காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காகம்
House-Crow444.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவை
வரிசை: பஸெரிபோர்மெஸ்
குடும்பம்: கோர்விடே
பேரினம்: Corvus
இனம்: C. splendens
இருசொற் பெயரீடு
Corvus splendens
Vieillot, 1817
Corvus splendens map.jpg

காகம் அல்லது காக்கை (கோர்வஸ் ஸ்பிளெண்டன்ஸ்) (ஆங்கிலம்:House Crow) மற்றும் கொழும்பு காகம் என வழங்கப்படும் காக்கை குடும்பத்தைச் சேர்ந்த, ஆசியாவைத் தனது இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் பொதுவான பறவையாகும். இதனைப் பேச்சு வழக்கில் காக்கா என்றும் அழைப்பர். இந்தியாவில் அதிகமாக காணப்படும் பறவை இனமாகும்.[2] பொதுவாக 43 செ.மீ அளவில் காணப்படும்.[3] ஆனாலும், கப்பல் போக்குவரத்தின் காரணமாக இந்நாளில், இந்தப் பறவை உலகின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இது ஐரோப்பாவில் காணப்படுகின்ற ஜாக்டோ (Jackdaw) எனப்படும் காகம் மற்றும் கரியன் காகம் (Carrion Crow) என்னும் இரு வகைக் காகங்களுக்கு இடைப்பட்டதான தோற்றவமைப்பைக் கொண்டிருந்தாலும் குறித்த இரண்டு வகைக் காகங்களையும் விட மெல்லியதாகும். நெற்றி, உச்சி, தொண்டைப் பகுதி, மேல் மார்பு என்பன மினுக்கமான கடும் கரு நிறத்தைக் கொண்டுள்ள அதேவேளை, கழுத்து மற்றும் மார்பு ஆகியன சாம்பல் கலந்த மண்ணிறமானது. சிறகுகளும், வாலும், கால்களும் கருநிறமானவை.

காக்கையின் முட்டைகள் கருநீல நிறத்தில் காணப்படும்.

இவற்றின் பல்வேறு உடற் பகுதிகளின் நிறங்களின் கடுமைத்தன்மையும், சொண்டின் தடிப்பும் வேறுபாடாக அமைந்த, பல பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட காகங்கள் காணப்படுகின்றன. பொதுவாக காகமானது தங்களுடைய உணவை தாங்களே பகிர்ந்துக் கொள்கின்றன.

தமிழர்களுக்கும் காக்கைக்கும் உள்ள தொடர்பு[தொகு]

ஒரு வீட்டில் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் காகம்.

ஒவ்வொரு நாளும் தமிழர்களின் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு வீட்டுக் காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. காகம் கரைதல் வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படும், நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில் இருந்தே இருப்பதை, சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது. குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை, ஐந்து ஏழு ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா………………….கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.  அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச்  சுவைக்கும்.  அப்படிச் சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் கா…………………கா,,,,,,,,,,,,,,,, என்று  கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.  இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. காக்கையின் இந்த குணமானது கூடி வாழ்வதின் சிறப்பினை உணர்த்த குறிப்பிடப்படுவது உண்டு.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.  இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம் என்றும் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும் எனவும் தமிழர்கள் கருதுகின்றனர்.

காகத்தின் பழக்கங்கள்[தொகு]

டோர்செட், இங்கிலாந்தது கடற்கரையில் ஒரு காகம் .

அதிகாலையில் எழுந்து கரைதல். உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல். உணவு உண்ணும்போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.   பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.  மாலையிலும் குளித்தல் பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான், ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. அவை கூடிவாழ்பவை. மிகவும் சாதுவான பறவையாகும்.

காக்கைகளின் வகைகள்[தொகு]

காக்கைகளில் நூபூரம், பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

உசாத்துணைகள்[தொகு]

  1. BirdLife International (2004). Corvus splendens. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006. Database entry includes justification for why this species is of least concern
  2. பறவைகள் அறிமுக கையேடு ப.ஜெகநாதன்,ஆசை கிரியா பதிப்பகம்-பக்கம் எண்:52
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர்.க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்: 164
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகம்&oldid=2885423" இருந்து மீள்விக்கப்பட்டது