உள்ளடக்கத்துக்குச் செல்

அடிமை ஒழிப்புக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானும் மனிதன், உடன்பிறப்பு இல்லையா? என்னும் சொற்றொடர் பொறிக்கப்பட்ட பதக்கம்.
அடிமை ஒழிப்பை ஆதரித்து யோசியா வெட்ஜ்வுட் என்னும் கலைஞர் உருவாக்கியது. ஆண்டு: 1787
மாசசூசட்சு மாநில அடிமை ஒழிப்புக் கழகத்திற்காக சுமார் 1850இல் உருவாக்கப்பட்ட காணிக்கைப் பெட்டி.
"வாரம் தோறும் அளிக்க வேண்டிய நன்கொடையை மறக்கவேண்டாம்" என்னும் சொற்களுக்குக் கீழே காணும் விவிலியக் கூற்று:
நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்
(தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 16:1-2.)

அடிமை ஒழிப்புக் கோட்பாடு (Abolitionism) என்பது சட்டப்படியோ அதற்கு மாறாகவோ நிலவுகின்ற அடிமை முறையைத் தகர்த்தெறிவதற்கான இயக்கம் ஆகும்.

மேலை நாடுகளில்

[தொகு]

மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காக்களிலும் அடிமை ஒழிப்புக் கோட்பாடு என்பது ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விலைக்கு வாங்குதலையும் விற்றலையும் தகர்த்தெறிந்து, அவர்களை விடுதலை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட வரலாற்று இயக்கம் ஆகும்.

எசுப்பானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்ற குடியேற்றக்காரர்கள் தொடக்கத்தில் தாம் குடியேறிய நாட்டு முதல்குடிகளை அடிமைகளாக்கினார்கள். ஆனால் புனித தோமினிக் (ஆசீர்வாதப்பர்) சபைத் துறவியான பார்த்தொலோமே தெ லாஸ் காஸாஸ் (Bartolomé de las Casas) போன்றோர் அடிமை ஒழிப்புக்காகப் பாடுபட்டனர்.

பார்த்தலோமே தெ லாஸ் காஸாஸ் மேற்கொண்ட முயற்சியால் எசுப்பானிய அரசு குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டங்களை 1542இல் இயற்றியது. ஆயினும் 1545 அளவில் மேற்கூறிய சட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

இங்கிலாந்தில்

[தொகு]

ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கருதியது கிறித்தவ சமயக் கொள்கைக்கு எதிரானது என்று குவேக்கர் (Quakers) இயக்கமும், நற்செய்திக் கிறித்தவக் குழுக்களும் (evangelical religious groups)17ஆம் நூற்றாண்டில் அறிவித்து, அடிமை முறையைக் கண்டித்தன.

வட அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட "பதின்மூன்று குடியேற்றங்களில்" (Thirteen Colonies) அடிமை முறை சட்டத்திற்கு மாறானது என்று 18ஆம் நூற்றாண்டில் முதல் பெரும் புத்துணர்ச்சியின் (First Great Awakening) பின்னணியில் அறிவிக்கப்பட்டது.

அடிமை முறை மனித உரிமை மீறல் ஆகும் என்று பகுத்தறிவு வாதக் கோட்பாட்டினர் அறிவொளி இயக்கக் காலத்தில் (Age of Enlightenment) குற்றம் சாட்டினர்.

ஜேம்சு சோமர்செட் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு

[தொகு]

1772இல் இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அது "சோமர்செட் வழக்கு" (Somersett's case) [1] என்று வரலாற்றில் அறியப்படுகிறது.

ஜேம்சு சோமர்செட் என்னும் பெயர்கொண்ட அமெரிக்க அடிமையைச் சார்லசு ஸ்டூவர்ட் என்னும் இங்கிலாந்து அதிகாரி அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றமாய் இருந்த மாசசூசட்சு மாகாணத்தில் விலைக்கு வாங்கி, 1769இல் இங்கிலாந்துக்குக் கொண்டுவந்திருந்தார். 1771இல் சோமர்செட் தம் எசமானரின் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டார். அவரைக் கண்டுபிடித்த எசமான் அவரை ஒரு கப்பலில் கைதியாகச் சிறைப்படுத்தி வைத்தார். அக்கப்பல் பிரித்தானியக் குடியேற்றமாயிருந்த ஜமேய்க்கா நாடு சென்றதும் அங்கு ஒரு பண்ணையில் அடிமை வேலை செய்ய அவரை விற்றுவிடுவதாகத் திட்டம் வைத்திருந்தார்.

