உள்ளடக்கத்துக்குச் செல்

சமயச் சார்பாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமய ஆட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமயச் சார்பாட்சி (ஆங்கில மொழி: Theocracy) என்பது ஆட்சி முறைகளில் ஒன்றாகும். இறைவனோ, இறைவனின் கட்டளைக்கு உட்பட்டு தூதுவரோ ஆட்சி செய்கிறார் என்கிறது இந்தக் கொள்கை. இதன்படி, அரசின் கொள்கைகள் அனைத்தும் சமயம் சார்ந்து, இறைவனின் கட்டளைப்படி இயற்றப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையும் உள்ளது. [1] Theocracy என்ற சொல், கடவுள் மற்றும் ஆட்சி எனப் பொருள்படும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது. இதன் பொருள், இறைவனின் ஆட்சி என்பதாகும். பொதுவாக, கிறித்தவ திருச்சபையின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதையோ, சமயத் தலைவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதையோ குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக, முற்காலத்தில், இசுரயேலரை மோசே வழிநடத்திச் சென்றார். முகம்மது நபி முற்கால முஸ்லீம்களை ஆண்டார். சமயத் தலைவர் இயற்றும் சட்டங்கள் தெய்வத்தால் இயற்றப்பட்டன எனவும், இறைவனுடன் சமயத் தலைவருக்கு தொடர்பு உண்டு எனவும் மக்கள் நம்புகின்றனர். இதற்கு பைசாந்தியப் பேரரசு ஓர் எடுத்துக்காட்டு. இறைவனின் கட்டளைப்படி அரசு நடப்பதாக எண்ணினர்.

இசுரேல், இந்தியா போன்ற நாடுகளில், சமயச் சார்பாட்சி இல்லை. ஆயினும், சமயங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றிற்கான சடங்குகள் குறிப்பிடத்தக்கன. இதன்மூலம் பிற ஆட்சி முறைகளுடன் சமயச் சார்பு இயைந்து இருப்பதை அறியலாம்.

சொல் பிறப்பு[தொகு]

சமயச் சார்பாட்சி என்ற சொல், ஆங்கிலத்தில் theocracy எனக் குறிக்கப்படும். இது பண்டைய கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல்லாகும். θεός (தியோஸ்) - கடவுள், κρατέω (கிரேட்டியோ), - ஆட்சி செய்தல். இந்த இரண்டு சொற்களும் இணைந்து கடவுளின் ஆட்சி என்று பொருள் தருகின்றன. சமயச் சார்பாட்சிக்கு எடுத்துக்காட்டாக வத்திக்கான் நகரத்தைக் குறிப்பிடலாம்.

தற்காலத்தில் சமயச் சார்பாட்சி[தொகு]

கிறிஸ்தவம்[தொகு]

இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட பின்னர், திருத்தந்தை நாடுகளில் எஞ்சிய பகுதியான வத்திக்கான் நகர் தனி நாடாகியது. தற்போது, கிறிஸ்தவ சமயச் சார்பாட்சி உள்ள நாடு இது மட்டுமே. 1929 இல், இத்தாலிய அரசுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையின் படி, வத்திக்கான் தனி ஆட்சிப் பகுதி ஆனது. இதன் அரசுத் தலைவராக திருத்தந்தை இருப்பார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்வார். அவர் விரும்பினால், பதவியில் இருந்து விலகலாம். திருத்தந்தையை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தலில் எண்பது வயதிற்கு உட்பட்ட கர்தினால்கள் பங்கேற்க முடியும். அனைத்து சட்டங்களும், கத்தோலிக்க திருச்சபைச் சட்டத் தொகுப்பினை சார்ந்தவை.

இஸ்லாமியம்[தொகு]

இஸ்லாம் சமயத்தை, குறிப்பாக ஷாரியா பிரிவை ஏற்றுக்கொண்டு அதன் வழி செயல்படும் நாடுகள் இஸ்லாமியச் சமயச் சார்பாட்சி நாடுகள் எனப்படும். இவை இஸ்லாமிய சட்டங்களை, கொள்கைகளை பின்பற்றுகின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான், மூரித்தானியா, சவுதி அரேபியா, சூடான், ஏமன், சோமாலியா உள்ளிட்ட நாடுகள் இசுலாமிய ஷாரியா பிரிவை ஏற்றுக் கொண்டுள்ளன. பாகிஸ்தானில் இஸ்லாம் அரசின் சமயமாக ஏற்கப்பட்டுள்ளது. நீதி வழங்க ஷாரியாத் நீதிமன்றம் உள்ளது. இது இஸ்லாமியச் சட்ட முறைமைக்கு இணங்காத சட்டங்களை வகுப்பதில்லை. ஈரானில், அரசியல், பண்பாடு, நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள சட்டங்கள் இஸ்லாம் சமயத்திற்கு ஆதரவானவையாக இருக்க வேண்டும். ஈரானில் பல முக்கிய பதவிகளில் மதவாதிகளுக்கு இடமுண்டு.

பல ஆண்டுகளாக, இஸ்லாமியத்தை பின்பற்றியோர் சமயச் சார்பு ஆட்சியை மேற்கொண்டிருந்தனர். இது முகம்மது நபி இசுலாமியப் பேரரசை நிறுவியதில் இருந்து தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் கலைக்கப்பட்ட உதுமானியப் பேரரசு வரை தொடர்ந்திருந்தது. திருக்குரானில் காணப்படும் விதிகளுக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றி கலீபாக்கள் ஆள்வார்கள்.

