உள்ளடக்கத்துக்குச் செல்

நளினி பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நளினி பத்மநாதன்
Nallini Pathmanathan
மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 நவம்பர் 2018
ஆட்சியாளர்கள்சுல்தான் அகமட் சா
(2018-2019)
சுல்தான் அப்துல்லா
(2019–2024)
சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
(தொடக்கம் 2024)
பிரதமர்நஜீப் ரசாக்
(2018-2019)
மகாதீர் பின் முகமது
(2019–2020)
முகிதீன் யாசின்
(2020–2021)
இசுமாயில் சப்ரி யாகோப்
(2021–2022)
அன்வர் இப்ராகீம்
(தொடக்கம் 2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நளினி பத்மநாதன்

23 ஆகத்து 1959 (1959-08-23) (அகவை 64)
மலாயா கூட்டமைப்பு (தற்போது மலேசியா)
குடியுரிமைமலேசியா
தேசியம்மலேசியர்
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் (பட்டயம்); மிடல் டெம்பள் (Middle Temple); இலண்டன்
தொழில்வழக்கறிஞர்

நளினி பத்மநாதன் (Nallini Pathmanathan; பிறப்பு: 23 ஆகத்து 1959) என்பவர் நவம்பர் 2018 முதல் மலேசிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றும் மலேசிய வழக்கறிஞர் ஆவார். மலேசியாவின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவிக்கு உயர்த்தப்பட்ட மலேசிய இந்தியர் இனத்தின் முதல் பெண் நீதிபதி என அறியப்படுகிறார்.[1][2]

வாழ்க்கை[தொகு]

நளினி முதலில் மருத்துவம் படிக்க விரும்பினார். இருப்பினும், அவரால் அவ்வாறு செய்ய இயலவில்லை அதனால் உடலியக்கவியல் பட்டப்படிப்பைத் தொடர விரும்பினார்.[2][3] 1982-ஆம் ஆண்டில், லண்டன் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் துறையில் இளங்கலை அறிவியல் (BSc) பட்டம் பெற்றார்.

இளங்கலை பட்டப்படிப்பை முடித்ததும், மேற்கொண்டு அவர் உடலியல் துறையில் ஈடுபட விரும்பவில்லை. அவருடைய தந்தையின் அறிவுறுத்தலின் பேரில், அவர் 1983-இல் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்ட மாற்றுப் படிப்பைத் தொடங்கினார். பின்னர் சட்டத் துறையில் பட்டயம் பெற்றார்.[2]

அதைத் தொடர்ந்து, அவர் 1984-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டார். 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி மலேசிய வழக்கறிஞர் மன்றத்திலும் ஒரு வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார்.[4]

தொழில்[தொகு]

1986-இல் மலேசியாவில் உள்ள ஒரு சட்ட நிறுவனமான இஸ்க்ரைன் சட்ட நிறுவனத்தில் தன் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். மேலும் 1995-இல் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரரானார். அதைத் தொடர்ந்து அதே நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.[4]

1 மார்ச் 2007-இல் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட பிறகு, சிலாங்கூரில் உள்ள சா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். 14 அக்டோபர் 2009-இல், அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்[தொகு]

பின்னர், அவர் 12 செப்டம்பர் 2014-இல் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். 26 நவம்பர் 2018-இல், மலேசிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் அவர், மலேசியாவின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதியான முதல் தெற்காசிய இனப் பெண் நீதிபதி ஆனார்.[1][4][5]

அதன் பின்னர் நளினி, மலேசிய வழக்குரைஞர் கழகத்தின் குழுக்களில் பணியாற்றினார்; மற்றும் வழக்குரைஞர்கள் ஒழுங்குமுறை வாரியத்தின் ஒழுங்குமுறை குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 2007-ஆம் ஆண்டு வரை, அவர் நடுவர் பட்டய அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.[4] பன்னாட்டு வழக்கறிஞர் சங்கத்தின் நீதிபதிகள் மன்றத்தின் செயலாளராகவும் (Judges' Forum of the International Bar Association) உள்ளார்.[6]

2023-இல், மலேசியாவின் நீதித்துறை நியமனக் குழுவில் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.[7] நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியான மலாயாவின் தலைமை நீதிபதியின் பதவிக்குச் சாத்தியமான வேட்பாளராக, நளினியை நீதித்துறை நியமனக் குழு அடையாளம் கண்டுள்ளது.[8]

முக்கிய வழக்குகள்[தொகு]

மலேசியாகினி வழக்கு[தொகு]

பிப்ரவரி 2021 இல், மலேசியாகினி என்ற செய்தி இணையத்தளத்தின் மீதும், அதன் தலைமை ஆசிரியர் மீதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வாசகர்களின் இழிவான கருத்துக்களைப் பதிவேற்றம் செய்ததாக இணையத்தளத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. செய்தி இணையத்தளத்தின் தலைமை ஆசிரியர் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கிய, ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் நளினியும் ஒருவராக இருந்தார்.

