திரெசுடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலச்சுற்றாக: நகரத்தின் இரவுக்காட்சி, தூய அன்னையின் தேவாலயம், பில்னிட்சு கோட்டை, திரெசுடன் கோட்டை, இசுவிங்கர் அரண்மனை
வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்மையமும் முதன்மையான சுற்றுலாவிடங்களும்

திரெசுடன் (Dresden, டாய்ச்சு ஒலிப்பு: [ˈdʁeːsdn̩]  ( கேட்க); செக் மொழி: Drážďany, போலிய: Drezno) ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள சாக்சனி மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[1] லைப்சிக்கிற்கு அடுத்தபடியாக அந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். [2]. இது எல்பா ஆற்றுப் பள்ளத்தாக்கில் செக் குடியரசுடனான எல்லையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

திரெசுடன் புதிய கற்காலத்திலேயே உருவான குடியிருப்பாகும். ஆனால் இந்த நகரத்தைக் குறித்த முதல் ஆவணப்பதிவு 1206இல் இது அரசர்களின் இல்லமாக மாறியபிறகே கிடைக்கின்றது. சாக்சனி அரசர்கள் இந்த நகரத்தை பண்பாட்டுடனும் கலைநயத்துடனும் வடிவமைத்தனர். விரும்பிய ஒன்றிணைப்பாக இணைந்த போலந்து அரசர்களின் இருப்பிடமாகவும் திரெசுடன் திகழ்ந்தது. இந்த நகரம் பரோக் மற்றும் ரோக்கோக்கோ கலைவண்ணத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் நகைப்பெட்டி எனவும் அழைக்கப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போரில்[தொகு]

போர் விமானங்களின் குண்டுவீச்சில் உருக்குலைந்த திரெசுடன் நகரச் சதுக்கம், ஆண்டு 1945

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டங்களில் அமெரிக்க, பிரித்தானிய படை வானூர்திகள் பெப்ரவரி 13,1945 - பெப்ரவரி 15,1945 நாட்களில் குண்டுமழை பொழிந்தன. 25,000 குடிமக்கள் இதில் கவல்லப்பட்டனர்; நகரமையத்திலிருந்த கலைநயமிக்க கட்டிடங்கள் பலவும் இடிபட்டன. இது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. போருக்குப் பின்னர் இந்தக் கட்டிடங்கள் மிகுந்த முயற்சியில் மீட்டெடுக்கப்பட்டன

2002இல் செருமனியின் நூற்றாண்டு வெள்ளம் என விவரிக்கப்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று.

அரசியலும் பண்பாடும்[தொகு]

திரெசுடன் சாக்சனியின் அரசியல், [[பண்பாடு]|பண்பாட்டு] மையமாக விளங்குகின்றது.1852இல் திரெசுடனின் மக்கள்தொகை 100,000க்கும் கூடுதலாக இருந்தது. 2005ஆம் ஆண்டில் திரெசுடனில் ஏறத்தாழ 488,000 குடிவாசிகள் இருந்தனர். இந்நகரும் சுற்றியுள்ள மக்களடர்ந்த கெம்னுட்சு, சுவிக்கொ, லைப்சிக் நகரங்களும் கூட்டாக சாக்சனிய பெருநகரவட்டார முக்கோணம் எனப்படுகின்றது.

1990இல் செருமானிய மீளிணைவுக்குப் பிறகு இது ஐரோப்பா மற்றும் செருமனியின் பண்பாடு, கல்வி மையமாகவும் விளங்குகின்றது. திரெசுடன் தொழிற்நுட்ப பல்கலைக்கழகம் செருமனியின் பெரிய பத்து பல்கலைகழகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. திரெசுடனின் பொருளியல்நிலை மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.[3] மீயுயர் நுட்ப தொழில்கள் வளர்ச்சியால் இந்நகர் “சிலிகான் சாக்சனி” எனப்படுகின்றது. செருமனியின் மிகவும் வருகைகள் பெறும் நகரமாகவும் உள்ளது; ஆண்டுக்கு 4.3 மில்லியன் பேர் இரவு தங்கியுள்ளனர்.[4][5]

