மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
மெக்சிகோ-அமெரிக்கப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வெரகுருசு சண்டையின் படம் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியா குடியரசு [1] | மெக்சிக்கோ | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ஜேம்சு போல்க் வின்பீல்ட் இசுக்காட்டு சக்கரி தைலர் இசுடீபன் கார்னி ஜான் இசுலோட் வில்லியம் வொர்த்து ராபர்ட் இசுக்காட்டன் சோசப்பு லேன் பிராங்களின் பியர்சு தேவீது கன்னர் மாத்யு பெர்ரி கிட் கார்சன் | அன்டோனியோ லோபசு தே சாந்தா அனா மரியான அரிசுட்டா பெட்ரோ தே அம்புடியா உசே மரியா புளோரசு மரியானோ பயேகோ நிக்கோலசு பிராவோ உசே சோக்குயின் டே கரெரா ஆன்டீரிசு பி-கோ மானுவல் ஆர்மியோ மார்டின் பர்பெக்டோ தே காசு பெட்ரோ மரியா தே அனயா சாக்குயின் ரியா |
||||||||
பலம் | |||||||||
1846: 8,613[2] 1848: 32,000 படைவீரர்கள் 59,000 இரண்டாம் நிலை படைவீரர்கள்[3] | c. 34,000–60,000 படைவீரர்கள்[4] | ||||||||
இழப்புகள் | |||||||||
c. 13,283 படைவீரர்கள் | c. 16,000 படைவீரர்கள் |
மெக்சிகோ அமெரிக்கப் போர் என்பது 1846-1848 ஆண்டுகளில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். 1845ம் ஆண்டு அமெரிக்கா, டெக்சாசைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து மெக்சிகோ இப்போரை நடத்தியது. 1836 ல் டெக்சாசு மெக்சிகோவுக்கு எதிராகப் புரட்சி நடத்தி மெக்சிகோவில் இருந்து பிரிந்தாலும் மெக்சிகோ டெக்சாசைத் தன்னுடைய பகுதியாகக் கருதியது.
1846ன் வசந்த காலத்திலிருந்து 1847ன் இலையுதிர் காலம் வரை பெரும் போர் நடைபெற்றது. அமெரிக்கப் படைகள் விரைவாக நியு மெக்சிகோவையும் கலிபோர்னியாவையும் கைப்பற்றின. வடகிழக்கு, வடமேற்கு மெக்சிகோவின் சில பகுதிகளையும் அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. அமெரிக்கக் கப்பற்படையின் பசிபிக்குப் பகுதிப்படை பாகா கலிபோர்னியாவின் தென் பகுதியிலுள்ள பல படைத்தளங்களைக் கைப்பற்றியது. மற்றொரு அமெரிக்கப்படை மெக்சிகோ நகரைக் கைப்பற்றியது. இப்போரில் அமெரிக்கா வெற்றிபெற்றது.
குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையின் படி 15 மில்லியன் டாலர்களுக்கு மெக்சிகோ நியு மெக்சிகோ, ஆல்ட்டா கலிபோர்னியா பகுதிகளை அமெரிக்காவுக்கு அளித்தது. மெக்சிகோ அமெரிக்கக் குடிமக்களுக்குத் தர வேண்டிய 3.5 மில்லியன் டாலரை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. மெக்சிகோ டெக்சாசின் இழப்பை ஏற்றுக்கொண்டது, ரியோ கிராண்டே ஆற்றைத் தன் எல்லையாக ஏற்றுக்கொண்டது.
பசிபிக் கடற் பகுதி வரை அமெரிக்காவை விரிவடையச் செய்யவேண்டும் என்பதே சனநாயகக் கட்சியின் [5]தலைவர் அமெரிக்க அதிபர் ஜேம்சு போல்க்கின் குறிக்கோளாக இருந்தது. எனினும் இப்போர் அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. விக் கட்சி அடிமை முறையை எதிர்ப்பவர்கள், ஏகாதிபத்தியக் கொள்கையை எதிர்ப்பவர்கள் இப்போரைக் கடுமையாக எதிர்த்தனர். இப்போரில் அதிக அமெரிக்க வீரர்களின் உயிர் பலியானதும், அதிகப் பணம் செலவழிக்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது. இப்போரினால் அரசியலில் அடிமைகளின் உரிமை பற்றி அதிகம் தருக்கம் செய்யப்பட்டது. அது அமெரிக்க உள்நாட்டுப் போர் நடக்கவும் காரணமாக இருந்தது.
இப்போர் மெக்சிகோவில் அமெரிக்காவின் முதல் தலையீடு என்றும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு என்றும், 1847 போர் என்றும், பல பெயர்களில் மெக்சிகோவில் அழைக்கப்படுகிறது.
பின்புலம்
[தொகு]எசுப்பானியாவிடம் இருந்து 1821ல் விடுதலை பெற்ற மெக்சிகோவில் பல விதமான உள் நாட்டுக் குழப்பங்கள் நிலவிச் சண்டை நடைபெற்றது. ஆனாலும் அவர்கள் மெக்சிகோவிடமிருந்து டெக்சாசு பிரிந்ததை அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா டெக்சாசைத் தன்னுடன் இணைத்துக் கொண்டால் போர் மூளும் என்று எச்சரித்தார்கள் [6].
விடுதலை அடைந்த மெக்சிகோவின் இராணுவ, அரசியல் செல்வாக்கு குறைந்திருந்ததால் வடமெக்சிகோ அப்பாச்சி (Apache), நவாஃகோ (Navajo), கமான்சி (Comanche) போன்ற அமெரிக்கத் தொல்குடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலுக்கு உள்ளாகியிருந்தது. குறிப்பாகக் கமான்சி அமெரிக்கத் தொல்குடிகள் மெக்சிகோவின் வலுகுன்றிய நிலையைப் பயன்படுத்திப் பல நூறு மைல்கள் உள் நுழைந்து பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகளைக் கவர்ந்து சென்றார்கள். தங்கள் சொந்தப் பயன்பாடு போக டெக்சாசு மற்றும் அமெரிக்கச் சந்தைகளிலும் அவற்றை விற்றார்கள்.[7]
அமெரிக்கத் தொல்குடிகளின் படையெடுப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததோடு வட மெக்சிகோ பெரும் சீரழிவைச் சந்தித்திருந்ததால் 1846ல் அமெரிக்கா படையெடுத்து வந்த போது சிறிய எதிர்ப்பே உள்ளூர் மக்களிடம் இருந்து எழுந்தது [8] .
கலிபோர்னியாவுக்கான திட்டம்
[தொகு]1842ல் மெக்சிகோவில் இருந்த அமெரிக்க அமைச்சர் (தூதர்) வாடி தாம்சன் தனது கடன்களுக்காக மெக்சிக்கோ, கலிபோர்னியாவை விட்டுக்கொடுக்கலாம் என்று தெரிவித்தார். அவர் டெக்சாசை விட அழகான செல்வச் செழிப்புள்ள ஆல்ட்டா கலிபோர்னியாவை இணைத்துக்கொண்டால் பசிபிக் பகுதியில் செல்வாக்குள்ள நாடாகத் திகழலாம் என்றும் இங்கிலாந்தும் பிரான்சும் இப்பகுதி மேல் குறி வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அதிபர் ஜான் டைலரின் நிருவாகம் மெக்சிக்கோ, இங்கிலாந்து, அமெரிக்கா இணைந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை மூலம் ஆரகன் எல்லைச் சிக்கலைத் தீர்க்கவும் சான் பிரான்சிசுக்கோ மீது மெக்சிகோ தன் உரிமையை விட்டுக்கொடுக்குமாறு கேட்டது. அபெர்டின் பிரபு (Lord Aberdeen) இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். ஆனால் அமெரிக்கா இப்பகுதியை இணைத்துக்கொள்ள இங்கிலாந்திற்கு மறுப்பில்லை என்று கூறிவிட்டார்.[9] மெக்சிக்கோவிலிருந்த இங்கிலாந்துத் தூதர் ரிச்சர்டு பாக்கின்கெம் (Richard Pakenham) 1841 ல் ஆல்ட்டா கலிபோர்னியா, ஆங்கிலேயர்களைக் குடியமர்த்தச் சிறந்த இடமென்றும் ஆங்கிலேயக் (இங்கிலாந்து) குடியேற்றம் அமையச் சிறந்த இயற்கை வளங்களை உடைய இடம் என்றும், மெக்சிகோ இப்பகுதியை விட்டுத் தந்தால் மற்ற நாடுகளின் கைகளுக்கு இப்பகுதி செல்லக்கூடாது என்றும், இங்கிலாந்திற்கே இது செல்லவேண்டும் என்றும் பால்மெர்சுடன் பிரபுவுக்குக் (Lord Palmerston) கடிதமெழுதினார். ஆனால் இக்கடிதம் இலண்டனுக்குச் செல்லும் முன்பு சர் ராபர்ட் பீல் அரசு பதவிக்கு வந்திருந்தது. இது பெரும் செலவுபிடிக்கும் நடவடிக்கை என்பதாலும் பல நாடுகளுடன் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும் அவரின் கடிதம் நிராகரிக்கப்பட்டது. [10][11]
டெக்சாசு குடியரசு
[தொகு]1820ல் மிசௌரியைச் சேர்ந்த மோசசு ஆசுடின் டெக்சாசில் பெரும் நிலப்பகுதியை வாங்கினார். அங்கு அமெரிக்கர்களைக் குடியேற்றத் திட்டமிட்ட அவர் தன் திட்டம் நிறைவேறுவதற்குள்ளேயே மரணமடைந்துவிட்டார். அவர் மகன் இசுடீபன் ஆசுடின் 300 அமெரிக்கக் குடும்பங்களைத் தங்கள் நிலத்தில் குடியேற்றினார். அவர்களின் குடியேற்றத்தைத் தொடர்ந்து பல அமெரிக்கக் குடும்பங்கள் டெக்சாசு நிலப்பகுதியில் குடியேறின. மெக்சிக்கர்கள் டெக்சாசில் அனுமதித்திருந்த பல குடியேற்றங்களில் இதுவே பலவிதங்களில் முன்னேற்றம் கண்டதாக இருந்தது. ஆங்கிலேயர்கள் டெக்சாசின் பூர்வகுடிகளான டெகனோவுக்கும், கமாச்சிக்களுக்கும் (Tejano and Comanches ) மெக்சிகோவுக்கும் இடையே முதல் நிலைப் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என்று மெக்சிகோ கருதியது. டெக்சாசின் மேற்கில் குடியேறி மெக்சிகோவிற்கு அரணாக இருப்பார்கள் என்று நினைத்ததற்கு மாறாக அமெரிக்கக் குடியேறிகள் வளமான பண்ணைநிலங்களில் குடியேறுவதும் கிழக்கில் உள்ள அமெரிக்க மாநிலமான லூசியானாவுடன் வணிகத் தொடர்புகளை அதிகப்படுத்துவதுமாக இருந்தனர். 1829ல் பெருமளவில் நடந்த அமெரிக்கர்களின் குடியேற்றத்தின் காரணமாக டெக்சாசில் எசுப்பானியம் பேசுபவர்களை விட ஆங்கிலேயர்கள் எண்ணிக்கை அதிகமானது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மெக்சிகோ அரசு சொத்து வரியை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவிலிருந்து வரும் பொருள்களுக்கு அதிகச் சுங்க வரியை விதித்தது. மேலும் அடிமை முறையைத் தடைசெய்தது. ஆனால் அமெரிக்கக் குடியேறிகளும் மெக்சிகோ வணிகர்களும் இதை ஏற்க மறுத்தனர். அதனால் மெக்சிகோ டெக்சாசுக்குக் குடியேற்றத்தைத் தடை செய்தது. ஆனாலும் கள்ளத்தனமாகப் பல அமெரிக்கர்கள் டெக்சாசில் குடியேறுவது தொடர்ந்தது.
