செங்காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்காய்ச்சல்
Scharlach.JPG
சிவந்த நோயாளியின் நாக்கு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, pediatrics
ஐ.சி.டி.-10A38.
ஐ.சி.டி.-9034.1
நோய்களின் தரவுத்தளம்29032
MedlinePlus000974
Patient UKசெங்காய்ச்சல்
MeSHD012541
பருக்கள் உள்ள முதுகு
கன்னங்களில் செந்நிறப்பருக்கள்

செங்காய்ச்சல் (ஆங்கிலம்:scarlet fever) என்பது தொண்டைப் புண்ணுடனும் தோலின் பரப்பில் சிவந்த தடிப்புக்களுடனும் வரும் கடுமையான காய்ச்சலாகும். இது மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்கு வரும் தொற்றுநோய்களில் ஒன்றாகும். முதலில் 1676-இல் சிட்னம் (sydenam) என்பவர் இக்காய்ச்சலை வகுத்துக்கூறினார். இக்காய்ச்சலுக்குக் காரணம் செட்ரெப்டோகாக்கசு ஏமோலிட்டிக்கசு (Streptococcus haemolyticus) என்னும் பாக்டீரிய நோய் கிருமியாகும்.

காரணிகள்[தொகு]

இக்காய்ச்சல் உள்ளவரின் மூக்கு, வாய், காதுகளிலிருந்து வரும் நீருடனாவது, அவருடைய சிறுநீர், உடைகள், பாத்திரங்கள் முதலியவைகளுடனாவது சம்பந்தப்படுகிறவர்களுக்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளும். பசுக்களுக்கு இந்ந நோயிருந்தால் அவற்றின் பாலைக் குடிப்பவர்களுக்கு வரலாம். நோயின் அவயக்காலம் (Incubation period) இரண்டு மூன்று நாட்களாகும். சிலநேரங்களில் ஒரு வாரமாகவும் இருக்கக்கூடும்.

இயல்புகள்[தொகு]

தொடக்கத்தில் தொண்டை அழற்சி, தலைவலி, 104 பாகை வரைக் காய்ச்சல், நடுக்கல், தோலின் மேல் சிவந்த சிறு பருக்கள் தோன்றும். குழந்தைகளிடம் வாந்தி, இழுப்பு, பிதற்றல் முதலியவைகளும் வரும். அடிநாச் சுரப்பிகள்(Tonsil), மெல்லிய அண்ணம், இரண்டும் சிவந்து வீங்கும். நாவில் குவிந்த தடிப்புக்களோடு வெள்ளை மாவுபோல் படிந்திருக்கும். இரண்டாம் நாள் சிவந்த தடிப்புகளுடன் நாக்குச் சிவந்துவிடும். சில நாட்களில் நாவுரிந்து பளபளப்பாக இருக்கும். இரண்டாம் நாள் கழுத்து, மார்பு, கைகளில் சிறு பருக்கள் தொடங்கி உடல் முழுவதும் பரவும். ஊசி முனை போன்ற பருக்கள் சிவந்த தோலின் மேல் கிளம்பி, ஒன்றொடு ஒன்று சேர்ந்து பெரிதாக இணைந்து கொள்ளும்.

தோலின் மேல் நகத்தினால் கீறினால் இரத்தமற்ற வெள்ளைக்கோடு ஏற்படும். முகம் சிவந்தபோதிலும் மூக்கின்வெளியிலும் வாயை சுற்றிலும் வெளுத்து விடும். சில நாட்களில் பருக்கள் முதிர்ந்து தவிடு போல் உதிரும். சில இடங்களில் தோல் துண்டுதுண்டாக உரியும். இவ்வாறு உதிர்வதும், உரிவதும் மிகுந்த தொற்றுத் தன்மையுடையன. இக்காய்ச்சலால் பல சிக்கல்கள் ஏற்படும். காதில் சீழ் பிடித்துச் செவிடாவது, காதுக்குப் பின்னுள்ள எலும்புருண்டையில் சீழ் பிடிப்பது, மூளையின் மூடுசவ்வுகளில் அழற்சி, மூளையில் கட்டிகள், இதய கபாடநோய் முதலியன ஏற்படும்.

நுரையீரல், சிறுநீரகம், சிறிபூட்டுகள் ஆகியவற்றிலும் அழற்சி காணும். சாதாரணமாகச் சிறுநீரில் வெண்ணி (Albumin) வரும். சிறுநீரில் இரத்தம் கூட வரலாம். சாதரணமாக இக்காய்ச்சல் ஒருமுறை வந்தால், மறுமுறை வருவதில்லை. இக்காய்ச்சலை எதிர்க்கும் ஆற்றல் உடலில் ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக 15வயதிற்குப் பின்னரும் வருவதில்லை.

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Scarlet fever
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்காய்ச்சல்&oldid=2938200" இருந்து மீள்விக்கப்பட்டது