சுற்றுலா[தொகு]

இங்குள்ள அரசக் கட்டிடங்கள் ஐரோப்பாவின் மிகவும் அழகான கட்டிடங்களாகும். அண்மித்துள்ள சாக்சன் தேசியப் பூங்கா, ஓரே மலைகளும் எல்பே பள்ளத்தாக்கு நாட்டுப்புறமும் மோரிட்சுபர்கு கோட்டையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இங்குள்ள கட்டிடங்களில் மிக முதன்மையானது பிரான்கிர்க் தூய அன்னை தேவாலயமாகும்; 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்தேவாலயம் இரண்டாம் உலகப் போரின்போது சேதப்படுத்தப்பட்டது. இதன் இடிபாடுகள் 50 ஆண்டுகளுக்கு போர் நினைவுச்சின்னங்களாக விடப்பட்டிருந்தன. தவிரவும் மீளைக்கத் தேவையான நிதியமும் இல்லாதிருந்தது. தற்போது புதியதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தில் இடிந்தழிந்த தேவாலயத்தின் கருகிய கற்களும் உலகப்போரின் நினைவாக புதிய கற்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய தேவாலயத்தின் மீள்கட்டமைப்பு 1994இல் தொடங்கி 2005யில் முடிவுற்றது.

இரவுநேரத்தில் தற்கால திரெசுடன்
பகல் நேர திரெசுடன்

போக்குவரத்து[தொகு]

திரெசுடனின் S-பான் பிணையம்

திரெசுடனின் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை (ஃப்ளுகாஃபென் திரெஸ்டன்-க்ளோட்சுக்கே) ஆண்டுக்கு ஏறத்தாழ 2 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்த வானூர்தி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிராங்க்புர்ட், மியூனிக் (லுஃப்தான்சா), மாஸ்கோ (ஏரோஃப்ளோட்), கோல்ன், இசுடுட்கார்ட் (செருமன்விங்சு), டுசல்டோர்ஃப் (செருமன்விங்சு) நகரங்களுக்கும் சூரிக்கு (இன்டர்சுகை), ஆம்பெர்கு (யூரோவிங்சு), இலண்டன் (சிட்டிஜெட்) நகரங்களுக்கும் பறப்புகள் உள்ளன. திரெசுடன் முதன்மை நிலையம் எனப்பொருள்படும் திரெசுடன் ஆப்ட்பானோஃப் தொடர்வண்டி நிலையத்திலிருந்து லைப்சிக், எர்ஃபுர்ட், பிராங்க்ஃபுர்ட், வீசுபாதென் நகரங்களுக்கு விரைவு நகரிடைச் சேவை உள்ளது. தவிரவும் பிராகா, கிராசு, வியன்னா நகரங்களுக்கு யூரோசிட்டி சேவையும் பெர்லின், ஆம்பர்கு நகரங்களுக்கு நகரிடை சேவையும் உள்ளன. திரெசுடன் பெருநகரப் பகுதியில் நான்கு நெடுஞ்சாலைகள் உள்ளன:

திரெசுடனில் மூன்று 3 S-பான் (பெருநகர தரைமேல் தொடருந்து) தடங்களும் பெரிய அமிழ் தண்டூர்தி பிணையமும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Designated by article 2 of the "Saxon Constitution". Archived from the original on 31 ஜனவரி 2008. 25 பிப்ரவரி 2008 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: BOT: original-url status unknown (link)
  2. http://www.leipzig.de/news/news/leipzigs-einwohnerzahl-knackt-die-570-000/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-05-27 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-05-27 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.dresden.de/de/leben/stadtportrait/statistik/wirtschaft-finanzen/tourismus.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெசுடன்&oldid=3587222" இருந்து மீள்விக்கப்பட்டது