1834ல் மெக்சிகோவின் தளபதியான அனடோனியோ லோபசு தே சாந்தா அனா (Antonio López de Santa Anna) ஆட்சியைக் கைப்பற்றிக் கூட்டாட்சி முறையைக் கைவிட்டார். அவர் டெக்சாசு அனுபவித்த அரை தற்சார்பு நிலையை ஒழிக்க முற்பட்டார். இசுடீபன் ஆசுடின் டெக்சாசு மக்களை ஆயுதம் ஏந்த அழைப்பு விடுத்தார். டெக்சாசு மக்கள் டெக்சாசு மெக்சிகோவில் இருந்து விடுதலை அடைந்ததாக 1836ல் அறிவித்தனர். சாந்தா அனா டெக்சாசின் படைகளை அலமோவில் தோற்கடித்தார். அவர் டெக்சாசின் படைத் தளபதி சாம் ஊசுடனால் (Sam Houston) தோற்கடிக்கப்பட்டார். அவர் சான் ஃகாசின்டோ (San Jacinto) போரில் சிறைபிடிக்கப்பட்டு டெக்சாசின் விடுதலையை உறுதி செய்யும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார் [12]. டெக்சாசின் விடுதலையை இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா ஆகியவை ஏற்றுக்கொண்டன. புதிய நாடான டெக்சாசை மீண்டும் கைப்பற்ற முயல வேண்டாம் என்று அவை மெக்சிகோவுக்கு அறிவுறுத்தின. பெரும்பாலான டெக்சாசு மக்கள் அமெரிக்காவுடன் இணைய விரும்பினார்கள். இது அமெரிக்கக் காங்கிரசில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. விக் கட்சி இதை எதிர்த்தது. 1845ல் டெக்சாசு அமெரிக்காவுடன் இணைய அமெரிக்கக் கீழவை (காங்கிரசு) ஒத்துக்கொண்டது. டிசம்பர் 29, 1845 அன்று டெக்சாசு அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைத்துக்கொள்ளப்பட்டது [12].
போரின் மூலம்
[தொகு]விடுதலை அடைந்த டெக்சாசின் எல்லை மெக்சிக்கோவுடன் சிக்கலானதாகவே இருந்தது. டெக்சாசு தன் எல்லையாக ரியோ கிராண்டே (Rio Grande) என்பதை வெலாசுக்கோ (Velasco ) உடன்படிக்கையைக் காட்டிச் சொன்னதை மெக்சிக்கோ ஏற்க மறுத்தது. அது எல்லையாக நுவேசசு (Nueces) ஆற்றைச் சொன்னது. டெக்சாசின் எல்லையாக ரியோ கிராண்டே குறிப்பிடப்படாததால் அமெரிக்கக் கீழவையின் தீர்மானத்தை ஏற்க மேலவை மறுத்துவிட்டது. அதிபர் போல்க் ரியோ கிராண்டேவை எல்லையாக அறிவித்தது மெக்சிக்கோவுடனான மோதலுக்கு அடித்தளமிட்டது [13].
1845 சூலை மாதத்தில் அமெரிக்க அதிபர் போல்க் தளபதி சக்கரி தைலரை (Zachary Taylor) டெக்சாசுக்கு அனுப்பினார் அக்டோபர் மாதத்தில் 3500 படைவீரர்கள் நுவேசசு ஆற்றை அடைந்தனர். படைபலம் மூலம் சர்ச்சைக்குரிய நிலத்தைக் கைப்பற்றவும் தயாராக இருந்தார். போல்க் அச்சமயத்தில் அல்டா (மேல்) கலிபோர்னியாவிலிருந்த அமெரிக்க தூதர் தாமசு லார்க்கின்னுக்கு (Thomas Larkin) அமெரிக்காவுக்குக் கலிபோர்னியாவைப் படைபலத்தால் இணைத்துக்கொள்ளும் எண்ணமில்லை எனவும் ஆனால் மெக்சிக்கோவில் இருந்து விடுதலை வேண்டுமென்றால் அவர்களுக்கு உதவும் என்றும் அவர்கள் தாங்களாக அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள விரும்பினால் அதை ஆதரிக்கும் எனவும் கூறினார். இப்பகுதியை இங்கிலாந்து அல்லது பிரான்சு கைப்பற்றுவதை அமெரிக்கா எதிர்க்கும் என்றும் கூறினார் [13].
ஆரகன் நாட்டுப் பகுதியில் இங்கிலாந்து உடனான போரை முடிவுக்குக் கொண்டு வரப் போல்க் அப்பகுதியை பிரித்துக்கொள்ளும் ஆரகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது வடபகுதிச் சனநாயகக் கட்சியினரைக் கோபமூட்டியது. அவர்கள் இவர் வடபகுதி விரிவாக்கத்தை விடத் தென்பகுதி விரிவாக்கத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார் என்று எண்ணினார்கள்.
1845-46 ன் குளிர்காலத்தில் ஜான் பிரிமாண்டும் (John C. Frémont) சில ஆயதக் குழுக்களும் கலிபோர்னியா பகுதியில் தோன்றினர். அவர் ஆரகன் செல்லும் வழியில் பொருள்கள் வாங்குவதற்காக இங்கு வந்ததாக மெக்சிக்கோ ஆளுனரிடமும் லார்கின்னிடமும் கூறினார். ஆனால் அவர் மக்கள் நெருக்கம் அதிமுள்ள பகுதிகளில் நுழைந்தார். அவர் சாந்தா குருசு, சாலினா பள்ளத்தாக்கு (Santa Cruz and the Salinas Valley) பகுதிகளில் பயணம் செய்து அங்குள்ளவர்களிடம் தன் தாய்க்கு உகந்த கடற்கரையோர வீட்டைப் பார்ப்பதற்காக இப்பகுதிக்கு வந்ததாகக் கூறினார் [14] . இதனால் எச்சரிக்கை அடைந்த மெக்சிக்கோ அதிகாரிகள் அவரைக் கலிபோர்னியாவை விட்டு வெளியேறுமாறு கூறினர். ஆனால் அவர் காவிலன் சிகரத்தில் (Gavilan Peak) கோட்டையைக் கட்டி அங்கு அமெரிக்கக் கொடியை ஏற்றினார். இவரின் செயல்கள் எதிர் மாறான விளைவுகளை உருவாக்கக் கூடியவை என்று லார்க்கின் சொன்னதால் இவர் மார்ச் மாதத்தில் கலிபோர்னியாவை விட்டு வெளியேறினார். சொனோமாவில் நிகழ்ந்த கரடிக் கொடிப் புரட்சியின் போது மீண்டும் கலிபோர்னியாவுக்குள் நுழைந்து புரட்சியாளர்களுக்கு உதவினார். அங்குள்ள அமெரிக்கக் குடியேறிகள் டெக்சாசை முன்மாதிரியாகக் கொண்டு கலிபோர்னியா மெக்சிக்கோவில் இருந்து விடுதலை அடைந்துவிட்டதாக அறிவித்தனர்.