சோமெர்செட் கிறித்தவராகத் திருமுழுக்குப் பெற்றிருந்தபோது அவருடைய ஞானப்பெற்றோராக நின்றதாகக் கூறிய மூன்றுபேர் சோமர்செட்டுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவரை நீதிமன்றத்திற்குக் கொணர வேண்டும் என்றும், அவரைச் சிறைப்படுத்தியது சட்டத்துக்கு ஏற்புடையதா என்று தீர்ப்பு வழங்கவும் கோரினர்.

வழக்கை விசாரித்த லார்டு மான்சுஃபீல்டு (Lord Mansfield) என்பவர் அடிமை முறை பிரித்தானியக் குடியேற்றங்களில் நடைமுறையில் இருந்தாலும், இங்கிலாந்தின் சட்டத்துக்கு முரணானது, ஒருவரை அவருடைய விருப்பத்துக்கு எதிராக ஒப்பந்தம் ஏற்க கட்டாயப்படுத்த சட்டம் இசையவில்லை என்று கூறி, சோமர்செட் என்னும் அடிமையை விடுதலை செய்தார்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு மனித உரிமை அடிப்படையில் அல்லாமல், சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்றாலும், வரலாற்றுச் சிறப்பான ஒன்றாக மாறியது. இங்கிலாந்திலும் அதன் பிறகு அதன் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறை ஒழிக்கப்படுவதற்கு இத்தீர்ப்பு வழிகோலியது.

அடிமை முறை சட்ட விரோதமானது என்று 1772இல் தீர்ப்பு வழங்கிய இங்கிலாந்து நீதிபதி லார்டு மான்சுஃபீல்டு
"மாண்புமிகு நீக்ரோ" என்னும் சிறப்புப் பெயர் பெற்ற இஞ்ஞாசி சாஞ்சோ (சுமார் 1729-1780). ஆப்பிரிக்கர்களின் மனிதப் பண்புக்கும், அடிமைமுறையின் அநீதிக்கும் ஒரு குறியீடு போல மாறியவர் இவர்.

அடிமை முறை ஒழிப்பு வரலாற்றுக் கட்டங்கள்

[தொகு]

புரட்சிக் கால பிரான்சு நாட்டில் 1789ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், புரட்சியைத் தடம் திருப்பிய நெப்போலியன் பதவியைக் கைப்பற்றி, அடிமை முறையைப் பிரான்சியக் குடியேற்ற இடங்களில் மீண்டும் நிறுவினார்.

பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஹெயிட்டி, பிரான்சுக்கு எதிராக எழுந்து, விடுதலைப் போர் நிகழ்த்தி, சுதந்திரம் பெற்று, 1804இல் தனி நாடாக மாறியதும் அடிமை முறையை ஒழித்தது.

பிரித்தானிய நாடு, தன் குடியேற்ற நாடுகளில் ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து விற்பது சட்டத்துக்கு முரணானது என்று 1808இல் சட்டம் இயற்றி, அடிமை விற்பனைக்குத் தடைவிதித்தது.

அதைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளும் 1808இல் அடிமை வணிகத்துக்குத் தடை போட்டது.

அடிமை முறை பிரித்தானியப் பேரரசு முழுவதிலும் ஒழிக்கப்பட்டது 1833ஆம் ஆண்டில் ஆகும். அதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் பிரான்சு நாடும் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லாக் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறையை ஒழித்தது.

ஐக்கிய அமெரிக்காவில், அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றதும், 1865ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அது சட்டப்பூர்வமாக அமெரிக்க நாட்டுச் சட்டத்தின் 13ஆம் திருத்தமாக நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு ஐரோப்பாவில், வல்லாக்கியா (Wallachia) மற்றும் மொல்டாவியா (Moldavia) பகுதிகளில் உரோமா மக்கள் அடிமைகளாக்கப்பட்டிருந்ததை எதிர்த்து இயக்கங்கள் எழுந்தன. அதுபோலவே, உருசியா நாட்டில் "செர்ஃப் நிலை" (serfdom) என்னும் கொத்தடிமை முறை 1861இல் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. 1948இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அடிமை முறை சட்டத்துக்கு மாறானது என்று உலக மனித உரிமைகள் சாற்றுரை என்னும் ஏட்டின் வழியாகப் பறைசாற்றியது.

