகிறார். இவர் உயிரியல் துறையில் பயிற்சி பெற்றவர். தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர். இவர் கட்டுரைகளுக்கு பொருத்தமான பல படங்களை எடுத்து விக்கி பொது ஊடகத்தில் இட்டுள்ளார். தமிழ் விக்சனரியில் அடிப்படைச் சொற் பட்டியல் உருவாக்கம், உயிரியல், தமிழ் முதலியவற்றில் ஆர்வம் உடையவர். கறையான், சபாபதி நாவலர், மண், ஆர்மடில்லோ, வாழை, பிரான்டு முள்ளெலி ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

அராப்பத்

அராப்பத் ரியாத், பெங்களூரில் பணிபுரியும் பொறியாளர். திருநெல்வேலி மாவட்டம், பேட்டை நகரைச் சேர்ந்தவர். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இசுலாம், பொது அறிவு, புகழ்பெற்ற மாந்தர்கள், தொழில்நுட்பம், வரலாறு முதலிய துறைகளில் எழுதி வருகிறார். தீயணைப்பான், தீ எச்சரிக்கை அமைப்பு, இராச நாகம், சீன சோதிடம், சேரமான் பெருமாள், அக்கா மகாதேவி, சான் சல்லிவன் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

நிரோஜன் சக்திவேல்

நிரோஜன் சக்திவேல், கனடாவில் வாழும் கல்லூரி மாணவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் மிக முனைப்பான இளைய பங்களிப்பாளர்களில் ஒருவர். தமிழீழம், திரைப்படத்துறை, தமிழர் வரலாறு, தமிழ் நாடகம், இசை முதலியன இவரது ஆர்வத் துறைகள். 2000க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை எழுதியது நிரோஜனின் முக்கியப் பங்களிப்பு.

ஹிபாயத்துல்லா

ஹிபாயத்துல்லா, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றிய இவர் தற்போது தினமணி செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். ஹிபாயத்துல்லா, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார். இசுலாம், வரலாறு, அரசியல், தமிழ்நாட்டு ஊர்கள், தமிழக நபர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதுவதோடு விக்கியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி, தமிழ் முஸ்லிம்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தமிழ்நாடு வக்பு வாரியம், கா.காளிமுத்து, இராம. வீரப்பன் ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

தேனி. எம். சுப்பிரமணி

தேனி எம்.சுப்பிரமணி
தேனி எம்.சுப்பிரமணி

தேனி எம்.சுப்பிரமணி, டிசம்பர் 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இதழியலில் ஆர்வம் மிக்கவர். ஸ்ரீ நாராயணகுரு, தேனி மாவட்டம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சொத்து வரி, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், கண்ணகி கோயில், இந்தியச் சரணாலயங்கள், தொழிலாளர்களுக்கான மீதூதியம், ஹென்றி பவர் ஐயர் முதலிய பல தலைப்புகளில் முதன்மையாகப் பங்களித்திருக்கிறார். இவர் எழுதியுள்ள தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் டிசம்பர்'2010ல் வெளியானது.

கலை

கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு, தமிழ் விக்கி ஊடகப் போட்டி முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். மூச்சுத்தடை நோய், காச நோய், தொற்றுநோய், நோய்க்காரணி, கருச்சிதைவு, மலட்டுத்தன்மை சிகிச்சை, வெளிச் சோதனை முறை கருக்கட்டல், தாய்ப்பாலூட்டல், ஏபிஓ குருதி குழு முறைமை, பூச்சி, வாழ்க்கை வட்டம், பல்லுருத்தோற்றம், ஒன்றிய வாழ்வு, வித்து, வளர்ப்பூடகம், இழையம், வடமுனை ஒளி முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார்.

கலாநிதி

கலாநிதி நவம்பர் 2005 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணக்கியல், பொருளியல், தமிழ் இலக்கியம், பொது அறிவு, கணனி, அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை, இணைபயன் வளையீ, கிராமின் வங்கி, இலங்கை வரலாற்று நூல்கள், சோழர் இலக்கியங்கள், முகமது யூனுஸ், புலிநகக் கொன்றை ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.

Werklorum

Werklorum, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் , ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள் , ராப் இசைக் கலைஞர்கள் , ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சிகள் , ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.


வத்சன்

ஸ்ரீவத்சன், சென்னையை சேர்ந்த மென்பொருளாளர். அக்டோபர் 2009இல் இருந்து தமிழ் விக்கிபீடியாவில் பங்களித்து வருகிறார். காகா,மதராசு தொழில்நுட்ப நிறுவனம்,படைநடவடிக்கை திரிசூலம்,ஆலன் மூர்,வீ ஃபோர் வென்டேட்டா, டேவிட் லாயிட்,டீசீ காமிக்ஸ்,மார்வெல் காமிக்ஸ்,முகம்மது அலி,முகமது அலி வம்சத்தின் அரசர்கள் பட்டியல்,முகமது அலி வம்சம் முதலிய கட்டுரைகளில் பங்களித்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியா பற்றி டுவிட்டர் தளத்தில் அறிவிப்புகள் செய்து வருகிறார்.