நவம்பர் 10,1845 அன்று[15] போல்க், ஜான் சிலைடெல்லை (John Slidell) மெக்சிக்கோ நகரத்துக்கு அனுப்பி $25 மில்லியன் தருவதாகவும் அதற்கு பதில் ஆல்ட்டா கலிபோர்னியாவையும் சாந்தா வே டே நுயேபோ மெக்சிக்கோவையும் (Santa Fe de Nuevo México) தரும் படியும் டெக்சாசில் ரியோ கிராண்டேவை எல்லையாக ஏற்றுக்கொள்ளும் படியும் கோரினார். அமெரிக்க எல்லையை விரிவாக்க நோக்கமுடையவர்கள் கலிபோர்னியாவைப் பெறுவது அப்பகுதியில் இங்கிலாந்தின் நடவடிக்கைளைத் தடுக்கும் என்றும் பசிபிக் கடல் பகுதியில் செல்லத் துறைமுகம் கிடைக்கும் என்றும் எண்ணினார்கள். மெக்சிக்கோ விடுதலைப்போரின் போது [16]அமெரிக்க மக்களின் உடமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக $3 மில்லியன் கொடுக்க வேண்டியதையும் மேலும் இரு பகுதிகளுக்காக $25 லிருந்து $30 மில்லியன் அதிகம் கொடுக்கவும் சிலைடெலுக்கு போர்க் அனுமதி கொடுத்திருந்தார். [17]
மெக்சிக்கோ இதில் விருப்பம் கொள்ளவில்லை. 1846ல் மட்டும் நான்கு முறை அதிபரும், ஆறு முறை போர் அமைச்சரும், பதினாறு முறை நிதி அமைச்சரும் மாறினார்கள் [18]. மெக்சிக்கோவிலுள்ள அனைத்து அரசியல் பிரிவுகளும் பொது மக்களும் அமெரிக்காவிற்கு நிலத்தைக் கொடுப்பது தேசிய அவமானமாகக் கருதினார்கள்[19]. அமெரிக்காவுடனான நேரடி மோதலை விரும்பாத மெக்சிக்கர்கள் துரோகிகளாகப் பார்க்கப்பட்டனர்[20], துரோகப் பட்டியலில் அதிபரும் அடக்கம். அதிபருக்கு எதிர் அணியில் இருந்தவர்களுக்குச் செல்வாக்குள்ள செய்தி இதழின் ஆதரவு இருந்தது. சிலைடெல் மெக்சிக்கோ நகரத்தில் இருப்பது இழுக்கு என்று பெரும்பாலான மெக்சிக்கர்கள் கருதினர். அவரைத் தான் வரவேற்றது டெக்சாசு இணைப்பைச் சுமுகமாகத் தீர்க்க உதவும் என்று அதிபர் டே கரெரா கருதினார். அதிபர் துரோகி குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து இறக்கப்பட்டார். அதன் பின் தேசியவாத அரசு தளபதி மரினோ பரேடேசு அரில்லாகா பதவிக்கு வந்தார். அவ்வரசு டெக்சாசு மீது மெக்சிக்கோவுக்கு உள்ள உரிமையைப் பகிரங்கமாக அறிவித்தது. [20]சிலைடெல் மெக்சிக்கோ தண்டிக்கப்பட வேண்டும் என்ற முடிவுடன் அமெரிக்காவிற்குத் திரும்பினார். [21]
நுவேசசு பகுதியில் ஏற்பட்ட மோதல்
[தொகு]அதிபர் போல்க் ரியோ கிராண்டே பகுதிக்குத் தளபதி தைலரை படைகளுடன் செல்லக் கட்டளையிட்டார். ரியோ கிராண்டே ஆற்றிலிருந்து நுவேசசு ஆறு வரையான பகுதியை மெக்சிக்கோ உரிமை கொண்டாடியது. 1836ல் ஏற்பட்ட வெலாசுக்கோ உடன்படிக்கைப்படி ரியோ கிராண்டே எல்லை என அமெரிக்கா கூறியது. மெக்சிக்கோ அவ்வொப்பந்தத்தை நிராகரிகத்ததுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் மறுத்துவிட்டது. மேலும் அது டெக்சாசு முழுவதையும் உரிமை கோரியது [22]. மெக்சிக்கோ டெய்லரை நுவேசசு ஆற்றுப்பகுதிக்குச் செல்லுமாறு கோரியதை தைலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ரியோ கிராண்டே ஆற்றங்கரையில் தற்காலிகக் கோட்டையைக் கட்டினார் [23].
தளபதி மரியான அரிசுட்டா தலைமையில் மெக்சிக்கோப் படைகள் ஏப்பிரல் 25, 1846 அன்று 2000 வீரர்களுடன் போருக்குத் தயாராயினர். அவர்கள் 70 வீரர்கள் உடைய அமெரிக்க ரோந்துப் படையைத் தாக்கினார்கள். அத்தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 16 பேர் இறந்தனர் [24].
போர் அறிவிப்பு
[தொகு]போல்க் அமெரிக்க ரோந்து வீரர்கள் கொல்லப்பட்டத்தை அறிந்தார், மேலும் மெக்சிக்கோ அரசு சிலைடெல்லின் அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டதால் போர் நடைபெற வேண்டிய சூழலுக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதாக உணர்ந்தார் [25]. அவர் அமெரிக்கக் கீழவைக்கு மே 11, 1846 அன்று மெக்சிக்கோ அமெரிக்க எல்லையைக் கடந்ததாகவும் அவர்கள் அமெரிக்கப் பகுதியை ஆக்கரமித்துள்ளதாகவும் அமெரிக்கர்களின் இரத்தம் அமெரிக்க மண்ணில் சிந்தப்பட்டதாகவும் கூறினார் [26][27]. போருக்கான அனுமதியை அமெரிக்கக் கீழவை மே 13, 1846 அன்று வழங்கியது. தென் பகுதிச் சனநாயகக் கட்சியினர் இப்போர் அறிவிப்புக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். விக் கட்சியின் 67 உறுப்பினர்கள் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் [28]. ஆனால் இறுதி வாக்கெடுப்பில் 14 விக் கட்சியினர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்[28]. சில மணி நேரங்கள் மட்டுமே தருக்கம் செய்து போருக்கான அனுமதியை அமெரிக்கக் கீழவை மே 13, 1846 அன்று வழங்கியது. மெக்சிக்கோ அதிபர் மரியானோ அரிசுட்டா மே 23 அன்று வெளியிட்ட அறிவிப்பு போர் அறிவிப்பாகக் கருதப்பட்டாலும் மெக்சிக்கோ காங்கிரசு அதிகாரபூர்வமாகச் சூலை 7 அன்றே போர் அறிவிப்பை வெளியிட்டது.
அன்டோனியோ லோபசு தே சாந்தா அனா
[தொகு]அமெரிக்கா மெக்சிக்கோ மீது போர் தொடுப்பதாக அறிவித்ததும் அன்டோனியோ லோபசு தே சாந்தா அனா ( Antonio López de Santa Anna) தனக்கு அதிபர் பதவி மீது ஆசை இல்லை எனவும் முன்பு தான் செய்ததைப் போல மெக்சிக்கோ மீது படையெடுத்து வரும் அன்னியர்களை எதிர்க்கத் தன் இராணுவத் திறமைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் படி வேண்டினார். போரில் நிறைய கூட்டாளிகளைச் சேர்க்கவேண்டிய நெருக்கடியில் இருந்த அதிபர் வாலன்டின் கோமெச் வாரியசு (Valentín Gómez Farías) சாந்தா அனாவை மெக்சிக்கோ திரும்ப அனுமதி தந்தார். மெக்சிக்கோ கடற்பகுதியை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டிருந்தது. அதன் வழியே தன்னை மெக்சிக்கோ அனுப்பினால் நியாயமான விலைக்கு அமெரிக்கா கேட்டிருந்த நிலங்களை விற்பதாக அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டார் [29]. சாந்தா அனா மெக்சிக்கோ திரும்பி இராணுவத்துக்குத் தலைமையேற்றதும் தான் அமெரிக்காவுடன் மறைமுகமாகச் செய்த உடன்படிக்கையை மதிக்க மறுத்துவிட்டார். அவர் தன்னை மீண்டும் அதிபராக அறிவித்துக்கொண்டார். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அவரால் தடுக்க முடியவில்லை.
போருக்கு எதிர்ப்பு
[தொகு]தென் மற்றும் வட பகுதி விக் கட்சியினர் பெரும்பான்மையோர் போரை எதிர்த்தனர்[30]. மக்களாட்சிக் கட்சியினரில் பெரும்பான்மையோர் போரை ஆதரித்தனர் [31]. புதிய நிலப்பகுதிகளைத் தெற்கில் கைப்பற்றுவது நிறைய அடிமை உள்ள பண்ணைகளை வைத்துக்கொள்ள உதவும் என்றும் இது வேகமாக வளரும் வடபகுதியினரை எண்ணிக்கையில் மிஞ்ச உதவும் என்றும் தென் பகுதிச் சனநாயகக் கட்சியினர் கருதினர். வடபகுதியிலிருந்த அடிமை முறைக்கு எதிரானவர்கள் தென்பகுதி அடிமை முறை ஆதரவாளர்களின் செல்வாக்கு அதிகரிப்பதை விரும்பவில்லை. விக் கட்சியினர் தொழில் மயமாக்கலினால் பொருளாதாரம் வளரவேண்டும் என விரும்பினர், நிலப் பிடிப்பு முறையால் அல்ல என்றனர். அவர்களில் மாசெசூசெட்சு உறுப்பினர் சான் குவின்சி ஆடம்சு (John Quincy Adams) முதன்மையானவர். இவர் 1836ல் டெக்சாசு இணைப்பை எதிர்த்தவர், அதே காரணங்களுக்காக 1846லும் போரை எதிர்த்தார். மக்களாட்சிக் கட்சியினர் நிறையப் புதிய இடங்களைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பினர், வடபகுதி மக்களாட்சிக் கட்சியினர் வடமேற்குப் பகுதியில் நிறைய இடங்களைப் பிடிக்கலாம் எனக் கருதினர். சோசுவா கிட்டிங்சு (Joshua Giddings) வாசிங்டன் டி. சி. யில் போர் எதிர்ப்பாளர்களுக்குத் தலைமை தாங்கினார். மெக்சிக்கோவுடனான போர் நியாமற்றது என்று கூறி போருக்கு எதிராக வாக்களித்தார். விக் கட்சியைச் சேர்ந்த ஆபிரகாம் லிங்கன் போருக்கான காரணங்களைத் தெளிவாக விளக்குமாறு கேட்டார். அமெரிக்க ரோந்துப் படைகள் எங்கு தாக்கப்பட்டார்கள் என்று விளக்குமாறு கேட்டார். வடபகுதி அடிமை முறை எதிர்ப்பாளர்கள் போரானது அடிமைகள் உள்ளோரின் பிடியை அடிமைகளின் மீது இன்னும் அதிகமாக்கும் என்றும் அவர்களின் செல்வாக்கை அரசில் அதிகப்படுத்தும் என்றும் குற்றம் சாட்டினார்கள். என்றி தேவிது தோரியு (Henry David Thoreau) போருக்காகத் தான் செலுத்தும் வரி பயன்படக்கூடாது என்று வரி செலுத்தாததால் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் புகழ்பெற்ற குடிசார் ஒத்துழையாமை ( Civil Disobedience) பற்றிக் கட்டுரை எழுதினார். மக்களாட்சிக் கட்சியின் கீழவையாளர் தாவீது வில்மோட் (David Wilmot) வில்மோட் திருத்தத்தைக் கொண்டுவந்தார். அது புதிதாக மெக்சிக்கோவில் இருந்து இணைக்கப்படும் பகுதிகளில் அடிமை முறை சட்டத்துக்கு எதிரானது என்றது. அது அமெரிக்க கீழவையில் நிறைவேறவில்லை. அதனால் வட தென் பகுதி பிரிவுகளுக்கு இடையே மேலும் பகைமை வளர்ந்தது.
