காபோவைதரேட்டு
காபோவைதரேட்டு,(Carbohydrate) நான்கு முக்கிய உயிர் மூலக்கூற்று வகைகளில் பெருமளவில் காணப்படும் வகையாகும். இவை உயிரினங்களில் பல பங்குகளை வகிக்கின்றன. ஆற்றலைச் சேமித்தலும் அவற்றைக் கடத்துதலும் (மாப்பொருள், கிளைக்கோஜீன்), அமைப்புக் கூறுகளாக இருத்தல் (தாவரங்களில் செலுலோசு, விலங்குகளில் சிட்டின்) என்பன இவற்றுள் அடங்குகின்றன. மேலும் காபோவைதரேட்டுக்களும் அவற்றிலிருந்து பெறப்படுவனவும் நோயெதிர்ப்புத் தொகுதி, கருவுறல், நோய்த்தோற்றம், குருதியுறைதல், வளர்ச்சி என்பனவற்றின் செயல் முறைகளிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
வேதியியல் அடிப்படையில் காபோவைதரேட்டுக்கள் ஐதரொக்சைல் கூட்டங்கள் சேர்க்கப்பட்ட அல்டிகைட்டுக்கள் அல்லது கீட்டோன்கள் வகையைச் சேர்ந்த எளிமையான கரிமச் சேர்வைகள் ஆகும். இந்த ஐதரொக்சைல் கூட்டங்கள், பொதுவாக கீட்டோன் அல்லது அல்டிகைட்டுச் செயற்பாட்டுக் கூட்டத்தின் பகுதியாக அமையாத கரிம அணு ஒவ்வொன்றிற்கும் ஒன்று வீதம் இணைக்கப்பட்டு இருக்கும். அடிப்படையான காபோவைதரேட்டு அலகுகள் ஒற்றைச்சக்கரைடுகள் எனப்படுகின்றன.
காபோவைதரேற்று வெல்லங்களையும் வெல்லமல்லாத பதார்த்தங்களையும் உள்ளடக்கும். ஒரு சக்கரேற்று, இருசக்கரேற்று அடங்கியவை பொதுவாக வெல்லங்களாகும். இது குளுக்கோசு, கலக்டோசு, புருக்டோசு என்பவற்றை உள்ளடக்குகின்றது. மாற்றப்படாத ஒற்றைச்சக்கரைடுகளின் பொதுச் சூத்திரம் (CH2O)n. இங்கே n மூன்றுக்கு மேற்பட்ட எந்தவொரு எண்ணாகவும் இருக்கலாம். எனினும் எல்லா ஒற்றைச்சக்கரைடுகளும் இச் சூத்திரத்துக்குள் அடங்கும் என்றோ இச் சூத்திரத்துள் அடங்கும் எல்லாமே ஒற்றைச்சக்கரைடுகள் என்றோ கூற முடியாது. எடுத்துக் காட்டாக, இச் சூத்திரத்தினின்றும் சிறிது வேறுபடுகின்ற மூலக்கூறுகள் பலவும் காபோவைதரேட்டுகள் என அழைக்கப்படுவதையும், இதே மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் கொண்ட போமல்டிகைட்டு போன்றவை காபோவைதரேட்டுக்கள் அல்ல என்பதையும் குறிப்பிடலாம்.
ஒற்றைச்சக்கரைடுகள் எண்ணற்ற வழிகளில் இணைந்து பல்சக்கரைடுகள் உருவாகின்றன. பல்சக்கரைடுகள் மாப்பொருளை ஆக்குகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] காபோவைதரேட்டு அடங்கியிருப்பதை சோதித்தல்
[தொகு] எளிய வெல்லத்தைப் பரிசோதித்தல்
பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது அரைத்து தெளிவான கரைசலை வடித்தெடுத்த பின் நீல நிறமான பெனடிக்ரின் கரைசலை /fehling's solution சேர்த்து வெப்பப்படுத்தும் போது செங்கட்டிச் சிவப்பு நிற வீழ்படிவு கிடைக்குமாயின் அது எளிய வெல்லமாகும்.
கரைசல் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறுமாயின் சிறிதளவு குளுக்கோசு அடங்கியிருப்பதாகப் பொருளாகும்.
[தொகு] மாப்பொருளைப் பரிசோதித்தல்
பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது அரைத்து எடுக்கப்பட்டுஅதை வெள்ளைப்பீங்கான் ஒன்றின் மீது வைத்து அயடீன் கரைசலின் (கபில நிறம்)சில துளிகளை இடும் போது உணவுப் பொருள் கருநீல நிறமாக மாறும்.