வடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை)
வடக்குத் தொடருந்துப் பாதை (Northern Line) என்பது இலங்கையின் பொல்காவலை நகரையும், வடக்கே காங்கேசன்துறையையும் இணைக்கும் தொடருந்துப் பாதையைக் குறிக்கும். இது கொழும்பில் இருந்து வரும் பிரதான பாதையில் பொல்காவலை சந்தியில் இருந்து பிரிந்து வடமேல், வடமத்திய மாகாணங்களூடாக வடக்கு மாகாணத்தின் முடிவில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை அடைகின்றது. இது 339 கிமீ (211 மை) நீளமுள்ள இப்பாதையில் பொல்காவலை முதல் காங்கேசன்துறை வரை மொத்தம் 44 நிலையங்கள் அமைந்துள்ளன.[1] இலங்கையில் உள்ள தொடருந்துப் பாதைகளில் இதுவே மிகவும் நீளமானது ஆகும்.[1] 1894 ஆம் ஆண்டில் இப்பாதை திறக்கப்பட்டது. இப்பாதையில் குருணாகல், அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. மிகவும் பிரபலமான யாழ் தேவி தொடருந்து சேவை இவ்வழியே பயணிக்கிறது. ஈழப்போரில் மிகவும் பாதிப்படைந்திருந்த இப்பாதைக்கூடான சேவைகள் யூன் 1990 முதல் கொழும்பில் இருந்து வவுனியா வரை மட்டுமே சேவையில் ஈடுபட்டிருந்தது.[2] மே 2009 இல் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இப்பாதைக்கான புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று 2015 சனவரி 2 இல் முழுமையாக நிறைவடைந்தது.[3][4]
வரலாறு
[தொகு]அமைப்பு
[தொகு]19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய இலங்கையின் வட பகுதி மக்கள் வடக்கையும் தெற்கையும் இணைக்க தொடருந்துப் பாதை தேவை என்பதை வலியுறுத்தி பரப்புரை செய்ய ஆரம்பித்தனர். 1891 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் ரெயில்வே ஆணையத்தின்" அறிக்கையில், பொல்காவளையில் இருந்து குருணாகல் வரையிலான புதிய தொடருந்துப் பாதை (இன்றைய வடக்குப் பாதை) ஒன்றை அமைப்பதற்கும், யாழ்ப்பாணம் வரையான சேவைக்கு நில அளவை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. இப்பாதை பிரதான பாதையை பொல்காவளை சந்தியில் இணைப்பதற்கும், இதன் மூலம் கொழும்பு கோட்டையில் இருந்து சேவைகளை நடத்துவதற்கான அனுமதியும் 1892 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு, குருணாகலை வரையான சேவை 1984 பெப்ரவரி 14 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1897 டிசம்பரில் "வடக்குத் தொடருந்து சேவைக்கான" திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் வடக்குப் பாதையை நிர்மாணிப்பதற்கான அறிவிப்பு 1899 அக்டோபரில் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் விடுக்கப்பட்டது.[5] குருணாகல் முதல் காங்கேசன்துறை வரையான பாதையை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்கள் 1900 சனவரியில் கோரப்பட்டு, பணிகள் 1900 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டன.[5] யாழ்ப்பாணம் உட்பட 21 மைல் நீள காங்கேசன்துறை-சாவகச்சேரி பகுதிப் பணிகள் 1900 சூலையில் ஆரம்பிக்கப்பட்டன. 1902 மார்ச் 11 இல் ஆளுநர் சேர் ஜே. டபிள்யூ. ரிட்ஜ்வே என்பவரால் காங்கேசன்துறை முதல் சாவகச்சேரி வரையிலான பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[5][6] 1902 செப்டம்பர் 5 இல் 14 மைல் நீள சாவகச்சேரி-பளை வரையான பகுதி திறக்கப்பட்டது. 1904 நவம்பர் 1 இல் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையான பகுதி ஆரம்பிக்கப்பட்டது. .1905 மார்ச் 11 இல் மதவாச்சி வரை நீடிக்கப்பட்டது.[5]
1905 ஆகத்து 1 இல் முதலாவது தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் வந்து சேர்ந்தது.[5][7] இதற்கான பயண நேரம் 13 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் ஆக இருந்தது. காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான ஒற்றைப் பாதையில் மொத்தம் 16 தொடருந்து நிலையங்களும், 12 உப-நிலையங்களும் அமைக்கப்பட்டன.
இயக்கம்
[தொகு]யாழ் தேவி என அழைக்கப்படும் விரைவு வண்டி 1956 ஏப்ரல் 23 இல் வடக்குப் பாதையில் முதன் முதலாக சேவையில் விடப்பட்டது. இதன் மூலம் கொழும்பு-யாழ்ப்பாணப் பயண நேரம் 7 மணித்தியாலங்களால் குறைக்கப்பட்டது.[7][8] இச்சேவை மூலம் கொழும்பு கோட்டைக்கு அடுத்த படியாக யாழ்ப்பாணத் தொடருந்து நிலையம் இலங்கையின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக உருவெடுத்தது.[9] இலங்கை ரெயில்வே திணைக்களத்திற்கு யாழ்தேவி சேவை அதிகப்படியான வருவாயைத் தேடித் தந்தது.[10] யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையே தினமும் எட்டு பயணிகள் வண்டிகளும், ஆறு சரக்கு வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. 1980களின் ஆரம்பத்தில் நாள்தோறும் ஆறாயிரம் பயணிகள் வரை வடக்குப் பாதையூடாக சென்று வந்தனர்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Statistics - Sri Lanka Railways". Ministry of Transport, Sri Lanka.
- ↑ "Lanka's vanished railway network to be restored by 2013". Zee News. 7 October 2012. http://zeenews.india.com/news/world/lanka-s-vanished-railway-network-to-be-restored-by-2013_804242.html. பார்த்த நாள்: 27 October 2012.
- ↑ "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/.
- ↑ Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 மார்ட்டின், ஜோன் எச். (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- ↑ "The Rail Routes of Sri Lanka: Past and Present". Infolanka.com.
- ↑ 7.0 7.1 "History of Yal Devi - the princess of Jaffna". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2013-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218213947/http://www.dailynews.lk/2011/07/28/fea19.asp.
- ↑ Perera, B. B. (23 சூலை 2008). "Rampala regime in the local Railway History". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303194137/http://www.island.lk/2008/07/23/features5.html.
- ↑ Peiris, Gratian A. (16 நவம்பர் 2010). "B D Rampala : Engineer, entrepreneur and legend". டெய்லி நியூசு இம் மூலத்தில் இருந்து 2012-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120801062325/http://www.dailynews.lk/2010/11/16/fea04.asp.
- ↑ Mathes, Rohan (24 மார்ச் 2009). "President requests patriotic citizens: Join us in building Northern rail track". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021043821/http://www.dailynews.lk/2009/03/24/news02.asp.