இராஜ்குமார்

இராஜ்குமார், அரியக்குடியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றுகிறார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். முழு அக எதிரொளிப்பு, மின்னழுத்தமானி, செம்மை நெல் சாகுபடி, கீற்று முடைதல், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் பட்டியல், இயக்கி, எதிரொளிப்பு, அலைநடத்தி, மாறுதிசை மின்சார இயக்கி ஆகிய கட்டுரைகளில் முதன்மையாக பங்காற்றியுள்ளார் .

குறும்பன்

குறும்பன், நாமக்கல் நகரைச் சேர்ந்தவர். தற்போது ஐக்கிய அமெரிக்காவில் மென் பொருள் துறையில் பணியாற்றுகிறார். இவர் 2007ம் ஆண்டிலிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்காற்றுகிறார். வரலாறு, புவியியல், அரசியல் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர். காவிரி ஆறு, மஞ்சள் ஆறு, நியூயார்க் நகரம், வாசிங்டன், டி. சி., தமிழக மக்களவைத் தொகுதிகள், மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, நாமக்கல் முதலான பல கட்டுரைகளில் முதன்மையாக பங்காற்றியுள்ளார். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் பணியாற்றி வருகிறார்.

மணியன்

மணியன், சென்னையில் வாழும் தொலைத்தொடர்பியல் பொறியாளர். முன்பு ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இந்தியத் தொலைதொடர்புப் பணி அதிகாரியாகவும் பின்னர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டிலும் பணியாற்றிய பிறகு, தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ளார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திரா காந்தி அமைதிப் பரிசு, சூரிய நாட்காட்டி, மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு, நீரில் பாய்தல் முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியா குறித்த பல உதவிக்கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் பங்களித்துள்ளார்.

சுந்தர்

சுந்தர்
சுந்தர்

சுந்தர், தேடுபொறித் துறையில் பணியாற்றும் தகவல்பெறுநுட்ப வல்லுனர். 2004-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வருகிறார். மொழியியல், உயிரியலில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதியுள்ள கட்டுரைகளில் வெண்பா, மௌடம், புணர்ச்சிப் பரவசநிலை, கிப்பன் பண்டம், பகடிப்பட இயற்பியல், கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை, மாந்தவுருவகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டம் மூலம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழ் விக்சனரியில் சேர்த்தது சுந்தரின் ஆகச் சிறந்த பங்களிப்பு ஆகும். மேலும் இவர், மீடியாவிக்கி நுட்பப் பணிகள், விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள், கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும், விக்கிமீடியா உறவுத் திட்டங்களுடனான தொடர்பிலும் ஈடுபட்டு வருகிறார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகளைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றைப் படித்துள்ளார்.

மயூரநாதன்

மயூரநாதன்
மயூரநாதன்

மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தனியொருவராகப் பங்களித்து இத்திட்டத்துக்கு வித்திட்டவர் மயூரநாதனே. அன்று முதல் கட்டிடக்கலை, வரலாறு, மொழியியல் ஆகிய பல்வேறு ஆர்வத் துறைகளில் 3000 க்கும் கூடுதலான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளில் கட்டிடக்கலை, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், முடிச்சு, ஓவியத்தின் வரலாறு, கோயில், யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி, தமிழ் விக்கி மேற்கோள் திட்டங்களின் தொடக்கக் காலத்தில் பங்களித்துள்ள இவர், மீடியாவிக்கி மென்பொருளின் தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு வகையான விக்கிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இரவி

இரவி, ஒரு தொழில்முறை வலைத்தள வடிவமைப்பாளர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2005 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். கட்டுரைகள் உரை திருத்தம், தளத்துப்புரவு, மீடியாவிக்கி இடைமுகப்புத் தமிழாக்கம், தமிழ்விக்கிக் கொள்கை உரையாடல்கள், உதவிப்பக்கங்கள் உருவாக்கம் முதலிய பணிகளில் ஈடுபடுபவர். பயிற்சிப் பட்டறைகள், ஊடகத் தொடர்பு, வலைப்பதிவுகள் மூலம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை மேம்படுத்தி வருகிறார். 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியின் கள ஒருங்கிணைப்புகளில் முக்கிய பங்கேற்றார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கண்காட்சியில் தமிழ் விக்கித்திட்டங்களுக்கான சிறப்புப்பகுதி ஒன்றைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு விக்கிமேனியாவில் கூகுள் மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை முன்வைத்தார். தமிழ் விக்சனரியின் தொடக்க நாட்களில் அத்தளத்தை ஒழுங்கு செய்து பயனர்களை ஈர்க்க வழிசெய்தார். விக்சனரியில் முதல் முறையாகத் தானியங்கி வாயிலாகச் சொற்களைப் பதிவேற்றிய திட்டத்துக்கான திட்டமிடலிலும் இயக்கத்திலும் கலந்துள்ளார்.

