ஜுராசிக் பார்க் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜுராசிக் பார்க்
இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்
தயாரிப்பாளர் கேத்தலின் கென்னடி
ஜெரால்ட்.R.மோலன்
ஸ்டீவன் ஸ்பீல்பர்க்
நடிப்பு சாம் நீல்
லாரா டென்
ஜெப் கோல்டுப்ளும்
ரிச்சர்ட் அட்டென்பாரோ
மார்டின் பெர்ரீரோ
மற்றும் பாப் பெக்
இசையமைப்பு ஜான் வில்லியம்ஸ்
ஒளிப்பதிவு டீன் கண்டே
படத்தொகுப்பு மைக்கேல் கான்
திரைக்கதை டேவிட் கோப்
மைக்கேல் கிரைட்டன்
கலையகம் அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட்
விநியோகம் யூனிவெர்சல் பிக்சர்ஸ்
வெளியீடு ஜூன் 11, 1993
கால நீளம் 127 மணித்துளிகள்
மொழி ஆங்கிலம்
ஸ்பானிஷ்
ஆக்கச்செலவு $ 6.3 கோடி
மொத்த வருவாய் $915,691,118

ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது 1993 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிவியல் சார்ந்த திரைப்படம் ஆகும். இதே பெயரில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டனால் 1990 இல் எழுதப்பட்டு வெளியான ஒரு புதினத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது . இதில் சாம் நீல், லாரா டென், ஜெப் கோல்டுப்ளும், ரிச்சர்ட் அட்டென்பாரோ, மார்டின் பெர்ரீரோ, மற்றும் பாப் பெக் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவினில் நிகழ்வதாக தொடங்குகிறது. அந்த தீவினில் ஒரு கோடிஸ்வரர் அவரது ஆராய்ச்சி கூடத்தில் முற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களை அறிவியலின் துணையுடன் மீண்டும் உயிர்ப்பிக்கிறார். அவற்றை கொண்டு ஒரு பொழுதுபோக்கு பூங்காவுடன் இணைந்த மிருககாட்சி சாலை அமைக்க திட்டமிடுகின்றார்.

இந்த திரைப்படம் கணினியால் உருவாக்கப்பட்ட உருவங்களால் எடுக்கப்பட்ட அனிமேஷன் படங்களின் வரிசையில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. இந்த படத்தின் வெளியீட்டின் பொழுது உலகம் முழுவதிலும் $914 மில்லியன்களை வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் தற்போது அதிக வசூலை குவித்த படங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தில உள்ளது.

கதைச் சுருக்கம்[தொகு]

இன்-ஜென்(InGen) உயிரி பொறியியல் நிறுவனத்தின் தோற்றுநரும் அதன் தலைமைச் செயல் அலுவலரும்(CEO) ஆன ஜான் ஹேமன்ட்(John Hammond), ஜுராசிக் பார்க் எனப் பெயர்கொண்ட ஒரு கருத்தியல் பூங்காவை(theme park) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மேற்கே உள்ள ஐலா நுப்லார் (Isla Nublar) என்ற தீவில் உருவாக்குகிறார்.உலகில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொன்மாக்கள் (டைனோசார்கள்) படியெடுப்பு முறையில் மீளுருவாக்கப்பட்டுப் பின்பு இங்கு வாழவிடப்படுகின்றன. இச்சமயத்தில் வெலாசிராப்டர் (Velociraptor) என்ற டைனோசாரால் ஒரு பணியாளர் கொல்லப்படுகிறார். ஆதலால் இப்பூங்காவின் பாதுகாப்பை வல்லுநர்களைக்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என அதன் முதலீட்டாளர்கள் வழக்கறிஞர் டொனால்ட் ஜென்னாரோ(Donald Gennaro) வழியாக வலியுறுத்துகின்றனர். ஜென்னாரோ, கணிதவியலாளர் இயான் மால்கம்-ஐ (Dr.Ian Malcolm) அழைத்துவருகிறார். அதேநேரத்தில் ஹேமன்ட், தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் க்ரான்ட் (Dr. Alan Grant) மற்றும் தொல் தாவர ஆய்வாளர் எல்லி சாட்லர் (Dr.Ellie Sattler) ஆகியோரை அழைத்துவருகிறார்.இக்குழுவினர் இத்தீவுக்கு வந்து சேரும்பொழுது ப்ராக்கியோ சாரஸ் (‌Brachiosaurus), பாரா சாரோலோஃபஸ் (‌‌‌Parasaurolophus) ஆகிய டைனோசார்களைக் கண்டு வியப்படைகின்றனர்.