செய்தி இணையத்தளத்திற்கு RM 500,000 தண்டம் விதிக்கும் முடிவிற்கு நளினி மட்டுமே மறுப்பு தெரிவித்தார். மலேசியாகினி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் ஆகிய இரு தரப்பினரும் கூறிய கருத்துக்கள் பற்றி மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் அறிந்திருந்தும், அவர் (மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர்) சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று நளினி கூறினார்.[9]

நாடற்ற இளைஞர் வழக்கு[தொகு]

கோலாலம்பூர் மருத்துவமனையில் பிறந்து மலேசியத் தம்பதியரால் தத்தெடுக்கப்பட்ட 17 வயது நாடற்ற இளைஞருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது; மலேசியாவில் நன்கு அறியப்பட்ட வழக்காகக் கருதப்படுகிறது. நவம்பர் 2021-இல் நடந்த அந்த வழக்கில், மலேசிய உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட குழுவில் நளினியும் அங்கம் வகித்தார்.[10]

மதம் மாற்று வழக்கு[தொகு]

முசுலீம் மதத்திற்கு மதம் மாறிய ஒரு தாயார்; மற்றும் கூட்டாட்சி பிரதேசப் பதிவாளர்; ஆகிய இரு தரப்பினரின் மேல்முறையீட்டை நிராகரிக்க ஒருமனதாக மலேசிய உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது, ஏப்ரல் 2022 இல் நடந்த ஒரு நிகழ்வாகும். சிவில் திருமணத்தில் பிறக்கும் குழந்தையை இசுலாத்திற்கு மாற்றுவதற்கு முன், தாய் தந்தை இருவரின் சம்மதமும் தேவை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் நளினியும் ஒருவராக அமர்வில் இருந்தார்.[11]

15-ஆவது மலேசிய பொதுத் தேர்தல் வழக்கு[தொகு]

2022 நவம்பரில், 15-ஆவது மலேசிய பொதுத் தேர்தலை நடத்தும் மலேசிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்த இரண்டு முறையீடுகளை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சனவரி 2023-இல் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நளினி தலைமையிலான மலேசிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு ஒருமனதாகத் தீர்ப்பு வழங்கியது.[12]

அன்வர் இப்ராகீம் வழக்கு[தொகு]

மலேசியாவின் தற்போதைய பிரதமர் அன்வர் இப்ராகீமிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பின் சட்டப்பூர்வமான தன்மையை எதிர்த்து, தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டை மலேசிய உச்ச நீதிமன்றம் ஒருமனதாக நிராகரித்தது. சனவரி 2023 இல் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில் நளினியும் ஒருவராக இருந்தார்.

விருதுகள்[தொகு]

மலேசிய விருதுகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Middle Temple | The Honourable Society of the Middle Temple". www.middletemple.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  2. 2.0 2.1 2.2 "The Expansion of Malaysian Jurisprudence". AdREM: Journal of the Selangor Bar (Selangor Bar Committee) 1: 60–69. 2022. https://selangorbar.org/images/adrem-final-2023.pdf. 
  3. "International Women's Day 2021: interview with Judge Nallini Pathmanathan of the Federal Court of Malaysia". Courts and Tribunals Judiciary (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  4. 4.0 4.1 4.2 4.3 "Lawyer Nallini made Judicial Commissioner - The Malaysian Bar". www.malaysianbar.org.my. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  5. 5.0 5.1 "The Hon. Justice Tan Sri Datuk Nallini Pathmanathan". Office of the Chief Registrar, Federal Court of Malaysia. 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  6. "Officer Listing". www.ibanet.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  7. Reporters, F. M. T. (2023-03-08). "Federal Court judge Nallini Pathmanathan made JAC member". Free Malaysia Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  8. Anbalagan, V. (2023-09-29). "3 women frontrunners to be next Chief Judge of Malaya, say sources". Free Malaysia Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  9. "Mkini pays RM500,000 fine for contempt of court". The Malaysian Reserve. 24 February 2021. https://themalaysianreserve.com/2021/02/24/mkini-pays-rm500000-fine-for-contempt-of-court/. 
  10. "Federal Court declares stateless teenager a Malaysian citizen". The Malaysian Reserve. 19 November 2021. https://themalaysianreserve.com/2021/11/19/federal-court-declares-stateless-teenager-a-malaysian-citizen/. 
  11. "Muslim-convert mother fails to get leave to appeal to reinstate kids' conversion to Islam". thesun.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  12. "Former Klang MP loses final bid to challenge EC's decision to hold GE15". The Edge Malaysia. 2023-01-05. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
  13. Khaleeda, Nabilah (5 June 2023). "839 terima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan 2023, ini antara senarainya". Astro AWANI. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_பத்மநாதன்&oldid=4008271" இலிருந்து மீள்விக்கப்பட்டது