நியாயப்படுத்துதல்
[தொகு]ரியோ கிராண்டேவுக்கு வடபகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மெக்சிக்கோ இராணுவத்தின் நடவடிக்கைகள் அமெரிக்கா மீது போர் தொடுத்ததற்குச் சமம் என்று கருதப்பட்டாலும் போர் ஆதரவாளர்கள் ஆல்ட்டா கலிபோர்னியாவின் பெரும் பகுதிகளில் (தற்கால கலிபோர்னியா, நியு மெக்சிக்கோ) மெக்சிக்கோவுக்குச் சிறிய உடமைகளே இருந்தன என்றும் அவர்களுக்கு அப்பகுதியுடன் சிறப்பான தொடர்பு எதுவும் இல்லை என்று கருதினார்கள். மேலும் அப்பகுதியின் நிலம் மெக்சிக்கோவுக்கு உரியது என்று இன்னும் உறுதியாகவில்லை என்றும் அப்பகுதி யாராலும் ஆளப்படாமல் யாராலும் பாதுகாக்கப்படாமல் உள்ளது என்றும் கருதினார்கள். குறிப்பாக அப்பகுதியை அமெரிக்காவின் எதிரியான இங்கிலாந்து இணைத்துக்கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் கருதினார்கள். போல்க் இக்குறிப்பைத் தன்னுடைய மூன்றாவது ஆண்டுச் செய்தியில் டிசம்பர் 7, 1847 அன்று சொன்னார் [32]. மேலும் அச்செய்தியில் தன் அரசு போர் நடைபெறாமல் இருக்க மேற்கொண்ட முயற்சிகளையும் போரை நடத்துவதற்கான காரணத்தையும் கூறினார். அதோடு அமெரிக்கக் குடிகளுக்கு மெக்சிக்கோ தர வேண்டிய நட்ட ஈடு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மெக்சிக்கோவின் பொருளாதாரம் நொடிந்துள்ள நிலையில் அந்நாட்டின் வடபகுதியை இணைத்துக்கொள்வது சரியான நடவடிக்கை என்று கூறினார். இது அமெரிக்கக் கீழவையில் உள்ள மக்களாட்சிக் கட்சியினரின் ஆதரவைப் பெறக் காரணமாக இருந்தது.
இழப்புகள்
[தொகு]டெக்சாசு கோட்டை முற்றுகை மே 3 அன்று தொடங்கியது, பீரங்கிகளால் கோட்டைக் கடுமையாகத் தாக்கப்பட்டது. இத்தாக்குதல் 160 மணி நேரம் நீடித்தது [33] கோட்டையை மெக்சிக்கோ படை வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். கோட்டை மீது நடந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர், இருவர் உயிரிழந்தனர்[33].
மே 8 அன்று கோட்டை முற்றுகையைத் தகர்க்கச் சக்கரி தைலர் 2,400 படை வீரர்களுடன் வந்தார் [34] , ஆனால் அவரைப் பாலோ அல்டோ பகுதியில் அரிசுட்டா 3,400 வீரர்களுடன் வழிமறித்தார். அமெரிக்கர்கள் குதிரை வண்டிகளில் பீரங்கிகளைப் பொருத்தித் தாக்குதல் நடத்தினர். இவற்றைப் பறக்கும் பீரங்கி என்று அழைத்தனர். இது மெக்சிக்கோப் படைகளில் பெரும் சேதம் விளைவித்தது. மெக்சிக்கர்கள் வறண்ட ஆற்றக்கரைக்குப் பின்வாங்கினர். பின்வாங்கும் போது மெக்சிக்கர்கள் சிதறிச் சென்றதால் அவர்களுக்கிடையேயான தகவல் தொடர்பு சிரமமானதாக இருந்தது [33]. ஆற்றங்கரையில் நடந்த மோதலில் இரு நாட்டு வீரர்களும் கைகளால் மோதிக்கொண்டனர். அமெரிக்க வீரர்கள் மெக்சிக்கர்களின் பீரங்களை கைப்பற்றினர் [33] . மெக்சிக்கப் படை வீரர்கள் பலத்த சேதத்துடன் பின்வாங்கினர்.
போர் நடந்த முறை
[தொகு]மே 13, 1846ல் மெக்சிக்கோ மீதான போரை அறிவித்த பிறகு அமெரிக்கா இருமுனைகளில் தாக்குதலை நடத்தியது. இசுடீபன் கார்னி (Stephen W. Kearny) தலைமையில் தரைப்படை வீரர்கள் செப்பர்சன் படை வீட்டிலிருந்தும் லெவன்வொர்த் கோட்டையிலிருந்தும் மேற்கு மெக்சிக்கோவை ஆக்கிரமிக்கப் புறப்பட்டனர். ஜான் இசுலோட் (John D. Sloat) தலைமையில் பசிபிக் கடற்படை பலப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து இப்பகுதிகளைப் பிடிக்கலாம் என்று கருதப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜான் வூல், தைலர் தலைமையில் இரு பிரிவுகள் மெக்சிக்கோவின் மான்டர்ரே (Monterrey) வரை பிடிக்க அனுப்பப்பட்டன.
கலிபோர்னியா முனை
[தொகு]மே 13, 1846ல் போர் அறிவிப்பு வெளியானாலும் அச்செய்தி கலிபோர்னியாவுக்குக் கிடைக்க ஒரு மாத காலமாகியது. 1845 டிசம்பரில் கலிபோர்னியாவில் நுழைந்த அமெரிக்கர் ஜான் பிரிமாண்ட் 60 ஆயுதம் தரித்த ஆட்களுடன் மெதுவாக ஆரகனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க மெக்சிக்கோப் போர் மூளும் என்று கேள்விப்பட்டார். சூன் 15, 1846 அன்று 30 குடியேறிகள் பெரும்பாலோர் அமெரிக்கர்கள் சொனோமா(Sonoma) நகரத்தில் இருந்த மெக்சிக்கர்களின் சிறிய படைவீட்டைக் கைப்பற்றினர். சூன் 23 அன்று அவர்களுடன் ஜான் பிரிமாண்ட் இணைந்து கொண்டார். மெக்சிக்கோவுடன் போர் பற்றியும் சொனொமாவில் நடந்த புரட்சியையும் கேள்விப்பட்ட ஜான் இசுலோட் அல்டா கலிபோர்னியாவின் தலைநகரான மான்டர்ரேவைக் கைப்பற்ற ஆணையிட்டார். சூலை 7 அன்று அங்கு அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டது. சான் பிரான்சிசுகோ சூலை 9 அன்று கைப்பற்றப்பட்டது. சூலை 15 அன்று இசுலோட் தன் பொறுப்பை ராபர்ட் இசுட்டாக்டனிடம் (Robert F. Stockton) ஒப்படைத்தார். பிரிமாண்டின் படைவீரர்களைத் தனக்குக் கீழ் அவர் கொண்டுவந்தார், பிரிமாண்டின் படை 160 வீரர்களாக விரிவடைந்தது. அவர் மான்டர்ரேயில் இசுட்டாக்டனிடம் இணைந்துகொண்டார். அமெரிக்கப்படைகள் சுலபமாக வடகலிபோர்னியாவைக் கைப்பற்றின.
ஆல்ட்டா கலிபோர்னியாவிலிருந்த மெக்சிக்கோத் தளபதி ஒசே காசுட்ரோ (José Castro) ஆளுநர் பியோ பிகோ (Pío Pico) தென் பகுதிக்குத் தப்பி ஓடினர். இசுட்டாக்டனின் படைகள் சான் டியேகோ நோக்கிப் பயணித்தன. அவற்றைச் சான் பீட்ரோவில் நிறுத்தி 50 கடற்படை வீரர்களைக் கரைக்கு அனுப்பி லாசு ஏஞ்சலசு நகரை ஆகத்து 15, 1846 அன்று கைப்பற்றினார்.
இசுட்டாக்டன் சிறு படையை லாசு ஏஞ்சல்சு நகரில் விட்டுச் சென்றார். மெக்சிக்கர்களின் உதவியின்றித் தனியாக இயங்கும் ஒசே மரியா புளோரசு (José María Flores) தலைமையில் கலிபோர்னிய மக்கள் அமெக்கப் படைகளைப் பின்வாங்கச்செய்தனர். 300 அமெரிக்க வீரர்களை வில்லியம் மெர்வின் தலைமையில் (William Mervine) இசுட்டாக்டன் அனுப்பி வைத்தார். ஆனால் அவை டொமிங்கசு உராஞ்சோ (Dominguez Rancho) போரில் தோற்கடிக்கப்பட்டன. அச்சண்டையில் 14 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இசுடீபன் கார்னி தலைமையிலான படை கலிபோர்னியாவை டிசம்பர் 6, 1846 அன்று வந்தடைந்து கலிபோர்னியா ஈட்டி தாங்கிய குதிரைப்படை வீரர்களுடன் சிறு சண்டையில் சான் டியேகோ அருகில் ஈடுபட்டது. அச்சண்டையில் கார்னியின் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். இசுட்டாக்டனின் படைகள் உதவிக்கு வரும் வரை 4 நாட்கள் முற்றுகை நீடித்தது.
