உள்ளடக்கத்துக்குச் செல்

மா. நா. நம்பியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். என். நம்பியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். என். நம்பியார்

இயற் பெயர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார்
பிறப்பு மார்ச் 7, 1919
இந்தியா கேரளா, இந்தியா
இறப்பு 19 நவம்பர் 2008(2008-11-19) (அகவை 89)
இந்தியா தமிழ் நாடு, இந்தியா
நடிப்புக் காலம் 1944-2004
துணைவர் ருக்மணி

மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7[1], 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்.[2] ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.

வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இளமை

[தொகு]

கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்[3].

இல்லறம்

[தொகு]

1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.

ஆன்மிக ஈடுபாடு

[தொகு]

திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். [4] நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.

நாடகத்துறை பங்களிப்புகள்

[தொகு]

தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து [5] சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.

திரைத்துறை பங்களிப்புகள்

[தொகு]

நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த ராம்தாசு என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.

வித்யாபதி (1946) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்

பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. 1939 இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார்.

1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ். வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர்.

இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். கல்யாணி (1952), கவிதா (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம். ஜி. இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார்.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் குணச்சித்திர வேடமேற்றார். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்தார்.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.

மறைவு

[தொகு]

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. நம்பியார் பிறந்தது 1919 மே 21 என குண்டூசி (மாத இதழ்), சென்னை, மே 1951 இதழில் தரப்பட்டுள்ளது.
  2. Mohan V. Raman (16-11-2010). "Reel villain, real hero". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Reel-villain-real-hero/article15689125.ece. பார்த்த நாள்: 20-05-2017. 
  3. பக். 11-23, பேசும் படம் (மாத இதழ்), சென்னை, ஜூலை 1949
  4. வைர மோதிரம் மாயம் சினிமா தினமலர் 10 அக்டோபர் 2014
  5. கோபமா..? அப்படின்னா..? எம்.என்.நம்பியார் - சிறப்புக் கட்டுரை ஆனந்த விகடன் - 03 Dec, 2008[தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://www.news18.com/news/india/nambiar-dies-302102.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._நா._நம்பியார்&oldid=4104592" இலிருந்து மீள்விக்கப்பட்டது