அடிமை முறையை ஒழித்த இறுதி நாடு: மூரித்தானியா

[தொகு]

வடமேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மூரித்தானியா என்னும் நாடு அடிமை முறை சட்டத்துக்கு முரணானது என்று 1981இல் அறிவித்துச் சட்டம் இயற்றியது. இந்நாடுதான் உலகில் கடைசியாக அடிமை முறையைச் சட்டப்பூர்வமாக ஒழித்த நாடு ஆகும்.[2]

அடிமை முறையின் மாற்று வடிவங்கள்

[தொகு]

இன்று உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில் குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களை அடிமைகளாக விற்பதும் வாங்குவதும் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சட்டங்களும் அடிமை முறையைக் கண்டனம் செய்கின்றன.

ஆயினும், வேலை வாங்கும் நோக்கத்துடன் குழந்தைகளும் வளர்ந்தவர்களும் ஓரிடத்திலிருந்து அல்லது நாட்டிலிருந்து கடத்திக் கொண்டுபோகப்படுவது இன்றும் தொடர்கிறது. அவ்வாறே, பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்த பெண்களையும் சிறாரையும் விலைபேசும் கொடுமையும் நிலவுகிறது.

இக்கொடுமைகளின் காரணமாகப் பல்லாயிரக் கணக்கான சிறார்களும் வளர்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

பிரித்தானிய இந்தியாவும் அடிமை முறையும்

[தொகு]

1612இலிருந்து இங்கிலாந்து வணிகர்கள் இந்தியாவோடு வாணிகம் செய்யத் தொடங்கினர். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் வாணிக அமைப்பின் வழியாக இங்கிலாந்து இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவத் துறைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. 1858இலிருந்து இந்தியாவின் ஆளுகை பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கம் நிலவியபோது இந்தியர்கள் பலர் அடிமைகளாக இங்கிலாந்துக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். அவர்கள் "கிழக்கு இந்தியர்" (East Indians) என்று அழைக்கப்பட்டனர். இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் அங்கு இலண்டன், எடின்பர்க் போன்ற நகரங்களில் எசமானர்களுக்கு வீட்டு வேலையாட்களாக அமர்த்தப்பட்டார்கள். இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடுபெயர்ந்த இங்கிலாந்தியர் தங்கள் இந்திய வேலையாட்களைத் தங்களோடு கொண்டுசென்றார்கள்.[3][4]

ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பு முயற்சிகள்

[தொகு]

பென்சில்வேனியா பகுதியில்

[தொகு]

அமெரிக்காவில், அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்த முதல் குழுவினர் குவேக்கர் (Quakers) என்னும் கிறித்தவ இயக்கத்தினர் ஆவர். 1688இல் குவேக்கர் இயக்கத்தினர் சிலர் அடிமை முறை ஒழிப்பைக் கோரி ஒரு பரப்புரை ஏட்டினை பிலடெல்பியா நகரில் வெளியிட்டனர். அக்கோரிக்கை முதலில் வெற்றிபெறவில்லை என்றாலும், 1780இல் பென்சில்வேனியா மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட வழிகோலியது.

1775இல் "நீக்ரோ அடிமை ஒழிப்பு இயக்கம்" (Society for the Relief of Free Negroes Unlawfully Held in Bondage) என்னும் பெயரில் ஓர் அமைப்பு உருவானது. 1784இல் பெஞ்சமின் பிராங்கிளின் அவ்வமைப்பின் முதல் தலைவரானார்.[5]

குவேக்கர் இயக்கத்தினர் அடிமை முறை ஒழிப்புக்குச் சிறப்பான பங்களித்தனர்.[6]

தாமஸ் பெய்ன் என்னும் தலைசிறந்த சிந்தனையாளர் அடிமை ஒழிப்பைக் கோரி முதலில் எழுதியோருள் ஒருவர் ஆவார். அவர் 1775, மார்ச் 8ஆம் நாள் "அமெரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை முறை" (African Slavery in America) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.[7]

வடக்குப் பகுதியில்

[தொகு]

அமெரிக்காவில் ஒகையோ ஆற்றுக்கு வடக்கே அமைந்த பிரதேசங்களில் அடிமை முறை தடைசெய்யப்பட்டு 1787இல் சட்டம் இயற்றப்பட்டது. 1804ஆம் ஆண்டளவில் அப்பகுதிகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர்.