பின்பு இக்குழுவினர் பூங்காவின் பார்வையாளர் மையத்துக்குச் செல்கின்றனர். அங்குள்ள ஆய்வகத்தில் டைனோசார்கள் எவ்வாறு படியெடுக்கப்பட்டன என அறிந்துகொள்கின்றனர் (அம்பர் பிசினில்மாட்டிக்கொண்ட பழங்காலக் கொசுக்களின் உடலில் கண்டெடுக்கப்பட்ட டைனோசார் டி.என்.ஏக்கள் அவற்றை மீண்டும் உருவாக்க உதவின. டி.என்.ஏ கற்றைகளில் காணப்பட்ட இடைவெளிகளில் தவளைகளின் டி.என்.ஏ க்கள் நிரப்பப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட டைனோசார்களுக்குள் இனப்பெருக்கம் நிகழாமல் தடுப்பதற்காக அவை அனைத்தும் பெண்பாலினமாக உருவாக்கப்பட்டுள்ளன).

இக்குழுவினரோடு ஹேமன்டின் பெயரக்குழந்தைகளான அலெக்சிஸ் "லெக்ஸ்" மர்ஃபியும்(Alexis "Lex" Murphy) திமோத்தி "டிம்" மர்ஃபியும்(Timothy "Tim" Murphy) டைனோசார்களைப் பார்வையிட இணைந்துகொள்கின்றனர்.இவர்கள் அனைவரும் தானியங்கிச் சிற்றுந்துகளில் ஏறிப் பூங்காவிற்குள் செல்கின்றனர்.ஹேமன்ட் இச்சுற்றுலாவைப் பூங்காவின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கிறார்.ஆனால் பெரும்பாலான டைனோசார்கள் இக்குழுவுக்குத் தென்படாமல் இருக்கின்றன.தவிர ஒரு ட்ரை செராடாப்ஸ் (Triceratops) உடல்நலமின்றி படுத்திருக்கிறது.இந்நிலையில் ஒரு வெப்பமண்டலப் புயல், ஈஸ்லா நுப்லார் தீவை நெருங்கிக்கொண்டிருப்பதால் பல பூங்கா பணியாளர்கள் படகுகளைக்கொண்டு கோஸ்டாரிக்காவுக்குச் சென்றுவிடுகின்றனர்.பார்வையாளர் குழுவினரும் ட்ரை செராடாப்ஸின் இருப்பிடத்தை விட்டுச் சிற்றுந்துகளுக்குத் திரும்புகின்றனர். எல்லி மட்டும் பூங்காவின் கால்நடை மருத்துவருடன் அவ்விடத்தில் இருந்து அந்த டைனோசாரைப் பார்வையிடுகிறார்.

