கொம்பன் ஆந்தை
கொம்பன் ஆந்தை | |
---|---|
![]() | |
Adult showing the black side edges to face mask | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | இசுடிரிங்கிபார்மிசு |
குடும்பம்: | இசுடிரிங்கிடே |
பேரினம்: | கொம்பு ஆந்தை |
இனம்: | B. bengalensis |
இருசொற் பெயரீடு | |
Bubo bengalensis (Franklin, 1831)[2] | |
![]() | |
Bounding distribution of Indian eagle-owl | |
வேறு பெயர்கள் | |
Urrua bengalensis[3] |
ஆந்தைகளில் பெரியதாக உள்ள இவை நல்ல பழுப்பு மஞ்சள் நிறத்தில் அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிற அடர்த்தியான வரிகள் உடலில் காணப்படும். தலையின் மேல் கொம்புகள் போன்ற இறகுக் கற்றைகள் மேல்நோக்கி நீண்டிருப்பதால், கொம்பன் ஆந்தை என்ற காரணப்பெயர் ஏற்பட்டது
சிறப்பு[தொகு]
இங்கு பல பறவையினங்கள் இருந்தாலும் இரவாடியான கொம்பன் ஆந்தையே முதன்மையான பறவையாகப் பார்க்கப்படுகிறது. வலுவான கால்கள், இரவிலும் ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்ட கண்கள், இரையை வீழ்த்தும் திறன் பெற்ற நகங்கள், பலம் பொருந்திய அலகுகள் என தனது வேட்டைத் திறனைக் கொண்டு, தங்களைவிட பலத்தில் வலிமையான இரையைக் கூடப் பிடிக்கும் திறன் கொண்டிருப்பதால் கொம்பன் ஆந்தைகள், வான்வெளியின் புலிகளாகக் கருதப்படுகின்றன. [4]
இதரப்பெயர்கள்[தொகு]
- தமிழில்
- கொம்பன் ஆந்தை
- குடிஞை
- ஆங்கிலப்பெயர்
- Indian Eagle Owl
- Great Horned Owl
- அறிவியல் பெயர்
- Bubo bubo
உடலமைப்பு[தொகு]
56 செ.மீ. - குண்டான தோற்றம் கொண்ட இது பழுப்பு நிறமான உடலில் வெளிர் மஞ்சளும் நல்ல பழுப்புமான கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவமான ஆரஞ்சு நிறக் கண்களையும் தலையில் கருப்பு நிறத்தில் விறைத்து நிற்கும் கொம்புகளையும் கொண்டது. கண்கள் உருண்டு, பெரியதாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும், ஊர்ப்பருந்தை விட சற்று பெரியதாக காணப்படும் பெரிய ஆந்தைகள் இவை.
வகைகள்[தொகு]
தமிழ்நாட்டில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன அவற்றில் முக்கிய சில வகைகள்
வரிசை எண் | பொதுவான பெயர் | ஆங்கிலப்பெயர் | அறிவியல் பெயர் | உடல் அளவு |
---|---|---|---|---|
1 | கூகை ஆந்தை | Barn Owl | Tyto alba | 36 செ.மீ |
2 | பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை | Collared Scops Owl | Outs bakkamoena | 24 செ.மீ |
3 | பெரிய காட்டு ஆந்தை | Forest Eagle Owl | Bubo nipalensis | 63 செ.மீ |
4 | பூமன் ஆந்தை | Brown Fish Owl | Ketupa zeylonensis | 56 செ.மீ |
5 | பொரிப்புள்ளி ஆந்தை | Mottled Wood,- Owl | Strix – ocellata | 48 செ.மீ |
6 | சிறிய காட்டு ஆந்தை | Jungle owlet | Claucidium ragiatum | 20 செ.மீ |
7 | புள்ளி ஆந்தை | Spotted Owlet | Athene brama | 21 செ.மீ |
8 | வேட்டைக்கார ஆந்தை | Brown Hawk Owl | Ninox scutulata | 32 செ.மீ |
9 | குட்டைக்காது ஆந்தை | Short eared | Aslo Flammeus | 38 செ.மீ |
காணப்படும் பகுதிகள்[தொகு]
தமிழகம் எங்கும் புதர் நிறைந்த பாறைகளோடு கூடிய மலைப்பக்கங்கள், காடுகள், பெரிய மாமரங்கள் வளர்ந்து நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் காணப்படும் இது மாறாப் பசுங்காடுகளையோ நீரில் வளம் இல்லாத வறள் காடுகளையோ சார்ந்து திரிவதில்லை. பகலில் மறைந்திருக்கும் பாறை இடுக்குகளிள் வாழும்.
உணவு[தொகு]
கொம்பன் ஆந்தைகள் முக்கியமாக சுண்டெலி எலிகளையே உண்டாலும் பாம்புகள், தவளைகள் போன்றவற்றோடு வண்டுகள் போன்ற பூச்சிகளையும் உண்ணுகின்றன. கூகையைப் போலச் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது.