மாசச்சூசெட்ஸ் அடிமை முறையை ஒழிக்காவிட்டாலும், 1780இல் சட்ட அமைப்பை உருவாக்கி, அதில் எல்லா மனிதருக்கும் சம உரிமைகள் உண்டு என்று அறிவித்ததன்வழி அடிமை ஒழிப்புக்கு வழிகோலியது.

ஆயினும் அடிமைகளை விடுதலை செய்வது விரைவில் நிகழவில்லை என்பது நியூயார்க், பென்சில்வேனியா போன்ற பிரதேசங்கள் தங்கள் மக்கள் தொகைக் கணிப்பில் அடிமைகள் இத்தனை பேர் என்று 1840இல் குறிப்பதிலிருந்து தெரிகிறது. நியூ செர்சி பிரதேசத்தில் 1860இல் 18 கருப்பு அடிமைகள் "நிரந்தர பயிற்சியாளர்களாக" ("perpetual apprentices") குறிக்கப்பட்டிருந்தனர்.[8][9]

நியூயார்க் மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை 1799இல் இயற்றியது. ஆனால், விடுதலை பெற்ற அடிமைகளுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்று வரையறுக்கவில்லை. எனவே, விடுதலை பெற்ற அடிமைகள் இன வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.[10]

நியூயார்க் மாநிலத்தில் அடிமை ஒழிப்பு இயக்கத்தை 1785இல் தொடங்கிய ஜான் ஜே (1745–1829)

அமெரிக்க நாட்டுச் சட்டமும் அடிமை முறை ஒழிப்பும்

[தொகு]

புதிதாக உருவான ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் சட்ட அமைப்பு உருவாக்க 1787இல் பிலடெல்பியா நகரில் மாநாடு நிகழ்ந்தது. அதில் பன்னாட்டு அடிமை முறைபற்றி விவாதிக்கப்பட்டது. பன்னாட்டு அடிமை முறை வாணிகத்தை ஒழிக்க இன்னும் இருபது ஆண்டுகள் தேவைப்படும் என்று அம்மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பல பிரதேசங்களிலும் அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவாகத் தனித்தனி சட்டங்கள் இயற்றப்பட்டன.[11]

வெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளை இறக்குமதி செய்வது சட்டத்துக்கு முரணானது என்று ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1808, சனவரி முதல் நாள் சட்டம் இயற்றியது.[12] எனினும், உள்நாட்டு அடிமை வாணிகம் பற்றி அப்போது சட்டம் இயற்றப்படவில்லை.

எசமானர்கள் அடிமைகளை விடுதலை செய்தல்

[தொகு]

1776க்குப் பிறகு குவேக்கர் இயக்கத்தினர், அடிமைகளை வேலைக்கு அமர்த்திய எசமானர்களை அணுகி, அவர்கள் தம் அடிமைகளை விடுதலை செய்யக் கோரினர். ஐக்கிய அமெரிக்காவின் மேல் தென்பகுதியில் பல எசமானர்கள் தம் அடிமைகளை விடுதலை செய்தனர். விடுதலையான அடிமைகள் எண்ணிக்கை ஒரு விழுக்காடு என்பதிலிருந்து பத்து விழுக்காடாக உயர்ந்தது. குறிப்பாக விர்ஜீனியா, மேரிலாந்து, டெலவேர் பகுதிகளில் இந்த அதிகரிப்பு நிகழ்ந்தது. 1810 அளவில் டெலவேர் மாநிலத்தின் அடிமைகளுள் முக்கால் பகுதியினர் விடுதலை பெற்றுவிட்டிருந்தனர்.