திபெத்திய பௌத்தம்[தொகு]

திபெத்திய அரசு மதம் சார்ந்த ஆட்சியை மேற்கொள்கிறது. இதன் தலைவராக இருப்பவரை தலாய் லாமா எனக் குறிப்பிடுவர். திபெத்தில் இதுவரை பதினான்கு தலாய் லாமாக்கள் இருந்துள்ளனர். திரிபா என்ற பட்டப்பெயர் சிக்யோங் என மாற்றப்பட்டது. இந்தப் பெயர், முற்காலத்தில் திபெத்தியப் பகுதிகளை ஆண்ட அரசர்களின் பெயர்களைக் குறிக்கும்.

1642 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை, திபெத்திய மடாதிபதிகள் செல்வாக்கை மட்டுமே பெற்றிருந்தனர். பின்னரே, ஆட்சியிலும் பெரும்பங்கு வகித்தனர். பௌத்த சமய மடத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை வகித்துள்ளனர். மங்கோலியாவும் சில காலத்திற்கு சமயச் சார்பாட்சியின்கீழ் இருந்தது.

சோராஸ்ரிடியனம்[தொகு]

அகாமனிசியப் பேரரசுக் காலத்தில், சோராஸ்திரியனம் அரசின் சமயமாக இருந்தது. பாரசீக அரசர்கள் அனைவரும் சோரோஸ்திரியர்களாகவே இருந்தனர். பின்னர், சீலியுசிட் காலத்தில் தன்னாட்சியாக மாறியது.

சமயச் சார்பு நாடுகள்[தொகு]

சில நாடுகள் ஒரு மதத்தை மட்டும் அரசின் மதமாக ஏற்றுக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இசுலாமை அரசின் சமயமாகக் கொண்டுள்ளன.. ஆனால், இது சமயச் சார்பாட்சி ஆகாது. சமயத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில்லை.

முற்காலத்தில் சமயச் சார்பாட்சி[தொகு]

உமய்யாத், அப்பாசியக் கலீபகம், திருத்தந்தை நாடுகள் ஆகியன குறிப்பிடத்தக்க நாடுகள். முற்காலத்தில் இவை சமயத் தலைவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பண்டைய எகிப்து, ரோமானியப் பேரரசு ஆகிய பண்டைய நாடுகளில் அரசாட்சி இருந்தது. ஆயினும், மதச் சார்பும் இருந்தது. அரசரை, இறைவனின் அம்சமாக எண்ணி வணங்கினர். பழைய இசுரயேலை நீதித் தலைவர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் யாவேயின் வழித் தோன்றல்கள் என்ற கருத்து இருந்தது.

கிறித்தவத்தில்[தொகு]

கிறிஸ்தவ சமயத்தின் தொடக்க காலத்திலும், தளத்திருச்சபையின் தலைவராக இருந்தவர் நாட்டின் தலைவராகவும் ஆட்சி செய்துள்ளனர். இதை Caesaropapism என அழைப்பர்.

பைசாந்தியப் பேரரசில் அரசரே குடிமக்களின் தலைவராக இருப்பினும் அவரை கடவுளின் எல்லாம் வல்ல பதில் ஆளாக மக்கள் கருதினர்.[2] இதனால் அரசர்கள் ஆயர்கள் மேலும் அதிகாரம் செலுத்த தொடங்கினர்.

ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் சமயச் சார்பு ஆட்சி நடத்தினார். கால்வினின் தாக்கத்துக்குட்பட்ட மாசச்சூசெட்ஸ் பே காலனியில் (Massachusetts Bay Colony) பியூரிடன்சின் (Puritans) வாழ்க்கைமுறை சீர்திருத்தத் திருச்சபையின் சமயச் சார்பாட்சிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

1860களில் இயேசுவின் இளைய தம்பி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சீனாவின் சிங் அரசமரபின் ஹாங் சியுகுவான் (Hong Xiuquan) புறக்கோட்பாடான கிறித்தவ சமயச் சார்பாட்சி (heterodox Christian theocracy) செய்தார். இதனால் 15 ஆண்டுகள் சிங் அரசமரபு தைப்பிங் கிளர்ச்சியினை கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான நாஞ்சிங் வீழ்ச்சியுறும் வரை எதிர்கொள்ள நேரிட்டது.

கதைகளில் சமயச் சார்பாட்சி[தொகு]

அறிவியல் புனைவு, ஊகப்புனைவு, கற்பனைக் கதைகள் போன்ற கதைகளில் சமயச் சார்பாட்சி இருந்ததாக குறிப்புகள் உண்டு. இவற்றில் சில:

 • தி எர்த்குவேக் இன் சிலி
 • வாயேஜர்ஸ் 6 தி ரிட்டர்ன்
 • கேதர் டார்க்னெஸ்
 • எ உமன் எ டே
 • மெசியா
 • லார்டு ஆஃப் லைட்
 • தி கோப்லின் டவர்
 • ஏஜ் ஆஃப் மித்தாலஜி என்ற நூலில் வரும் அட்லாண்டிஸ் என்ற நாடு சமயச் சார்பாட்சிக்கு உட்பட்டது.
 • இஃப் திஸ் கோஸ் ஆன்/ ரிவால்ட் இன் 2100
 • தி லாங் டுமாரோ
 • தி லாஸ்ட் ஸ்டார்ஷிப்
 • தி ஸ்டோர்க்
 • தி ஆஃசிடெண்டல் டம் மிசின்

சான்றுகள்[தொகு]

 1. Catholic Encyclopedia "A form of civil government in which God himself is recognized as the head."
 2. The Byzantine Theocracy: Steven Runciman
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயச்_சார்பாட்சி&oldid=2226005" இலிருந்து மீள்விக்கப்பட்டது