இனப்பெருக்கம்[தொகு]
பொதுவாக கொம்பன் ஆந்தைகள் நவம்பர் முதல் மே வரை மழைக்காலம் முடியும் தருவாயில் முட்டையிடுகின்றன. இவை கூடுகள் ஏதும் கட்டுவதில்லை. புதர் ஓரமான குழிகளிலும் மண்மேடுகளின் மீதும், நிழல் கவிழ்ந்த பாறைகளின் மேல் முட்டையிடுகின்றன. சில நேரங்களில் பெரிய புதர் அல்லது மரத்தின் கீழேயோ கூட முட்டையிடும் என்று ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கொம்பன் ஆந்தைகள் மிகவும் மூர்க்கமாக முட்டை இட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும். ஓர் ஆந்தை அடைகாக்கும் வேளையில் மற்றொரு ஆந்தை அருகில் உள்ள மரத்திலோ அல்லது பாறையிலோ அமர்ந்து காவல் இருக்கும். வைரி போன்ற பறவைகளோ அல்லது மனிதர்களோ முட்டைகள் உள்ள பகுதியை அணுகும்போது தற்காப்பிற்காகத் தாக்க முற்படும்.
வாழ்க்கை[தொகு]
கொம்பன் ஆந்தைகள் 4 முட்டைகள் வரை இடும் என்றும், சிலசமயங்களில் 2 அல்லது 3 தான் இடும் என்றும் சாலிம் அலி குறிப்பிட்டுள்ளார். எல்லா முட்டைகளும் ஒரே நாளில் இடப்படுவதில்லை. ஒருநாள்விட்டு ஒரு நாள் அவை முட்டையிடுவதால், குஞ்சுகள் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் இருப்பதை கண்டு அறியலாம். சுமார் 33 அல்லது 35 நாட்களில் வெளிவரும் குஞ்சுகள் 6 மாத காலத்திற்கு பெற்றோரை நம்பியே வாழ்கின்றன. [6]
தற்காப்பு நடத்தை[தொகு]
பல நேரங்களில் இவைகள் தன் குஞ்சுகளுக்கு அருகில் வரும் மனிதர்கள் அல்லது மற்ற உயிரினங்களைத் திசை திருப்புவதற்காகவோ அல்லது அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் வேளையிலோ இறகு உடைந்து தன்னால் பறக்க இயலாமல் இருப்பதுபோல் இறக்கைகளை அடித்துக் கொண்டும், ஒலி எழுப்பிக் கொண்டும், தலையைத் தொங்கவிட்டுக் கொண்டும் இருக்கும், எதிரி நெருங்கி வந்தால் பறந்து விடும். ஆழ்ந்த தொனியில் ப்புஉப்.. பூஊ என விட்டு விட்டுக் கத்தும். கூட்டை நெருங்கினால் அலகை ஒன்றோடு ஒன்று தட்டி ஓசை எழுப்புவதோடுகூட, தூவிகளை புஸ்ஸென உப்பும்படி செய்தும் பயங்காட்டும்.
இளம் கொம்பனின் வாழ்க்கை முறை[தொகு]
குஞ்சுகள் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்தே பாதுகாத்து வளர்க்கின்றன. சில சமயங்களில் எலிகளைக் கொன்று எடுத்து வந்து குஞ்சுகளுக்குக் கொடுப்பதோடு உணவைச் சேமிப்பது போல் குஞ்சுகளின் அருகாமையில் வைக்கும். கொம்பன் ஆந்தைகள், தங்கள் குஞ்சுகளை நன்கு பாதுகாத்தாலும் அவைகள் வளர் நிலையில் தமது வாழிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும் போது பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. மனிதர்களாலும் மற்ற வேட்டையாடிப் பறவைகளாலும் நேரும் ஆபத்துகளை விடவும் அவை பாறைகளில் இருந்து கீழே விழுந்துவிடும் ஆபத்தே அதிகமாக உள்ளது. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அவை இருக்கும் பாறைகளின் மறைவிடங்களை விடவும் அளவில் பெரியதாகும் போது வேறு இடங்களுக்குச் செல்லத் தொடங்கும். அச்சமயங்களில் அவை நழுவி கீழே உள்ள நீர்நிலையில் விழுந்து விடும். அவ்வாறு நீரில் விழும் ஆந்தைக் குஞ்சுகள் சில சமயங்களில் கரையேறிவிடும். ஆனால் பலநேரங்களில் அவை நீரில் மூழ்கி இறந்து விடும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2016). "Bubo bengalensis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22688934A93211525. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22688934A93211525.en. http://www.iucnredlist.org/details/22688934/0. பார்த்த நாள்: 14 January 2018.
- ↑ Franklin, James). 1831. Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London (PZS): Pt. 1, no. 10, p 115.
- ↑ Jerdon, TC (1839). "Catalogue of the birds of the peninsula of India, arranged according to the modern system of classification; with brief notes on their habits and geographical distribution, and description of new, doubtful and imperfectly described specimens". Madras Jour. Lit. Sc. 10: 60–91. https://archive.org/stream/madrasjournalli00esqgoog#page/n580/mode/1up.
- ↑ [[[கொம்பன் ஆந்தை]] "Eurasian_eagle-owl-கொம்பன் ஆந்தை"] Check
|url=
value (உதவி). 29 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. - ↑ வட்டமிடும் கழுகு -ச.முகமது அலி தடாகம் வெளியீடு
- ↑ காடு -தடாகம் வெளியீடு செப்-அக்டோபர்-2015 பக்கம் எண்:20,21
வெளி இணைப்புகள்[தொகு]
- Eurasian eagle-owl
- Eurasian eagle owl and other owl pictures
- Eurasian eagle-owl Description, photos and calls