இவ்வாறு அடிமைகளுக்கு விடுதலை அளித்த எசமானருள் சிறப்பான ஒருவர் மூன்றாம் இராபர்ட் கார்ட்டர் (Robert Carter III) என்பவர் ஆவார். விர்ஜீனியா மாநிலத்தவரான அவர் 450க்கும் மேலான அடிமைகளை 1791இல் தாமாகவே விடுதலை செய்தார். இந்த அளவு உயர்ந்த எண்ணிக்கையிலான அடிமைகளை எந்தவொரு தனி எசமானரும் விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.[13]

அடிமைகளை விடுதலை செய்த எசமானர்கள் பலர், தாங்கள் அளித்த விடுதலை அறிக்கைகளில் "எல்லா மனிதருக்கும் சம உரிமை உண்டு" என்பதை ஏற்பதாகக் கூறினர். மேலும், ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நிலையும் மாறிக்கொண்டிருந்தது. நிலத்தில் வேலை செய்து புகையிலை பயிரிடும் விவசாய முறை மாறி, கலப்புப் பயிர் வளர்க்கும் முறை வளர்ந்ததால் முன்போல அதிக எண்ணிக்கையில் வேலையாட்கள் தேவைப்படவில்லை.[14]

விடுதலை செய்யப்பட்ட கருப்பு இன மக்களின் குடும்பங்கள் வளர்ச்சி காணத் தொடங்கின. அதற்குமுன், ஆப்பிரிக்க ஆண்களுக்கும் உழைப்பாளர் நிலை வெள்ளையர் இனப் பெண்களுக்கும் பிறந்த மக்களோடு இவர்களும் பொருளாதார, கலாச்சாரத் துறைகளில் முன்னேற்றம் காணலாயினர்.[15]

1860 அளவில் டெலவேர் மாநிலத்தில் 91.7 விழுக்காடு கருப்பர்கள் சுதந்திர மக்களாயிருந்தனர். அதே கால கட்டத்தில் மேரிலாந்து மாநிலத்தில் 49.7 விழுக்காடு கருப்பர்கள் சுதந்திர மக்களாக மாறியிருந்தனர். இம்மக்கள் குழுவிலிருந்து கைவினைக் கலைஞர்கள், ஆசிரியர்கள், மறைப்போதகர்கள், சிறப்புத் தகுதி அலுவலர் போன்றோர் உருவாகி, பல தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டனர்.[14]

மேற்குப் பிரதேசங்களில்

[தொகு]
1789-1861 கால கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்த அல்லது எதிர்த்த பிரதேசங்கள் யாவை எனக் காட்டும் அசைபடம்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1820இல் நிகழ்ந்த விவாதத்தின்போது, ரூஃபஸ் கிங் (Rufus King) என்பவர், "அடிமை முறை என்பது சட்டத்துக்கு முரணானது. ஏனென்றால், அது இயற்கைச் சட்டத்துக்கு, அதாவது கடவுளின் சட்டத்துக்கு எதிரானது" என்று முழங்கினார். ஆனால் அக்கருத்து ஏற்கப்படவில்லை. இதனால் மிசூரி மாநிலம் அடிமை முறை மாநிலமானது.

1830களில், அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று கோரிய வெளியீடுகள் தென் மாநிலங்களுக்குத் தபால் வழி செல்வதை ஐக்கிய அமெரிக்க தபால்துறைத் தலைவர் தடுத்தார்.[16]

வட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றிய ஆசிரியர்கள் அங்கே அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டப்பட்டு இடம் கடத்தப்பட்டார்கள்.

வடக்கத்தியவர்கள் அடிமை முறை ஒழிப்பைத் தங்கள்மீது திணிக்கப் போகிறார்கள் என்று தெற்கத்தியவர்கள் சந்தேகக் கண்களோடு நோக்கினர்.

அடிமை முறை ஒழிப்பு வீரர்கள்

[தொகு]
அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவான "அமெரிக்க குடியேற்ற கழகத்தின்" மூன்று நிறுவநர்களுள் ஒருவரான ஹென்றி க்ளே (1777–1852)

அடிமை முறை ஒழிப்புக்காகப் பாடுபட்டவர்களுள் ஒருவர் ஜான் பிரவுன் (1800-1859) [17]. அமைதியான முறையில் இந்த ஒழிப்பு நிகழாது என்று பிரவுன் கருதினார். எனவே அவர் வன்முறையால் அடிமை ஒழிப்பைக் கொணர எண்ணினார். அவருடைய இயக்கம் "பயங்கர வாதத்தை" பரப்புகிறது என்று தென் மாநிலங்களைச் சார்ந்தோர் கூறினர்.

