உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாவது திருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கான 19வது திருத்தம் (19th Amendment to the Constitution of Sri Lanka) 2015 ஏப்ரல் 28 அன்று 225-உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 215 வாக்குகளை ஆதரவாகப் பெற்று நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்திற்கு ஒருவர் எதிராக வாக்களித்தார். ஏழு பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.[1] 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். செயரவர்தனா அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற அதிகார அரசுத்தலைவரான பின்னர் இடம்பெற்ற மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசமைப்புத் திருத்தச் சட்டம் இதுவெனக் கணிக்கப்படுகிறது.[2]

அறிமுகம்[தொகு]

2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் வெற்றி பெறும் பட்சத்தில் தனது தேர்தல் பரப்புரையில் அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.[3]

மகிந்த ராசபக்ச அரசுத்தலைவராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டத்தின் மூலம் அரசுத்தலைவருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கும் சட்டங்கள் இதன் மூலம் திரும்பப் பெறப்படுவதன் மூலம்[4] நாட்டில் மக்களாட்சியை மீண்டும் கொண்டு வருவதே இத்திருத்தச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். 18வது திருத்தம் மூலம் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அரசுத்தலைவராக வர முடியாது என்ற வரையறையை மகிந்த ராசபக்ச நீக்கியிருந்தார். அத்தோடு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களை அதிகாரங்கள் அற்ற அமைப்புக்களாக மாற்றினார்.

19வது திருத்தம், 17வது திருத்தத்தின் பெரும்பான்மையான சட்டங்களை உள்ளடக்கியுள்ளது.[5] இதன் மூலம் அரசமைப்பு சபை சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும். இவற்றில் சில:[6]

 1. தேர்தல் ஆணைக்குழு
 2. பொதுச் சேவைகள் ஆணைக்குழு
 3. தேசிய காவல்துறை ஆணைக்குழு
 4. கணக்காய்வு சேவை ஆணைக்குழு
 5. மனித உரிமைகள் ஆணைக்குழு
 6. எல்லை நிர்ணய ஆணைக்குழு
 7. லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
 8. நிதி ஆணைக்குழு
 9. அரச கரும மொழிகள் ஆணைக்குழு

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sri Lanka: 19A to the Constitution passed in parliament". Archived from the original on 2020-11-21. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03.
 2. "Mr. J.R. Jayewardene becomes Prime Minister; subsequently becomes Sri Lanka's first Executive President". Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03.
 3. "Full Text Of Maithripala Sirisena's Election Manifesto". Archived from the original on 2015-05-31. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03.
 4. "18th Amendment: Making a Mockery of Democracy in Sri Lanka".
 5. "SEVENTEENTH AMENDMENT TO THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA".
 6. "19 அரசியல் சீர்திருத்தம் ஒரு பார்வை". தினகரன் (இலங்கை). 3 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2015.[தொடர்பிழந்த இணைப்பு]