அமெரிக்கப் படைகள் டிசம்பர் 29, 1846 அன்று சான் டியேகோ நகரின் வடக்கில் இருந்து புறப்பட்டன [35]. அவை சனவரி 8, 1847 அன்று லாசு ஏஞ்சல்சு நகருக்குள் நுழைந்தன. பிரிமாண்டின் படைகள் அங்கு இணைந்து கொண்டன. அமெரிக்க வீரர்கள் 607 பேரும் கலிபோர்னியர்கள் (Californios) 300 பேரும் ரியோ சான் காப்ரியல் சண்டையில் கலந்துகொண்டனர் [36]. அடுத்த நாள் சனவரி 9, 1847 அன்று அமெரிக்கர்கள் லா மீசா போர்க்களத்தில் வெற்றிபெற்றனர். சனவரி 12 அன்று எஞ்சியிருந்த கலிபோர்னியர்கள் சரணடைந்தனர். இதனுடன் கலிபோர்னியாவில் ஆயத எதிர்ப்பு முடிவுக்கு வந்தது.
பசிபிக் முனை
[தொகு]அமெரிக்கக் கடற்படை மெக்சிக்கோவின் பசிபிக் கடல் பகுதி முழுவதையும் முற்றுகையிட்டது. மே 16, 1847ல் மெக்சிகர்களின் போர் கப்பல் கொர்ரியையும் (Correo) அதற்குத் துணையாக இருந்த பெரும் படகையும் கைப்பற்றியது. இக்கப்பல் அக்டோபர் 19, 1847ல் கொயமாசையும் (Guaymas) நவம்பர் 11, 1847ல் மசுட்லனையும் (Mazatlán) கைப்பற்றத் துணைபுரிந்தது. ஆல்ட்டா கலிபோர்னியாவை தங்களின் உறுதியான பாதுகாப்புக்குள் கொண்டு வந்த பிறகு அமெரிக்காவின் பெரும்பாலான பசிபிக்குக் கடற்படைக் கப்பல்கள் தென் பகுதிக்கு வந்தன. அவை பாகா கலிபோர்னியாவிலுள்ள பெரு நகரங்களைக் கைப்பற்றின, மூவலந்தீவில் (தீபகற்கபம்) இல்லாத மற்ற துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டன. பசிபிக்கு முனை தாக்குதலின் முதன்மையான நோக்கம் மசுட்லனை கைப்பற்றுவதாகும். மெக்சிக்கப் படைகளுக்கான பெரும்பாலான பொருள்கள் மசுட்லனில் இருந்தே சென்றன. கலிபோர்னிய குடாவில் நுழைந்த அமெரிக்கக் கப்பல்கள் லா பாசை கைப்பற்றின, கொயமாசில் இருந்த சிறிய மெக்சிக்கக் கடற்படை அழிக்கப்பட்டது. ஒரு மாத காலத்துக்குள் 30 கப்பல்கள் அழிக்கப்பட்டன அல்லது கைப்பற்றப்பட்டன. மானுவல் பினேடா (Manuel Pineda) தலைமையில் மெக்சிக்கர்கள் இழந்த பல துறைமுகங்களைக் கைப்பற்றனர், சில துறைகள் அவர்கள் கைக்கு வந்தது. இதனால் பல இடங்களில் சிறிய அளவில் சண்டை நடந்தது. என்றி பர்டன் தலைமையில் படைகள் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்களைக் காப்பாற்றிப் பினேடாவைச் சிறைபிடித்தனர்.
வடகிழக்கு மெக்சிக்கோ முனை
[தொகு]பாலோ அல்டோ மற்றும் வறண்ட ஆற்றங்கரையில் (ரெசகா தே லா பால்மா- Resaca de la Palma) ஏற்பட்ட தோல்வி மெக்சிக்கோவின் அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அன்டோனியோ லோபசு தே சாந்தா அனா தன் அரசியல் வாழ்வைப் புதுப்பிக்கவும் கூபாவில் இருந்து நாடு திரும்பவும் பயன்படுத்திக்கொண்டார் [37]. அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையின் வழியே தன்னை மெக்சிக்கோ அனுப்பினால் நியாயமான விலைக்கு அமெரிக்கா கேட்டிருந்த நிலங்களை விற்பதாக அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டார் [38]. சாந்தா அனா மெக்சிக்கோ திரும்பி இராணுவத்துக்குத் தலைமையேற்றதும் தான் அமெரிக்காவுடன் மறைமுகமாகச் செய்த ஒப்பந்தத்தை மதிக்க மறுத்துவிட்டார். அவர் தன்னை மீண்டும் அதிபராக அறிவித்துக்கொண்டார்.
தைலர் தலைமையில் 2,300 படை வீரர்கள் ரியோ கிராண்டேவைத் தாண்டி வந்தனர். அவர்கள் மெட்டமோரசு (Matamoros) நகரத்தையும் பின் கமார்கோ (Camargo) நகரத்தையும் கைப்பற்றினர். பின் மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து மான்டர்ரே நகரத்தை முற்றுகையிட்டனர். அங்கு நடந்த சண்டையில் இருதரப்புக்கும் பலத்த சேதம் உண்டாகியது. அமெரிக்கர்களின் பீரங்கி நகரின் உறுதியான கோட்டைச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. பெட்ரோ தே அம்புடியா (Pedro de Ampudia) தலைமையில் மெக்சிக்கர்கள் டென்ரியா கோட்டைப் பகுதியில் தைலரின் படைகளை முறியடித்தனர் [39].
நகரப் போர் முறைகளில் தேர்ச்சியற்ற அமெரிக்க வீரர்கள் நகரின் திறந்த தெருக்களின் ஊடாக அணிவகுத்துச் சென்றனர். அங்குள்ள வீடுகளில் மறைந்திருந்த மெக்சிக்க வீரர்கள் அவர்களைக் கொன்றனர் [39] . இரு நாட்களுக்குப்பின் அமெரிக்கப்படைகள் நகரப் போர் முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தனர். மெக்சிக்கோ நகரத்தில் போரிட்டுக்கொண்டிருந்த டெக்சாசின் படைகள் தைலரின் தளபதிகளுக்கு மெக்சிக்கோ வீரர்களை அவர்கள் பதுங்கி இருக்கும் வீட்டுக்குள் துளையிட்டு நுழைந்து நேருக்கு நேர் கைகளால் சண்டையிட அறிவுறுத்தினார்கள். டெக்சாசு படை வீரர்கள் இம்முறையில் அம்புடியா வீரர்களை நகரின் நடுவிலிருந்த வளாகத்துக்குத் துரத்தினர் [40]. பீரங்கித் தாக்குதலால் அம்புடியா சமாதானத்துக்கு வந்தார். தைலர் அவர்களை 8 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் மான்டர்ரேவிலிருந்து தென்மேற்கே இருந்த சால்டியோ (Saltillo) நகரை ஒப்படைக்க வேண்டும் என்றும் உடன்படிக்கை மேற்கொண்டார். ஆனால் வாசிங்டனிலிருந்து வந்த நெருக்குதல்களால் உடன்படிக்கையை மீறி உடனடியாக நகரை கைப்பற்றினார். சாந்தா அனா, மான்டர்ரே மற்றும் சால்டியோ நகர் வீழ்ந்ததற்கு அம்புடியாவின் திறமையின்மை காரணம் என்று கூறிப் பெரும் படைக்குத் தளபதியான அவரைச் சிறிய படைக்குத் தலைமை வகிக்க வைத்தார்.
பிப்ரவரி 22, 1847 அன்று 20,000 வீரர்களுடன் சாந்தா அனா 4,500 வீரர்களுடன் இருந்த தைலரை எதிர்க்கக் கிளம்பினார். தைலர் புயுனா விசுடா என்ற மலையின் கணவாயைக் காத்து நின்றார். சாந்தா அனாவின் படையிலிருந்த வீரர்களில் 5,000 பேர் படைப் பணியிலிருந்து விலகிவிட்டதால் 15,000 வீரர்களுடன் மலைப்பகுதியை அடைந்தார். சரணடையச் சொல்லி இவர் கேட்டதை அமெரிக்கப்படைகள் ஏற்கவில்லை. அடுத்த நாள் காலையில் இவர் தன்னுடைய பீரங்கிப்படைகளால் அமெரிக்கர்களை நன்றாகத் தாக்கினார். இவரின் ஒரு காலாட்படைப் பிரிவு மலை மீது ஏறியது. கடும் சண்டை மூண்டது, அமெரிக்கப்படைகள் கடும் சேதத்தைச் சந்தித்தன. அச்சமயத்தில் மெக்சிக்கோ நகரத்தில் பெரும் குழப்பம் நிலவுவதாகக் கேள்விப்பட்டதால் அன்று இரவு பின்வாங்கினார்.
போல்க் தைலரை நம்பவில்லை. மான்ட்ரரே போரில் அவர் எதிரிகளைத் தப்பவிட்டது அவரின் திறமையின்மை என்று கருதினார். அதிபர் பதவிக்குத் தனக்கு போட்டியாக வருவார் என்றும் கருதினார். தைலர், பியுனா விசுடா போரில் அடைந்த வெற்றியைத் தன்னுடைய சாதனையாகக் கூறி 12வது அமெரிக்க அதிபராகப் பதவிக்கு வந்தார்.
வடமேற்கு மெக்சிக்க முனை
[தொகு]மார்ச் 1, 1847ல் அலெக்சாண்டர் டோனிபென் (Alexander W. Doniphan) சிவாவா நகரத்தைக் கைப்பற்றினார். நியூ மெக்சிக்கோவிலுள்ள மக்களைப்போல் அல்லாமல் இந்நகர மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கிலாந்து தூதர் ஜான் பாட் ஆளுனர் டிராய்சு மாளிகை இங்கிலாந்தின் பாதுகாப்பில் உள்ளது என்று சொல்லியும் அவரால் அம்மாளிகையில் டோனிபென் சோதனை நடத்தியதை தடுக்கமுடியவில்லை.
