நாகூர் அனிபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகூர் ஹனீஃபா
Emhanifa.jpg
பிறப்புஇஸ்மாயீல் முஹம்மத் ஹனீீஃபா
25 திசம்பர் 1925 (1925-12-25) (அகவை 97)
வெளிப்பட்டிணம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 8, 2015(2015-04-08) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு
அறியப்படுவதுஇசுலாமியப் பாடகர்
பெற்றோர்முகம்மத் இசுமாயில், மரியம் பீவி
வாழ்க்கைத்
துணை
ரோஷன் பேகம்

நாகூர் இ. எம். ஹனீஃபா (Nagore E. M. Hanifa) என அழைக்கப்படும் நாகூர் இஸ்மாயீல் முஹம்மத் ஹனீஃபா (25 டிசம்பர் 1925[1] - 8 ஏப்ரல் 2015) தமிழக அரசியல்வாதி மற்றும் பிரபல இஸ்லாமியப் பாடகரும் ஆவார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரை முக்கிய பங்கு வகித்தார். இவர் "இசை முரசு" என்றும் அழைக்கப்படுகின்றார்.[2]

பிறப்பு[தொகு]

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் 1925 டிசம்பர் 25ல் பிறந்தார். முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவராவார். இவரது தாயார் வெளிப்பட்டிணத்தைச் சேர்ந்தவர். பாட்டனார் (அம்மாவின் அப்பா) முத்து ராவுத்தர் இராமநாதபுரம் அரண்மனையில் ஆயுதக் கிடங்கு பாதுகாவலர் – பராமரிப்பாளராகப் பணியாற்றினார். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது அவரது இயற்பெயர். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் அவரது பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

வாழ்க்கை[தொகு]

இவர் தனது 30ஆவது வயதில் சென்னை வர்த்தகர் பி. அப்துல் ரஹீம் என்பவர் மகள் ரோஷன் பேகம் என்பவரை 26-11-1953ஆம் நாள் சென்னையில் மணந்தார்.[3] இவருக்கு 2 ஆண் மற்றும் 4 பெண் குழந்தைகள். சென்னையில் கோட்டூர்புரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் 2007ல் வக்பு வாரியத் தலைவராக பணியாற்றினார்.

பாடகராக[தொகு]

இவரது 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாடினார். 13-ஆம் வயதில் திருமண வீடுகளில் பாடினார். 15-ஆம் வயதில் பக்க வாத்தியங்களுடன் மேடைக்கச்சேரி செய்துள்ளார்.1941-ஆம் ஆண்டு தேரழுந்தூரில் ஒரு திருமணத்தில் பாட இவரை அழைத்தார்கள். பக்க வாத்தியங்களுடன் இவரது முதல் மேடைக் கச்சேரி இதுவாகும். அப்போது இவருக்கு 15 வயது. இவரது முதல் வெளியூர் கச்சேரியும் இதுவே. இவர் பணம் வாங்கிக் கொண்டு செய்த முதல் கச்சேரியும் அதுதான். 25 ரூபாய் கொடுத்தார்கள்.

நாகூர் அனிபா நூற்றுக்கணக்கான இசைப்பாடல்களை இசுலாமிய பக்திப் பாடல்களாகவும், கட்சிப் பாடல்களாகவும், பொதுப்பாடல்களாகவும் பாடியுள்ளார்.[4] இசுலாமிய விழுமியப் பண்புகளை தம் பாடல்களின் கருப்பொருளாகக் கொண்டு இவர் பாடியுள்ளார்.[4] ‘பெரியார் பிலாலின்’, தாயிப் நகரத்து வீதியிலே’, ‘கண்கள் குளமாகுதம்மா’ போன்ற பாடல்கள் இதற்கு உதாரணமாகும். ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ என்பது போன்ற பொதுவான பாடல்களையும் பாடியுள்ளார். ‘பகவன்’ என ஆரம்பிக்கும் இவரது இந்தி மொழிப் பாடலும் பிரபலமானது.[4]

அனிபாவிற்கு பாடல்கள் இயற்றியோரில் புலவர் ஆப்தீன், இறையருட் கவிமணி பேராசிரியர் கா. கபூர் போன்றோர் முக்கியமானவர்கள். கபூர் எழுதிய ‘நாயகமே’ என ஒரு கவிதை நூலின் எல்லாப் பாடல்களையும் அனீபா பாடினார்.[4]

