உள்ளடக்கத்துக்குச் செல்

திபெத்திய மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Euteleostomi
திபெத்திய மான்
CITES Appendix I (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
திபெத்திய மான்
பேரினம்:
திபெத்திய மான்

இனம்:
P. hodgsonii
இருசொற் பெயரீடு
Pantholops hodgsonii
(Abel, 1826)

திபெத்திய மான் அல்லது செர்ரு மான் ( Tibetan antelope or chiru ) ( திபெத்தியம்: གཙོད་Wylie: gtsod சீனம்: 藏羚羊; பின்யின்: zànglíngyáng[4]) என்பது நடுத்தர அளவுள்ள போவியட் மறிமான் ஆகும். இது திபெத்திய பீடபூமியை பூர்வாகமாக கொண்டது. இவற்றில் பெரும்பாலான எண்ணிக்கையிலானவை சீன எல்லைக்குள் வாழ்கின்றன. சில இந்திய பூட்டான் எல்லைகளில் ஆங்காங்கே வாழ்கின்றன. 150,000 க்கும் குறைவான முதிர்ந்த மான்கள் காடுகளில் எஞ்சியுள்ளன. ஆனால் தற்போது இந்த மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.[1] 1980கள் மற்றும் 1990களில், நடந்த பாரிய சட்டவிரோத வேட்டையாடுதல் காரணமாக இவை பெருமளவில் அழிக்கபட்டன. இவறின் மிகவும் மென்மையான, இலகுவான, வெப்பமூட்டும் உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. பொதுவாக இவை இறந்த பிறகே இவற்றின் உரோமம் எடுக்கப்படுகிறது. ஷாஹ்தூஷ் ("நல்ல கம்பளிகளின் அரசன்" என்று பொருள்படும் பாரசீக சொல்) என்று அழைக்கப்படும் ஆடம்பர சால்வைகளை நெசவு செய்ய இவற்றின் உரோமம் பயன்படுத்தப்படுகிறது. ஷாஹ்தூஷ் சால்வைகள் பாரம்பரியமாக இந்தியாவில் திருமணப் பரிசாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு சால்வையை உருவாக்க மூன்று முதல் ஐந்து வளர்ந்த மான்களின் உரோமம் தேவைப்படும். ஷாஹ்தூஷ் தயாரிப்புகள், வணிகம் மீது வாசிங்கடன் பேராயத்தின்[2] கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இந்த ஆடம்பர பொருட்களுக்கான தேவை இன்னும் உள்ளது. இந்தியாவிற்குள், இந்தச் சால்வைகளின் மதிப்பு $1,000–$5,000 உள்ளது. சர்வதேச அளவில் இதன் விலை $20,000 வரை அதிகமாக இருக்கலாம்.[5] 1997 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் திபெத்திய மிருகங்களைப் பாதுகாப்பதற்காக ஹோஹ் சில் தேசிய இயற்கைக் காப்பகத்தை (கெகெக்சிலி என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவியது.

வகைப்பாடு[தொகு]

திபெத்திய மான் பாந்தோலோப்ஸ் பேரினத்தில் உள்ள ஒரே இனமாகும். இது முன்னர் துணைக் குடும்பமான ஆன்டிலோபினேயில் (இப்போது டிரைப் ஆண்டிலோபினி என்று கருதப்படுகிறது) வகைப்படுத்தப்பட்டது. ஆனால் உருவவியல் மற்றும் மூலக்கூறு சான்றுகள் இதை பாந்தோலோபினே துணைக் குடும்பம்பத்தில் வைக்க காரணமாயிற்று. அப்போதைய துணைக் குடும்பமான கேப்ரினேயின் ஆட்டு-மான்களுடன் நெருக்கமாக இருந்தது.[6] இது சர்ச்சைக்குரியதாக இருப்பினும்,[7] பெரும்பாலான ஆய்வாளர்கள் இப்போது திபெத்திய மானை கேப்ரினே அல்லது காப்ரினி டிரைபின் உண்மையான உறுப்பினராக கருதுகின்றனர்.

விளக்கம்[தொகு]