அமெரிக்க வணிகர்கள் அமெரிக்கப்படை சிவாவா நகரத்தில் தங்கி தங்கள் வணிகத்திற்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று விரும்பினார்கள். மேஜர் வில்லியம் கில்பின் மெக்சிக்கோ நகரத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்று கூறி அதற்கு சில இராணுவ அதிகாரிகளின் ஆதரவையும் பெற்றார். ஆனால் டோனிபென் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஏப்பிரல் மாத கடைசியில் டெய்லர் சிவாவா நகரத்தில் இருந்த மிசௌரி வீரர்களைச் சால்டியோ (Saltillo) பகுதியில் இணையுமாறு கட்டளையிட்டார். அமெரிக்க வணிகர்களுக்கு இவர்களைத் தொடர்ந்து செல்லுவது அல்லது சாந்தா வே நகரத்திற்கு திரும்பிச்செல்வது என்ற நிலை ஏற்பட்டது. அமெரிக்க தொல்குடிகள் பரா நகர மக்கள் மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள், குதிரைகள், பணம், கழுதைகள் போன்றவற்றை கவர்ந்து சென்றதால் அவர்கள் டோனிபென்னின் உதவிக்கு விண்ணப்பத்தனர் [41]. வட மெக்சிக்கோ மக்கள் அமெரிக்க தொல்குடிகளான கமான்சி, அபாச்சி மக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு மிகச் சிறிய எதிர்ப்பே இருந்தது. வடமெக்சிக்கோவில் அமெரிக்க படையில் இருந்த சோசய்யா கிரெக், டுராங்கோவின் எல்லையில் இருந்த நியு மெக்சிக்கோவின் பகுதிகளில் யாரும் வசிக்கவில்லை என்று தெரிவித்தார். பண்ணைகள் கவனிப்பாரற்று உள்ளன என்றும் மக்கள் நகரங்களில் மட்டுமே வசிக்கின்றனர் என்றும் தெரிவித்தார் [42].
டபாசுக்கோ
[தொகு]டபாசுக்கோவில் நடந்த முதல் போர்
[தொகு]கமாண்டர் மாத்யு பெர்ரி ஏழு கப்பல்களை டபாசுக்கோ மாகாணத்தின் தென்பகுதி கடற்கரையோரம் கொண்டு சென்றார். அக்டோபர் 22, 1846 அன்று டபாசுக்கோ ஆற்றுப் பகுதியை (தற்போது கிரிச்சால்வா ஆறு (Grijalva River)என அழைக்கப்படுகிறது) அடைந்து பிரண்டரா துறைமுக நகரைக் கைப்பற்றினார். அங்கு சிறு படைவீட்டை விட்டு விட்டுச் சான் யுஆன் பட்டிசுட்டா (தற்போது பீயர்மோசா Villahermosa) நோக்கிச் சென்றார். பெர்ரி, சான் யுஆன் பட்டிசுட்டா நகரை அக்டோபர் 25 அன்று அடைந்து ஐந்து மெக்சிக்கன் கப்பல்களைக் கைப்பற்றினார். அந்நகரின் பாதுகாவலர் அங்குள்ள வீடுகளில் அரண்களை ஏற்படுத்தியிருந்தார். நகரைக் கைப்பற்ற வேண்டுமானால் அதைப் பீரங்கிகளால் தாக்க வேண்டும், அதனால் அதை அப்போது கைவிட்டு நகரை அடுத்தநாள் தாக்கத் தயாரானார்.
அவரின் படைகள் தாக்குதலுக்குத் தயாரான சமயத்தில் மெக்சிக்கப் படைகள் அவர்களைத் தாக்கின. தாக்குதல் அன்று மாலை வரை தொடர்ந்தது, நகர சதுக்கத்தைப் பிடிப்பதற்கு முன் பெர்ரி, பின்வாங்கிப் பிரண்டரா துறைமுக நகருக்குச் செல்ல முடிவெடுத்தார்.
டபாசுக்கோவில் நடந்த இரண்டாம் போர்
[தொகு]சூன் 13, 1847 அன்று பெர்ரி, படைகளை டபாசுக்கோ ஆறு வழியாக நடத்திச் சென்றார். 47 இழுவைப் படகுகளில் 1,173 வீரர்கள் சென்றனர். சூன் 15 அன்று பாம்பு வளைவில் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாயினர். ஆனால் ஆற்றல் மிக்க பீரங்கிகள் இருந்ததால் அத்தாக்குதலை முறியடித்துச் சூன் 16 அன்று சான் யுஆன் பட்டிசுட்டா நகரை அடைந்தார்கள். அடைந்ததும் அந்நகர் மீது குண்டு வீசித் தாக்கத்தொடக்கினர். இரண்டு கப்பல்கள் கோட்டையைத் தாண்டிச் சென்று அங்கிருந்து தாக்கின. தேவீது போர்ட்டர் 660 வீரர்களுடன் கரையிறங்கிக் கோட்டையைக் கைப்பற்றினார், பெர்ரி மற்ற வீரர்களுடன் நகரத்தை மதியம் 2 மணிக்குக் கைப்பற்றினார்.
வின்பீல்ட் இசுக்காட்டின் தாக்குதல்கள்
[தொகு]வெரகுருசு முற்றுகை
[தொகு]டெய்லருக்கு உதவப் படைகளை அனுப்புவதற்குப் பதில் அதிபர் போல்க், வின்பீல்ட் இசுக்காட்டின் தலைமையில் படையைத் துறைமுக நகரான வெரகுருசு (Veracruz) நோக்கிக் கடல் வழியே அனுப்பினார். மார்ச் 9, 1847 அன்று இசுக்காட் கடல் மற்றும் தரை வழியே தாக்குதல் நடத்தும் வீரர்களைக் கொண்டு வெரகுருசு நகரை முற்றுகையிடத் தயாரானார். 12,000 வீரர்கள் போர்தளவாடங்களையும் குதிரைகளையும் தரையில் இறக்கினர். இப்படையில் ராபர்ட் ஈ. லீ, யுலிசீஸ் கிராண்ட் போன்ற அமெரிக்க உள் நாட்டுப்போரில் ஈடுபட்ட பல இராணுவ அதிகாரிகள் இருந்தனர்.
நகரை மெக்சிக்கத் தளபதி யுவான் மார்லோசு (Juan Morales) தலைமையில் 3,400 வீரர்கள் காத்தனர். பெர்ரி மேத்யு தலைமையிலான படையினர் நகரின் பாதுகாப்புச் சுவர்களைக் குண்டுகளால் தாக்கி வலுவிலக்கச்செய்தனர். அமெரிக்கப்படையினரின் கடுமையான தாக்குதல்களாலும் மெக்சிக்கர்களிடம் அதிக அளவு வீரர்கள் இல்லாததாலும் பன்னிரெண்டு நாட்களுக்குப் பின் இந்நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது. இச்சண்டையில் அமெரிக்கத்தரப்பில் 80 பேரும் மெக்சிக்கோ தரப்பில் 180 பேரும் கொல்லப்பட்டனர். இந்நகர முற்றுகையின் போது அமெரிக்க வீரர்களிடையே மஞ்சள் காய்ச்சல் பரவியது.
மெக்சிக்கோ நகரம் நோக்கிய முன்னேற்றம்
[தொகு]மஞ்சள் காய்ச்சலால் அமெரிக்க வீரர்கள் பலர் நலிவுற்றனர் இசுக்காட்டு நலமுடனிருந்த 8,500 வீரர்களுடன் மெக்சிக்கோ நகரை நோக்கிச் சென்றார். சாந்தா அனா அவர்களைப் பாதி வழியிலேயே தடுப்பதற்காகச் செர்ரா கோர்டோ (Cerro Gordo) என்னும் ஊரில் அரண்களை அமைத்து 12,000 வீரர்களுடன் காத்திருந்தார். இசுக்காட்டு 2,600 குதிரைப்படை வீரர்களை முன் அனுப்பி இருந்தார். சாந்தா அனாவின் பீரங்கப்படையினர் அமெரிக்கப்படைகள் வரும் முன்பே சுட்டதால் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தினர்.
அவர்கள் இருப்பிடத்தை அறிந்ததால் இசுக்காட்டு அவ்வழியே வராமல் கடினமான மலைப்பாதையில் ஏறி உயரத்தில் தங்கள் பீரங்கிகளை வசதியான இடத்தில் வைத்து மெக்சிக்கர்களைத் தாக்கினார். அமெரிக்கர்கள் 400 பேரும் மெக்சிக்கர்கள் 1,000 பேரும் இறந்தனர். மெக்சிக்கர்கள் 3,000 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். மெக்சிக்கர்கள் பல களங்களில் தோற்று நிறைய வீரர்களை இழந்திருந்தாலும், விரைவில் தலைநகரத்தை இழக்கும் சூழலில் இருந்தாலும் அமெரிக்கர்களுடன் உடன்பாடு காண இசையவில்லை என்று ஆகத்து 1847 அன்று இசுக்காட்டு படையில் இருந்த கிர்பி இசுமித்து என்பவர் தெரிவித்து இருந்தார்.
பெப்லா
[தொகு]மெக்சிக்கோவின் இரண்டாவது பெரிய நகரான பெப்லாவை (Puebla) மே மாதத்தில் இசுக்காட்டு அடைந்தார். அங்குள்ளவர்களுக்கு சாந்தா அனாவின் மேல் இருந்த வெறுப்பினால் அமெரிக்கப் படைகளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். அந்நகரத்தில் தங்கி தங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொண்டார், பணி ஒப்பந்தம் முடிந்த வீரர்களைத் திரும்ப அனுப்பினார். அவர் மெக்சிகர்களை நல்லபடியாக நடத்தித் தங்களுக்கு எதிராகப் புரட்சி கிளம்பாமல் பார்த்துக்கொண்டார்.
