உள்ளடக்கத்துக்குச் செல்

உடுமலை நாராயணகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுமலை நாராயணகவி
பிறப்புநாராயணசாமி
(1899-09-25)25 செப்டம்பர் 1899
பூவிளைவாடி, உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு
இறப்பு23 மே 1981(1981-05-23) (அகவை 81)
பூவிளைவாடி
இறப்பிற்கான
காரணம்
வயது மூப்பு
பணிகவிஞர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
பெற்றோர்கிருஷ்ணசாமி, முத்தம்மாள்[1]
வாழ்க்கைத்
துணை
பேச்சியம்மாள்
பிள்ளைகள்இராமகிருஷ்ணன்

உடுமலை நாராயணகவி (Udumalai Narayana Kavi, 25 செப்டம்பர் 1899 – 23 மே 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-இல் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

இளமை

[தொகு]

1899ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.

இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

நாடக ஈடுபாடு

[தொகு]

பூளைவாடியில் நிகழும் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'இராமநாடகம்' என்ற நாடகத்தில் இலக்குவன் வேடம் பூண்டவர் இவரே. இளமைப் பருவத்தில் இவருக்கிருந்த கலை ஈடுபாடே பின்னர் திரைத் துறையில் ஈடுபட வழிகாட்டியாய் அமைந்தது. அக்காலத்தே நாடகத் துறையில் புகழ்பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்தவர் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர். இவர் 'ஆரிய கான சபா' என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார்.

இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். அப்போதுதான் பேச்சியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தனர்.

வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது. 'இந்தக் கடனை எல்லாம் திருப்பித் தரும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன்' எனச் சூளுரை செய்து கையில் நூறு ரூபாயோடு பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். தன்மானம் ஒன்றையே துணையாகக் கொண்டு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்த மதுரை இவருக்கு உதவியாய் இருந்தது.

விடுதலைப் போரில் ஈடுபாடு

[தொகு]

மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதே சமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார்.

சொந்த மண்ணை அடைதல்

[தொகு]

ஒருமுறை மதுரை நாடகச் சங்கத்தார் இவரின் கலைத்திறத்தைப் பாராட்டி வழங்கிய ஆயிரம் ரூபாய்க்கும் புத்தகங்களாகவே வாங்கினார். அப்போது ஊரில் உள்ள கடன் நினைவுக்கு வரவே மீண்டும் பொருளீட்டினார். ஈட்டிய பணத்துடன் சென்று தன் ஊருக்குப் புறத்தே நின்று கடனையெல்லாம் அடைத்த பிறகே ஊருக்குள் நுழைந்தார்.

திராவிட இயக்கத் தொடர்பு

[தொகு]

மதுரையில் வாழ்ந்த போது அங்கு முகாமிட்டிருந்த டி.கே.எஸ் நாடகக்குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ் கிருஷ்ணனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் முதலிய திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது. அதனால் திராவிடர் இயக்கப்பற்றும், பகுத்தறிவுப் பார்வையும் கவிக்குக் கிடைத்தன.

திரையுலகத் தொடர்பு

[தொகு]

நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அப்படியே திரைப்படப் பாடல் உலகிலும் கவிராயர் நுழைந்தார். முதன்முதலாக கவிதை எழுதிய திரைப்படம் "சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு" ஆகும். "கவிராயர்" எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப் பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள். அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனை விட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள். அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.

இயற்றிய சில பாடல்கள்

[தொகு]
 சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்"  போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பாடல் எழுதிய திரைப்படங்கள்

[தொகு]

சிறப்புகள்

[தொகு]

கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது[2]

மணி மண்டபம்

[தொகு]

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது [3]. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "உடுமலை நாராயண கவி". Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  2. http://www.indiapost.gov.in/Stamps2008.aspx பரணிடப்பட்டது 2013-08-12 at the வந்தவழி இயந்திரம் இந்திய அஞ்சல்துறை தபால்தலை
  3. http://www.tn.gov.in/tamiltngov/memorial/udtnara.htm உடுமலை நாராயணகவி மணிமண்டபம்

சான்றாவணங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுமலை_நாராயணகவி&oldid=3948460" இலிருந்து மீள்விக்கப்பட்டது