இப்புயலின்போது பூங்காவின் கணிப்பொறி நிரலாளரான டென்னிஸ் நெட்ரி (Dennis Nedry),டைனோசார்களின் முளையங்களை (Embryos) திருடி இன்-ஜென் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பயோசின்-னுக்கு (Biosyn) விற்கத் திட்டமிடுகிறார்(ஏற்கெனவே இதற்கான கையூட்டை இவர் பெற்றிருந்தார்), இதற்காகப் பூங்காவின் பாதுகாப்பு அமைப்பைச் செயல் இழக்க வைத்துப் பின்பு முளையச் சேமிப்பு அறைக்குள் நுழைகிறார். இதனால் பூங்காவின் பெரும்பாலான பாதுகாப்புவேலிகள் செயலிழக்கின்றன.இச்சமயத்தில் டைரனோசாரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) என்ற டைனோசார் அதன் இருப்பிடத்திலிருந்து வெளியேறி பார்வையாளர் குழுவைத் தாக்குகிறது. க்ரான்ட், லெக்ஸ் , டிம் ஆகியோர் ஒருவழியாகத் தப்பிச்சென்று ஒரு மர உச்சியில் அன்றைய இரவைக் கழிக்கின்றனர்.ஆனால் டி-ரெக்ஸானது ஜென்னாரோவைக் கொன்று உண்டு, மால்கம்-ஐக் காயப்படுத்திவிட்டுச் செல்கின்றது. இச்சமயத்தில் முளையங்களைப் பெறுவதற்காக தீவின் கிழக்குக் கப்பல்துறையில் காத்திருக்கும் பயோசின் ஆட்களுக்கு அவற்றைக்கொண்டு செல்லும் நெட்ரி வழியில் தன் சிற்றுந்தைத் தவறான வழியில் செலுத்தி ஓரிடத்தில் சிக்கிக்கொள்கிறார்.அப்பொழுது அங்கு வரும் டைலோஃபோசாரஸ் (Dilophosaurus) என்ற டைனோசார் அவரைக் கொன்றுவிடுகிறது.

எல்லியும் பூங்காவின் காப்பாளர் இராபர்ட் முல்டூனும் (Robert Muldoon) டி-ரெக்ஸ் தாக்குதலில் உயிர்பிழைத்தோரைத் தேட முயல்கின்றனர். ஆனால் டி-ரெக்ஸ் திரும்பி வருவதற்கு முன்பாக அவர்களால் மால்கம்-ஐ மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது.அங்குள்ள சிற்றுந்தில் மூவரும் ஏறிப் பார்வையாளர் மையத்துக்குச் திரும்புகின்றனர்.அங்கு நெட்ரியின் குறியீட்டு நிரலை வெளிக்கொணர முடியாமல் திணறும் ஹேமன்டும், பூங்காவின் தலைமைப் பொறியியலாளர் ரே அர்னால்டும் (Ray Arnold) பூங்காவின் முழு மின் அமைப்பையும் துண்டித்துப் பின்பு மீண்டும் உயிர்ப்பித்து அதன்வழியாக பூங்காவின் பாதுகாப்பு அமைப்பை உயிரூட்ட முடிவுசெய்கின்றனர்.எனவே மின் கட்டமைப்பைத் துண்டித்துவிட்டு அனைவரும் விடியற்காலையில் நிலவறை ஒன்றில் அடைக்கலம் புகுகின்றனர். அர்னால்ட் மட்டும் மின் உயிரூட்டலை நிறைவு செய்வதற்காக ஒரு கொட்டகைக்குச் செல்கிறார்.அவர் மீண்டும் வரத்தவறுவதால் எல்லியும் முல்டூனும் தாங்களே அங்கு செல்கின்றனர்.

அங்கு சென்றபின்பு அவ்விருவரும், மின்வெட்டால் வெலாசிராப்டர்களும் தப்பிவிட்டதை அறிகின்றனர். எனவே முல்டூன், அவற்றைத் திசைதிருப்ப முயலும் அதே சமயத்தில் எல்லி,கொட்டகைக்குள் சென்று மின்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். அப்பொழுது அவர் அர்னால்டின் ஒரு துண்டிக்கப்பட்ட கையைக் கண்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். அச்சமயம் முல்டூனும் ஒரு வெலாசிராப்டரால் தாக்கப்பட்டு உயிரிழக்கிறார்.

