விக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக் கட்சி (Whig Party) ஐக்கிய அமெரிக்காவில் 19வது நூற்றாண்டில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். ஜாக்சனிய மக்களாட்சி ஆண்டுகளில் இது செல்வாக்குடன் இருந்தது. நான்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாவர். இரு கட்சி அமைப்பிற்கு இது தேவையாக இருந்தது. 1833 முதல் 1856 வரை[1] அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஆன்ட்ரூ ஜாக்சனையும் பின்னர் அவரது மக்களாட்சிக் கட்சி கொள்கைகளையும் எதிர்த்து இக்கட்சி இயங்கியது. விக் கட்சியினர் நிர்வாகத் துறையை விட நாடாளுமன்றத்திற்கே முதன்மை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையை ஆதரித்தனர். நவீனமயமாக்கல் திட்டங்களை விரும்பினர். 1776இல் விடுதலைக்காகப் போராடிய அமெரிக்க விக்குகளை நினைவுக்கூறும் விதமாக இக்கட்சிக்கு விக் கட்சி எனப் பெயரிடப்பட்டது. அக்காலத்தில் "விக்" என்ற சொல் எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் மக்களைக் குறிக்கப் பயன்பட்டது.[2] விக் கட்சியில் தானியல் வெப்சுடர், வில்லியம் ஹென்றி ஹாரிசன், கென்டக்கியின் என்றி கிளே போன்றத் தேசியத் தலைவர்கள் இருந்துள்ளனர். மேலும் படைத்துறை சாதனையாளர்களான சக்கேரி டெய்லர், வின்பீல்டு இசுகாட் போன்றோரும் இருந்துள்ளனர். ஆபிரகாம் லிங்கன் இலினொய் மாநில விக் தலைவராவார்.

இரு பத்தாண்டுகள் செயலாக்கத்தில் இருந்த விக் கட்சியின் இரு வேட்பாளர்கள், ஹாரிசன், டெய்லர், குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருமே பதவிக்காலத்தில் உயிரிழந்தனர். ஹாரிசனின் மறைவிற்குப் பிறகு ஜான் டைலர் குடியரசுத் தலைவரானார்; ஆனால் இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். டெய்லரின் மறைவை அடுத்து பதவியேற்ற மில்லர்டு பில்மோர் விக் கட்சியிலிருந்து இந்த உயரிய தேசியப் பதவியேற்ற கடைசி நபராகும்.

அடிமைத்தனத்தை விரிவுபடுத்தும் பிரச்சினையில் கட்சி உடைந்தது. அடிமை ஒழிப்புக் கோட்பாடு ஆதரவுக் குழு நடப்பு குடியரசுத் தலைவராக இருந்த பில்மோரை 1852ஆம் ஆண்டு தேர்தலுக்கு தங்கள் கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதை வெற்றிகரமாக தடுத்தனர். மாறாக கட்சி தளபதி வின்பீல்டு இசுகாட்டை, வேட்பாளராக நிறுத்தி தோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சித் தலைவர்கள், லிங்கன் உட்பட, அரசியலை விட்டு விலகினர் அல்லது கட்சி மாறினர். 1856ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எவ்வித செல்வாக்குமில்லாத விக் கட்சி மில்லர்டு பில்மோரை தனது வேட்பாளராக நியமித்தது. இதுவே அக்கட்சியின் கடைசி மாநாடாக இருந்தது.[3]


மேற்சான்றுகள்[தொகு]

  1. Holt (1999), p. 231.
  2. Holt (1999), pp. 27–30.
  3. http://www.ourcampaigns.com/RaceDetail.html?RaceID=229111