பெரிபெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிபெரி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E51.1
ஐ.சி.டி.-9265.0
நோய்களின் தரவுத்தளம்14107
ஈமெடிசின்ped/229 med/221
Patient UKபெரிபெரி
MeSHD001602

பெரிபெரி (Beriberi) தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோய். தயமின் காபோவைதரேட்டின் வளர்சிதை மாற்ற வினைகளில் துணை நொதியமாய்ப் (Co enzyme) பங்காற்றுகிறது. தசை, இதயம், நரம்புத் தொகுதி போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கு தயமின் அவசியம். பெரிபெரி நோயில் களைப்பு மிகுதி, சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதய இரத்தநாள மண்டலம், நரம்பு மண்டலம், தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி ஆகியவையும் பாதிப்படையும்.

பெயர்க்காரணம்[தொகு]

பெரிபெரி எனும் பெயரின் மூலம் தெளிவாக அறியப்படவில்லை. ஒரு சில கருதுகோளின் படி, "என்னால் முடியாது" எனும் கருத்தைத்தரும் "பரி" (බැරි) எனும் சிங்களச் சொல்லில் இருந்து "என்னால் முடியாது, என்னால் முடியாது" என்கின்ற அர்த்தத்தில் உருவானது என நம்பப்படுகின்றது.[1][2] வேறொரு கருதுகோளின்படி, "கடலோடிகளின் ஆஸ்துமா" எனும் கருத்து வரத்தக்க "புர்-பரி" எனும் அரேபியச் சொல்லில் இருந்து உருவானது எனவும் நம்பப்படுகின்றது.[3]

நோய் உண்டாகக் காரணம்[தொகு]

பெரிபெரியால் கால் வீக்கம்

தயமின் எனப்படும் உயிர்ச்சத்து பி1 குறைபாட்டால் இந்நோய் உண்டாகின்றது. தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியை முதன்மை உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் இந்நோய் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழிஏற்படுத்தும். நீண்டகால வயிற்றுப்போக்கு உடையோர்க்கும் தயமின் குறைபாடு ஏற்படலாம்.[4]

தயமின் பற்றாக்குறை வேறு சில உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம், இவ்வுணவுப் பொருட்களில் உள்ள தயமினேசு எனும் நொதியானது தயமினைச் சிதைக்க வல்லது, அவ்வாறான உணவுப்பொருட்கள் பச்சை மீன்வகைகள், தேநீர், காப்பி, வெற்றிலையுடன் பயன்படுத்தப்படும் பாக்கு என்பன ஆகும். ஒரு நாளிற்குப் பல குவளைகள் தேநீர் அருந்துபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் காணப்படும் சல்ஃபைட்டுகளும் தயமினைச் சிதைக்க வல்லது.[5]

பொதுவான நோய் அறிகுறிகள்[தொகு]

உடல்நிறை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், உள எழுச்சி நிலையில் குழப்பம், புலன் உணர்வு பாதிப்பு, உடல் உறுப்புகளில் வலி, சோர்வு, அடிக்கடி ஏற்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு. உடல் வீங்குதல் என்பன பொதுவான அறிகுறிகள் ஆகும். குணப்படுத்தப்படாத நோய் இதயச்செயலிழப்பையும் இறப்பையும் கூட உண்டாக்கலாம்.

நோய் வகைகள்[தொகு]

பெரிபெரி நோயுடைய ஒருவரின் அவயவங்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை இப்படத்தில் காணலாம்.

மூன்று விதமான நோய்வகைகள் உண்டு:

 • ஈரலிப்புப் பெரிபெரி (Wet beriberi), குறிப்பாக இதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும்
 • உலர் பெரிபெரி (dry beriberi ), நரம்புத்தொகுதியைப் பாதிக்கும்
 • கைக்குழந்தைப் பெரிபெரி, வளர்முக நாடுகளில் கைக்குழந்தைகளில் ஏற்படுவது

ஈரலிப்புப் பெரிபெரி[தொகு]

இதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும் பெரிபெரியாகும். குருதிக் குழாய்களின் சுவர்கள் நலிவடைதலால் குருதிக் குழாய்கள் விரிவடைந்து உடலில் வீக்கம் உண்டாகும், இதனுடன் இதயத்தின் செயல்திறன் இழத்தலும் ஏற்படும். இது சிலசமயங்களில் கெடுதியில் முடியலாம். ஈரலிப்புப் பெரிபெரியில் அறிகுறிகள்:

உலர் பெரிபெரி[தொகு]

புற நரம்பு மண்டலம்/சுற்றயல் நரம்புத்தொகுதியில் பாதிப்பு ஏற்படுவதனால் உறுப்புச் செயலிழப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும். இந்த நிலைமையில் அறிகுறிகள்:

 • நடப்பது கடினம்
 • கால்களில் அல்லது கைகளில் விறைப்புத் தன்மை
 • கால்களில் உணர்வு அற்றுப்போதல் (பக்கவாதம்)
 • வலி
 • உளநிலை பாதிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, நினைவாற்றல் குறைதல்
 • எரிச்சலூட்டும் தன்மை
 • சுயமான கண்துடிப்பு
 • வாந்தி

கைக்குழந்தைப் பெரிபெரி[தொகு]

சத்தமில்லாமல், கண்ணீர் இல்லாமல் அழும் குழந்தை இதன் அறிகுறியாகும், சிகிச்சை வழங்கப்படாவிடில் இறப்பு நேரிடும்.

சிகிச்சை[தொகு]

நோயின் தீவிரத்தைப் பொறுத்து தயமின் உயிர்ச்சத்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசிமருந்து மூலமாகவோ கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு தயமின் கொண்டுள்ள உணவு வகைகளைப் பரிந்துரை செய்தல் முக்கியமானது. நோயின் ஏனைய அறிகுறிகள் அவற்றிற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

படக்காட்சியகம்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

 1. Beriberi, Information about Beriberi
 2. "Online etymology dictionary". 2014-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-08 அன்று பார்க்கப்பட்டது.
 3. Cornelis Adrianus Pekelharing, Cornelis Winkle: "Beri-beri researches concerning its nature and causes and the means of its arrest", page 3, 1893
 4. Cole PD, Kamen BA. "Beriberi" interesting!. J Pediatr Hematol Oncol. Dec 2003;25(12):924-6. [Medline].
 5. emedicine
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிபெரி&oldid=3564890" இருந்து மீள்விக்கப்பட்டது