மெக்சிக்கோ நகரத்தைப் பிடித்தல்
[தொகு]கரந்தடிப் போராளிகளால் வெர குருசு நகரத்துடனான இவரின் தொடர்பு இன்னல்களைச் சந்தித்தது. பெப்லா நகரை காப்பதற்குப் பதில் நோயுற்ற காயமுற்றவர்களைப் பாதுகாக்க அங்குச் சிறு படைவீட்டை அமைத்து மெக்சிக்கோ நகரத்தை நோக்கி முன்னேறினார். அந்நகரை வலது புறத்தில் பல இடங்களில் சண்டை மூண்டது. சின்டிரிரசு (Contreras) மற்றும் சியுருபசுகோ (Churubusco) சண்டைகளுக்குச் சிகரம் வைத்தால் போல் இறுதியில் சபோல்டுபெக் சண்டை நடைபெற்றது. சியுருபசுகோ சண்டையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்த போது மட்டும் சண்டை நடைபெறவில்லை. மொலினோ தெல் ரே (Molino del Rey) மற்றும் சபோல்டுபெக் (Chapultepec) சண்டைகளின் இறுதியில் அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ நகரக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து நகரைக் கைப்பற்றினர்.
சாந்தா அனாவின் இறுதி தாக்குதல்
[தொகு]செப்டம்பர், 1847ல் அமெரிக்கர்களை முறியடிக்கச் சாந்தா அனா முயற்சி செய்தார். அவர் அமெரிக்கர்களுக்கு உதவிகள் கடற்கரையிலிருந்து கிடைப்பதைத் தடுத்தார், சாக்குயின் ரியா (Joaquín Rea) பெப்லா நகரை முற்றுகையிட்டார். வெரகுருசில் இருந்து உதவிப்படைகள் சோசப்பு லேன் தலைமையில் வருவதைத் தடுக்கச் சாந்தா அனா தவறிவிட்டார். பெப்லா லேனால் காப்பாற்றப்பட்டது. அக்டோபர் மாதத்தில் குமன்ட்லா (Huamantla) சண்டையில் சாந்தா அனா அடைந்த தோல்வியே அவரின் இறுதிச் சண்டையாக இருந்தது. சாந்தா அனாவின் தோல்வியால் புதிய மெக்சிக்க அரசின் அதிபர் மானுல் தே லா பெனா (Manuel de la Peña y Peña), எர்ரேராவிடம் (José Joaquín de Herrera) பொறுப்பை ஒப்படைக்கும் படி கூறி அவரைப் பதவியை விட்டு விலக்கினார்.
கரந்தடிப் போர் முறைக்கு எதிரான தாக்குதல்
[தொகு]மே மாதத்திலிருந்து அமெரிக்கர்களின் வெரகுருசு நகருடன் உள்ள தகவல் தொடர்புக்கு மெக்சிக்கர்கள் கரந்தடிப் போர்முறையில் இன்னல்களை ஏற்படுத்தினர். மெக்சிக்கோ நகரத்தை அமெரிக்கர்கள் பிடித்தவுடன் இசுக்காட்டு தகவல் தொடர்புக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க மெக்சிக்கோ நகரத்திலிருந்து வெரகுருசு நகருக்கு இடையில் படை பலத்தை அதிகமாக்கினார். சோசப்பு லேன் தலைமையில் கரந்தடிப் போராளிகளைச் சமாளிக்கப் புதிய படையணியை அமைத்தார். அமெரிக்கர்களின் வண்டி குழுக்கள் 1,300 வீரர்கள் துணையுடன் செல்ல உத்தரவிட்டார். சில வெற்றிகள் அமெரிக்கர்களுக்குக் கிடைத்தாலும் அவர்களால் கரந்தடிப் போராளிகள் அமெரிக்க வண்டி தொடர்களைத் தாக்குவதை முற்றாகத் தடுக்க முடியவில்லை. அமெரிக்கர்களுக்கும் மெக்சிக்கர்களுக்கும் இடையே மார்ச் மாதம் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டாலும் போராளிகளின் தாக்குதல் ஆகத்து வரை நீடித்தது [43].
குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை
[தொகு]அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே பிப்ரவரி 2, 1848 ல் ஏற்பட்ட குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கைப்படி மெக்சிக்கோ டெக்சாசின் முழு உரிமையை அமெரிக்காவினுடையது என்பது ஏற்றது. ரியோ கிராண்டே எல்லையாகக் குறிக்கப்பட்டது. உடன்படிக்கைப்படி தற்கால கலிபோர்னியா, நெவாடா, நியூ மெக்சிக்கோ, யூட்டா; அரிசோனா, கொலராடோவின் பெரும் பகுதிகள்; டெக்சாசு, கேன்சசு, வயோமிங், ஓக்லகோமா ஆகியவற்றின் பகுதிகள் அமெரிக்காவுக்குக் கிடைத்தது. இதற்கு இழப்பீடாக மெக்சிக்கோ $15 மில்லியனைப் பெற்றுக்கொண்டது[44]. இது போர் ஏற்படுவதற்கு முன் அமெரிக்கா வழங்குவதாகச் சொன்ன தொகையில் பாதிக்கும் குறைவாகும்[45]. மெக்சிக்கோ விடுதலைப்போரின் போது அமெரிக்க மக்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக $3 மில்லியன் கொடுக்க வேண்டியதையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டது [16].
ஜெபர்சன் டேவிசு வடகிழக்கு மெக்சிக்கோவின் பெரும் பகுதிகளை அமெரிக்கா பெறுவதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் அது 44-11 என்ற வாக்குகளில் தோற்றது. பெரும்பாலான சனநாயக்கட்சி மேலவை உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்தார்கள் [46]. வட கரொலைனாவின் விக் கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ஜார்ச் எட்மண்ட் நியு மெக்சிக்கோவையும் கலிபோர்னியாவையும் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு வந்த தீர்மானம் 35-15 என்ற வாக்குகளில் தோற்றது. புதிதாகப் பெறப்பட்ட ரியோ கிராண்டேவுக்கு மேற்குப் புறமுள்ள இடங்கள் மெக்சிக்கோ கையளித்தவை என்று அமெரிக்கர்களால் குறிப்பிடப்பட்டது. இந்த உடன்படிக்கையை ஏற்பதற்கு முன் அமெரிக்க மேலவை இரண்டு திருத்தங்களை அவ்வுடன்படிக்கையின் உட்கூறு 9, உட்கூறு 10 இரண்டையும் திருத்தியது.
நிறைவேறிய உடன்படிக்கையின் உட்கூறு 11 மெக்சிக்கோவிற்கு ஆதரவாக இருந்தது. இதன் படி வட மெக்சிக்கோ மீது படையெடுத்து அதை நாசப்படுத்திய கமாச்சிக்களையும் அப்பாச்சிகளையும் அமெரிக்கா தடுக்கவேண்டும் என்றும் தவறினால் அவர்களால் ஏற்படும் சேதத்துக்கு உரிய பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தர வேண்டும் [47] . எனினும் அமெரிக்கத் தொல்குடிகளின் தாக்குதல் பல பத்தாண்டுகளுக்கு நிற்கவில்லை. 1849ல் வாந்திபேதி தொற்றால் கமாச்சிக்கள் பாதிப்படைந்து அவர்களின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்தது [48]. 1850ல் ராபர்ட் லெட்சர் உடன்படிக்கையின் உட்கூறு 11 ஆல் அமெரிக்க ஒட்டு மொத்த வருவாய் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் இதிலிருந்து அமெரிக்கா வெளியேறவேண்டும் என்றும் கூறினார் [49]. கேட்சுடன் நிலவாங்கலின் போது உட்கூறு 11 ல் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது [50].
எல்லை மாற்றம்
[தொகு]டெக்சாசு பிரிவதற்கு முன்பு மெக்சிக்கோவின் நிலப்பரப்பு ஏறக்குறைய 1,700,000 சதுர மைல் (4,400,000 சதுர கிமீ) இருந்தது. 1848ல் இது 800,000 சதுர மைலுக்கு குறைவாக இருந்தது. 1853 ல் கேட்சுடன் நிலவாங்கலின் போது மேலும் 32,000 சதுர மைல் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. இதனால் மெக்சிக்கோவின் நிலப்பரப்பு 55% (900,000 சதுர மைல்) குறைந்தது.
மேற்கு ஐரோப்பாவின் அளவிற்கான நிலத்தை அமெரிக்கா கையப்படுத்தியது ஆனால் அவற்றில் மிகக் குறைந்தே மக்களே இருந்தனர். மேல் கலிபோர்னியாவில் (அல்டா கலிபோர்னியா) 14,000 மக்களும் நியூ மெக்சிக்கோவில் 60,000 மக்களும் இருந்தனர். இப்பகுதிகளில் நவாசோ, கோபி (Navajo, Hopi) மற்றும் பல இனங்களைச் சேர்ந்த அமெரிக்கத் தொல்குடிகள் பெருமளவில் வசித்தனர். புதிதாகக் கையகப்படுத்திய நிலங்களில் பெருமளவு அமெரிக்கர்கள் குடியேறினர். அவர்கள் அங்கு இருந்த மெக்சிக்கோவின் சட்டத்தை வெறுத்தார்கள் அதனால் புதிய சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் சில பழைய சட்டங்களை அவர்கள் ஏற்று புது சட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள்.
போரால் அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்பு
[தொகு]விக் கட்சியினர், அடிமைமுறை எதிர்ப்பாளர்கள் தொடக்கத்தில் இப்போரை எதிர்த்தாலும் இப்போர் அமெரிக்கர்களை ஒன்றுபடுத்தியது, இப்போர் தன்னார்வலர்களைக் கொண்டே பெரும்பாலும் நடத்தப்பட்டது. படை வீரர்களின் எண்ணிக்கை 6,000 லிருந்து 115,000 ஆக அதிகரித்தது. இவர்களில் 1.5 % சண்டையில் இறந்தனர், 10% பேர் நோய் தாக்குதலில் இறந்தனர், 12% பேர் காயமுற்றோ, நோய்தாக்குதலினாலோ படையிலிருந்து விலக்கப்பட்டனர். போர் முடிந்தபிறகும் பல ஆண்டுகளுக்குப் போரின் போது நோய் கிருமிகள் தொற்றல் ஏற்பட்டதால் குறிப்பிடத்தகுந்த அளவு வீரர்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதனால் ஒப்பீட்டளவில் இது வரை நடந்த போர்களில் இதிலேயே அமெரிக்கா அதிக வீரர்களைப் பலி கொடுத்தது.