நாகூர் அனீபா பல தடவைகள் இலங்கை வந்து இசைக்கச்சேரிகளை நடத்தியிருந்தார். இலங்கை வானொலி தனது கலையகத்தில் நேரடியாக ஒலிப்பதிவு செய்து இவரது பாடல்களை ஒலிபரப்பி வந்தது.[4]

திரையிசை[தொகு]

1953 ஆம் ஆண்டில் மு. கருணாநிதியின் திரைக்கதையில் நடித்து சி. எஸ். ஜெயராமன் இசையில் வெளிவந்த நாம் திரைப்படத்தில் நாட்டுக்கூத்துப் பாணியில் இயற்றப்பட்ட பலர் சேர்ந்து பாடிய ஒரு பாடலில் நாகூர் அனீபாவும் இணைந்து பாடினார். இதுவே இவரது முதலாவது திரையுலகப் பங்களிப்பாகும்.[5] பின்னர் 1955 இல் வெளியான குலேபகாவலி திரைப்படத்தில் முகப்புப் பாடலில் இசுலாமியத் தொழுகைப் பாடல் ஒன்றைப் பாடினார். இது விசுவநாதன்-இராமமூர்த்தியின் இசையமைப்பில் பாடப்பட்டது.[5] 1961 இல் வெளியான பாவமன்னிப்பு திரைப்படத்தில் "எல்லோரும் கொண்டாடுவோம்" என்ற பாடலை டி. எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடினார்.

இதற்குப் பின்னர் 30 ஆண்டுகளின் பின்னர் 1992 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையில் செம்பருத்தி திரைப்படத்தில் "நட்ட நடு கடல் மீது" என்ற காதல் பாடலைப் பாடினார்.[5] பின்னர் 1993 இல் இளையாராஜாவின் இசையில் வெளியான தர்மசீலன் என்ற திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து "எங்குமுள்ள அல்லா" என்ற பாடலைப் பாடினார்.[5] அதன் பின்னர் 1997 இல் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் "உன் மதமா என் மதமா" என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியிருந்தார். 1998 இல் என்றென்றும் காதல் திரைப்படத்தில் ராஜ்குமாரின் இசையில் "நாடோடி மன்னா" என்ற பாடலைப் பாடினார்.[5] இறுதியாக 2002 ஆம் ஆண்டில் ராஜ்குமாரின் இசையில் காமராசு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடினார்.[5]

அரசியல்பணி[தொகு]

1930ஆம் ஆண்டுகளிலிருந்து அவர் திமுகவில் பங்கேற்றுள்ளார்.[2] 1957-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாகப்பட்டிணம் (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தியவர். திமுக நடத்திய போராட்டங்களில் சிறை புகுந்தவர். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராகவும் பணியாற்றியுள்ளார். "அண்ணா அழைக்கின்றார்...” என்ற பாடல் இவரது கட்சிப் பாடல்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.[4] நாகூர் அனீபா தனது வீடுகளுக்கு “அண்ணா இல்லம்” “கலைஞர் இல்லம்” “காயிதே மில்லத் இல்லம்” என்று பெயர் சூட்டியிருந்தார்.[4]

பெருமை சேர்த்த பாடல்கள்[தொகு]

  • எல்லோரும் கொண்டாடுவோம்
  • நட்ட நடு கடல் மீது
  • உன் மதமா என் மதமா
  • இறைவனிடம் கையேந்துங்கள்

திரையிசைத் துறை[தொகு]

இவரின் பாடல் இடம் பெற்ற படங்கள்:

இறப்பு[தொகு]

இவர் 2015 ஏப்ரல் 8 அன்று காலமானார்.[1][6] நாகூர் தர்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.


உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 "மறைந்தார் நாகூர் ஹனீபா!". 2015-04-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 NAHLA NAINAR (14 மார்ச் 2014). "When his life was a song". தி இந்து. 9 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. திராவிடநாடு (இதழ்) நாள்:13-12-1953, பக்கம் 6
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 அஸ்வர், ஏ. எச். எம். (12 ஏப்ரல் 2015). "இசைமுரசு ஓய்ந்தது". தினகரன். 12 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 திருமலை மூர்த்தி (15 April 2015). ஈ.எம்.அனிஃபாவின் திரை யாத்திரை (தமிழ்). ஆத்திரேலியா: எஸ்பிஎஸ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. தமிழக மக்களுக்கு பாடல்களால் தொண்டாற்றியவர் ஹனீபா: கருணாநிதி புகழஞ்சலி

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூர்_அனிபா&oldid=3560369" இருந்து மீள்விக்கப்பட்டது