சாங்டாங் இயற்கை காப்பகப் பகுதியில் திபெத்திய மான்

திபெத்திய மான் ஒரு நடுத்தர அளவிலான இரலை ஆகும். ஆண் மான்களின் உயரம் தோள்பட்டை வரை 83 cm (32+12 அங்) என்றும், பெண் மான்கள் 74 cm (29 அங்) உயரம் கொண்டவை. ஆண் மான்கள் பெண் மான்களை விட கணிசமான உயரம் கொண்டவை. ஆண் மான்கள் 39 kg (86 lb) எடையுள்ளவை. பெண் மான்கள் 26 kg (57 lb) எடை உள்ளவை. மேலும் ஆண் மான்களுக்கும் பெண் மான்களுக்குமான வேறுபாட்டை கொம்புகள் மற்றும் கால்களில் கருப்பு கோடுகள் இருப்பதைக் கொண்டு எளிதில் அறியலாம். இவை இரண்டும் பெண் மான்களுக்கு இல்லை. இவற்றின் உடலில் வெள்ளை நிற உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. ஆண் மான்களின் முகம் சற்று கருமையானதாக இருக்கும். ஒவ்வொரு காலின் முன்புறம் கருப்புக் கோடு உண்டு. இதன் மூக்கு வீங்கியது போலக் காணப்படும். நாசித் துவாரங்களுக்குள் சிறிய புடைப்பு உண்டு. இவை உயர்ந்த மலையில் வாழ்வதற்கான தகவமைப்பு எனப்படுகின்றன.[8]

ஆண் மான்களுக்கு நீண்ட, வளைந்த கொம்புகள் உண்டு. கொம்புகள் பொதுவாக 54 முதல் 60 செமீ (21 முதல் 24 அங்குலம்) நீளம் இருக்கும். கொம்புகள் மெல்லியவை, அவற்றின் கீழ் பகுதிகளில் வளையம் போன்ற முகடுகளுடன், கூர்மையான நுனியைக் கொண்டுள்ளன. கொம்புகளின் நீளம் ஒப்பீட்டளவில் சீரானதாக இருந்தாலும், அவற்றின் வடிவத்தில் சில மாறுபாடுகள் உள்ளன, எனவே கொம்புளுக்கு இடையிலான தொலைவு 19 முதல் 46 cm (7+12 முதல் 18 அங்) மிகவும் மாறுபடும். இவற்றின் கொம்புகள் கேப்ரின்களைப் போல வாழ்நாள் முழுவதும் வளர்வதில்லை. காதுகள் குட்டையாகவும், கூர்மையாகவும் இருக்கும். மேலும் வால் 13 செமீ (5 அங்குலம்) நீளத்தில் ஒப்பீட்டளவில் குறுகியதாக இருக்கும்.[8]

பரவலும், வாழ்விடமும்[தொகு]

திபெத்திய பீடபூமியில் மட்டுமே காணப்படும், திபெத்திய மான்கள், 3,250 மற்றும் 5,500 மீ (10,660 மற்றும் 18,040 அடி) வரையிலான அல்பைன் மற்றும் குளிர் புல்வெளி சூழல்களில் வாழ்கின்றன. இவை தட்டையான, திறந்த வெளி நிலப்பரப்பை விரும்புகின்றன. இந்த மான்கள் கிட்டத்தட்ட அனைத்தும் சீனாவில் காணப்படுகின்றன. அங்கு இவை திபெத்து, தெற்கு சிஞ்சியாங், மேற்கு கிங்காயில் வசிக்கின்றன. ஒரு சில விலங்குகள் இந்தியாவின் லடாக்கில் எல்லைக்கு அப்பால் காணப்படுகின்றன. திபெத்திய மான்களின் மேற்கத்திய குழு தெப்சங் சமவெளியில் உள்ளன. அங்கு அவை 5500 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. தற்காலத்தில் இந்த மான்களில், பெரும்பான்மையானவை வடக்கு திபெத்தின் சாங் டாங் இயற்கை காப்பகப் பகுதியில் காணப்படுகின்றன. 1826 இல் விவரிக்கப்பட்ட முதல் மாதிரிகள் நேபாளத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை; அப்பகுதியில் இருந்த இனங்கள் அற்றுவிட்டன.[1] எந்த கிளையினமும் அங்கீகரிக்கப்படவில்லை. குகுசீலியில் உள்ள ஜுயோனாய் ஏரி (卓乃湖) திபெத்திய மான்கள் கன்று ஈனும் இடமாக அறியப்படுகிறது.[9][10]

நடத்தை[தொகு]

தலை

திபெத்திய மான்கள் செடிகள், புற்கள், கோரைப்புற்கள் போன்றவற்றை உண்கின்றன. குளிர்காலத்தில் பெரும்பாலும் பனியைத் தோண்டி அடியில் உணவை எடுக்கின்றன. அவற்றின் இயற்கை வேட்டையாடிகளில் ஓநாய்கள், சிவிங்கிப்பூனைகள், பனிச்சிறுத்தைகள் ஆகியவை அடங்கும். மேலும் சிவப்பு நரிகள் இவற்றின் குட்டிகளை வேட்டையாடுவதாக அறியப்படுகிறது.[8][11]

திபெத்திய மான்கள் கோடை மற்றும் குளிர்கால மேய்ச்சல் நிலங்களுக்கு இடையில் நகரும் போது சில நேரங்களில் நூற்றுக்கணக்காக மந்தைகளாக கூடி கூட்டமாக இருக்கும். இருப்பினும் அவை பொதுவாக 20 க்கும் மேற்படாக எண்ணிக்கை கொண்ட சிறிய குழுக்களாக பிரிந்து காணப்படும்.[8] பெண் மான்கள் கோடைக்காலத்தில் கன்று ஈன்ற இடங்களுக்கு ஆண்டுதோறும் 300 கிமீ (200 மைல்) வரை இடம்பெயர்ந்து வந்து, அங்கு வழக்கமாக ஒரு கன்றை ஈனும், இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் மீண்டும் ஆண்களுடன் சேரும்.