கே. எஸ். பாலச்சந்திரன்

கே. எஸ். பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற நாடக, நகைச்சுவை, திரைப்படக் கலைஞர் ஆவார். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த பாலச்சந்திரன் 2014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 2007 முதல் 2013 வரை ஈழத்துக் கலைஞர்கள், ஒலிபரப்புக் கலை, நாடகத் துறை, திரைப்படத் துறை முதலிய துறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதினார். நா. சோமகாந்தன், சுப்பு ஆறுமுகம், அ. பாலமனோகரன், ஏரம்பு சுப்பையா, இலங்கை வானொலி நாடகத்துறை, 1999 (திரைப்படம்), நான் உங்கள் தோழன், உடப்பு, கரவெட்டி ஆகிய கட்டுரைகள் இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.

செல்வா

செல்வா என்று அழைக்கப்படும் செ. இரா. செல்வக்குமார், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பின்னர் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய ஆய்வுத்துறை குறைக்கடத்திக் கருவிகள் நுட்பம் பற்றியது. மே 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் (இதுவரை ஏறத்தாழ 800 கட்டுரைகள்), உரைதிருத்தம், படங்கள் உருவாக்குதல், இணைத்தல், தமிழ்விக்கி கொள்கை, நடை பற்றிய உரையாடல்களில் பங்களித்தல் முதலான பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். கலைச்சொற்கள் ஆக்கித் தருவதிலும், விக்கிப்பீடியர்களுக்கு ஊக்கம் தந்து உதவுவதிலும் ஆர்வம் காட்டுகின்றார். கனடாவில் விக்கிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், பொதுவாக இணைய உலகில் விக்கிப்பீடியாவின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தல் முதலான பணிகளிலும் ஈடுபடுகின்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு நடத்திய விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியை உருவாக்குவதற்கும், நடுவர்கள் தேர்வுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

நற்கீரன்

நற்கீரன். வசிப்பது ரொறன்ரோ. தொழில் நிரலாக்கம். கல்வி பொறியியல். 2005 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். கட்டுரை ஆக்கம், திருத்தம், பகுப்பாக்கம், தளத்துப்புரவு, பயிற்சிப் பட்டறை, விக்கிச் சமூகம், கொள்கையாக்கம் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கனடா, தமிழர், இறைமறுப்பு, கட்டுரை, மின்காந்த அலைகள், அலைக்கம்பம், பெர்ள், பி.எச்.பி, இணக்க முடிவு ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்கிப்பீடியாவையும், விக்கி ஊடகங்களையும் அறிவியற் தமிழின் ஒரு முதன்மைக் தளமாக, கூட்டு மதிநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக வடிவமைப்பது இவரின் நோக்கம் ஆகும்.

சிவக்குமார்

சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மயூரேசன்

ஜெ.மயூரேசன் இலங்கையைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றார். முதலில் மென்பொருள் சோதனையாளராகவும், தற்போது அன்ரொயிட் மென்பொருள் வல்லுனராகவும் பணியாற்றி வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் கணனி, இணையம், வரலாறு, இலங்கை, புதினங்கள், திரைப்படம் போன்ற பகுப்புக்களுக்குள் சுமார் 140 கட்டுரைகள் வரை எழுதியுள்ளார். இவற்றில் ஆப்கானித்தான், எனிட் பிளைட்டன், ஹாரி பாட்டர் போன்றவை இவர் தொடங்கிய முக்கியக் கட்டுரைகளாகும். இது தவிர கட்டுரை விரிவாக்கம், துப்பரவுப்பணி, புதுப்பயனர் வரவேற்பு போன்ற பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார்.

உமாபதி

இரகுநாதன் உமாபதி இலங்கையில் உள்ள அரியாலையில் பிறந்தவர். வவுனியாவில் புவியற்சார் தகவற் தொழில்நுட்பத்தில் பல வருடங்கள் பணியாற்றியவர். 2012 ஆம் ஆண்டுமுதல் மிதிவெடி அபாயக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக கடமையாற்றி வருகிறார். 2005 ஆம் ஆண்டு முதல் பல கணினிசார் கட்டுரைகளைத் தொடங்கியும் மேம்படுத்தியும் வருகிறார். இதில் ஜிமெயில் கட்டுரை குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மார்களைப் பற்றியும் எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவில் இலங்கைக்கான இடங்களை அடையாளப்படுத்தும் வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.

அரிஅரவேலன்

அரிஅரவேலன், ஒரு சமூக - கல்விச் செயல்பாட்டாளர் ஆவார். தேனி மாவட்டம், சின்னமனூரில் பிறந்த இவர், தற்பொழுது மதுரையில் வசித்து வருகிறார். குழந்தைகளுக்கும் இளையோருக்குமான வாழ்க்கைத் திறன் கல்விக்குரிய கலைத்திட்டத்தை வகுத்து அதனைக் காணொளிப்படங்களாக உருவாக்கும் திட்டத்தில் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சூன், 2012 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். ஆளுமைகளையும் நூல்களையும் பற்றிய கட்டுரைகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். ம. ரா. போ. குருசாமி, பரலி சு. நெல்லையப்பர், கா. சு. பிள்ளை, சாலை இளந்திரையன், தி. க. சண்முகம், மணியம்மையார் ஆகியன இவர் எழுதிய கட்டுரைகளில் சில.

இவற்றையும் பார்க்க