மதுரை நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:05, 14 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2589837 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்))
மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி தெலுங்கு, தமிழ்
தலைநகரம் மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சி பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

திருமலை நாயக்கர் மகால்

மதுரை நாயக்கர்கள், மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.[1][2] தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் 12ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.

மதுரை நாயக்கர் தோற்றம்

விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

மதுரை நாயக்கர் வம்சம்

முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவரருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.[3]

மதுரை நாயக்கர்களின் மரபு

மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார்.[சான்று தேவை] மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'தொட்டிய/ராஜகம்பள' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கவரா'பலிஜா' (சந்திர வம்ஷ க்ஷத்ரியர் ) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் கவரா 'பலிஜா' சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.[சான்று தேவை]

மதுரை நாயக்கர்களின் பட்டியல்

  1. விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
  2. முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
  3. வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
  4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
  5. முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
  6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
  7. திருமலை நாயக்கர் (1623 - 1659)
  8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
  9. சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
  10. அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
  11. இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)
  12. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)
  13. இராணி மீனாட்சி (1732 - 1736)

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணை நூல்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_நாயக்கர்&oldid=2815025" இலிருந்து மீள்விக்கப்பட்டது