இச்சமயம் க்ரான்ட்,லெக்ஸ்,டிம் ஆகியோர் மரத்திலிருந்து இறங்கி வந்தபின்னர் டைனோசார் முட்டை ஓடுகளைக் காண்கின்றனர்.இதனால் பூங்காவிலுள்ள டைனோசார்கள் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கிவிட்டன என்று க்ரான்ட் உணர்கிறார் (டைனோசார்களின் டி.என்.ஏ. க்களில் காணப்பட்ட இடைவெளிகளில் நிரப்பப்பட்ட டி.என்.ஏ கற்றைகள், மேற்காஃப்ரிக்கத் தவளைகளுடையவை (West African Bullfrogs).இவை (ஒரேபாலினச் சூழ்நிலையில் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தவை). எனவே இவற்றின் டி.என்.ஏ க்கள், டைனோசார்களையும் அவ்வாறு தங்கள் பாலினத்தை மாற்றிக்கொண்டு இனப்பெருக்கம் செய்ய உதவியிருக்கின்றன).

பின்பு இம்மூவரும் பார்வையாளர் மையத்துக்குத் திரும்பும் வழியில் காலிமைமஸ் மந்தை ஒன்றைக் காண்கின்றனர்.அப்பொழுது திடீரென்று டி-ரெக்ஸ் அங்கு வந்து அவற்றுள் ஒன்றைக் கொல்கிறது.பின்பு அம்மூவரும் பார்வையாளர் மையத்தை அடைகின்றனர்.அங்கு இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு க்ரான்ட் மற்றவர்களைத் தேடிச் செல்கிறார்.அப்பொழுது கொட்டகையிலிருந்து தப்பி வரும் எல்லியைச் சந்திக்கிறார். இருவரும் பார்வையாளர் மையத்துக்குத் திரும்பிச்செல்லும் அதேசமயத்தில் அங்கு இரு குழந்தைகளையும் வெலாசிராப்டர்கள் தாக்க முயல்கின்றன.க்ரான்டும் எல்லியும் சென்று அவ்விருவரையும் காப்பாற்றிக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு லெக்ஸின் முயற்சியால் மின்சாரம் மீண்டு வருகிறது.பின்பு அவர்கள் தொலைபேசி கொண்டு ஹேமன்டை உதவிக்கு அழைத்துவிட்டுப் பார்வையாளர் மையத்தின் வெளிக்கூடத்துக்குச் செல்கின்றனர்.அப்பொழுது அங்கு இரு வெலாசிராப்டர்கள் நால்வரையும் தாக்க முயல்கின்றன. அப்போது எதிர்பாராமல் அங்கு வரும் டி-ரெக்ஸ் அவ்விரண்டையும் கொல்கிறது. பின்பு பார்வையாளர் மையத்துக்கு வெளியில் அவர்கள் வரும்பொழுது ஹேமன்ட் முதலுதவி பெற்ற மால்கம்-உடன் சிற்றுந்தில் வந்து நிற்கிறார்.தான் அப்பூங்காவுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என க்ரான்ட், ஹேமன்டிடம் கூற அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார். பின்பு மால்கம் உட்பட ஆறு பேரும் சிற்றுந்தில் ஏறி உலங்கு வானூர்தி (Helicopter) இருக்குமிடத்துக்குச் செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் அவ்வானூர்தியில் ஏறித் தீவை விட்டு வெளியேறுகின்றனர்.

நடித்தவர்கள்[தொகு]

Dr.எல்லி சாட்லர் - லாரா டென்
Dr.இயான் மால்கம் - ஜெப் கோல்டுப்ளும்
ஜான் ஹெமன்ட் - ரிச்சர்ட் அட்டென்பாரோ
லெக்ஸ் மர்பி - அரியானா ரிச்சர்ட்
டிம் மர்பி - ஜோசப் மசெல்லோ
ராபர்ட் முல்டூன் - பாப் பெக்
டொனால்ட் ஜென்னரோ - மார்டின் பெர்ரிரோ
ரே அர்னால் - சாமுவேல்.L.ஜாக்சன்

விருதுகள்[தொகு]

  • அகாதமி விருது
  • சிறந்த சிறப்பு காட்சி அமைப்புகள் (வெற்றி)
  • சிறந்த ஒலி (வெற்றி)
  • சிறந்த சிறப்பு ஒலி அமைப்பு தொகுப்பு (வெற்றி)

மற்றும் பல்வேறு வகையான விருதுகளை குவித்தது இந்த திரைப்படம்.