இனப்பெருக்கம்[தொகு]

சுமார் ஆறுமாத கர்ப்ப காலதிற்குப் பிறகு தாய் மான்கள் சூன் அல்லது சூலையில் ஒரு குட்டியைப் பெற்றெடுக்கிறன. குட்டிகள் பிறந்த 15 நிமிடங்களுக்குள் நிற்கும். அவை 15 மாதங்களுக்குள் முழுமையாக வளர்ந்து, இரண்டாவது அல்லது மூன்றாம் ஆண்டில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. பெண் மான்கள் குட்டிகளை ஈனும் வரை தாயுடன் இருக்கும் என்றாலும், ஆண் குட்டிகள் 12 மாதங்களுக்குள் பிரிந்து செல்கின்றன வெளியேறுகிறன. அந்த நேரத்தில் அவற்றின் கொம்புகள் வளர ஆரம்பிக்கும். ஆண் மான்களின் கொம்பின் அதிகபட்ச நீளம் சுமார் மூன்றரை வயதில் அடைகிறது.[8]

திபெத்திய மான்களின் ஆயுட்காலம் உறுதியாகத் தெரியவில்லை. பாதுகாப்பாக வளர்க்கப்படும் மிகச் சில மான்களின் [12] ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள் என அறியப்படுகிறது.[8]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Pantholops hodgsonii". IUCN Red List of Threatened Species (IUCN SSC Antelope Specialist Group) 2016: e.T15967A50192544. 2016. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T15967A50192544.en. https://www.iucnredlist.org/species/15967/50192544. பார்த்த நாள்: 19 November 2021. 
 2. 2.0 2.1 "Appendices". cites.org. CITES. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
 3. Brian Houghton Hodgson (22 July 1834). "[July 22, 1834 // William Yarrell, Esq., in the chair"]. விலங்கியல் ஆய்விதழ் 2: 81. https://archive.org/stream/proceedingsofgen34zool#page/n91/mode/2up. "A letter was read, addressed to Mr. Vigours by B.H. Hodgson, ...". 
 4. "【藏羚羊】 zànglíngyáng". (7). (2016). 
 5. "Tibetan antelope". World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
 6. Gatsey, J. (1997). "A cladistic analysis of mitochondrial ribosomal DNA from the Bovidae". Molecular Phylogenetics and Evolution 7 (3): 303–319. doi:10.1006/mpev.1997.0402. பப்மெட்:9187090. 
 7. Lei, R. (2003). "Phylogenetic relationships of Chinese antelopes (subfamily Antilopinae) based on mitochondrial ribosomal RNA gene sequences". Journal of Zoology 261 (3): 227–237. doi:10.1017/S0952836903004163. 
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Leslie, D.M.; Schaller, G.B. (2008). "Pantholops hodgsonii (Artiodactyla: Bovidae)". Mammalian Species: 1–13. doi:10.1644/817.1. 
 9. "405页面".
 10. Ahmad, Khursheed; Kumar, Ved P.; Joshi, Bheem Dutt; Raza, Mohamed; Nigam, Parag; Khan, Anzara Anjum; Goyal, Surendra P. (2016). "Genetic diversity of the Tibetan antelope (Pantholops hodgsonii) population of Ladakh, India, its relationship with other populations and conservation implications". BMC Research Notes 9 (477): 477. doi:10.1186/s13104-016-2271-4. பப்மெட்:27769305. "It is clear that there has been reported migration and exchange of individuals towards the western part in its range, but habitat suitability analysis is needed for a better understanding of the reasons for lack of major exchange of individuals between the westernmost (Depsang Plains close to DBO in northern Ladakh and Aksi Chin near Kunlun range) and other populations.". 
 11. Lian, X. (2007). "Group size effects on foraging and vigilance in migratory Tibetan antelope". Behavioural Processes 76 (3): 192–197. doi:10.1016/j.beproc.2007.05.001. பப்மெட்:17582704. 
 12. Su, J. (2003). "Ailing: The first domesticated Tibetan antelope". Acta Theriologica Sinica 23 (1): 83–84. http://english.mammal.cn/Magazine/show.aspx?id=1228. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_மான்&oldid=3630494" இலிருந்து மீள்விக்கப்பட்டது