அரசியல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு.

வரைவிலக்கணம்[தொகு]

அரசறிவியலில், அரசியல் கட்சிகளுக்கான பல வரைவிலக்கணங்கள் உள்ளன. வரலாற்று அடிப்படையில் முதலாவது வரைவிலக்கணம், அவற்றின் அமைப்புமுறை, செயல்பாடு, கூட்டமைவு என்பவற்றில் கவனம் செலுத்தியது. 1770 ஆம் ஆண்டில் எட்மண்ட் புர்க்கே (Edmund Burke) என்பார் எழுதிய இன்றைய முரண்பாடுகளுக்கான காரணங்கள் தொடர்பிலான எண்ணங்கள் (Thoughts on the Cause of the Present Discontent) என்னும் அவரது நூலில் அரசியல் கட்சி என்பது, தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில், தேசிய நலனுக்காக ஒன்றாக உழைக்கும் நோக்கில், ஒன்றுபட்டவர்களின் குழு. என்று குறிப்பிட்டுள்ளார். 1816 ஆம் ஆண்டில், பெஞ்சமின் கான்ஸ்டண்ட் என்பவர் அரசியல் கட்சி தொடர்பான கருத்தியல் வரைவிலக்கணத்தை உருவாக்கினார். ஆனால் இது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தி வருகிறதேயன்றி, கொள்கைகள் அற்ற அதிகாரத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சந்தர்ப்பவாத அல்லது நடைமுறைசார்ந்த கட்சிகளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை. இவருடைய கருத்துப்படி கட்சி என்பது, ஒரே அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களின் கூட்டமைப்பு ஆகும். மார்க்சியவாதிகள், அரசியலை ஒரு வர்க்கப் போராட்டமாகக் கொள்ளும் தமது அடிப்படைக் கொள்கைக்கு ஏற்ப, அரசியல் கட்சி என்பது, சமுதாய வர்க்கத்தினரில் கூடிய வர்க்க உணர்வு கொண்டவர்களின் அமைப்பு என்றனர். மக்ஸ் வெப்பர் (Max Weber) கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த புரூக்கின் கருத்தை ஏற்றுக்கொண்டு வரைவிலக்கணத்தை மேலும் விரிவுபடுத்தினார். இவர் கூற்றுப்படி, கட்சி என்பது சுதந்திரமாகச் சேர்ந்து கொள்ளுதலின் அடிப்படையில், ஒன்று சேர்தலும் இணைந்து செயற்படுதலும் ஆகும். அமைப்புமுறையிலான ஒரு குழுவுக்குள் அடங்கும் அதன் தலைவர்களுக்கு அதிகாரத்தைப் பெறுவதை இதன் இலக்காகவும், கட்சிக்குள் தீவிரமாக இயங்குபவர்களுக்கு பொருள்சார் நலன்களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகவும் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அரசறிவியலாளரும் பிற ஆய்வாளர்களும், கட்சிகளின் நுட்பியல் மற்றும் தேர்தல் சார்ந்த இயல்புகளில் கூடிய கவனம் செலுத்தினர். அந்தனி டோன்ஸ் (Anthony Downs) என்பார், ஒரு அரசியல் கட்சியென்பது, முறையான தேர்தல் முறையொன்றில் பதவிகளைப் பெறுவதன் மூலம் அரச எந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும் மனிதர்கள் குழு என்று கூறினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்_கட்சி&oldid=2224120" இருந்து மீள்விக்கப்பட்டது