போரின் போது மெக்சிக்கோ முழுவதையும் அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. போரில் ஈடுபட்டு அமெரிக்கா திரும்பிய வீரர்கள் அதை ஆதரிக்கவில்லை. அடிமை முறைக்கு எதிரானவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்கள் புதிதாகக் கைப்பற்றப்பட்ட நிலங்களில் அடிமை முறை கூடாது என்று போராடினர் [51]. 1847ல் அமெரிக்கக் கீழவையில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவை இத்தீர்மானத்தை ஒத்திப்போட்டது, குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையில் இத்தீர்மானத்தை இணைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
1880ல் குடியரசு கட்சியின் பரப்புரைக் கையேடு இப்போர் ஊழல்களின் பிறப்பிடம் என்றும் அமெரிக்க வரலாற்றில் துக்ககரமானது என்றும் கூறியது [52]. இப்போரானது அமெரிக்க , மெக்சிக்க மக்கள் மீது புதிய நிலப்பரப்புகளைப் பிடிக்க ஆசை கொண்ட அதிபர் போல்க்காலும் அடிமை முறையை ஆதரிக்கும் குழுவாலும் திணிக்கப்பட்டது என்று கூறியது.
19ம் நூற்றூண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட இப்போர் அமெரிக்காவைப் படைபலம் மிக்க நாடாக உயர்த்தியதில் குறிப்பிடத்தக்கது. இப்போரினால் அடிமை முறைக்குத் தீர்வு காணமுடியவில்லை என்ற போதிலும் மக்களிடையே அது பற்றிய பெரும் தாக்கத்தையும் சர்ச்சையையும் உண்டாக்கியது. இது உள் நாட்டுப் போர் மூள்வதற்கும் காரணமாக இருந்தது. அமெரிக்க உள் நாட்டுப்போரில் பங்குபெற்ற பல இராணுவ அதிகாரிகள் இப்போரில் இளநிலை அதிகாரிகளாகப் பணியாற்றினர். யுலிசீஸ் கிராண்ட், ஜார்ச் மெக்லன்னன், அம்புரோசு பர்ன்சைடு, இசுடோன்வால் சாக்சன், ஜேம்சு லாங்இசுடிரீட், சோசப் சான்சுடன் ராபர்ட் ஈ. லீ, ஜார்ச் மீட், வில்லியம் ரோசுகிரேன்சு, வில்லியம் செர்மன், இசுடெர்லிங் பிரைசு, பிரேக்சுடன் பிரேங் மற்றும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புகளின் அதிபர் ஜெபர்சன் டேவிசு போன்றோர் இப்போரில் பங்குபெற்ற குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மேற்குப்பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மேற்கு நோக்கிப் பெருமளவிலான மக்கள் குடிபெயர்ந்தனர். அத்திலாந்திக்குப் பெருங்கடலில் இருந்து பசிபிக் கடல் வரை நாடு விரிவடைந்திருந்ததால் கிழக்கு கரையிலிருந்து மேற்கு கரைக்குச் செல்லப் புதிதாக இருப்புப்பாதை போடப்பட்டது. மேலும் அமெரிக்கத் தொல்குடியினருடனான போருக்கும் அது வழிகோலியது. சபோல்டுபெக் சண்டையில் ஆறு இளம் வீரர்கள் அமெரிக்கர்களைக் கடைசி வரை எதிர்த்ததின் நினைவாக நினைவுச்சின்னம் உள்ளது. மெக்சிக்கர்கள் நாட்டுப்பற்றுக்கு இந்த நினைவிடம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது. போர் முடிந்து ஓர் நூற்றாண்டு கழித்து மார்ச்சு 7, 1947 அன்று அமெரிக்க அதிபர் கேரி டிருமென் இவ்விடத்தில் மௌன அஞ்சலி செலுத்தியது, இவ்நினைவிடம் மெக்சிகர்களின் இடத்தில் பெற்றுள்ள சிறப்பைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1846 only.
- ↑ The American Army in the Mexican War: An Overview, PBS, March 14, 2006, பார்க்கப்பட்ட நாள் May 13, 2012
- ↑ The U.S.-Mexican War: Some Statistics, Descendants of Mexican War Veterans, August 7, 2004, பார்க்கப்பட்ட நாள் May 13, 2012
- ↑ The Organization of the Mexican Army, PBS, March 14, 2006, பார்க்கப்பட்ட நாள் May 13, 2012
- ↑ See Rives, The United States and Mexico, vol. 2, p. 658
- ↑ "The Annexation of Texas" U.S. Department of State. http://history.state.gov/milestones/1830-1860/TexasAnnexation பரணிடப்பட்டது 2012-09-15 at the வந்தவழி இயந்திரம், Retrieved July 6, 2012
- ↑ Delay, Brian "Independent Indians and the U.S. Mexican War" The American Historical Review, Vol 112, No. l (Feb 2007), p 35
- ↑ DeLay, Brian. The War of a Thousand Deserts New Haven: Yale U Press, 2008, p.286
- ↑ Rives, ''The United States and Mexico'' vol. 2, pp 45–46. Books.google.com. September 28, 2007. பார்க்கப்பட்ட நாள் May 28, 2011.
- ↑ Rives, pp. 48–49
- ↑ http://www.jstor.org/pss/25139106 Proposals for the colonization of California by England, California Historical Society Quarterly, 1939
- ↑ 12.0 12.1 See "Republic of Texas"
- ↑ 13.0 13.1 Rives, vol. 2, pp. 165–168
- ↑ Rives, vol. 2, pp. 172–173
- ↑ Smith (1919) p. xi.
- ↑ 16.0 16.1 Jay (1853) p. 117.
- ↑ Jay (1853) p. 119.
- ↑ Donald Fithian Stevens, Origins of Instability in Early Republican Mexico (1991) p. 11.
- ↑ Miguel E. Soto, "The Monarchist Conspiracy and the Mexican War" in Essays on the Mexican War ed by Wayne Cutler; Texas A&M University Press. 1986. pp. 66–67.
- ↑ 20.0 20.1 Brooks (1849) pp. 61–62.
- ↑ Mexican War from Global Security.com.
- ↑ David Montejano (1987). Anglos and Mexicans in the Making of Texas, 1836-1986. University of Texas Press. p. 30.
- ↑ Justin Harvey Smith (1919). The war with Mexico vol. 1. Macmillan. p. 464.
- ↑ K. Jack Bauer (1993). Zachary Taylor: Soldier, Planter, Statesman of the Old Southwest. Louisiana State University Press. p. 149.
- ↑ Smith (1919) p. 279.
- ↑ Faragher, John Mack, et al., eds. Out Of Many: A History of the American People. Upper Saddle River: Pearson Education, 2006.
- ↑ "Message of President Polk, May 11, 1846". Archived from the original on ஜூலை 25, 2008. பார்க்கப்பட்ட நாள் July 20, 2008.
Mexico has passed the boundary of the United States, has invaded our territory and shed American blood upon the American soil. She has proclaimed that hostilities have commenced, and that the two nations are now at war.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 28.0 28.1 Bauer (1992) p. 68.
- ↑ see A. Brook Caruso: The Mexican Spy Company. 1991, p. 62-79
- ↑ Jay (1853) pp. 165–166.
- ↑ Jay (1853) p. 165.
- ↑ "James K. Polk: Third Annual Message—December 7, 1847". Presidency.ucsb.edu. Archived from the original on ஜனவரி 20, 2013. பார்க்கப்பட்ட நாள் May 28, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 33.0 33.1 33.2 33.3 Brooks (1849) p. 122.
- ↑ Brooks (1849) p. 121.
- ↑ Brooks (1849) p. 257.
- ↑ Bauer (1992) pp. 190–191.
- ↑ Bauer (1992) p. 201.
- ↑ Rives, George Lockhart, The United States and Mexico, 1821–1848: a history of the relations between the two countries from the independence of Mexico to the close of the war with the United States, Volume 2, C. Scribner's Sons, New York, 1913, p.233. Books.google.com. September 28, 2007. பார்க்கப்பட்ட நாள் May 28, 2011.
- ↑ 39.0 39.1 "Urban Warfare". Battle of Monterrey.com. Archived from the original on ஜூலை 7, 2011. பார்க்கப்பட்ட நாள் May 28, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Dishman, Christopher (2010). A Perfect Gibraltar: The Battle for Monterrey, Mexico. University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8061-4140-9.
- ↑ Roger D. Launius (1997). Alexander William Doniphan: portrait of a Missouri moderate. University of Missouri Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8262-1132-3.
- ↑ Hamalainen, Pekka. The Comanche Empire. New Haven: Yale University Press. p. 232.
- ↑ Carney, Stephen A. (2005), U.S. Army Campaigns of the Mexican War: The Occupation of Mexico, May 1846-July 1848 (CMH Pub 73-3), Washington: U.S. Government Printing Office, pp. 30–38, archived from the original on 2017-06-09, பார்க்கப்பட்ட நாள் 2013-10-27
- ↑ Smith (1919) p. 241.
- ↑ Mills, Bronwyn. U.S.-Mexican War. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4932-7.
- ↑ Rives, George Lockhart (1913). The United States and Mexico, 1821–1848. C. Scribner's Sons. pp. 634–636.
- ↑ "Article IX". Treaty of Guadalupe Hidalgo; February 2, 1848. Lillian Goldman Law Library.
- ↑ Hamalainen, 293-341
- ↑ DeLay, Brian (2008). War of a thousand deserts: Indian raids and the U.S.-Mexican War. New Haven: Yale University Press. p. 302.
- ↑ "Gadsden Purchase Treaty : December 30, 1853". Lillian Goldman Law Library.
- ↑ John Douglas Pitts Fuller, ''The Movement for the Acquisition of All Mexico, 1846–1848'' (1936). Books.google.com. June 12, 2008. பார்க்கப்பட்ட நாள் May 28, 2011.
- ↑ Mexican–American War description from the Republican Campaign Textbook.