ஜான் பிரவுன் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சில தென் மாநில எசமானர்களைக் கொலைசெய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இன்றுவரை ஜான் பிரவுன் மனித உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் பாடுபட்ட மாவீரர் என்று ஒருசிலராலும், அவரே முதல் அமெரிக்க உள்நாட்டுப் பயங்கரவாதி என்று வேறு சிலராலும் வர்ணிக்கப்படுகிறார்.[18]

அடிமை முறையை ஒழிக்க வன்முறையே சரி என்று கூறிச் செயல்பட்ட ஜான் பிரவுன் (1800–1859). இவர் நாட்டுத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

அடிமை முறை ஒழிப்புக்குக் குரல்கொடுத்த இன்னொருவர் ஆபி கெல்லி ஃபோஸ்டர் (Abby Kelley Foster) (1811-1887) என்னும் பெண்மணி ஆவார். மாசச்சூசெட்ஸ் மாநிலத்தைச் சார்ந்த அவர், கருப்பு இனத்தைச் சார்ந்த எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று முழங்கினார். விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் லைபீரியாவுக்குக் குடியேறுவர் என்று அவர் கூறினார்.

வில்லியம் லாய்டு காரிசன் (1805–1879). அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவளித்த "The Liberator" என்னும் இதழை வெளியிட்டவர்.

லைபீரியா நாடு உருவாக்கப்படுதல்

[தொகு]

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் விடுதலை பெற்ற கருப்பு அடிமைகளை எங்குக் குடியேற்றுவது என்பது பற்றிய விவாதம் நிகழ்ந்தது. சிலர் குடியேற்ற முறையை ஆதரித்தனர். வேறு சிலர் நாடு பெயர்தலை முன்மொழிந்தனர். 1820களிலும், 1830களிலும், அமெரிக்காவில் விடுதலை பெற்ற ஆப்பிரிக்க அடிமைகள் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்றால் சுதந்திரமாக வாழலாம் என்னும் கருத்தைச் சில இயக்கங்கள் தெரிவித்தன. அக்கருத்தை ஆபிரகாம் லிங்கன் உட்பட பல தலைவர்கள் ஆதரித்தனர்.[19]

வேறு சிலர், ஆப்பிரிக்க அடிமைகள் விடுதலை பெற்றாலும் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவரோடு கலந்து வாழ அவர்களுக்கு வழியிருக்காது, எனவே அவர்கள் ஆப்பிரிக்காவுக்கே திரும்பினால் நல்லது என்று கூறினர். "அமெரிக்க குடியேற்ற கழகம்" (American Colonization Society) என்னும் அமைப்பு இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலையான கருப்பு அடிமைகளை ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேற்ற முயன்றது.[20]

அம்முயற்சி வெற்றி பெறாததால், அமெரிக்க குடியேற்ற கழகம் 1821-1822 ஆண்டுக் காலத்தில் லைபீரியா குடியேற்றத்தை உருவாக்கியது. அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற்ற ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க அடிமைகளும் சுதந்திர ஆப்பிரிக்க மக்களும் லைபீரியாவுக்குச் சென்று குடியேற அக்கழகம் உதவி செய்தது.

லைபீரியாவுக்குக் குடியேறச் சென்றவர்களது வாழ்க்கை பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அங்கு சுகாதார நிலை நன்றாக இல்லாததால் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். எஞ்சியோர் 1847இல் லைபீரியாவைச் சுதந்திர நாடாக அறிவித்தனர்.

1840களிலும் 1850களிலும் லைபீரியக் குடியேற்றத்துக்கு அமெரிக்க ஆதரவு குறையலாயிற்று. அதற்கு முக்கிய காரணம் முன்னாள்களில் அடிமைகளாக இருந்து விடுதலை பெற்ற ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிலேயே அமர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கு அமெரிக்க குடிமை உரிமை வழங்க வேண்டும் என்றும் கருத்து வலுப்பெற்றதாகும்.

அமெரிக்க-லைபீரியர்கள் லிபேரியாவைத் தொடர்ந்து ஆட்சி செய்தார்கள். அந்த ஆட்சி 1980இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்ததுவரை நீடித்தது.[21]

அடிமை முறை ஒழிப்பை ஆதரித்த தலைசிறந்த புதினம்

[தொகு]
"டாம் மாமாவின் குடிசை" (Uncle Tom's Cabin) என்னும் புதினம். அடிமை முறையின் கொடுமையை விளக்கும் இப்புதினத்தின் ஆசிரியர் ஹாரியர் பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe) என்னும் பெண்மணி.

ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe) என்னும் பெண்மணி 1852இல் எழுதிய புதினம் அடிமை முறையின் கொடுமைகளைப் படம்பிடித்துக் காட்டியது. அப்புதினத்தின் முழுப்பெயர் "டாம் மாமாவின் குடிசை, அல்லது தாழ்த்தப்பட்டோர் நடுவே வாழ்வு" (Uncle Tom's Cabin; or, Life Among the Lowly) என்பதாகும்.[22] அடிமை முறையின் துன்பங்களைப் பொறுமையோடு சகிக்கின்ற "டாம் மாமா"வை அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் கொடிய எசமான் சைமன் லெக்ரீ (Simon Legree) கொன்றுபோடுகிறார். இப்புதினம் அடிமை முறையால் மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களை விவரித்து, அடிமை முறையை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்தியது.

குறிப்புகள்

[தொகு]
  1. சோமர்செட் வழக்கு
  2. "Slavery’s last stronghold". CNN. March 2012.
  3. Paul Heinegg, Free African Americans of Virginia, North Carolina, South Carolina, Maryland and Delaware, 1999–2005, "WEAVER FAMILY: Three members of the Weaver family, probably brothers, were called "East Indians" in Lancaster County,[VA] [court records] between 1707 and 1711."; "‘The indenture of Indians (Native Americans) as servants was not common in Maryland...the indenture of East Indian servants was more common.", Retrieved 15 February 2008
  4. Francis C. Assisi, "First Indian-American Identified: Mary Fisher, Born 1680 in Maryland" பரணிடப்பட்டது 2011-05-15 at the வந்தவழி இயந்திரம், IndoLink, Quote: "Documents available from American archival sources of the colonial period now confirm the presence of indentured servants or slaves who were brought from the Indian subcontinent, via England, to work for their European American masters.", Retrieved 20 April 2010
  5. Richard S. Newman, The Transformation of American Abolitionism: Fighting Slavery in the Early Republic (U. of North Carolina Press, 2002)
  6. John Woolman. A Quaker Abolitionist Travels Through Maryland and Virginia Extract from The Journal of John Woolman, 1757, New York: Houghton Mifflin, 1909, 209–217.
  7. Thomas Paine; Thomas Paul Slaughter (2001). Common Sense and Related Writings. Palgrave Macmillan. p. 57.
  8. Dictionary of Afro-American Slavery By Randall M. Miller, John David Smith. Greenwood Publishing Group, 1997. p.471.
  9. Population of the United States in 1860, p313 Eight Census of the United States, 1860
  10. "Africans in America" – PBS Series – Part 4 (2007)
  11. Ira Berlin and Leslie Harris (2005); Gellman (2006);
  12. Foner, Eric. "Forgotten step towards freedom", New York Times. 30 December 2007,
  13. Andrew Levy, The First Emancipator: Slavery, Religion and the Quiet Revolution of Robert Carter, New York: Random House, 2005, p.xi
  14. 14.0 14.1 Peter Kolchin, American Slavery, 1619–1877, New York: Hill and Wang, 1994, pp.78, 81–82
  15. Paul Heinegg, Free African Americans of Virginia, North Carolina, South Carolina, Maryland and Delaware, 2005, Retrieved 15 February 2008
  16. Schlesinger Age of Jackson, p.190
  17. ஜான் பிரவுன்
  18. David Brion Davis, Inhuman Bondage (2006) p 197, 409; Stanley Harrold, The Abolitionists and the South, 1831–1861 (1995) p. 62; Jane H. and William H. Pease, "Confrontation and Abolition in the 1850s" Journal of American History (1972) 58(4): 923–937.
  19. Lincoln on Slavery
  20. Maggie Montesinos Sale (1997). The slumbering volcano: American slave ship revolts and the production of rebellious masculinity. p.264. Duke University Press, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-1992-6
  21. History Haunts War-Torn Liberia
  22. டாம் மாமாவின் குடிசை - புதினம்

ஆதாரங்கள்

[தொகு]

பிரிட்டன், உலகம்

[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Ferling 2000, ப. 135.

வார்ப்புரு:Collier's Poster